அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், அறுவை மருத்துவ வல்லுநர்கள், அலுவலர்கள், ஆசிரி யர்கள், உற்றார் உறவினர்கள் ஆகிய அனைவரின் மதிப்பையும் பெற்றவர் மகப்பேறு மருத்துவர் மாமேதை பூ.பழநியப்பன் அவர்கள். சில நிகழ்வுகளை நினைவு கூர விரும்புகிறேன்.

படிக்கும்போது மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பு அளிப்பதில் வியப்பில்லை. படித்து முடித்துப் பல ஆண்டு கள் ஆன பின்னரும் மங்காத மதிப்பு இருந்ததுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. எனக்குச் செயலாளராக இருந்தவர் அவருடைய மனைவிக்குக் கருத்தடை செய்ய விரும்பிய போது, மரு. பூ.ப. அவர்களிடம் பேசி னேன். “நாளைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்புங்கள்” என்றார். அடுத்த நாள் அந்த இணை யர் எல்லோரும் சென்ற பின்னரும் மரு. பூ.ப. அவர் களுக்காகக் காத்திருந்தனர். அங்கிருந்தவர் “ஏன் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்ட போது “டாக்டர் பழநியப்பன் வரச்சொன்னார் என்று விடை பகர்ந்தார் அந்த அம்மையார்.” பி.பி.எல். (BPL) வரச் சொன்னாரா என்று கேட்டுவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

“காப்பர்டி”யை மாட்டி அனுப்பிவிட்டார்கள். அப்போதுதான் காப்பர் டி அறிமுகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த மாதம் அந்த அம்மையாருக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த பெண் மருத்துவர் காப்பர் டியை எடுத்துவிட் டார். என் மனைவி அம்மருத்துவமனைக்குச் சென்ற போது மரு. பூ.ப. அவர்களின் பெயரைக் கூறியபோது, அங்கிருந்த பெண் மருத்துவர் “BPL-ஆ, BPL-ஆ” என்று வாயைப் பிளந்தார். “அவர் என்னுடைய குரு நாதர். அவருடைய Procedure -இல் குறை கண்டேன் என அவரிடம் சொல்லிவிடாதீர்கள்” என்று அலறி அலறிப் பேராசிரியரின் புகழ் பாடினார். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் மரு. பூ.ப. அவர்களிடம் DGO படித்த மாணவி.

பேராசிரியர் மரு. பூ.ப. அவர்களின் ஆளுமைத் திறன் வியக்கத்தக்கது. அந்த ஆளுமைத்திறன் அவருடைய பதவி, செல்வாக்கு, தேர்ந்த மருத்துவ அறிவு ஆகியவற்றால் அல்ல. அவருடைய பேச்சில் நகைச்சுவை மிளிரும். மயக்க மருந்து கொடுத்து அறுவை மருத்துவம் செய்வதுபோல் நகைச்சுவை யால் திருத்த வேண்டியதைத் திருத்திவிடுவார். சில நேரங்களில் அவருடைய நகைச்சுவைப் பேச்சு அவருடைய அறுவைக் கருவிகளைவிடக் கூர்மை யாக இருக்கும். திரும்பவும் தவறு செய்யாவண்ணம் தடுத்துவிடும். இளைஞர்களுடன் பேசும்போது சிருங்காரரசத்துடன் நகைச்சுவையுடன் பேசுவார்.

மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள பெரியவர்களிடம் பேசும் போது குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சீர்திருத்தக் கருத்து களைப் புகுத்திவிடுவார். பள்ளியில் படித்துக் கொண்டி ருந்த என் மகள் கேட்ட கேள்விக்கு விடை அளித்தவர் “டாக்டர்களுக்கு ஸ்பெல்லிங் வீக். அதனால் கையெழுத்து நல்லா இருக்காதம்மா. ஆனால் மற்றவர்களின் தலை யெழுத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றார்.

நோய் நாடி நோய் முதல் நாடி மருத்துவம் செய்ய வேண்டும் என்பது வள்ளுவரின் கட்டளை அல்லவா! நோய் நாட அறிவியல் முறை ஆய்வுகள் தேவைப் பட்டாலும் நோய்முதல் நாடப் போதிய தரவுகள் வேண்டு மல்லவா? மருத்துவம் பார்க்க வருவோரிடமும் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் செய்தி சேகரிப்பதில் அவரிடம் தனிப்பாங்கு இருந்தது.

பூந்தமல்லி சாலையில் நேரு பூங்காவிற்கு எதிரில் மாலையில் ஓர் அறையில் அமர்ந்திருந்தார். என்னை வரவேற்று “நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்களே” என்றார். “எனக் காகத் தான் வந்திருக்கிறேன்” என்றேன். “நான் பொம்பளைங்க டாக்டர். என்னைத் தேடி வந்திருக்கீங் களே” என்றார். வழக்கமான கேள்விகளுக்குக்கூட நகைச்சுவையான வினாக்களையே விடுத்தார். “அவ் வப்போது தீர்த்தம் சாப்பிடுவது உண்டா?” என்று கேட்டார்.

சற்றுத் திகைத்து நின்றேன். “சும்மா சொல்லுங்க சார், நான் கூட எப்போதாவது சாப்பிடுவது உண்டு” என்றார். “இல்லை” என்றேன். அடுத்த வினா. “தீர்த்தம் சாப்பிடாத உங்களுக்கு எப்படி தனியார் துறையில் உயர் பதவிகள் கொடுத்தார்கள்?” “உயர் பதவிகளுக் குத் தீர்த்தம் குடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்றேன். கவனமாக விடை சொல்லுபவர்களிடத்திலே இப்படிக் கேள்விகள் கேட்பவர் அவரைத் தேடி வருகிற பெண்டிரிடம் எத்தகைய கேள்விகளைக் கேட்டிருப்பார் என்று யூகித்துப் பாருங்கள். ஆழ்ந்து ஆராயும் பொறுமை இருந்ததால்தான் அவர் வெற்றி பெற்றார். அவரைத் தேடி மகளிர் கூட்டம் வந்தது.

இந்திய அளவில் உள்ள பல்வேறு மகப்பேற்றுச் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கத்தின் தலைவராக மரு. பூ.ப. தேர்வு பெற்ற போது, அயனாவரம் திரு. மோகன் அவர்களும் நானும் பாராட்டுத் தெரிவிக்க அவர் வீட்டிற்குச் சென்றோம். “பெண்கள் பாராட்டு தெரிவிக்கலே. ஆண்கள் வந்து பாராட்டுத் தெரிவிக் கிறீர்களே” என்றார். அண்ணாநகரில் இப்போது வஸந்தபவன் இருக்குமிடத்தில் சிறிய உடுப்பி உணவு விடுதி இருந்தது. அங்கே சிறிய அளவில் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். அழைப்பிதழில் திரு. மோகன் அவர்களின் மனைவி திருமதி. அம்புஜம் அம்மாள். என் மனைவி திருமதி. தேமலர் என்ற பெயர்கள் இருந்தன. தேமலர் வரவேற்புரை ஆற்ற, அம்புஜம் அம்மாள் நன்றி உரை படித்தார். மரு. பூ.ப. ஏற்புரையில் எல்லாப் பாராட்டுக் கூட்டங்களைவிட அக்கூட்டத்தில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக நன்றி கூறினார். ஆண்கள் பக்கம் திரும்பிச் சற்றுப் பொறுத்து உங்களுக்கும்தான் என் நன்றி என்று கூறி சிரிப் பொலியை எழுப்பினார்.

நான் அண்ணாநகர் அரிமா சங்கத்தில் செயலா ளராக இருந்த போது மரு. பூ.ப. அவர்களை ஒரு மாலைக் கூட்டத்தில் பேச அழைத்த போது “ஜிமாவும் ஜமாவும்” என்ற தலைப்பைக் கொடுத்தார். தலைப்புப் புலப்படாததால் விளக்கம் கேட்டேன். விளக்கம் கேட்டால் பேச வரமுடியாது என்றார். வேறு வழியின்றி, சுற்றறிக்கையில் அத்தலைப்பைப் போட்டிருந்தேன்.

தலைப்பு மர்மமானதாக இருந்ததாலும் மகளிர் மருத்துவர் என்பதாலும் அன்று பெண்களின் கூட்டம் முழு அளவில் இருந்தது. சிரிப்பொலிகள் தவிர மிக அமைதியான சூழ்நிலையில் 45 மணித்துளிகளில் பேசி முடித்தார் ஜிமா - Journal of Indian Medical Association; ஜமா- Journal of American Medical Association என்பனவற்றின் சுருக்கம் என, இறுதியில் மருமத்தை அவிழ்த்தார். அந்த இதழ்களில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் உட்கருத்தே தன் பேச்சு என்றார். தொடர்ந்து கேள்விகள் வந்துகொண்டிருந்த போது எப்படி நிறுத்தவது என்று தலைவர் தயங்கிக் கொண்டிருந்த போது, “அருமைப் பெண்மணிகளே! என் வயிற்றில் மணி அடிக்கிறது” என்றார் மருத்துவர். அனைவரும் உணவுக்குச் சென்றனர்.

இப்போது நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க அறுவை மருத்துவம் செய்வதில் வியப்பேதும் இல்லை. அதில் மரு. பூ.ப. அவர்களுக்கு உடன்பாடு இல்லை. நீண்டகாலத்திற்கு முன் ஒருநாள் இரவில் தனியார் மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அப்போது பிரசவத்திற்கு அறுவை மருத்துவம் செய்ய மரு. பூ.ப. போன்ற சிறப்பு மருத்துவர்களின் ஆலோச னையும் தேவைப்பட்டது. அப்பெண் வலியில் துடித் துக் கொண்டிருந்த போதும் அறுவை மருத்துவம் செய்யாமல் இயல்பாகக் குழந்தை பிறக்கச் செய்தார். முன்னிரவில் சென்றவர் விடியற்காலை வரை விழித் திருந்து ஆண் குழந்தை பிறந்த நல்ல செய்தியை அறிவித்துவிட்டு வீடு திரும்பினார்.

பல ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் தண்ணீர்க் குழாய் பழுது பார்க்க ஓர் ஆளை அனுப்ப வேண்டி னார். எனக்குத் தெரிந்தவரை அனுப்பினேன். பழுது பார்த்துவிட்டுப் பணம் பெற மறுத்ததால் மரு. பூ.ப. என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். பழுது பார்த்தவரிடம் பேசிய போது மேற்கூறிய பிள்ளைப்பேறு நிகழ்ச்சியைக் கூறி விட்டு, “என் வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் பணம் வாங்க மாட்டேன்” என்றார். இத்தகைய நிகழ்வுகள் பல இருந்தன. அவை அவர் புகழ் பாடும். அவர் வாழ் வாங்கு வாழ்ந்தவர்!