சிறுகதைத் தொகுப்பு

‘இராமையாவின் குடிசை’ மூலம் ஆவணப்பட இயக்குந ராக அவதாரமெடுத்த பாரதி கிருஷ்ணகுமார் ‘அப்பத்தா’ சிறு கதைத் தொகுப்பு மூலம் சிறு கதை எழுத்தாளராகவும் அவதா ரம் எடுத்திருக்கிறார்.

பத்தே பத்து சிறுகதைகள். பத்தும் முத்துக்கள்.

பள்ளிச் சிநேகிதம், நடு வயதுப் பருவத்தில் எப்படிப் பட்ட நெருக்கடியையும் குற்ற உணர்வையும் சந்திக்கிறது என் பதைச் சொல்கிறது, ‘கல்பனா’. அக்கதையில் வருகிற ஜோசப் வாத்தியாரை நேசிக்க விரும்பு கிறது. கவிதை நூலை வாசித்துக் கொண்டே டிக்கட் எடுக்கிற வரி சையில் நிற்கிற சுபாஷின் மன உலகமாக கதை விரிகிறது.

ஐந்தாம் வகுப்புத் தோழியை சந்திக்கிற கணத்தின் மகிழ்வும், மனத்துள்ளலும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. கல்பனா வின் மனமலர்வும், உணர்வுப் பரவசமும், பழைய நாட்களை யும் தோழர்களையும், தோழி களையும் விசாரிக்கிற ஆர்வப் பெருக்கும் நமக்குள் பொங்குகிறது. தூரத்தில் வருகிற கணவனை சுட்டிக்காட்டுகிற மகள். கல்பனா வின் விரிந்த மனச்சிறகுகள் முறிந்து ஒடுங்குகிற பதற்றத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் போலித் னமும் குடும்ப உறவு களும் கிழிந்து தொங்குகின்றன.

‘துறவு’ ரொம்ப நுட்பமான உணர்வுச் சுழிப்பு. அன்னபூரணி யை தேடுகிறார்களா, அவள் கொண்டு போன நூற்றி இருபது பவுன் நகையை தேடுகிறார் களா?

தேடலின் தீவிரத்தில் காவல்துறையின் மாய்மாலம், ஜோதிடத்தின் பொய்மை எல் லாம் அம்பலமாகிறது.

காதலித்து செய்த கல்யாணம். பதினெட்டு வருட தாம்பத்தியம். பிள்ளையில்லாத வெறுமை. கணவன், சுசீலா என்ற பெண்ணு டன் தொடுப்பு. தனிவீடு. தகவல் அறிந்த அன்னபூரணி, சுசீலாவை வீட்டுக்கே அழைத்து வரு கிறாள். குற்றவுணர்வில் குமை கிற புருஷன்.

வருஷக்கணக்காக அன்ன பூரணியைத் தேட... அவளோ முப்பது அனாதைக் குழந்தை களுக்கு தாயாக வாழ்கிறாள்.

ஒரு பெண்ணின் தேர்வுச் சுதந் திரம், துறவும், தாய்மையும் மிக்க தாக இருக்கிறது.

‘கோடி’ என்ற சிறுகதையை முடிக்கிற இடத்தில் கண் கலங்காத மனசை கல்லென்று சான்றிதழ் தந்து விடலாம்.

பிறந்த வீட்டால் காதலால் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண் ணின் மனத்தாகத்தையும், தவிப் பையும் இதற்கு மேல் எவரும் சொல்லிவிடமுடியாது. தன் மகளுக்கு கல்யாணம் வைத்த பிறகும் தம்மை ஏற்றுக்கொள் ளாத அண்ணனையும், அப்பா வையும் நினைத்து மருகுகிறவள். கணவன் இறந்துகிடக்க... இருக் கும் உறவுகளின் ஆறுதலில் சரிந்துகிடக்க.. பிறந்த வீட்டுக் கோடித் துணிவுடன் வந்து நிற்கிற அண்ணன் மகனின் காலில் விழுந்து ‘யண்ணே’ என்று கதறு கிறபோது, பெண் குலமே தலை விரிகோலமாக அரற்றுவது போலிருக்கிறது.

சாகமாட்டாத கிழடு சாவுக்காக காத்திருக்க மாதிரி கி.ரா. வின் ‘மண்’ கதையிலிருந்து பல கதைகள் வந்து விட்டன. ஆயி னும் அப்பத்தாவின் சாவு இழுப்பு தனித்துவமானது.

தனது நிமித்தமாக தன் பெற் றோரால் நிராகரிக்கப்பட்டு அவ மானப்படுத்தப்பட்ட ஆண் களின் மனச்சோகத்தை எண்ணி மருகுகிற பெண்ணின் உணர்வின் நுட்பம் நம்முள் பிரமிப்பை ஏற் படுத்துகிறது. அப்பத்தாவின் அடிமனத்துடிப்பை உணர்கிற தாத்தாவின் ஆண்மனப் பெருந் தன்மையும் பிரமிப்பைத் தரு கிறது.

‘லுங்கி’ மிகவும் வித்தியாச மான சிறுகதை. படித்தவுடன் சாதாரணமாகத் தோன்றும். ஆனால், அசாதாரணமான முறையில் மனசுக்குள் ஆணி வேரடித்துவிடும்.

அதில் வருகிற பெருமாள் வாத்தியார் எழுத்தாளர் தனுஷ் கோடி ராமசாமியை நினைவுபடுத்துகிறார்.

மேடையில் பேசுகிறபோது, தோழர்களுடன் பேசுகிற போது அவருக்குள் புழங்குகிற மொழி யே, கதைகளின் மொழிநடை யாகியிருப்பதால் பாவனை யற்ற அதன் உண்மைத் தன்மை யே படைப்பின் அழகியலாக மலர்கின்றது.

உரைவீச்சு பாரதி கிருஷ்ணகுமார் உரைநடைக் கவிதை யான சிறுகதைப் படைப்பிலும் ஜெயித்திருக்கிறார்.

நூலின் அச்சும் வடிவமைப்பும் பாராட்டுக்குரியவை.

வெளியீடு: தி ரூட்ஸ், 7/4, ஏழாவது தெரு, தசரதபுரம், சாலி கிராமம், சென்னை - 600093.
செல்:94442 99656
விலை ரூ.100

இடைவெளி

கவிதையில் துவங்கி, சிறுகதைத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்த அல்லிநகரம் தாமோதரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு அமரபாரதி பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. ‘இடைவெளி’ என்ற தலைப்பி லான இந்தத் தொகுப்பில் இருபத்தொரு சிறுகதைகள் அணிவகுத்திருக்கின்றன.

‘இழப்பு’ என்ற முதல் சிறு கதை வாசகர்களின் எதிர் பார்ப்பை அதிகரிக்க வைக்கிற மாதிரியானதோர் அழுத்தமான படைப்பு.

போஸ்ட் ஆபீஸில் பணி யாற்றுகிற மொட்டைத் தலை ஊழியரைப் பார்த்துப் பார்த்து பகீரிட்டுப் பதைக்கிற நடராஜ னில் துவங்குகிறது சிறுகதை. கோசலை தலைமுடி குறித்த மனப்பதைப்பாக விரிவடை கிறது.

சாராயக் கடையில் பாக்கி வைத்திருக்கிற இவன். மகனை எப்படியாவது பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண் டும் என்று தவிக்கிற தாயின் தவிப்பு. ‘தலையை அடகு வைத் தாவது’ என்ற வைராக்கியமாக உருமாறுகிறது.

தியாகி பென்ஷன் வாங்கக் கூடாது என்கிற வைராக்கியத் தில் இருக்கிற சுப்பையா தாத்தா வுக்கு வருகிற மன நெருக்கடிகள். அவமானச் சோதனைகள்.

பேரன் பாபு படிக்கப்போக வழியற்று குழந்தை தொழிலாளி யாக மாற வேண்டிய நிர்ப் பந்தம்.

இது தாத்தாவை அவஸ்தைப் படுத்துகிறது. ‘தண்டச் சோறு’ என்ற வசவில் வருகிற அவமானத் தைவிடக் கூடுதல் துயரம் தரு கிறது.

தாத்தாவின் அவஸ்தை வாசக அவஸ்தையாக இடம் மாறு கிறது.

‘வித்தியாசம்’ என்றொரு கதை. மரம் வெட்டி விற்கிற அப்பாவின் தொழிலை வெறுக் கிற குபேந்திரன். கல்விக் கூடம் அமைத்து கல்விச் சேவை செய் கிறவர் மீது மதிப்பு மரியாதை. ஒரு மரணம், அது கல்விக்கூட மல்ல, கல்விக் கடை என்று புரிய வைக்கிறபோது, குபேந்திரனின் மனநிலை என்னாகிறது?

‘இருளைக் கீறும் வெளிச்சம்’ என்ற கதை மிகவும் தனித்துவ மானது. சமூகக் கொடுமைகளுக் கெதிராக மனுப் போராட்டம் நடத்துகிறவனைப் பற்றியது. அவனது அந்தப் போராட்டம் மூலம் மனைவிக்கு நேர்கிற அனு பவமும் வெளிச்சமும் கதையா கிறது.

அம்மன் பேரைச் சொல்லி மகளைப் பிச்சையெடுக்க வைக் கிற பவளாயியின் செய லின் உன்னதத் தன்மையை உணர்த்து கிறபோது, வாசக மனசு உழுது புரட்டப்படுகிறது.

இப்படியே இருபத்தொரு கதைகளும். எளிய மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வதைக்கிற வறுமையின் உக்கி ரத்தை உணர்த்துகிற மனிதநேயச் சிறுகதைகள்.

சமுதாயத்தின் கோணல் குணங்களையும் குரூர இருட்டு களையும், ஆதிக்க சக்திகளின் கொடிய கரங்களையும் முன் வைக்கிற கதைகள்.

ஏழ்மையின் காரணமாக கல்விவாய்ப்பு பறிபோகிற அவ லத்தை உணர்த்துகிற சிறுகதை கள்.

இவரது படைப்புகள் முழு வதுவும் எளிய மனிதர்களின்  வாழ்க்கையை மன நெகிழ்ச்சி யுடன் சித்தரிப்பவை.

இவரது மொழி நடை, பாவனையற்றது, பகட்டற்றது. கதையின் உணர்வை வாசக உணர்வாக்கு வதில் வெற்றி பெறுகிறது.

ஒரு மனிதநேய யதார்த்த வாதச் சிறுகதைகளாக அழகியல் நிறைவு பெறுகிறது.

எழுத்துக்கும் வாசகனுக்கும் உள்ள இடைவெளியை இல்லாமல் செய்கிற இந்த ‘இடைவெளி’ தொகுப்பு எல்லோர் கைகளிலும் விரிந்திருக்க வேண் டியது. அட்டையும் அச்சும், வடி வமைப்பும், காகிதமும் வெகு நேர்த்தி. ஒவ்வொரு சிறுகதைக் கும் அடியில் அது பிரசுரமான இதழின் பெயரும் காலமும் அச்சாகியிருந்தால் இன்னும் கூடு தல் அழகு பெற்றிருக்கும்.

வெளியீடு: அமரபாரதி பதிப் பகம், 84, மத்தாளங்குளத்தெரு, திருவண்ணாமலை - 606601.
விலை ரூ. 100

கு. அழகிரிசாமி: நினைவோடை

கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் அத்தனையும் சத்தமில் லாத கல்வெட்டுக் காவியமாக நிலைத்துநிற்கின்றன. இந்தத் தலைமுறை இளையோருக்கும் வாசிக்கத்தக்கதாகவும், யோசிக்க வைக்கத்தக்கதாகவும் இந்தச் சிறுகதைகள் புத்தம் புதியவை யாக இருக்கின்றன.

புதுமைப்பித்தனைப்     போலவே கு.அழகிரிசாமியும் படைப்பாளிகளைப் படைக்கிற சிறுகதைப் படைப்புகளை வழங் கியவர். தலைமுறை இடை வெளித் தூரங்களையெல்லாம் கடந்து இன்றும் நம்முடன் அவ ரது சிறுகதைகள் உரையாடு கின்றன. உணர்வுகளை அதிரச் செய்து நம் முள் மாற்றங்களை விளைவிக்கின்றன.

வெறும்நாய், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், தெய்வம் பிறந்தது, திரிபுரம், குமாரபுரம் ஸ்டேஷன் என்று நூற்றுக்கணக் கான அமரத்துவ மணிக்கதை களைப் படைத்திருக்கிறார்.

பழ.அதியமான் தொகுத்து, காலவரிசைப்படி அடுக்கி, மிகச் சிறந்த ஆய்வுரையும், விளக்க வுரையும், வாழ்க்கைக் குறிப் பும், படைப்புசார்ந்த தகவல் குறிப்புமாக கு.அழகிரிசாமியின் அனைத்துச் சிறுகதைகளையும் புத்தகமாக மிகுந்த அழகார்ந்த துல்லியத்துடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக் கிறது.

காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத்தையும் நூலாக்கிய மாதிரி, கு.அழகிரிசாமி சிறு கதைகள் சகலத்தையும் தொகுத்து ஒரு முழு நூலாக நம்முன் வைத் திருப்பது மிகச்சிறந்த விஷயம்.

கு.அழகிரிசாமி, படைப்பு களைத் தந்தவர் மட்டுமல்ல, படைப்பாளிகள் எழுவதற்கும் வளர்வதற்கும் பக்கபலமாகவும் பின்புலனாகவும் இருந்தவரும் கூட.

கரிசல் இலக்கியத் தந்தை என்று கொண்டாடப்படுகிற கி.ராஜநாராயணன், இளந்தலை முறை நவீனப் படைப்பாளி களுடன் தொடர்பும் உறவும் வைத்திருந்த சுந்தர ராமசாமி போன்ற மிக முக்கிய ஆளுமை கள் உதயத்திலும் கொடிவீசி வளர்வதிலும் முக்கிய ஆதர்ச மாக விளங்கியவர் கு.அழகிரி சாமி. எழுது, எழுது என்று எழுத வைத்தவர். எழுதப்பட்டதை பாராட்டி வாழ்த்தி உற்சாகப் படுத்தியவர்.

எழுபதுகளிலும் எண்பதுகளி லும், தொண்ணூறுகளிலும் பேனா எடுத்து சிறுகதைகள் எழுதத் துவங்கிய அத்தனை கரிசல் வட்டாரப் படைப்பாளி களிடமும் இவரது பாதிப்பு களையும், சுவடுகளையும் காண முடியும். இவரையும், இவரது சிறுகதைகளையும் வாசித்து, உள்வாங்கி, வழிகாட்டியாகவும் ஒளிகாட்டியாகவும், திசைகாட்டி யாகவும் கொண்டு பயணப் பட்டவர்கள் பின்னாளைய படைப்பாளிகள்.

கு.அழகிரிசாமியைப் பற்றி விரிவாகவும், முழுமையாகவும் எழுதியிருக்கிறார் கி.ராஜநாரா யணன். சுந்தர ராமசாமியோ தன்னுடைய நினைவோடையில் தென்படுகிற பல்வேறு சம்பவங் கள், நிகழ்வுகள், பண்புகள், பழக்கவழக்கங்கள் என்று கு.அழகிரிசாமி பற்றிய ஒரு சித்த ரிப்பை நமக்குத் தருகிறார்.

நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் போன்ற இடதுசாரி இலக்கியத் தோழர் களுடன் நெருக்கமான நட்பும், க.நா.சு., சி.சு.செல்லப்பா போன்றவர்களுடன் ஒரு ரகமான சிநேகமும் கடைப்பிடித்த துல்லி யமான வித்தியாசத்தை நம்மால் உணர முடிகிறது.

கல்கி வாரஇதழில் இவரது கதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்திருக்கின்றன. உள்ளடக்கத் தேர்விலோ, மொழி நடை வெளிப்பாட்டிலோ எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத அவரது இலக்கிய வைராக்கியம் நமக்குத் தெரிகிறது.

நா.வானமாமலை, ரகு நாதன், சாந்தி இதழ் போன்ற இடதுசாரி இலக்கிய ஆளுமைக் குள்ளான வட்டத்திற்குள்ளிருந்த சுந்தர ராமசாமி, மெல்லமெல்ல க.நா.சு, சி.சு.செல்லப்பா போன் றோரால் ஈர்க்கப்பட்டுக் கொண் டிருக்கிற நிகழ்வுப் போக்கையும் இந்த நூலுக்குள் உணர முடி கிறது.

அதேபோல ஆத்மநாதன் என்ற கவிஞரின் நட்பின் காரண மாக கு.அழகிரிசாமியின் இலக் கிய வைராக்கியம் தளர்ந்ததை யும் நூல் உணர்த்துகிறது.

இந்த நூலில், சுந்தர ராமசாமி வழியாக கு.அழகிரிசாமி எனும் சாகாவரம் பெற்ற கரிசல் இலக் கியப் படைப்பாளியின் அக உலகத்தையும், புறவயப்பட்ட படைப்புலகத்தையும், எழுத்தாளர் களிடையே நிலவிய உற வின் மேன்மையையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001
விலை ரூ.50

அணிலாடும் முன்றில்

இப்போதைய திரைப் படப் பாடலாசிரியர்களில் முன் னணி முகமாக நிற்பவர் நா. முத்துக்குமார். கவிதைத் தொகுப் புகள் வழியாக அறிமுகம் பெற்று, கவித்துவ வள மிக்க படப்பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர்.

அவரது உரைநடை வாழ்வி யல் சித்திரமாக வந்திருக்கும் புத்தகம், “அணிலாடும் முன் றில்” ஒரு வெகு மக்கள் வார இத ழில் (ஆனந்தவிகடன்) வாரந் தோறும் தொடராக வந்த கவித் துவக் கட்டுரைகள் நூலாக வடி வம் பெற்றிருக்கின்றன.

இவற்றை கட்டுரைகள் என்று வகைப்படுத்துவது எந்த அளவுக்கு நீதியானது என்ற கேள்வி நம்முன் எழுந்து நிற்கிறது. ஒவ் வொன்றும் ஒரு சிறுகதைக்கான சம்பவக்கூறுகளும், நிகழ்வுப் பயணச் சூழல்களும், மொழி நடை லாவகமும் கொண்டிருக் கிற இலக்கியப் படைப்பாக நிற் கின்றது.

அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி என்று உறவு முறைகளின் நீட்சியில் மகன் வரைக்கும் வந்து நிற்கின் றது. மனசை நெகிழ்த்துகிற- கலங்கடிக்கிற-பரவசப்படுத்து கிற - வருத்துகிற உணர்வுகளின் யாத்திரைகள்.

இந்த உறவுகள் பால்ய பரு வத்தில் என்னவாகத் தோன்றியது என்ற சித்தரிப்பில், அவரவர் பால்ய நினைவுகள் மனசுக்குள் உயிர் பெற்றெழுகின்றன.

அக்கா தங்கச்சிகள் கூடப் பிறக்காதவர்களுக்கெல்லாம் அக்கா பற்றிய கட்டுரை இனம் புரியாத ஏக்கத்தை ஏற் படுத்து கிறது.

ரத்த உறவுகள் தொலைந்து காணாமலும், பொய்யாகவும் போய்விடுகிற சம காலத்து வாழ் வியல் வெளியில் இந்த உறவுகள் பற்றி விவரிப்புகள், தொலைத்த மானுடப் பண்புகளை நமக்குள் மீட்டுருவாக்கம் செய்கின்றன.

எல்லாக் கட்டுரைகளும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. யதார்த்தவாதச் சிறுகதைகள் போல மரபார்ந்த வாழ்வின் பெரும் பரப்பை நமக்குள் விரித்து விடுகின்றன. அந்த உறவு களின் அருமைகள் மட்டுமல்ல, அந்த உறவுகளுக்கு நேர்ந்த நிகழ்வுகளும் நமக்குள் அதிர் வைத் தருகின்றன.

கவிஞரின் சகல கட்டுரைகளி லும் முற்போக்கான சமுதாயப் பார்வையின் கோணங்கள், அந்த உறவுகள் பற்றிய புதிய புரிதல் களைத் தருகின்றன.

மயிலிறகால் மனசுக்குள் வருடுவதைப் போன்ற சுகமான மொழிநடை, வாசிப்பில் ஒரு வசீகரம் தருகிறது.

இந்தக் கட்டுரைகளில் கவிதைக்கான வார்த்தைச் செறி வும், நாவல் இலக்கியத்துக்கான உணர்வு விரிவும் இணைந்தே யிருப்பது இனிய முரண்.

மனசுக்குச் சுகம் தருகிற வாசிப்பையும், அறிவுக்குப் புதிய வெளிச்சம் தருகிற அனுப வத்தையும் பெற முடிகிறது.

வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை - 600002.
விலை. ரூ.85

நான்கு நூல்களும் மதிப்புரை: மேலாண்மை பொன்னுச்சாமி

Pin It