டாக்டர் மு.வ. நூற்றாண்டு

உயர் வகுப்பார் மட்டுமே இலக்கியம் படைக்க முடியும் என்று நிலை பெற்றிருந்த காலகட்டத்தில் பிற வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் கல்வியாளராகவும், இலக்கியப் படைப்பாளராகவும் அறிஞராகவும்  எழ முடியும் என்ற நம்பிக்கையை அரும்பவைத்த  தலைமுறை யாளர்களுள் ஒருவர் டாக்டர்.மு.வ.

அறுபது வயது தாண்டியும் தாண்டாமலும் இருக்கிற இலக்கிய வாசகர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியப் படைப்புகளுடன் கைகுலுக்கி, கலந்து உறவாடி, கடந்து வந்த அனுபவம் பெற் றிருப்பார்கள்.

கள்ளோ காவியமோ, கரித் துண்டு, அகல்விளக்கு, பெற்றமனம், நெஞ்சில் ஒரு முள், கயமை, செந்தாமரை போன்ற அவரது நாவல்களும், தம்பிக்கு அவர் எழுதிய கடித இலக்கியமும், திருக் குறளுக்கு அவர் எழுதிய தெளிவுரையும் எல்லோருக்குள்ளும் ஆழ்ந்த சுவடு களைப் பதித்திருக்கும். வாசித்த அனுப வமும், அவரது படைப்புலகில் பயணப் பட்ட நிகழ்வும் சகலருக்கும் வாய்க்கப் பெற்றிருக்கும்.

Dr.Mu.Va_250உயர் வகுப்பார் மட்டுமே இலக்கியம் படைக்க முடியும் என்று நிலை பெற்றிருந்த காலகட்டத்தில் பிற வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் கல்வி யாளராகவும், இலக்கியப் படைப் பாளராகவும், அறிஞராகவும் எழ முடியும் என்ற நம்பிக்கையை அரும்ப வைத்த தலைமுறையாளர்களுள் ஒருவர் டாக்டர். மு.வ.

அவரது இலக்கியப் படைப்பு மொழியில் பண்டிதத் தமிழ் வலிமை மிகு செல்வாக்குச் செலுத்தும். இலக் கியப் படைப்பின் உள்ளார்ந்த மனித உணர்வுகளை வாசகரிடம் கடத்துவதற் கும், இடம் மாற்றி ஏற்றிவைப்பதற்கும் பேச்சு மொழியை ஒட்டிய யதார்த்த வாத மொழி நடையே ஆகச் சிறந்த கலைவாகனமாக இருக்கும். பண்டிதத் தமிழ்நடை வாசகருக்குள் ஓர் அந்நியத் தன்மையைத் தரும். அவருடைய பண்டித மொழி நடைதாம், அவரது படைப் பிலக்கியத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறது.

அவரது நாவல்களின் உள்ளடக்கம் சற்றே மாறுதலானது. உயர் வர்க்க மனிதர் குடும்பங்களுக்குள் நிகழும் உறவுப் பிறழ்வு களைச் சித்தரித்தாலும், யதார்த்தவாதத்துக்கு நெருங்கி வராத லட்சிய வாதம் படைப்புகளின் உள்ளடக்கங்களில் ஓங்கிஒலிக்கும்.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகளின் லட்சியவாத இலக்கியப் பயணத்திற்கான துவக்கமாகத் திகழ்ந் தவர், டாக்டர் மு.வரதராசன்.

25. 4. 1912 -ல் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதி யரின் மகனாகப் பிறந்த மு.வ.வின் நூற்றாண்டு நடந்து கொண்டி ருக்கிறது.

பெற்றோர் வைத்த பெயர் திருவேங்கடம் நின்று நிலைக்கவில்லை. தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயர் நின்று நிலைத்துவிட்டது.

மு.வ. வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை வட்டம், வேலம் என்ற கிராமத்தில் பிறந்தவர், உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வி.

திருப்பத்தூரில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து, அங்கேயே அரசுப் பணி. பி.ஓ.எல். என்ற இலக்கியப் படிப்பில் மாநிலத்தில் முதன்மை யாகத் தேறி, திருப்பனந்தாள் மடத்தின் விருதைப் பெறுகிறார். பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஓ.எல். முடித்து, அங்கேயே பேரா சிரியப்பணி. சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அங்கேயே தமிழ்த் துறைத் தலை வராகிறார். அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெறுகிற முதல் தமிழராக திகழ்கிறார். 1971-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராகிறார்.

நாவல்கள் 13, மொழியியல் நூல்கள் 6, சமுதாயக் கட்டுரைகள் நூல் 11, சிறுகதைத் தொகுப்புகள் 2, நாடகங்கள் 6, வாழ்க்கை வரலாறுகள் 4, பயண இலக்கியம் 1 என்று அவர் படைத்த நூல்கள் 85.
கல்லோ? காவியமோ? , அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன. அவரது அகல் விளக்கு நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மொழி நூல், கல்லோ? காவியமோ?, அரசியல் அலைகள், விடுதலையா?, ஓவச்செய்தி ஆகிய நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. இவரது 12 நூல்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், ரஷ்யன் முதலான மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

திரு.வி.க, தாகூர் பற்றிய வாழ்க்கை வர லாறுகளை மிகுந்த விருப்புடன் எழுதினார்.

சங்க இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம் பல நூல்கள் எழுதியிருக்கிற மிகப்பெரிய தமிழ்ப் புலமை பெற்றவராகத் திகழ்ந்த  அவர், சமகாலத்து மேற்குலக அறிஞர்கள் இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்ததால் நவீன இலக் கியத் துறையிலும் உரிய முக்கியத் துவத்துடன் ஈடுபட்டார்.

ப.ஜீவானந்தத்துடன் நெருக்கமான  உறவு கொண்டிருந்தார். அவரது நினைவஞ்சலி கூட்டத்தில் உணர்ச்சிபூர்வமான உரையாற்றி னார்.

திரு.வி.க.வும் டாக்டர் மு.வ.மீது பெரு மதிப்பு வைத்திருந்தார். ‘தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா’ என்று புகழ்ந்துரைத்தார்.

அவர் பிறந்து நூறாண்டு ஆகிவிட்டது. அவரது இலக்கியப்படைப்புகளும், அறி வார்ந்த ஆய்வு நூல்களும், நாவல்களும் இன் றைய தமிழருக்கும் வெளிச்சம் தருகின்றன. அவரது தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் தெளிவுரை, சாகாவரம் பெற்று, இன்றளவும் உரிய முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.

- மேலாண்மை பொன்னுச்சாமி

Pin It