கவிதை உலகில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளீடு எது, பாடு பொருள எது என்ற புரியாமையின் மர்மத்தில் திகைத்துக் கிடக்கிறது. எதைப்பாட.... என்னத்தைப் பாட என்ற குழப்பத்தில் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள கவிதைகள் என்ற பெயரில் ஏதோ வருகின்றன. மரபா.... புதுசா என்ற கேள்வி பழையதாகி... வருகிற கவிதைகள் புரிகின்றனவா இல்லையா என்றாகிவிட்டது. வாக்கியங்களின், அடுக்கில் கவிதை, உரைநடையாக உருக்குலைந்து விட்டன. சமூகத்தின் ஆழ்மனசையோ... மனசின் ஆழ் சமூகத்தையோ உணர்த்துகிற ஆற்றலெல்லாம் இழந்து வெற்றுக் கூடுகளின் நொறுங்கல் குவியலாக இறைந்து கிடக்கின்றன.

இப்படியான சூழல்... ஓவியர் ஸ்ரீரசா, கவிஞர் ஸ்ரீரசாவாக வெளிப்பட்டிருக்கிறார். மறுபடிமானுடம், கத்துண்டுகள் ஒளிரும் காலம், உடைந்து கிடந்த நிலவு என்று மூன்று கவிதை நூல்கள், காலம் பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கின்றன.

மதம் எனும் ராட்சஸம் இந்தியாவில் விளைத்திருக்கிற நாசம் கொஞ்சமல்ல. கடவுளை வணங்கி அமைதி அடைதல் என்பது கனவாக கடவுளின் பெயரால் அமைதி கொன்று, ஆயிரமாயிரம் மனிதர் கொன்று, ஆயிரமாயிரம் வீடுகள் எரிந்து, மசூதி இடித்து.... ஆலயத்தில் குண்டுகள் வெடித்து.....

இந்த நாசகரமான மதத்தின் ஆணிவேரை அசைக்கிற பேராண்மையற்றுப் போன சமகாலத்து கலை இலக்கிய அறிவு ஜீவிகளின் மென்மையான தன்மைகளுக்கிடையில்.... மறுபடிமானுடம், கவிதை நூலின் சகல படைப்புகளும் மத மூடநம்பிக்கைக்கு எதிராக கோபத்தீ காட்டுகிறது.

இந்து என்ற / ஒற்றைச் சொல்லுக்குள் / ஒளிந்து கொண்டிருக்கும் / நான்கு வர்ணங்கள் / மற்றும் அதன் விளிம்பில் / பஞ்சவர்ணமும்/ அஞ்சுவர்ணமும் / எரித்துப்போட்ட / கறுப்பு வர்ணமாய் / எப்போதும் பெண்கள்...../
சமூகக் கட்டமைப்பில் மதத்தின் பங்கை நச்சென்று சொல்கிறது. மதத்தின் காலடியில் மனிதர்கள் பேதப்பட்டு மிதிபடுகிறார்கள் என்பதையும் சொல்கிறது.

அன்பு சிவம் / இரண்டென்பார் / அறிவில்லார் / அன்பேசிவம் / என்பார் அறிவுள்ளார் / கழுமரங்களடியில் / ஆறாக்கி ஓடும் / சமணர்கள் ரத்தம் /

எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை அன்பேசிவம் என்றோதுகிற சைவ சமயத்தார் தான் செய்தனர் என்கிற மதங்களின் ரத்த வரலாற்றை உணர்த்துகிறது விதை

ராசிநாதன் குருபகவான் / மாசியில் இடம் மாறும்/ மகத்தான வேளை / என்று துவங்குகிற கவிதை, மகாமகக்குளத்தில் பக்தியின் பெயரால் மரணமுற்ற மனிதர்களுக்காக மனம் கொதிக்கிறது.

வேறு / குழுவையெல்லாம் / மானுடம் வென்றதம்மா / மானுடர் / குழுவையெல்லாம் /மதவெறி / கொன்றதம்மா/
என்ற கவிதை ஆயிரமாயிரம் காலத்து சரித்திரத்தை தெறிப்பான சொற்களில் சொல்கிறது.

இதே உள்ளடக்கத்தை மிகமிக விளக்கமாக இன்னொரு கவிதை பேசி, மதங்களின் புனிதத்திரைகளை தாட்சண்யமில்லாமல் கிழித்தெறிகிறது.

வாழ்வைக் குலைக்கும் / வர்ணங்கள் எதற்கு? / வர்ணங்கள் குழைத்து / வாழ்க்கையைப் புதுக்கு / என்ற கவிதை சூரியனைப் போல பளிச்சென்று ஒளிர்ந்து, உலகுக்கே தீர்வு சொல்கிறது

மதம், சாதி, பெண்ணடிமை மூன்றுக்கும் எதிரான சமரச மற்றபோர்க்குரலாக வந்திருக்கிற இக்கவிதைத் தொகுப்பு உலகமானுடத்தை உயர்த்திப்பாடுகிறது. மதங்களின் உட்பிரிவுகள், அதன் தத்துவமாய் கிழிக்கப்பட்டிருக்கின்றன.

கவிதை மொழி, அதன் கட்டமைப்பு, வெளிப்பாட்டுத்திறன், அழகியல் கூறு இவற்றிலும் சமகாலக் கவிதை உலகில் காணக்கிடைக்காத எளிமையும், வலிமையும் பெற்றிருக்கிறது. வாசகர்கள் தொட்டு நுகரக் கூடிய எளிய மலராக நுகர்ந்தால் மனசையே வசீகரிக்கிற வாசமாக கவிதை வடிவரீதியான அழகியல் சிறப்பும் பெற்றிருக்கிறது.

பகுத்தறிவு இயக்கத்தின் தோழர்களுக்கு மனவெளிச்சம் தருகிற இக்கவிதை நூல், பொதுவுடைமை முகாமிருந்து பூத்திருக்கிறது.

நிச்சயமாக கருப்புச் சட்டைத்தோழர்களும், செஞ்சட்டைத் தோழர்களும் கையில் வைத்திருந்து, மனசுக்குள் உள்வாங்கி சக மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய மிகமிகப் புதுமையான சமூகக் கவிதை வரவு.

கத்துண்டுகள் ஒளிரும் காலம், என்ற தலைப்பே ஒரு சமூகச் செய்தியை சொல்கிற அற்புதமான கவிதை. தூக்கியெறியப்பட்டிருக்கும் கறுப்பு மனிதர்கள் அறிவால் கனன்று ஒளிர்கிற காலம் என்பதை உணர்த்துகிறது.

கருப்பு - வெள்ளை, இருள் - ஒளி என்ற முரண்களை வைத்தே.... பிரபஞ்சம் முழுமையும் அவரது கவிதை மனம் சிறகு விரித்துப் பறந்திருக்கிறது. அம்பேத்கார், தந்தை பெரியார் என்ற இரு அரிய மனிதர்கள் பற்றி கவிதை, சமகாலத்துக் கவிதை உலகில் எந்த இதழ்களிலும் காணமுடியாதவை.

கய மனிதர்களான இவர்கள் உலகுக்கு தந்த ஒளியின் பரப்பை கவிதைகள் அற்புதமாக உணர்த்துகின்றன. தத்துவதளத்திலும் ஏகப்பட்ட கவிதைகள் பிரமிக்கத்தக்க இலக்கிய அழகியலுடன் இயங்குகின்றன.

நவீனக் கவிதைக்கு ஒரு புதிய குடமாக இந்த நூல் திகழ்கிறது. உலக நாடுகள்.... மக்களின் போராட்ட வரலாறு..... மனிதருக்கும் இயற்கைக்குமான முரண் என்று கவிதைகள் பல்வேறு வகைப்பட்ட தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் செயல்பட்டு.... வாசகருக்குள் ஒரு புதிய அறிவுப் பிரபஞ்சத்தையே படரச் செய்கிறது.

நீர்த்துப் போய்.... உயிர் வற்றிப் போன தமிழ்க் கவிதையுலகம் நோயுற்று வறண்டு கிடக்கிற இச்சூழல், மறுபடியும் தமிழ்க்கவிதை என்ற புத்தெழுச்சியை, புதுவெள்ளத்தை இவரது கவிதை நூல்கள் தருகின்றன.

மார்க்ஸீயத்துவத்துக்குள் ஊறித் திளைத்த கவிஞர், உள்ளடக்கம், வடிவநேர்த்தி.... உருவ அழகியல், சமூகப் பயன்பாடு குறித்த துல்யமான - நுட்பமான - ஞானமும் கொண்டிருக்கிறார்.

மதத்திற்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமூக நீதிப் போராளியாகவும் இந்த வர்க்கப் புரட்சியாளர் திகழ்வதால், தத்துவ ஒருமையுடன் தடுமாற்றமில்லாது பீறிடுகின்றன. கவிதையின் கட்டமைப்பும், மொழியாளுமையும் கச்சிதமாக பூத்திருக்கிற அழகியலும் கவிதைகளை வேறொரு புதிய சிகரத்துக்கு உயர்த்துகின்றன.

சமகாலத் தமிழ்க் கவிதை உலகம் இந்தக் கவிதை நூல்களைப் பயில வேண்டும் என்று பெருமிதத்துடன் பரிந்துரை செய்கிறேன்.
Pin It