நிகழ்ந்த மங்களகரமான ஜய வருடம்(1189), பங்குனி 20; 2015 ஏப்ரல் 3; ஜமாதிசானி 13 நன்னாளன்று காலை நல்ல நேரம் 10 மணிக்கு ‘கொர்ர்ர்’ரென்று குப்புறப் படுத்துக் கிடந்தவள் சட்டென மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்த போது உதயமானதே இக்கட்டுரை. அதனால்தானோ என்னவோ விட்டத்தில் சிதறித் தொங்கும் சிலந்தி வலைகள் போல முந்தைய இரவில் வாசித்த ஏதோ ஒன்றை வடிகட்டி கோர்வையின்றி ஆங்காங்கே வலை பின்னியது. எல்லாமே சமூகத்தில் தேவையில்லாமல் துருத்திக் கொண்டிருக்கும் ஆணிகளைப் பற்றியவை.
‘மேல ஒருத்தன் பாத்துட்டு இருக்கான்; நமது பாவமும் புண்ணியமும் கணக்கு பார்க்கப்படுகின்றன’ என்ற பயம், சொர்க்கம், நரகம் போன்றவைதாம் பெரும்பான்மைச் சமூகத்தை ஓ...ரளவு நன்னடத்தையோடு இயங்கச் செய்கின்றன. இதெல்லாம் இல்லாமலே நியாயமாக, நல்லவர்களாக, கருணை உள்ளவர்களாக நடந்து கொள்ளும் பக்குவமும் முதிர்ச்சியும் மிகச் சிலருக்கே உரித்தானது. எனவே நாத்திகமும் பகுத்தறிவாதமும் அனைவருக்குமானதல்ல. இக்கட்டுரை அதைப் பற்றியும் இல்லை. அனைவரையும் தனது பிடிக்குள் வைத்திருக்க மதமும் அதன் P.R.Oக்களும் பின்னும் மாயவலையையும் கட்டுக்கதைகளையும் பற்றியது.
பிறப்பு முதல் இறப்பு வரை... இல்லை ! இப்படி ஆரம்பித்தால் பொருத்தமாக இருக்கும். ஜனனம் முதல் மரணம் வரை உச்சிக்குடுமிகளும் தேவபாடையும் இல்லாமல் நம் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் கடக்க முடியாதபடிக்கு சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றி வைத்திருக்கும் நூலிஸ்ட்களின் துர்மதிநுட்பத்தை என்னவென்று சொல்ல? எனினும் காலங்காலமாக அவாள் உருவாக்கி வைத்திருக்கும் சடங்குகள் சாக்கடைக் கிடங்குகள்...! ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை’ கூட்டம் இவற்றைத் தாங்கிப் பிடித்து அவாளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அறியாமையைத்தான் என்னவென்று சொல்ல?
பிள்ளை பிறந்தால் பதினாறாம் நாள் புண்ணியதானம்... ஒரு புதிய உயிர் இவ்வுலகிற்கு வந்திருப்பதில் என்ன தீட்டு கண்டீர் உலகத்தீரே ? தீட்டு... இவ்வார்த்தை எனக்கு மூட்டும் எரிச்சலைக் கொண்டு கைபர் கணவாயைக் கொளுத்தி விடலாம் போல இருக்கிறது. கற்களையும் முட்களையும் மெத்தையென எண்ணி பதினேழோ பத்தொன்பதோ படிகள் ஏறிச் சென்று தரிசனம் பெற ஒரு மாதம் விரதம் இருக்கும் போதும் பண்டிகை நாட்களின் போதும் புனிதத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு வீட்டுப் பெண்களைப் போட்டுப் பாடாய்ப் படுத்துவது... சுத்தமாம். தீட்டு, அழுக்கு, அசிங்கம் என்றெல்லாம் நினைப்போருக்கு தமது பிறப்பே 10 மாதங்களாக அவை சேர்ந்ததுதான் என உறைக்காதோ? பெண் தெய்வங்களையும் அந்நாட்களில் ஒதுக்கி வைத்து விடுவார்களோ? பெண்களை உள்ளே அனுமதிக்காமல் அவர்களை ஒதுக்கும் தெய்வத்தை வழிபடுபவர்களை எந்தப் பிரிவில் சேர்ப்பது? மனநலக் காப்பகங்கள் போதுமான அளவு நம்மிடம் இல்லை! பெண்ணுடலின் இயற்கை அவ்வளவு அருவருப்பைத் தருகிறதெனில் என்னத்துக்கு இங்கு இருந்து கொண்டு? மூட்டையைக் கட்டிக் கொண்டு பெண்களே இல்லாப் பரதேசம் ஒன்றை உருவாக்கி அங்கு குடியேறி விடுவதுதானே?
திருமணங்களில் அத்தரகன் ஓதும் மந்திரங்களின் பொருள் நமக்குத் தெரியாத வரைதான் அவனுக்கு மரியாதை என்பதை அத்தரகன் அறிவான். அறியாமை இருளில் மூழ்கித் திளைப்பதில் அலாதி இன்பம் காணும் வெகுசனமே அவனுக்கான வலிமை.
இறந்தால் புதைப்பதுதானே திராவிட மரபு. அவாளைப் பார்த்து எதற்காக எரிக்கும் பழக்கத்திற்கு மாறினோம் பலர்? புதைத்தால் வருடாவருடம் இறந்தவரின் குடும்பத்திற்கு அவரை நினைவு கொள்ளும் பொருட்டு போவதற்கென புதைத்த அவ்விடம் இருக்கும். அப்போது குடுமியை முடிந்து கொண்டு வந்து நிற்பதற்கு அவாளுக்கு வழியில்லாமல் போகுமாதலால் எரிக்க வைத்துவிட்டார்களோ? திதி என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ‘ஆன்மாவை அழைக்கிறேன்; ஆட்டுகுட்டியை அழைக்கிறேன்’ என நல்ல காசு பார்க்கும் வணிகம். என் தாத்தாவிற்குத் திதி கொடுக்கும் போதுதான் கவனித்தேன்... அவா ஆத்துக்கு வேண்டிய மளிகைச் சாமான் காய்கறின்னு மொத்த கொள்முதலையும் ஒரே இடத்துல பேஷா முடிச்சுனுட்டா. அவ்வளவும் கொடுத்தது காணாது என அப்பாவையும் சித்தப்பாக்களையும் கோமாளிகளாக்கி சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்தார் புரோகிதர். தேவபாடை நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்க இடையிடையே அப்பா சித்தப்பாக்களை, “இடது கையை வலது முட்டியில் மடிச்சு வச்சுக்கோங்கோ; அது மேல வலது கைய மூடி வச்சுக்கோங்கோ; இப்போ குட்டிக் கரணம் அடிங்கோ” என ‘ஆட்றா ராமா ஆட்றா ராமா’ அரங்கேறிக் கொண்டிருந்ததைக் கண்ட தங்கை கூறினாள், “இது நல்லாருக்கே... இந்த gibberish மொழியில கொஞ்சம் உளறப் படிச்சா போதும் போலயே... வீட்டுக்குத் தேவையான மொத்த மளிகைப் பொருட்களும் காசும் இப்படி உடம்ப வளைக்காம கெடைக்கும்னா நான் ஏன்டா கஷ்டப்பட்டு M.Phil, Ph.Dனு படிச்சுகிட்டு?”
இறைவனுக்கும் multiple personality disorder வரும் போலும். ஓர் அவதாரத்தில் ‘ஒருவனுக்கு ஒருத்தி’... (இல்லை, ‘எனக்கு நான் மட்டுமே! அரச பதவிதான் முக்கியம்’ என்னும் narcissism), இன்னொரு அவதாரத்தில் ப்ளேபாய்! இந்த அஷ்டமி நவமி கதைக்கு வருவோம். அஷ்டமி (கோகுலாஷ்டமி) – கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம்; நவமி (ராம நவமி) – ராமன் பிறந்த நட்சத்திரம்... அப்புறம் எதற்கு சுப நிகழ்ச்சிகளுக்கு, ஒரு நல்ல காரியம் தொடங்குவதற்கு, புதிய பொருட்கள் வாங்குவதற்கு இவ்விரண்டு தினங்களையும் தவிர்க்கிறோம்? அல்லது தவிர்க்க வைக்கப்பட்டோம்? ஒருவேளை அக்காலத்தில் அவாள் இப்படி யோசித்திருக்கலாம். இத்தினங்களில் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்படுவதால், மக்கள் கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும். தட்டில் நிறைய விழும் நாட்களாதலால் அதை விடுவதற்கு மனதில்லாமல் ‘அஷ்டமி நவமி செய்யப்பிடாது’ என்று வகுத்து (கூட்டிப் பெருக்கி இத்தினங்களைக் கழித்து) வைத்திருப்பார்களோ? பிற நாட்களில் நமது வீட்டு விசேஷங்களின் தட்சிணை (ஏமாற்றிப் பிழைப்பதை எந்தப் பெயரில் அழைத்தால் என்ன?). ஆக மொத்தம் எல்லா நாட்களும் கல்லா கட்டிவிடலாம்.
திருக்’கடை’யூர் வியாபாரம் அமோகம். முன்னோர்களில் யாரும் திருக்கடையூர் பித்துப் பிடித்து அலைந்ததாகத் தெரியவில்லை. போராட்ட குணம் நிரம்பப் பெற்ற புரட்சிச் செம்மல் உயர்திரு. கெய்க்வாட் அவர்கள் அங்கு சென்று வந்த பின்தானே இந்த மோகம். ‘சஷ்டியப்த பூர்த்தி, கனகாபிஷேகம், சதாபிஷேகம் (சதா அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும் போல!) இன்னும் என்ன என்ன கோமாளித்தனங்கள் உண்டோ அத்தனையும் காணக் கிடைக்கும் ஒரே இடம் – உங்கள் அபிமான திருக்கடையூர்; எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ என்று கூவி விற்காத குறைதான். ‘பகவான் தூணிலும் இருப்பர், துரும்பிலும் இருப்பர்’ என்று நீங்கள்தானே சொல்கிறீர். அப்புறம் என்னத்துக்கு திருப்பதி, திருச்செந்தூர், குருவாயூர் ...... என கடை விரித்து வியாபாரம்? வீட்டில் துரும்புக்கா பஞ்சம்? மனிதனுக்கு எதிர்காலம் குறித்து இருக்கும் பயத்தைப் பயன்படுத்தி பாவம், பரிகாரம், தோஷம் எனப் பெயரிட்டு காளஹஸ்தி, திருமணஞ்சேரி.... வியாபாரத்தை இன்னமும் விரிவாக்கம் செய்வதற்கான உத்தி, அடடா! தெய்வம் என்று ஒன்று உண்டெனில் எனக்கும் தெய்வத்திற்கும் நடுவில் குறுக்கும் நெடுக்குமாக நூல் எதற்கு? கருவறையில் புழங்கும் இடைத்தரகர்களுக்குத்தான் ‘அது கடவுள் அல்ல; வெறும் கல்’ என்ற உறுதிப்பாடு அதிகம். நாத்திகர்கள் தோற்றார்கள், போங்கள்! இல்லையெனில் மனசாட்சியே இல்லாமல் உடல் நோகாமல் புது புது ‘கோ’க்கு’மா’க்குகளின் (கோ, மா – அட! நமக்குன்னு பொருத்தமா வருது பாருங்க!) மூலம் காசு சம்பாதிக்க இயலுமா?
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்லி வைத்ததன் பின்னணி ‘தாழ்த்தப்பட்டவாள்லாம் கோவிலினுள் நுழையப்பிடாது; அப்பிடியே தூரமா இருந்து கோபுரத்த பாத்து கன்னத்துல போட்டுண்டு போ’ என்பதுதானோ?
பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளை ‘நாமத்தைச் சாத்திட்டான்’, ‘பட்டையைப் போட்டுட்டான்’ என்று கூறும் சொல்லாடல் கூட, சமணக் கோவில்களை இவர்கள் அபகரித்துக் கொண்டதை வைத்துக் கூறப்பட்டதாக இருக்குமோ?
நமது சுடலையே சிவன் என்றும் முருகனை சுப்பிரமணியன் என்றும் அதற்கென்று ஒரு கதையைப் பின்னி அடையாள அழிப்பில் தொடங்கி, சுடலை, முருகன், அய்யனார், கருப்பண்ணசாமி என அனைவருக்கும் குறுக்கே நூலை சாத்திவிட்டது என இப்போது வரை எத்தனை எத்தனைப் பிதற்றல்கள்? இப்படியாக அடையாளக் குழப்படியைக் கொண்டு வந்தவர்கள் தாங்கள் பெத்து போட்ட உயிரினங்களுக்கு முருகன், சுடலை எனப் பெயரிடாத போதே சுதாரித்திருக்க வேண்டாமா நாம்? சுடலை, கருப்பண்ணசாமி, பொன்னி... இவ்வழிபாடுகளில் பூசாரி பூசை சமயம் தவிர்த்து மக்களோடு மக்களாகி விடுவார். இத்தரகர்கள் அப்படி இல்லையே!
அகம் புறம் என அழகாக வகுத்து வைத்துச் சீர்மையுடன் விளங்கிய நமது உயர்ந்த பண்பாட்டை அடித்து உடைக்கும் பொருட்டு அதன் மீதான அவர்களின் தாக்குதல்தானே சில கோவில்களில் அகம் சார்ந்த சிலைகளை சுற்றுப் பாதையில் வைக்கச் செய்தது. அது சரி ! தி. ஜானகிராமன் ‘அம்மா வந்தாள்’ல் தமது சமூகத்தின் மதிப்பீடுகளைத் தோலுரித்துக் காட்டிய பிறகு மேற்படி கூற என்ன இருக்கிறது?
இவர்களெல்லாம் ‘ஏறி வந்து’ கொண்டிருந்த போதே அப்படியே தள்ளி விட்டு உருட்டி விட்டிருக்க வேண்டும்... வந்தாரை வாழ வைத்ததால்தான் இங்கு வந்து உருட்டு உருட்டு என உருட்டுகிறார்கள். அதுவும் வகை வகையாக தினுசு தினுசாக வித விதமாக. அதெப்படி எல்லாரும் ஒரே மாதிரி? இரத்ததிலே ‘டி.என்.ஏ’விலே உள்ள கோளாறு போலும். உடனே ‘அதிலும் நல்லவர்கள் உண்டு’ என்றெல்லாம் உலக மகா தத்துவத்தைக் கூறிக் கொண்டு வராதீர்கள். ஒன்றிரண்டு இருப்பார்களாயிருக்கும்... நிஜமாகவே ஒன்றிரண்டுதான். மற்றபடி அனைவருக்கும் ஒரே குறிக்கோள்தான். பெரும்பாலும் அதிகாரத் தலைமை அவர்கள் இலக்கல்ல; அதன் அருகிலேயே சஞ்சரிப்பது மட்டுமே. அதாவது மற்றவர்களை முன்னிறுத்தித் தாம் பின்னிருந்து கற்களை விட்டெறியும் மகோன்னதமான சேவையைச் செய்வது. அவர்களிலும் இடது பக்கம் நிற்பவர்கள் பெரும்பாலும் பசுந்தோல் (சரியாக ‘பசு’ என்று கூறிவிட்டேனா!) போர்த்திய குள்ளநரிகளாகவே இருப்பது ஏன்?
‘மனுநீதி வேதங்கள்லாம் என்ன சொல்லற்து?’
‘பார்ப்பான்தான் உயர்ந்தவன்னு சொல்லற்து’
‘அதையெல்லாம் எழுதினது யாரு?’
‘பார்ப்பான்’
‘This ME praising ME for the benefit of ME....’ moment
இப்போ ஒரு கும்பல் (பாவப்பட்ட(!) பார்ப்பான்கள் தவிர இன்ன பிற சாதிகளில் இருக்கும் சங்கிகள் இவர்கள் என அறிக!) வரும்.. பாருங்களேன்! ‘இந்துக்கள்னா மட்டும் இளிச்சவாயன்களா? எங்களையே திரும்பத் திரும்ப அடிக்கிறீங்க’ என்று பிளிறிக் கொண்டு. அடேய்களா ! நான் பிறந்து தொலைத்த சமூகக் கட்டமைப்பில் உள்ள பித்துக்குளித்தனங்களை முதலில் சாடுகிறேன். அது மட்டுமல்ல. இங்கு பெரும்பான்மைச் சமூகம் இந்துக்கள்தானே. பெரும்பான்மைச் சமூகத்தின் முட்டாள்தனங்கள் விமர்சனத்திற்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது இயற்கையே. எவ்வாறு ஐரோப்பாவில் கிறித்தவத்தையும் அதன் அசட்டுத்தனங்களையும் சாடுகின்றனரோ அப்படித்தான் இதுவும். இங்கு ஒரு சிறு வித்தியாசம். பெரும்பான்மைச் சமூகத்தைக் குதிரைகளாக்கி அனைவரையும் இழுத்துப் பிடித்துத் தேரோட்டியாகிச் செலுத்தும் சிறுபான்மை பார்ப்பனியத்தை அடித்துத் துவைப்பதாகவும் கொள்ளலாம். ‘கடவுள் இல்லை’ என்பதில் ‘சிவன் இல்லை’, ‘விஷ்ணு இல்லை’, ‘இயேசு இல்லை’, ‘அல்லா இல்லை’ என்ற எல்லாமும் தான் தொக்கி நிற்கின்றன. ‘இயேசு விளிக்கிறார்’, ‘மாதா மறுக்கிறார்’, ‘கர்த்தர் காக்கிறார்’, ‘சதியின் பேட்டை’ என எங்கும் பித்தலாட்டங்கள் நிறையவே உண்டு.
மதமும் அரசியலும் என்ன செய்யும்? ‘பகுத்தறிவான கேள்விகள் கேட்கத் துவங்குவதே ஞானத்தின் தொடக்கம்’ எனச் சொல்வதை விடுத்து ‘கடவுளுக்குப் பயப்படுதலும் கீழ்ப்படிதலுமே ஞானத்தின் தொடக்கம்’ என்று பிதற்றி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும். கீதை, பைபிள் மற்றும் குரான் ஆகிய ‘புனித’ நூல்களின் சில வாசகங்கள் உணர்ந்து படித்தால், நிறைய பகுத்தறிவாதிகளையும் நாத்திகர்களையும் உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றவை.
கீதாச்சாரம் என்று சொல்லப்படும் அவ்வரிகள் கீதையில் எங்கும் கிடையாது என்று சுப.வீ அவர்களின் உரையில் கேட்டிருக்கிறேன். ‘நீ மாடு மாதிரி உழைக்க வேண்டும்; பலன் முழுவதையும் நான்தான் அனுபவிப்பேன்’ என்பதைத்தானே ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒரு பலனையும் எதிர்பாராமல் செவ்வனே பணியை மட்டும் செய்து கொண்டு இருக்க நாம் என்ன .....? ‘நீ உழைத்து வை; நான் பிடுங்கிக் கொள்வேன்’ என்பதுதானே ‘எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது’ என்றானது. தம் கட்டுடல் மேனியை வளைக்காமல் பொருள் சேர்ப்பதற்கென ‘எனக்கு தானம் அளித்தால் நல்லது நடக்கும்; எனக்கு ஒரு வேளை சோறு போட்டால் உன் பாவம் தீரும்...’ என்றெல்லாம் கொஞ்சமும் வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே பிச்சையெடுத்தவர்கள் தானே இவர்கள். மனு ஸ்மிரிதி மற்றும் கீதையின் லட்சணம் இவ்வாறாக இருக்க, இன்ன பிற ‘புனித’ நூல்கள் உதிர்க்கும் முத்துப் பரல்களும் மாணிக்கப் பரல்களும் கீழ்கண்டவற்றில் காணக் கிடைப்பன:
எரேமியா(Jeremiah) 19:9, பீட்டர்(Peter) 2:18, சால்ம்(Psalm) 137:9, தீமாத்தேயு(Timothy) 2:12, உபாகமம் (Deuteronomy) 22:28-29, 1கொரிந்தியர்(Corinthians) 7:36, மத்தேயு(Mathew) 10:33-37, மாற்கு(Mark) 16:16 ; குரான் - 2:191, 2:217, 3:54, 3:85, 4:89, 8:12, 8:39, 8:60 8:65, 9:29-30, 16:106, 22:19, 47:4 Ibn Ishaq/Hisham 992, Tabari 9:69.....
‘மேற்கூறியவை அனைத்தும் மக்களின் மனதைப் புண்படுத்தாதா?’
‘புண்படட்டுமே’ என்னும் அசரீரி கேட்கிறது. அந்த அசரீரி ஒன்றல்ல இரண்டல்ல.
மொழிமாற்றமல்ல; மொழி ஆக்கத்துடன்:
உன் அனுமதியின்றி உன்னை யாராலும் காயப்படுத்த முடியாது – மகாத்மா காந்தி
(No one can hurt you without your consent – Mahatma Gandhi)
‘இது புண்படுத்துகிறது’ என்பது ஒரு (அறிவார்ந்த) வாதம் அல்ல – கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்
(‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens)
(புண்படுத்த வேண்டியவர்களை) புண்படுத்த இயலாத சுதந்திரம் கருத்துச் சுதந்திரமே அல்ல – சல்மான் ருஷ்டி
(What is freedom of expression? Without the freedom to offend, it ceases to exist - Salman Rushdie)
என்று பல.
- சோம.அழகு