குவாண்டனமோ சிறை! உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்கா!

படுபயங்கர குற்றவாளிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள்தான் இங்கே அடைக்கப்படுவர் என்று உலக மக்களில் பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணம் தவறு என்று கூறி அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது விக்கி லீக்ஸ் இணைய தளம்.

ஆம்! குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் 780 பேரை பிடித்து குவாண்டனாமோ சிறையிலடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது அமெரிக்கா.

இவர்களில் 220 பேரை மிக ஆபத்தானவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறது அமெரிக்கா. 380 பேர் குறைந்த அளவு ஆபத்து உள்ளவர்களாம், இதிலே 150 பேர் நிரபராதிகளாம். இது தொடர்பான 759 கேபிள் ஆவணங்களை விக்கி லீக்ஸிடமிருந்து பெற்று, அமெரிக்கப் பத்திரிகைகளான கார்டியன், நியூயார்க் டைம்ஸ் ஆகியவை வெளியிட்டுள்ளன.

இங்கு அடைந்து வைக்கப்பட்டிருப்போரில் பலர் என்ன காரணத்திற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது கூடத் தெரியாமல் பல வருடங்களாக விசாரணையே இல்லாமல் சிறைபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலரிடம் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியுள்ளது அமெரிக்கா என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

குவாண்டனமோவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கைதி குறித்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது விக்கி லீக்ஸ். கடந்த 2002ம் ஆண்டுதான் குவாண்டனாமோ சிறைக் கூடம் திறக்கப்பட்டது. அன்று முதல் அந்த சிறைக் கூடத்தில் நடப்பது மர்மமாகவே இருந்து வந்தது. இங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஆப்கானைச் சேர்ந்த 89 வயது கிராமவாசியும், 14 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவர்.

89 வயது முதியவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால்.... அவரது விட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான்! இவருக்கு தீவிரவாதிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, உள்ளூர் தாலிபான் தலைவர்களைப் பற்றி தெரிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அந்த 14 வயது சிறுவனை கைது செய்து இந்தச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் கடும் மனநிலை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், இன்னும் பலரோ தற்கொலை முயற்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கடும் சித்திரவதைகள் இங்கு நடந்துள்ளன.

கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களை ஏவி, அவர்களை கடித்துக் குதற வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். ஒரு பெண் அதிகாரி முஸ்லிம் கைதி ஒருவரின் முகத்தில் மாத விலக்குடன் இருந்த தனது உள்ளாடையை எடுத்து வீசியெறிந்த மனிதாபிமானமற்ற அருவருக்கத்தக்க செயலை அரங்கேற்றியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கு சிறைபடுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அல் காயிதாவுடனோ அல்லது தாலிபான்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லை என்று அமெரிக்க ராணுவத்திற்கு தெளிவாக தெரிந்திருந்த போதிலும் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கைதிகள் முஸ்லிம்கள் என்பதால் சிறைக் கூடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுவிக்க இங்கிலாந்தும் முன் வராதது வியப்பாகவே உள்ளது.

பல கைதிகளை சித்திரவதை செய்து வாக்குமூலங்களை வாங்கிய அமெரிக்கா, அவற்றில் சில வழக்குகள் நிற்காது எனத் தெரிந்ததும் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளை அவரவர் சார்ந்த நாடுகளிடம் ஒப்படைத்தபோது கூட, இவர்களால் அமெரிக்காவிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரித்தே அனுப்பியுள்ளனர்.

இயல்பாகவே தவறு செய்யாதவர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வாழும் சூழ்நிலை உருவானால் விடுதலையான பின் அவர்களது மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும். அந்த மனநிலை பெரும்பாலும் அமெரிக்காவிற்கு எதிராகவே இருக்கும்; பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடும். இதனை அமெரிக்கா சரியாக கணித்ததால்தான் அவர்களை ஒப்படைக்கும்போது கூட இவர்கள் ஆபத்தானவர்கள் என்ற அடையாளத்தோடு ஒப்படைத்திருக்கிறது.

இந்தக் கைதிகளில் சீனவின் உய்கூர் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளதாக விக்கி லீக்ஸ் தெரிவிக்கிறது. கைதிகளுக்கான குறைந்தபட்ச மனித உரிமைகளைக் கூட அமெரிக்க ராணுவம் கடைபிடிக்கவில்லை என்ற தகவல் அமெரிக்காவின் கோர முகத்தை வெளிக்கொண்டு வருகிறது.

ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவேன். அங்கு சித்திரவதைகள் நடைபெறுகின்றன என வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஓராண்டிற்குள் அந்தச் சிறைச்சாலை மூடப்படும்'' என்றார்.

ஆனால் இன்றுவரை அதற்கான முயற்சிகளில் எள் முனையளவு கூட முன்னேற்றம் இல்லை. குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் நிரபராதிகள் என்று தெரிந்தும், அவர்களை நேர்மையான முறையில் விடுதலை செய்யாமல் சிறைக் கூடத்தில் சித்திரவதை செய்து வரும் அமெரிக்கா, ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை குறித்து பேசுவது அயோக்கியத்தனம்தானே?

- ஹிதாயா

Pin It