“நியாயத்திற்குப் புறம்பாக எந்த ஒரு தனி நபரின் உரிமையோ, உடைமையோ. உயிரையோ பறிக்கக்கூடாது".

விழுப்புரம் வட்டம், சொரப்பூர் கிராமத்தில் 2-9-89 அன்று காலை 7-45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும். அதில் பனையடிக்குப்பத்தைச் சார்ந்த கந்தன் (28), சேகர் (25) ஆகிய இரு அரிசன இளைஞர்கள் இறந்துவிட்டனர் என செய்திகள் அன்று மாலையே வெளியாயின. இது ஒரு அத்துமீறிய துப்பாக்கிச் சூடு எனவும் மேலும் இத்துப்பாக்கிச் சூடு புதுவை மாநிலத்தில் உள்ள பனையடிக் குப்பத்தில்தான் நடந்தது எனவும் மக்கள் மத்தியில் பரவலாக கருத்து இருந்தது. எனவே, இது தொடர்பான உண்மைகளை அறியும் பொருட்டு 11-9-89 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தேவநாதன் அவர்கள் தலைமையில் 12 பேர் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது 13-9-89 காலை 9-00 மணியிலிருந்து மாலை 7-00 மணி வரை பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடி ஆய்வு செய்தது. பனையடிக்குப்பம் காலனி, பனையடிக்குப்பம் ஊர், சொரப்பூர் ஊர் ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து இக்குழு விசாரித்தது.
சொரப்பூர் மற்றும் வீராணம் காலனிகள் வெறிச்சோடி ஆள் நட மாட்டம் ஏதுமின்றிக் காணப்பட்டன. எனவே, 14-9.89 மற்றும் 17-9-89 ஆகிய தேதிகளில் சொரப்பூர் மற்றும் வீராணம் காலனியைச் சேர்ந்த மக்களை புதுவை மற்றும் பாகூர் சுற்று வட்டாரங்களுக்குச் சென்று இக்குழு விசாரித்தது.

சொரப்பூர் காலனியில் 150 வீடுகளும், வீராணம் காலனியில் 100 வீடுகளும், பனையடிக்குப்பம் காலனியில் 150 வீடுகளும் உள்ளன. இம்மூன்று காலனிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. சொரப்பூர் ஊர், சொரப்பூர் காலனிக்கு மேற்கே 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் 100 வீடுகள் உள்ளன. பனையடிக்குப்பம் மற்றும் வீராணம் ஊர், பனையடிக்குப்பம் காலனி; வீராணம் காலனிகளுக்கு 200 மீட்டர் கிழக்கில் உள்ளன வீடுகள் உள்ளன. இரு ஊர்களிலும் முறையே 70,75 வீடுகள் உள்ளன.

மேற்சொன்ன மூன்று ஊர்களிலும் உயர் ஜாதி மக்களும், பிற் படுத்தப்பட்ட மக்களும் உள்ளனர். இதில் ஒரு சிறுபான்மையினர் நில உடைமையாளர்களாகவும், மீதி பேர் நடுத்தர விவசாயிகளாகவும், கூலி விவசாயிகளாகவும் உள்ளனர். மூன்று காலனிகளிலும் சிறுபான்மையினர் சிறு நில விவசாயிகளாகவும், பெரும்பான்மையினர் கூலி விவசாயிகளாகவும் உள்ளனர். இந்த மூன்று ஊர் நில உடைமையாளர்களுக்கும். காலனி மக்களுக்குமிடையில் கூலிப் பிரச்சினை தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாகவே முரண்பாடு இருந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னிருந்தே சொரப்பூர் ஊர் மாரியம்மன் கோயில் கூழ் திருவிழாவை முன்னிட்டும். திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டும் சொரப்பூர் ஊர் மக்களுக்கும் சொரப்பூர் காலனி மக்களுக்குமிடையே தொடர்ந்து சிறுசிறு மோதல்களும் சச்சரவுகளும் இருந்து வந்திருக்கின்றன. அதே சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையில் சமரச முயற்சியாக இரு பஞ்சாயத்துக்களும் நடந்துள்ளன. 2-9-89 அன்று காலையும் கூட ஒரு பஞ்சாயத்து நடப்பதற்கான முயற்சியும் நடந்துள்ளன. இது ஊர் மக்களும் காலனி மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய சமூக பொருளாதார நிலையினையே விளக்குகிறது.

திரௌபதி அம்மன் தீமிதி விழாவிற்கு பின்பு இருபது போலீசார் சொரப்பூர் ஊரில் தொடர்ந்து பாதுகாப்புக்காக இருந்து வந்துள்ளனர். 1-9-89 அன்று பிற்பகல் ஊருக்கும், காலனிக்குமிடையில் ஒரு பதட்ட நிலை நிலவியிருக்கிறது. சொரப்பூர் காலனிக்கு ஆதரவாக வீராணம். மற்றும் பனையடிக்குப்பம் காலனியைச் சேர்ந்தவர்களும் சென்றிருக் கின்றனர். இப்பதட்ட நிலையானது பெரிய மோதலாக வராதபடி இந்த 20 போலீசாரே தடுத்து விட்டனர். 1-9-89 அன்று இரவு 100 க்கும் மேற்பட்ட போலீசார் சொரப்பூர் ஊரில் குவிக்கப்பட்டிருக் கின்றனர். 2-9-89 அன்று காலை இப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனையொட்டி உண்மையறியும் குழு மூன்று நாட்கள் விசாரித்ததின் அடிப்படையில் ஆய்வு செய்து கீழ்க்காணும் முடிவுகளுக்கு வந்துள்ளது. 

I. துப்பாக்கிச் சூடு புதுவை மாநிலத்தில் உள்ள பளையடிக்குப்பத்தில்தான் நடந்தது என்பது கீழ்க்காணும் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதியாகிறது.

1.துப்பாக்கிச் சூட்டினை நேரில் பார்த்த தைலம்மாள் (50), சின்னராசு (40), இளங்கோவன் (25), முத்துக்கண்ணு (30) ஆகியோரின் கூற்றுப்படி பனையடிக்குப்பம் காலனி மாரியம்மன் சேகரின் தாயார் கோவிலுக்கு தெற்கே 50 மீட்டர் தொலைவில் உள்ள சின்னராசுக்குச் சொந்தமான வயலில்தான் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது என உறுதியாகிறது.

2 சம்பவம் நடந்த 1 மணி நேரத்திற்குள் கரையாம்புத்தூர் (புதுவை மாநிலம்) போலீசாருடன் அந்த இடத்திற்கு வந்த பக்தவச்சலம் ரெட்டியார் மேற்குறிப்பிட்ட இடத்தில் தேங்கிக்கிடந்த இரத்தத்தை பார்த்திருக்கிறார்.

3.உண்மை அறியும் குழுவும் மேற்சொன்ன இடத்தில் இரத்தக் கறையை நேரில் பார்த்தது. அதே சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் சொல்லும் சொரப்பூர் ஊரில் இரத்தக் கறை ஏதும் காணப்படவில்லை.

4. சொரப்பூர் ஊர் மக்கள் தாங்கள் துப்பாக்கிச்சூட்டினை நேரில் பார்க்கவில்லை என்றும், ஊருக்கு அருகில் உள்ள ரோட்டிலும். ஊருக்கு கிழக்கே உள்ள வயலிலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் சொன்னதாகவே கூறினார்கள்.

5. துப்பாக்கிச்சூட்டில் இறந்த சுந்தன், சேகர் ஆகிய இருவருமே பனையடிக்குப்பம் காலனியை (புதுவை மாநிலம்) சேர்ந்தவர்கள் ஆவர். 6. மேற்சொன்ன இடத்தில் இக்குழு பார்வையிடும்போது பூக்களா லும், சாணி பிள்ளையார் பிடித்து வைத்தும், பொட்டு வைத்தும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். இந்து மதவழி முறை சடங்குபடி உயிர் பிரிந்த இடத்தில்தான் இம்முறையில் அஞ்சலி செலுத்துவர்.

7. 18-9-89 அன்று தினத்தந்தி கடலூர் பதிப்பில் வெளியான செய்திப்படி "பாண்டிச்சேரி பனையடிக்குப்பம் துப்பாக்கிச் சூட்டில் பலியான சேகர், கந்தன் ஆகியோர் குடும்பத்தினரை அமைச்சர் வைத்திலிங்கம் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்"

8. சம்பவம் நடந்த 1 வாரத்திற்கு பின்பு வீராணம் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் கிருஷ்ணமூர்த்தி செட்டியார். பக்தவச்சலம் ரெட்டியார் மற்றும் முத்து சுப்புராய செட்டியார் ஆகியோர் முன்னிலையில் விழுப்புரம் தாசில்தார், இறந்தவர்களின் பெற்றோர்களீடம் "சொரப்பூர் திருவிழா கலவரத்தில் குண்டடிப்பட்டு இறந்த என்னுடைய மகனுக்காக ரூ. 10,000/- பெற்றுக்கொள்கிறோம்" என பேப்பரில் எழுதி கையெழுத்திட கேட்டிருக்கிறார். ஒருவருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கிறோம் எனவும் ஆசை காட்டியிருக்கிறார். இதில் பனையடிக் குப்பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் என மாற்றி எழுதினால் கையொப்பமிடுகிறோம் என அப்பெற்றோர்கள் சொல்லி அவர்கள் நீட்டிய பேப்பரில் கையெழுத்திட மறுத்து விட்டனர்.

9. துப்பாக்கிச்குடு நடந்த இடத்திலேயே கந்தன் (28) இறந்து விட்டார். ஆனால் சட்டக்கல்லூரி மாணவர் சேகர் (22) காலில் குண் டடிபட்டு அப்படியே கீழே உட்காருகிறார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்துக்கொண்டு துப்பாக்கியின் பின்புற கட்டையாலும், கற்களாலும் அடித்துக் கொன்றிருக்கின்றனர். மேற்சொன்னவை துப்பாக்கிச் சூட்டினை நேரில் பார்த்தவர்களின் கூற்றிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.

II. 2-9-89 அன்று துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பது கீழ்க்கண்ட ஆதாரங்களின் அடிப் படையில் தெளிவாக புலனாகிறது.

1.புதுவை மாநிலத்தில் உள்ள பனையடிக்குப்பத்தில் தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்பது உறுதியாவதால், சொரப்பூர் ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சூழ்நிலை இருந்தது என்பதை நம்ப முடியாது.

2. சொரப்பூர், வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் காலனி மக்க ளின் கூற்றிலிருந்து சம்பவம் நடந்த 2-9 - 89 அன்று காலை இக்காலனி மக்கள் எவரும் திரண்டு சொரப்பூர் ஊரை தாக்கச் செல்லவில்லை என்பது உறுதியாகிறது. 100 வீடுகள் உள்ள சொரப்பூர் ஊரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுத போலீசார் சுற்றி நிற்கும்போது எப்படி காலனி மக்கள் சென்று தாக்க முனைவர்.

3) சம்பவத்திற்கு முன்பு 20 நாட்கள் வரையிலும் 20 போலீசாரை வைத்தே பெரும் மோதலை தவிர்க்க முடித்த போலீசாருக்கு 100-க்கும் மேற்பட்ட ஆயுத போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுக் கடங்காத கலவரம் 2-9-89 அன்று காலை நடந்தது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

4) சொரப்பூர் ஊரில் உள்ள தனது வீடு எரிந்து போன ராஜீ நாடார் கூற்றுப்படி 2-9-89 அன்று காலை 7-00 மணி வரையிலும் சொரப்பூர் ஊரில் எந்த விதமான பதட்ட நிலையும் நிலவவில்லை. என்பது தெரியவருகிறது.

5) 2-9-89 அன்று காலை வீராணம் மற்றும் சொரப்பூர் காலனியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கன் பனையடிக்குப்பத்தில் உள்ள பக்தவச்சலம் ரெட்டியார் அவர்களை சந்தித்து சொரப்பூர் ஊருக்கும் காலனிக்கும். சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறார்கள். இதிலிருந்து, இக்காலனி மக்கள் திட்டமிட்டு 2-9-89 அன்று சொரப்பூர் ஊரில் உள்ள போலீசாரை திரண்டு சென்று தாக்கினர் என்ற போலீசாரின் கூற்று மறுக்கப்படுகிறது.

6. சொரப்பூர், வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் காலனி மக்களின் கூற்றுப்படி போலீசார் 2-9-89 அன்று காலை சொரப்பூர் காலனியில் திடுதிப்பென்று நுழைந்து மக்களை தாக்கியதோடு அவர் களை விரட்டிக்கொண்டு பனையடிக்குப்பம் காலனியின் கிழக்கு எல்லை வரை சென்றிருக்கின்றனர். இதனை பனையடிக்குப்பத்தில் வைத்து போலிசாரால் தாக்கப்பட்ட பள்ளி சமையல்காரர் பனையடிக்குப் பத்தைச் சார்ந்த பிச்சைக்காரன் (35), சாரதா (30), பஞ்சவர்ணம் (30), சுமதி (20).ரோகினி மற்றும் மாரி ஆகியோரின் கூற்றுகள் கூறுகி செய்கின்றன.

III. 2-9-89ல் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின்பு சொரப்பூர் ஊர் மற்றும் சொரப்பூர் காலனி, வள்ளுவன் மேடு ஆகிய இடங் களில் உள்ள வீடுகளுக்கு போலிசாரே தீயை வைத்துள்ளனர். இதனை கீழ்க்காணும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

1.) துப்பாக்கிச் சூடு நடந்த பின்பு சொரப்பூர் காலனி அருகில் உள்ள வள்ளுவன் மேட்டில் உள்ள ஒரு வீட்டினை போலிசார் சுற்றி நின்று கொண்டு எரித்ததை காலனி மக்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள்

2.) துப்பாக்கிச் சூடு நடந்த பின்புதான் சொரப்பூர் ஊரில் உள்ள வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிவதை பனையடிக்குப்பத்தில் இருந்தும், வயல் வெளிகளில் இருந்தும் பார்த்திருக்கிறார்கள்.

3.) 2-9.89 அன்று காலை காலனி மக்கள் திரண்டு சென்று சொரப்பூர் ஊரை தாக்கவில்லை என்பது உறுதியாவதாலும் போலீசார்தான் அங்கு வீடுகளை கொளுத்தினார்கள் என்பது உறுதியாகிறது.

4.) 2-8-80 அன்று காலை புதுவை மாநில போலீசாருடன் (நான்கு பேர்) சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்துவிட்டு சொரப்பூர் ஊருக்கு 9-30 மணிக்கு செல்லும் பக்தவச்சலம் ரெட்டியாரால் கொழுந்துவிட்டு எரிந்த வீடுகளை பார்க்க முடிந்திருக்கிறது. போலீசார் கூற்றுப்படி காலை 7-00 மணிக்கே காலனி மக்களால் வீடுகள் தீ வைக்கப்பட்டிருந் தால் எரிந்து போய் உள்ள சிறுசிறு குடிசைகள் 2 மணி நேரங்கள் எரிய சாத்தியமில்லை.

5.) எரிந்துபோய் உள்ள வீடுகள் எல்லாமே சிறியவையாகும். ஆங்காங்கு தனித்தனியாகவே எரிந்துள்ளன. பக்கத்தில் மிக அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் கூட தீ பரவவில்லை.

IV. போலீசார் காலனி மக்களுக்கு எதிராகவும் ஊர் மக்களுக்கு ஆதரவாகவும் ஒரு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

1. சம்பவத்திற்கு முன்பும் பின்பும் போலீஸ் பாதுகாப்பு என்பது சொரப்பூர் ஊருக்கு மட்டுமே உள்ளது. சொரப்பூர் காலனிக்கோ, வீராணம் காலனிக்கோ எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லை. இது வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் காலனியைச் சேர்ந்தவர்களே.

V. சம்பவத்தின் பின்னணி

இக்குழுவின் ஆய்வில் இருந்து 2-9-89 அன்று காலை பதட்டமான சூழல் ஏதும் இல்லாதபோது சொரப்பூர், வீராணம், பனையடிக்குப்பம் காலனிகளில் போலீசார் திடுதிப்பென்று புகுந்து அடித்து பனையடிக் குப்பத்தில் துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கிறார்கள் தங்களுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த போலீசாரே வீடுகளுக்கு தீயும் வைத்துள்ளார்கள். இதிலிருந்து நமக்கு கீழ்க்காணும் ஐயம் எழுகிறது

இப்பகுதியில் 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பனையடிக்குப்பம் காலனியைச்சேர்ந்த திரு. வையாபுரி அவர்கள் தலைமையில் நிலமீட்சி போராட்டம் நடந்துள்ளது. 1974ல் வலுவானதொரு கூலி உயர்வு போராட்டம் நடந்துள்ளது. 1981ல் ஜூலை 21 அன்று இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்யும்போது காலனி மக்கள் திரண்டு தடுத்திருக்கின்றனர். இவற்றை எல்லாம் வஞ்சம் தீர்ப்பதற்காகவே போலீசார் இத்திட்டமிட்ட தாக்கு தலை நடத்தினார்களா? -என்ற ஐயம் இக்குழுவுக்கு எழுகிறது.

சம்பவம் நடந்து இருவாரங்கள் கழித்தும்கூட சொரப்பூர் மற்றும் வீராணம் காலனியைச்சேர்ந்த மக்கள் இதுவரை தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பவில்லை இம்மக்கள் தங்கள் மாமூல் வாழ்க்கை திரும்ப தமிழக அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. புதுவை மாநில பகுதியில்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது ஊர்ஜிதமான பின்பும்கூட புதுவை அரசும் இதுதொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருக்கிறது. இப்போக்கிற்கு சொரப்பூர் ஊரில் உள்ள நில உடைமையாளர்களுக்கு இவ்விரு அரசு களிலும் உள்ள உயர்மட்ட செல்வாக்கும் காரணமாக இருக்குமோ? என இக்குழு ஐயப்படுகிறது.

VI. இக்குழுவின் பரிந்துரைகள்

1. இச்சம்பவங்கள் நடந்த இடங்கள் இருமாநில அரசு நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும். ஆகவே, விசாரணை அறிக்கை முழுமை அடைய மத்திய அரசு ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரனை நடத்த வேண்டும்.

2. இந்நீதி விசாரணை பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பங்கு கொள்ளும் விதத்தில் சம்பவம் நடந்த பகுதியில்தான் நடத்தப்படவேண்டும்.

3.பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

4. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். மேலும் மேற்கொண்டு யாரையும் கைது செய்யக்கூடாது. அத்துமீறி புதுவை எல்லை நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்யவேண்டும்.

5. போலீஸ் நடவடிக்கையால் பீதியுற்ற மக்கள் திரும்பவும் மாமூல் வாழ்க்கையில் ஈடுபடவும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்

குழுத்தலைவர்

அ. தேவநாதன், பி.ஏ.பி.எல்.,வழக்கறிஞர், தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு

உறுப்பினர்கள்

பி.வி. பண்டெரிநாதன், ஜனதா தளம், கடலூர்.
ம. இலட்சுமணன், தெ.ஆ. மாவட்ட செயலாளர், இந்திய மக்கள் முன்னணி(ஐ.பி.எப்)
டி.பவணந்தி பி.எஸ்சி.பி எல்., மாவட்டக்குழு, உறுப்பினர். இந்திய மார்க்சியப் பொதுவுடை மைக்கட்சி [ எம்.சி.பி.ஐ. ]
டி.புருஷோத்தமன், எம்.ஏ.எம்.ஃபில்,, பி எல்., வழக்கறிஞர், புதுவை.
பா. கல்யாணி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்.
எஸ். பாலசுப்ரமணியம், தேசிய கவுன்சில் உறுப்பினர், அகில இந்திய தொழிற்சங்கங் சுளின் மைய கவுன்சில்,( ஏ.ஐ.சி.சி.டி.யு.)
ஆர் சங்கர், அமைப்பாளர். இந்திய மக்கள் முன்னணி, புதுவை
கோ.சுகுமாரன், அமைப்புச் செயலர், தமிழ்நாடு மாணவர் பேரவை,
ஆர். அழகிரி, செயலாளர், கா.கா.தே.கா, புதுவை
தாயகராஜன், புதுவை மாநில இளைஞர் இயக்கம், புதுவை
கீழை. இலக்கியன். புதுவை

Pin It

1. மூன்றாம் இராசேந்திர சோழன்

பாறையிலிருந்து கசிந்த குளிர் நீர் சிற்றோடையாக உருமாறி சமணர்கள் தங்கியிருக்கும் மண்டபத்திலிருந்து மெல்லிய சலசலப்புடன் வெளியேறிக் கொண்டிருந்தது. சமணர்கள் வசிக்கும் குன்றுகளில், மலையைத் துளைத்துக் கொண்டு வரும் இயற்கையான நீர் ஊற்றுகள் இருக்கும். மனிதன் உயிருடன் வாழ உணவில்லாவிட்டாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பதை அறிந்து அதற்கேற்ப நீர் ஊற்றுகள் அமைந்திருக்கின்ற மலைகளிலேயே வாசம் செய்தார்கள். அவர்களைத் தேடி மக்களும் மன்னர்களும் வந்தார்கள். அவர்களது தவவலிமையைக் கண்ட மன்னர்கள் சமணர்கள் வாழும் மலைக் குகைகளில் கல் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள். வயதில் மூத்த தலைமைத் துறவி ஒரு சிறிய பாறையில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். ஒரு கருப்புப் பூனை அசையாமல் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. காலைப் பரிதியின் கிரணங்கள் சமணப்பள்ளி முழுவதிலும் நிறைந்திருந்தது. அனைத்து துறவிகளும் அவரவர்களுக்கான காலைக் கடமைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

மூன்றாம் இராசராச சோழனின் சாயலில் இருந்த ஒரு இளவயதுத் துறவி கிழக்குப் பகுதியில் இருக்கும் பாறையில் ஓவியம் வரையத் தயாராக இருந்தான். ஏற்கனவே முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியத்தை அவன் வரைந்திருந்தான். மங்கையின் இடக்கை பெருமிதத்துடன் மார்புகளின் குறுக்கே நீட்டிக் கொண்டிருக்கிறது. வலக்கையில் உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கிறது. இலைகள், பூக்களின் சாறு நிறைத்த சிறிய மண் குவளைகளில் தூரிகையைத் தோய்த்து நிறங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நளினமான கைதேர்ந்த விரல்களில் இருந்த தூரிகையின் ஒவ்வொரு அசைவும் அவன் ஆழ்மனதில் இருக்கும் மௌனமான கனவை ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்தது. ஓவியத்தை பார்த்துக் கொண்டே சில சமணத் துறவிகள் புன்முறுவலுடன் ஓவியனைக் கடந்து போனார்கள். ஓவியனின் வயதையொத்த ஒருவன் ஓவியத்தின் முன் ஒரு கற்சிலையைப் போல தன் நிலை மறந்து சிலை போல உறைந்திருந்தான். ஓவியனின் தூரிகையின் அசைவிற்கேற்ப அவனுடைய கண்கள் மட்டும் பல விதமான உணர்வுகளைப் பிரதிபலித்தது.

முதலில் ஒரு இளவயது வேடன் பாறையை நோக்கி அமர்ந்து கொண்டு முற்றிய கோரைப்புல்லின் நுனியில் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய பறவையின் அழகை ரசிப்பதாக இருந்த அந்த ஓவியம் ஓவியனின் தூரிகையின் அசைவால் உருமாறி ஒரு அழகிய பெண்ணாக உருமாறியது. அதிலும் திருப்தியடையாத ஓவியன் மேலும் அந்த ஓவியத்தை மேம்படுத்த இப்போது அந்த அழகி வண்ண மேகங்களாக உருமாறி அடிவானில் கரைந்து கொண்டிருந்தாள். “இது ஆணா, இல்லை பெண்ணா?” என்று ஓவியனின் ரசிகன் வியந்து கேட்க, குரல் வந்த திசையைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் “அனைத்தும்” என்று பதிலளித்தான் ஓவியன்.

பரிவாரங்களுடன் நெடுந்தூரத்திலிருந்து வந்த மூன்றாம் இராசேந்திர சோழன் சமணப்பள்ளி அமைந்திருக்கும் குன்றின் அடிவாரத்தை அடைந்தான். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட சமணர்கள் துணுக்குற்று தலைமைத் துறவியிடம் தெரிவிக்க ஓவியனைத் தவிர அனைவரும் ஒரு இடத்தில் பதட்டத்துடன் குழுமினார்கள்.

மன்னன் வருவதை குன்றின் அடிவாரத்திலிருந்தே பார்த்த ஓவியன் ஏற்கனவே தான் வரைந்த படத்தின் பின்புலத்தை உடனே ஒரு பெரும் பாலைவனமாக மாற்றினான். மன்னர் வருவதைப் பார்த்துக் கொண்டே அந்தப் பாலையின் நடுவில் மன்னரை வரைய ஆரம்பித்தான். முதலில் அவரின் கிரீடத்திலிருந்து தொடங்க தன்னையும் அறியாமல் மூன்றாம் ராசேந்திர சோழன் சிறிது சிறிதாகக் கரைந்து ஓவியத்தில் ஒருபடிமனாக தோன்ற ஆரம்பித்தான். முழுவதுமாக ஓவியத்தில் சிக்குண்ட மன்னன் ஓவியத்திலிருந்து தன்னை முழுவதுமாக வெளியேற்றும் அனைத்து முயற்சிகளிலும் தோற்றுப் போக நிர்க்கதியாக ஓவியனையே மிரட்சியுடன் பார்த்தான். ஓவியத்தின் பின்புலம் பரந்து விரிந்து கொண்டே போக நெடிய பாலையில் ஒரு சிறிய புள்ளியாக மன்னன் மறைந்து போனான்.

திடுக்கிட்டு மூச்சுத் திணற கட்டிலிலிருந்து எழுந்த மூன்றாம் இராசேந்திர சோழன் சுற்றும் முற்றும் பார்த்தான். தான் கண்டது கனவு என்று சற்றே சமாதானப்பட்டு அருகில் வைத்திருந்த குவளையிலிருந்த நீரை அருந்தினான். எழுந்து சாளரத்தின் வழியே கங்கைகொண்ட சோழபுரத்தை முதன் முதலாகப் பார்ப்பது போலப் பார்த்தான். அப்போது அவன் கனவில் கண்ட அதே கருப்புப் பூனை சாளரத்தின் வழியே தாண்டிப் போக துணுக்குற்ற மன்னன் நாளை எப்படியும் அரண்மனை தலைமை ஜோதிடரிடம் தான் அடிக்கடி காணும் இந்தக் கனவிற்கான காரணத்தையும், பலனையும் கேட்க தீர்மானித்துக் கொண்டான்.

கங்கைகொண்ட சோழபுரம் ஐப்பசி மாத பௌர்ணமி இரவில் ஜொலித்தது, முதலாம் இராசேந்திர சோழன் கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை அமைத்து அங்கு கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலையும் சோழ கங்கம் எனும் ஏரியையும் நிர்மாணித்தான். தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் முடிசூட்டிக் கொண்டார்கள்.

நகரத்தில் ஆங்காங்கே காணும் வன்னி மரங்கள் காற்றில் அரை மனதுடன் அசைவதும் பிறகு ஒரு யோகியைப் போல சலனமற்று நிலைப்படுவதுமாக இருந்தது. கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகள் முடிந்து நடையை சாற்றியிருக்க வேண்டும். சுற்றியமைந்த கோட்டைச் சுவர்கள் மீது சில சேவகர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிதறியிருந்த கரிய நிற மேகங்கள் ஒன்று திரண்டு முழுநிலவை மறைக்க கங்கைகொண்ட சோழபுரம் தற்காலிகமாகத் தன் பொலிவை இழந்தது போல மூன்றாம் இராசேந்திர சோழனிற்குத் தோன்றியது. விரைவில் தன் நாடு பாண்டிய நாட்டுடன் எதிர்கொள்ளப் போகும் போரைப் பற்றி எண்ண ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று தெரியவில்லை. மீண்டும் சுய நினைவிற்கு வரும்போது நாரைகள் கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி கூட்டமாகப் பறந்து சென்றன.

அரசரின் கட்டளைக்கு இணங்க தலைமை ஜோதிடர் அரண்மனைக்கு வந்து மன்னரைச் சந்தித்தார். தான் கண்ட கனவினைப் பற்றி மன்னர் கூற பொறுமையுடன் அனைத்தையும் கேட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். மன்னரின் கனவுக்குக் காரணம் முந்தைய சோழ மன்னர்கள் சமணர்களுக்குச் செய்த அநீதியின் பிரதிபலிப்பே என்று கூறத் தயங்கினார். மூன்றாம் இராசராச சோழனைக் கொன்றுவிட்டு மூன்றாம் இராசேந்திரன் அரியணை ஏறியதிலிருந்து அனைத்தையும் அறிந்த ஜோசியர் மன்னரின் கனவிற்கான காரணத்தை எப்படிக் கூறுவது என குழம்பித் தவித்தார். கனவில் வந்த ஓவியன் மூன்றான் இராசஇராச சோழன்தான் என்றும், அவனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கவே வந்திருக்கிறான் என்றும் அறிந்து கொண்ட தலைமை அரண்மனை ஜோதிடர் பெரும் முயற்சியுடன் உண்மையை மறைத்து மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

பாண்டியர்களுடன் மீண்டும் ஒரு போரைத் தவிர்க்க சாத்தியமேயில்லை என்றும், எதற்கும் போர் முடிந்த பிறகே அனைத்தையும் ஆரூடம் பார்த்து சரியாகக் கணிக்க முடியுமென்றார். அப்போது ஜோசியரின் ஒளியிழந்த கண்களைக் கண்ட மூன்றாம் இராசேந்திரன் சற்றே துணுக்குற்றான். எனினும் உடனே சுதாரித்துக் கொண்டு தனக்கேயுண்டான மிடுக்குடன் தலைமை ஜோசியரை நோக்கி “நான் தங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். தாங்கள் கூறியபடி போர் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி வழியனுப்பினான்.

மக்கள் அதிகம் கூடும் அந்த இடத்திலிருந்த கல் மண்டபத்தில் ஒரு இளைஞன் குரல் எழுப்பி அனைவரையும் அருகில் அழைத்தான். திடமான கரிய தேகம். படர்ந்த நெற்றியில் கீற்றாக திருநீரு. திடமான தோள்கள். பல நிறங்களைக் கொண்ட அவனுடைய தலைப்பாகையில் ஒரு அழகிய மயிலிறகு அவனுடைய அசைவிற்கேற்ப முன்னும் பின்னும் ஒயிலாக அசைந்தது. வலது கை மணிக்கட்டில் பல நிறங்கள் கொண்ட மணிகள் கோர்த்த கருப்புக் கயிற்றினை அணிந்திருந்தான், அவனைப் பார்த்ததும் அங்கு திரண்டிருந்த விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் அனைவரும் கல் மண்டபம் நோக்கி வர ஆரம்பித்தார்கள். சோழர்களின் ஆட்சி முறைகேட்டையும், அதிக வரி வசூலிப்பையும், பெரும் நிலச் சுவாந்தார்களின் உழைப்பு சுரண்டலைப் பற்றியும், கூறியவன் நிலத்தின் உரிமைப் பதிவுகளை அந்தப் பேராசைக்காரர்கள் கோயிலில் வைத்திருப்பதால், முதலில் அனைவரும் திரண்டு விரைவில் கோயிலைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினான். அங்கு இருந்த அனைவரும் கைகளை உயர்த்தி அந்த இளைஞனுடன் தாங்கள் இறுதி வரை உடன் இருப்போமென்று சூளுரைத்தார்கள். இதைக் கவனித்த அரண்மனைச் சேவகர்கள் அந்த இளைஞனை சிறைபிடிக்க விரைந்து வந்து அவனைச் சூழ ஒரு மாயாவி போல அவன் கூட்டத்தில் மறைந்து போனான்.

“எப்போது கோயிலைத் திறந்து ஆவணங்களை கைப்பற்றப் போகிறாய் கருணா?”

பனை ஓலையில் கிரீடம் போல ஒரு தலைப்பாகையை பின்னிக் கொண்டிருந்த அந்த முதியவர் தலையை உயர்த்தாமல் இளைஞனிடம் கேட்டார்.

“விரைவில் அதற்கான நாளை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் தாத்தா. உனக்கு ஒன்று தெரியுமா? மக்கள் அனைவரும் நம் இயக்கத்தை ஒருமனதாக ஆதரிக்கிறார்கள். ஒரு சிலர் நம் புனித இயக்கத்திற்காக தங்களாலான பொருள் உதவியைக் கூடத் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். விரைவில் நம் முயற்சி வெற்றியடையப் போகிறது தாத்தா” என்றவன், முதியவர் பின்னிக் கொண்டிருந்த பனை ஓலைக்கிரீடத்தை தலையிலணிந்து கொண்டு இரு கைகளையும் கட்டி கம்பீரமாகப் புருவங்களை உயர்த்தி மன்னரின் மிடுக்குடன் அபிநயித்தான். இதைக் கண்ட முதியவர் தன் பேரனை இறுக அணைத்துக் கொண்டார்.

910 முதல் பராந்தக சோழன் பாண்டியர்களை தோற்கடித்து சோழ சாம்ராஜ்ஜியத்தை முதலில் நிறுவியதிலிருந்து பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான போர் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தொடர்ந்து கொண்டே இருந்தது. பாண்டியர்கள் சோழனின் ஆளுமையின் கீழ் வர மறுதலிக்க மூன்று முறை போர் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் மதுரையைக் கொள்ளையிட்டு பிறகு பாண்டிய மன்னர்களை மன்னித்து முன்பு போல சோழர்களுக்குக் கட்டுப்பட்டு ஆள அனுமதித்தார்கள்.

அரசரின் அவசர அழைப்பிற்கிணங்க தலைமைச் சேனாதிபதி, முக்கிய மந்திரி, கருவூல நிர்வாகிகள், அரசரின் ஓரே மகன் சோமாப்பிள்ளை மற்றும் பல முக்கிய தலைமை அலுவலர்கள் அவையில் கூடினார்கள். அங்கு பேரமைதி சூழ்ந்திருந்தது.

“பாண்டியர்களுக்கும் நமக்குமான தொடர் போர்களில் வெற்றி தோல்வி மாறி, மாறி கிட்டியிருக்கிறது. தோற்றவர் மீண்டும் வென்றவரை மீண்டும் போருக்கு அழைப்பதும். வென்றவர் தங்களின் வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள மீண்டும் போரிடுவதுமான போட்டி முடிவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருபது ஆண்டு காலத்தில் பாண்டியர்கள் இருமுறை நம்மை வென்றிருக்கிறார்கள். தற்போது நடக்க இருக்கும் இந்தப் போர் அனைத்தையும் ஒரு முடிவிற்குக் கொண்டு வரப் போகிறது”.

மூன்றாம் இராசேந்திரன் கூறுவதை அவையினர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது தூதுவன் ஒருவன் வருவதைப் பார்த்த தலைமைச் சேனாதிபதி அவனை உள்ளே வர அனுமதி கொடுத்தார். மன்னர் உத்தரவிட தூதுவன் மடலை விரித்து உரக்கப் படித்தான். இந்த முறை ஹொய்சால மன்னன் வீரராமநாதன் நடக்க இருக்கும் போரில் சோழர்களின் பக்கம் இருப்பதாக செய்தி வந்திருந்தது. இதைக் கேட்ட மூன்றாம் இராசேந்திரன் அரங்கமே அதிரும் வண்ணம் சப்தமாகச் சிரித்தான்.

“சேனாதிபதி அவர்களே, ஹொய்சாளர்கள் நம்முடனும், பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டவர்கள் என்பதைத் தாங்கள் அறியாததில்லை. நாம் பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுடன் போரிட்ட போது ஹொய்சாள மன்னன் வீரசோமேச்வரன் பாண்டியர்களுக்கு துணை போனார். இப்போது அவருடைய மகன் வீரராமநாதன் நமக்கு ஆதரவாக வருகிறான். ஒவ்வொருவரின் மனநிலையையும் காலத்திற்கேற்ப எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?” விழிகளை உயர்த்தி அரசர் சேனாதிபதியைப் பார்த்தார்.

தலைமை மந்திரி உடனே குறுக்கிட்டு “வீரராமநாதனை நம் நாட்டில் உள்ள கண்ணனூருக்கு மன்னராக்கி விடுவோம் அரசே. பாண்டியர்கள் நம்மை நெருங்க கண்ணனூரைத் தாண்டித்தான் வர வேண்டியிருக்கும் என்பதால் நம்முடைய முதல் அரணாக கண்ணனூர் இருக்கும்” என்றார். இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மன்னர் வீரராமநாதனின் முடிசூட்டு விழாவிற்கான நாளை அரண்மனை ஜோசியரிடம் கேட்டார். விரைவில் முடிசூட்டு விழாவும் விமர்சியாக நடந்தேறியது. இப்படியாக போருக்கான காலமும், காரணமும் இணைந்தே வந்தது.

பாண்டியர்களின் படையை முன்னின்று நடத்தும் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மிகவும் வலிமை பொருந்தியவன். பெரும் ஆற்றல் கொண்டவன். சோழர்களின் படையும் தயார் நிலையில் இருந்தது. போர் தொடங்குவதற்கான எக்காள ஓசை பேரிடியாக மேகங்களை கலைத்துப் போட்டது. காலாட்படையினர்களால் எழுப்பப்பட்ட புழுதி சீறி எழும்பி அனைவரின் பார்வையை மறைத்தது. எங்கும் எழுட்சியான கூக்குரல்கள். ஒவ்வொரு முறை போர் நடக்கும் போது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ துங்கபத்திரை நதியின் இரு கரைகளில் வாழ்ந்த மக்கள்தான். இத்தகைய தொடர் போர்களால் பல தலைமுறைக்கு தாங்க முடியாத துயரங்களை அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்டார்கள். போருக்கான விதிமுறைகளையும், உயர்ந்த மரபுகளையும், கண்ணியத்தையும் கடைபிடிக்காததால் இந்த அப்பாவி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார்கள். என்றாலும் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சோழ மக்களின் அர்ப்பணிப்பை யாரும் மறுக்கமுடியாது. ஒருவழியாகப் போரும் முடிவிற்கு வந்தது. ஆனால் இந்த முறை சடையவர்மன் சுந்த பாண்டியன் வெற்றி வாகை சூடினான். இதைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் கட்ட சம்மதிக்க வேண்டியதாயிற்று.

சடையவர்மன் சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் ஹொய்சாளர்களையும், தெலுங்குச் சோழர்களையும் வென்றான். ஹொய்சாளர்களின் மன்னன் வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன் மகன் வீர ராமநாதனை கண்ணனூரை விட்டு விரட்டினான். இந்தப் போரினால் சடையவர்மன் சுந்தர பாண்டியன் தென் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய பாண்டிய சாம்ராஜியத்தை நிர்மானித்தான்.

இப்படியாக மூன்றாம் இராசராச சோழனின் காலத்தில் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருந்த சோழப்பேரரசு கடைசி மன்னன் மூன்றாம் இராசேந்திர சோழனின் காலத்தில் முதலாம் மாறவர்மன் குல சேகர பாண்டியனால் ஒரு முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. திருச்சிக்கும் தஞ்சைக்குமிடையே நடந்த இருவருக்குமான போரில் மூன்றாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் தலைமறைவானான். முதற் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு தன்னாட்சி இழந்து சோழப் பேரரசில் கலந்துவிட்டது போலவே, கி.பி. 1280-இல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தோற்றுவித்த பாண்டியப் பேரரசில் சோழநாடு முழுவதும் கலந்து விட்டது.

இந்தப் போரிற்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரம் பழைய பொலிவினை இழந்து தோற்றமளித்தது. சிதைந்தன அரண்மனை கோட்டைச் சுவர்கள். பாண்டியர்கள் சோழர்களால் தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்நகரை அழித்தனர். இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்ட பிற யாவும் அழிக்கப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்ட வானளாவிய மாளிகைகள். அனைத்து இல்லங்களிலும் ஏதாவது ஒரு இழப்பு பீடிக்கப்பட்டு சோகத்துடன் காட்சி அளித்தது. சோழர்களின் செல்வம் சூறையாடப்பட்டது அனைத்திற்கும் மௌன சாட்சியாக கங்கைகொண்டசோழீச்சரம் என்ற அந்த சிவன் கோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் போரினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்தது. .

ஒரு சிறுவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனே இடம் மாறி அமர்ந்து காய்களை நகர்த்தி விளையாடுவதை அந்த வழியாகச் சென்ற யாத்திரிகன் பார்த்து “ஆட வரவா?” என்று கேட்க சிறுவனும் சிரித்துக் கொண்டே உற்சாகமாகக் கையை ஆட்டினான். யாத்திரிகனை பார்த்த மாத்திரத்திலேயே சிறுவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. யாத்திரிகன் அருந்த பானம் கொண்டு வர வீட்டினுள்ளே இருக்கும் தாத்தா கேட்குமாறு சிறுவன் குரல் எழுப்பினான். ஆட்டம் தொடர்ந்தது. சிறுவன் மிகவும் சாதுர்யமாக விளையாடினான். யாத்திரிகன் சிரித்துக் கொண்டே சிறுவனின் ஒவ்வொரு நகர்விற்கும் அவன் தோளினைத் தட்டி தொடர்ந்து பாராட்டினான். யாத்திரிகனின் ஒவ்வொரு காய்களையும் வெட்டி வீழ்த்தி அடுத்த நகர்விற்கான நிழல் ஓத்திகை பார்த்தான் சிறுவன்.

இறுதியில் யாத்திரிகனின் ராஜாவை சிறைபடுத்தி தன் ராஜாவால் யாத்திரிகனின் ராஜாவை சதுரங்கப் பலகையிலிருந்து தட்ட எத்தனிக்க அங்கு விரைந்து வந்த சிறுவனின் தாத்தா அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தார். சிறுவனின் சார்பாக மன்னிப்புக் கோரி கைகளைக் கூப்பி யாத்திரிகனை வணங்கினார். எதுவும் புரியாமல் சிறுவன் குழம்பித் தவிக்க அவனிடம் தாத்தா “சாம்ராஜ்ஜியங்கள் வீழலாம். ஆனால் மன்னர்கள் வீழக்கூடாது” என்று கூறி தான் கொண்டுவந்த பானகத்தை இருவருக்கும் கொடுத்தார். தன்னை அடையாளம் கண்டுவிட்டாரோ என்று துணுக்குற்ற யாத்திரிகன் பாதி முகத்தை மூடிய பட்டுத் துணியை சரிசெய்தார். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பூண் போட்ட ருத்ராட்ச மாலையை சிறுவனுக்கு அணிவித்தான். இதைப் பார்த்த முதியவர் சிறுவனிடம் ருத்ராட்ச மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ளக் கூறினார். எதுவும் பேசாமல் யாத்திரிகனை வணங்கி வழியனுப்பிய முதியவர் கொள்ளுப் பேரனிடம் சோழர்களின் கதையை முதலில் இருந்து கூற ஆரம்பித்தார். போராட்டத்தில் உயிர் துறந்த சிறுவனின் தந்தை கருணா ஓவியமாக ஜன்னல் வழியாக மூன்றாம் இராசேந்திரன் செல்வதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

(சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனான மூன்றான் ராசேந்திர சோழனை பாண்டிய மன்னனான முதல் மாறவர்மன் குல சேகர பாண்டியன் திருச்சிக்கும் தஞ்சைக்குமிடையே தோற்கடித்தான். போரில் ராசேந்திரன் மடிந்ததிற்கான ஆதாரம் எதுவுமில்லை. போருக்குப் பிறகு கங்கை கொண்ட சோழபுரத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான் என்று எண்ணுகிறார்கள்)

- பிரேம பிரபா

Pin It

தமிழரின் வரலாற்றை ஒருங்கே காட்டும் படைப்பாக விளங்குவது புறநானூறு. இந்நூலானது தமிழரின் வீரம், புகழ், கொடைச் சிறப்புகள் எனப் பலவற்றை எடுத்தியம்புகிறது. அதோடு, பழந்தமிழகத்தின் நிலவியல், சமுதாயவியல் சான்றாவணமாக விளங்குகிறது. வீரம் செறிந்த தமிழர் வரலாற்றினை எடுத்துரைக்கும் சங்க நூல்களில் பெரும்பகுதித் தரவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நூல் புறநானூறாகும்.

இந்நூல், பல்வேறு வகைமைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை திணை, துறை சார்ந்த அமைவுகளில் உள்ளன. தமிழக நிலப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள், மூவேந்தர்களும் பேரரசர்களும் சுட்டப்படுகின்றன. அது விரிந்த ஆய்வுக்களத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மூவேந்தரின் ஆட்சியும் அவற்றின் பகுதிகளும் இது கவனப்படுத்துகிறது. அதிலும் இக்கட்டுரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாடல்களின் வழியாக, அவர்களின் போக்கினை விவரிக்க முயல்கிறது. அதோடு, தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் பதிவாகியுள்ள தமிழக நிலப்பகுதி சார்ந்த பகுதிகளையும் கவனப்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் காட்டும் தமிழக எல்லைகள்

தமிழில் பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்கள் பழந்தமிழகத்தின் நிலப்பகுதிகளைச் சுட்டுகிறது. அவை, வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியான புலவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியம், புறநானூறு, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களும் பல்வேறு தமிழ் அறிஞர்களும் இதுகுறித்துக் கருத்துரைத்துள்ளனர். அவற்றினை விரிவாகக் காணலாம்.

தொல்காப்பியம்

தமிழின் முதன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம், அதன் பாயிரத்தில் தமிழகத்தின் நிலப்பகுதியைக் குறிக்கிறது. அதாவது, நான்கு எல்லைகளையும் அவற்றின் நிலை குறித்தும் பதிவு செய்கிறது. அப்பாடல் பின்வருமாறு,

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்….. (தொல். பாயிரம்)

என நீளும் பாடலின் தொடக்கமே, தமிழகத்தின் இருபெரும் எல்லையை எடுத்துரைக்கிறது. அதாவது, வடக்கில் வேங்கட மலையும் தெற்கில் குமரிமுனையும் அமைந்து தமிழகத்தின் எல்லையாக உள்ளது என உரைக்கிறது. இதில், வேங்கட மலை என்பது எது? என்பதில் அறிஞர்கள், ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதாவது, இந்த வேங்கட மலை என்பதுதான் இன்றைய ‘திருப்பதி’ பகுதியா? இல்லை வேறு ஏதாவது நிலப்பகுதியா என்பது தான் அது. குமரிமுனை என்பது இன்றைய கன்னியாகுமரி பகுதிதானா? அல்லது கடல்கொண்ட குமரிநாட்டின் பகுதியா? என்று ஐயம் கொள்கின்றனர். எனினும் தொல்காப்பியரின் கூற்றுபடி, வடக்கே வேங்கடமும்; தெற்கில் குமரிமுனையும் தமிழகத்தின் எல்லையாக விளக்குகிறது என்பதில் ஐயமில்லை.

வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர் (தொல்., செய்., 78)

என்ற நூற்பாவின் வழியாக தமிழக நிலப்பகுதியின் நாற்பெரும் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார் தொல்காப்பியர். அதாவது, ‘நாற்பெயர் எல்லை’ என்பதின் பொருள் நான்கு பெரிய எல்லைகளைக் கொண்ட பகுதியினைத் ‘தண்புகழ் மூவர்’ சேரர், சோழர், பாண்டியர் ஆட்சி செய்ததைச் சுட்டுவதன் மூலம் விளக்குகிறார். இது மேலும் விரிவான ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரம்

தமிழில் சிறந்த காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இந்நூல், தமிழக எல்லையைக் குறித்துப் பேசுகிறது. அதாவது,

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி (சிலம்பு., 19 - 22)

என்று சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் காணலாகும் இப்பதிவு, குமரி மலை குறித்தும் கடல் எல்லைகளைக் குறித்தும் விளக்கி நிற்கிறது.

மேலும், பல தமிழ் நூல்களில் தமிழகத்தின் நிலப்பகுதிகள் குறித்துப் பதிவுசெய்கின்றன. அவை விரிந்த ஆய்வுகளுக்கு உரியன. ஆதலால், இங்கு அவை தவிர்க்கப்படுகின்றன. இன்றைய தமிழகத்தின் எல்லைப் பகுதிகளாக ஆறுகளும் மலைகளும் சமவெளிப் பகுதிகள், கடல்கள் எனப் பல்வேறு அரணாக உள்ளது. அதாவது, கிழக்குக் கன்னியாகுமரி பகுதி கடலும்; இந்திய பெருங்கடலும்; அரபிக் கடலும்; வங்காள விரிகுடாவுமாக உள்ளது. அதோடு கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மாநிலங்களும் எல்லைப் பகுதிகளாக அரசியல் சார்ந்து அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

பதிற்றுப்பத்தில் “இசை இமயம் தென்அம் குமரியொடு ஆயிடை” (பதிற்று., 11), “கடவுள் நிலைஇய கல் ஒருங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆக.., ” (பதிற்று., 43) என்ற பாடலிலும் “குணகுட கடலா எல்லைத், தொன்று மொழிந்து தொழில் கேட்ப” (மதுரைக்., 70 -72) என்ற பாடலும் இமயம் முதல் குமரி வரை தமிழக அரசர்களின் எல்லையாக இருந்ததைச் சுட்டுகிறது.

இவ்வாறான, இலக்கண, இலக்கிய நூல்களின் வழியாகவும் இன்றைய நிலவியல் எல்லைப் பகுதிகளையும் காணலாம். அதனால், தமிழக மூவேந்தர்களும் தமிழகத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். எனினும், மூவருக்குள்ளும் அடிக்கடி போர்களும் பூசல்களும் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. அதனால், எல்லைப் பகுதிகளும் மாறிமாறி அமைந்துள்ளது.

நிலம் என்னும் இயற்கை

உலகில் நிலம் என்பது பல்வேறு இணைவுப் பொருட்களால் அமைந்துள்ளது. குறிப்பாக, ஐம்பூதங்கள் என்பவைகள் முதன்மையான இடம்பெறுகின்றன. அவை நீர், காற்று, வானம், தீ, என்பவையாகும். நிலத்தில் இவை நான்கும் ஒன்றாக கலந்து நிற்கின்றன. இதுகுறித்துப் பின்வரும் புறநானூறு பாடல் ஒன்று விளக்குகிறது.

மண் திணிந்த நிலனும்,

நிலன் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரும் வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல… (புறம்., 2)

என்று ஐம்பெரும் கூறுகளைச் சுட்டிக்காட்டுகிறது. இவைகளை, நிலம் என்பதற்குள் நீரும், காற்றும், தீயும், வான்வெளியும் அடக்கமாய் உள்ளதை உணர்த்துகிறது.

புறநானூறு சுட்டும் நிலவெல்லை பகுதிகள்

புறநானூற்றின் சில பாடல்களின் வாயிலாக தமிழக நிலப்பரப்பினைச் சுட்டிகிறது. அதாவது, ஆட்சி செய்த மன்னர்களும் அரசர்களும் தங்களின் எல்லையை விரிவுபடுத்த எண்ணினர். அதன் காரணமாகப் போர்களும் நிலவெல்லை விரிவாக்கமும் உருவாயின. இதனைத் தமிழர்களின் வீரம் சார்ந்த பதிவுகளாகக் காணமுடிகிறது. கடல் கடந்தும் தமது எல்லைகளை உண்டாக்கியுள்ளனர். ஜாவா, சுமித்ரா, இந்தோனோசியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் வரை தமிழர்களின் படையெடுப்பும் நிலவெல்லையும் இருந்ததைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த அடிப்படையில் புறநானூற்றில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பற்றி முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடல் ஒன்றில், பாரதப் போர் நடைபெற்ற காலத்தில் இருபெரும் படைகளுக்கும் உணவு அளித்ததைக் கூறுகிறது. அதில், ‘குடகடற் குளிக்கும்’ என்ற அடிகளுக்கு உரையெழுதும் ஆசிரியர்கள், ‘தமிழக எல்லை முழுதும் ஆண்ட தன்மையன்’ என்று பொருளுரைக்கின்றார். இம்முறையில் நோக்குகையில், தமிழக மன்னான பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் தமிழகம் முழுவதும் ஆட்சி செய்தும் பிற நாடுகளில் தம் கொடைச்சிறப்பினை உணர்த்தினான் என்பது தெளிவாகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடிய பாடலில்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும், (புறம்., 6)

அரசனை வாழ்த்துகையில், ‘வடதிசையில் பனிபடரும் இமயமும் தென்திசையில் கன்னியாற்றுக்குக் கிழக்குத் திசையில் கடலுக்கும் மேற்குத் திசையில் கடற்பரப்புக்கும் என எல்லைகள் கொண்டு அடங்காத அச்சமும் புகழும் கொண்டவனே’ என உரைக்கிறார். இதன்மூலம் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் எல்லைப் பரப்பும் நாட்டின் நிலவெல்லைகளும் ஆட்சித் திறமையையும் காரிக்கிழார் பாடியதன் வழி உய்த்துணர முடிகிறது.

குறுங்கோழியூர் கிழார் பாடிய பாடல் தமிழகத்தின் நிலவெல்லை மேலும் சுட்டி நிற்கிறது. அதாவது,

தென்குமரி, வட பெருங்கடல்,

குண குட, கடலா எல்லை,

குன்று, மலை, காடு, நாடு

ஒன்று பட்டு வழிமொழிய… (புறம்., 17)

இதன் விளக்கமாக, ‘தென்திசையில் கன்னியையும் வடதிசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும்’ என அமைந்துள்ளது. அந்த இடைப்பட்ட நிலம்தான் தமிழர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக, மேற்கண்ட பாடலானது பாண்டிய மன்னர்களைக் குறித்து நிற்கிறது.

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடிய பாடல் அவர்கள் ஆட்சி செய்த சிறப்பினைச் சுட்டுகிறது.

விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,

குணகடல் பின்னது ஆக, குட கடல்

வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப… (புறம்., 31)

பகைவர் நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய செய்தியினை இப்பாடல் உணர்த்துகிறது. குறிப்பாக, கடல்மேல் சென்று போர் நிகழ்த்தியது, நிலவெல்லை விரிவாக்கத்தைச் சுட்டுகிறது. இதன்மூலம் தமிழக அரசர்களின் நாடுகளின் எல்லைப் பகுதி என்பது கடல் கடந்தும் இருந்ததை அறியமுடிகிறது. இதேபோன்று, மற்றொரு பாடலின் மேற்குத் திசை கடலில் சென்று போரிட்டதைக் குறிப்பிடுகிறது.

அண்ணல் யானை என்னின், கொங்கர்க்

குடகடல் ஓட்டிய ஞான்றைத்

தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே! (புறம்., 130)

இப்பாடலானது, அரசனது கொடைச் சிறப்பினைக் கூறுப்படுகையில், மேற்குக் கடலினை நிலவெல்லையாக குறிக்கிறது. இந்தப் பாடலினை முடமோசியார் என்ற புலவர் பாடியுள்ளார்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம் வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடிய பாடல் ஒன்று. தமிழகத்தையே போரிட்டு வெற்றி பெற்று, ஆட்சி செய்யும் அரசனே என வாழ்த்திய நிலையில் அமைந்துள்ளது. எனினும் புகழ்பாடுதல் என்பதனைக் கடந்து, பாண்டிய அரசன் தமிழகம் முழுதும் ஆட்சி செய்துள்ளமையும் புலப்படுகிறது. இதனை,

தண்தமிழ் வரைப்பகம் கொண்டியாக,

பணித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங்கடுந்திறல்

நின் ஓரன்ன நின் புதல்வர்… (புறம்., 198)

என்னும் இப்பாடலுக்கு விளக்கவுரையில், ‘தமிழ்நாடு எல்லை முழுதும் என்று கவர்ந்ததுடன், பகைவரைப் பணித்து, அவர்தரும் பொருள்களையும் பெற்று வந்து உண்ணும் தணித்தற்கினிய வலிமையுடையவன் நீ’ எனக் கூறுகின்றார். இதன்வழி தமிழக எல்லை முழுவதும் ஆட்சி புரிந்துள்ளமை புலப்படுத்துகிறது.

சோழன், குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடிய பாடல் நான்கு திசைகளை குறிக்கிறது. அதாவதும் வாழ்த்திய நிலையில் அமையும் பாடல்,

குணதிசை நின்று குடமுதல் செலினும்

குடதிசை நின்று குணமுதல் செலினும்

வடதிசை நின்று தென்வயின் செலினும்

தென் திசை நின்று குறுகாது நீடினும்

யாண்டு நிற்க வெள்ளி; யாம்

வேண்டியது உணர்தோன் தாள் வாழியவே! (புறம்., 386)

கிள்ளி வளவனின் புகழினைப் பாடுங்கால், இவ்வாறு நால்திசை முறைகளையும் சுட்டுகின்றனர். மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையிலும் சென்றாலும் உதவும் மனப்பான்மை உடையவன் கிள்ளி வளவன் எனப் புலவர் வாழ்த்தி உரைக்கின்றார்.

முடிவுரை

தமிழக பெரும் எல்லையினைப் புறநானூறு பாடல்களின் வழியாக, சில குறிப்புரைகளை அறிந்துகொள்ள முடிகிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த இந்த மண்ணில் அவரவர் தம் காலகட்டத்தில் போர்களுடனும் செழுமையோடும் வாழ்ந்துள்ளதையும் காணமுடிகிறது. இந்தக் கட்டுரையின் வழியாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளையும் (நாடுகள்) மன்னர்களின் அரசியல் நிலை, கொடைச் சிறப்பு, போர்த்திறன் போன்றவற்றைத் தெளிவாக உணர முடிகிறது. அதோடு, தமிழ் இலக்கண, இலக்கியங்களில் காணலாகும் தமிழக அரசர்களின் நிலவெல்லை பகுதிகள் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைய தமிழகப் பகுதி என்பது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சுருக்கப்பட்டுள்ளதைக் கவனப்படுத்தி சுட்டி நிற்கிறது. அத்துடன் இது மேலும் விரிவாக ஆராய இடமுள்ள பகுதியாக இது விளங்குகிறது.

துணைநூற் பட்டியல்

  1. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்) புறநானூறு, (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  2. தொல்காப்பியர்., தொல்காப்பியம், (இளம்பூரணனார் உரை), சாரதா பதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு – 2010.
  3. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்), மதுரைக்காஞ்சி (மூலமும் உரையும்) (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  4. பரிமணம், அ. மா., பாலசுப்பிரமணியம், கு.வெ. (பதி.கள்), பதிற்றுப்பத்து (மூலமும் உரையும்) (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2014.
  5. உ.வே.சா. (பதி.), மணிமேகலை, (மூலமும் உரையும்), டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, ஒன்பதாம் பதிப்பு – 2013.
  6. புலியூர் கேசிகன்., (தெளிவுரை), சிலப்பதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2008.

- முனைவர் ஜெ. மதிவேந்தன்,
கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி,
செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்

Pin It