அமெரிக்கா என்னும் புதிய ஏகாதிபத்தியம் முஸ்லிம் நாடுகளை யெல்லாம் தம் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. எண்ணெய் வளமிக்க அந்நாடுகளைத் தம் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறது. அதற்குக் காரணங்களைத் தேடி அலைகிறது.
ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா இங்கெல்லாம் படையெடுத்து அந்நாடுகளைச் சீரழித்து விட்டன. செயல்பட்டுக் கொண்டிருந்த அரசுகளையும், ஆட்சிகளையும் கலைத்து அந்நாடுகளைச் சீரழித்து விட்டன. தமக்குக் கீழ்ப்படியும் பொம்மை அரசுகளை நியமித்து, நாட்டில் கலவரங்களை உருவாக்கி விட்டன.
இதனை எதிர்த்துதான் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ‘ஜிகாத்’ (புனிதப்போர்) என்ற பெயரால் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. அல்காயிதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் இயக்கங்கள் முன்னணியில் உள்ளன. இந்த அமைப்புகள் வளர்ந்து இஸ்லாமிய நாடுகளுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) என்ற பெயரால் இயங்கும் இவ்வமைப்பு இஸ்லாமிய கிலாபத்தை நிலைநாட்டுவதற்காக என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அமைப்பின் அக்கிரமங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவை முஸ்லிம் நாடுகளே! இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மக்களே!
இஸ்லாத்திற்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களால் எகிப்து, லிபியா, துருக்கி, துனிஷியா, சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளே மிகுதியாகப் பாதிக்கப்பட்டன. இதனால் உலகத்திலுள்ள அதிகாரப் பூர்வமான, அதிகாரப் பூர்வமற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், சர்வதேச அறிஞர்களும் ஐ.எஸ்ஸை மறுத்துப் பேசி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் சுயநலமே ஐ.எஸ். வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக அமைந்துள்ளன. இஸ்ரேலும், சில அமெரிக்க அமைப்புகளும்தான் ஐ.எஸ்ஸிற்குப் பின்னால் இருந்து இயக்குவதாக கியூபாவின் மேனாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
அல்காயிதா, தாலிபான், ஐ.எஸ். இவற்றின் வளர்ச்சி மையமாக ஆப்கானிஸ்தானை எடுத்துக்காட்டும் ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் போராளிகளை ‘முஜாகிதுகள்’ என்றும், அப்போராட்டத்தை ‘ஜிகாது’ என்றும் அழைத்தனர்.
அரபுலக முஸ்லிம் இளைஞர்களின் கோபத்தைத் திசை திருப்பவே ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 1979இல் சோவியத் இராணுவம் நுழைந்து, 10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் 1989இல் ரஷியப்படை பின்வாங்கியது. பயங்கரவாத அமைப்புகள் ஆப்கனை மையமாக வைத்தே வளர்ந்தன.
அல்காயிதாவும், ஐ.எஸ்.ஸ§ம் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்து மதவிரோதச் செயல்பாடுகளையும், தங்கள் எதிரிகளை கொடூரமான முறையில் கொன்றொழிப்பதையும் ‘ஜிகாத்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அதைச் செய்பவர்கள் ‘ஜிகாதி’கள். இவ்வாறு பயங்கரமாக இழிவுபடுத்தப்பட்ட வேறு இஸ்லாமிய சொல்லாடல் இல்லை.
இந்த அளவு இந்த பயங்கரவாத அமைப்புகள் வளர்வதற்குக் காரணம் என்ன? ஈராக்கிலும், சிரியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சன்னி-ஷியா இன மோதலைப் பயன்படுத்தியே ஐ.எஸ். வளர்ந்துள்ளது எனலாம்.
ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேனைக் கொன்றொழித்து விட்டு ஒரு பொம்மை அரசை நியமித்தது. ஈராக் பிரதமராக இரண்டுமுறை இருந்த நூர் மாலிக்தான் இந்தப் பிரிவினை மோதல் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. ஈரானின் விருப்பத்திற்கு ஏற்பவே அவர் செயல்பட்டார் என்கிறார்கள்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபூபக்கர் அல்பக்தாதி ஈராக்கில் பாக்தாத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமர்ராவில் 1971இல் பிறந்தான். பாக்தாத்திலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் படித்தான். இறைத் தூதரின் கோத்திரத்தில் பிறந்ததால் தனக்குக் கலீஃபாவாகும் தகுதியிருக்கிறது என்று கூறிக் கொண்டான்.
ஐ.எஸ்ஸிற்குத் தலைவராக இருந்த அபூஉமர் கொல்லப்பட்டவுடன் அந்த அமைப்பின் உயர் மட்டக்குழு கூடி அபூபக்கர் அல் பக்தாதியை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அக்குழுவில் இரண்டு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களில் ஒருவர் பக்தாதியால் கொல்லப்பட்டார். தன்னை எதிர்ப்பவர்கள் தன்னுடைய அமைப்பில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை பக்தாதி விட்டு வைக்க மாட்டான்.
தங்களுடைய இலக்கு ஈராக், சிரியாவுடன் முடிந்துவிடாது என்று பக்தாதி பிரகடனப்படுத்தினான். போப்பின் தலைநகரான வாட்டிகன் சிட்டியும், இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதினாவும் இதில் அடங்கும். பல்வேறு காரணங்களால் மேற்கத்திய சக்திகளுக்கு பொம்மை ஆட்சியாகச் செயல்படும் அரபு ஆட்சியாளர்களை அந்தக் குடிமக்களே விரும்பவில்லை. குறிப்பாக, இளைய தலைமுறை கடுமையான வெறுப்பும், கோபமும் கொண்டிருக்கிறது. இதனை ஐ.எஸ். நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறது.
சிரியாவில் நடைபெற்று வந்த ஜனநாயகப் போராட்டம் திடீரென ஆயுதப் போராட்டமாகவும், மத, இனங்களுக்கிடையே மோதலாகவும் மாறியது. இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று உலகில் பல்வேறு திசைகளுக்கும் அகதிகளாகச் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிரியர்களே!
இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. இவற்றில் மிக முக்கியமானது அல்காயிதா, ஐ.எஸ். ஜப்ஹதுன் நுஸ்ரா கும்பல்கள் சிரியாவின் மண்ணில் ஆதிக்கம் செலுத்திடத் தொடங்கியதுதான். சிரியா போராட்டம் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே சிக்கல்களும், அராஜகமும் நிறைந்ததாக மாறிவிட்டது.
இஸ்லாமிய நாடுகளாக ஈராக், சிரியா, எகிப்து, அல்ஜீரியாவும் அரசு பயங்கரவாதத்துக்குப் பெயர் போனவை. அங்கு நிலவும் அரசு பயங்கரவாதம், பாதுகாப்பின்மை, அராஜகம், சர்வாதிகாரம், தலைமைக் குறைபாடு என்னும் இந்தக் காரணங்களால்தான் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் வளர்ந்து உலகை அச்சுறுத்துகின்றன.
இந்த அரசியல் காரணங்களை மாற்றாமல் இராணுவ வலிமை கொண்டு பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்கிவிட முடியாது. புதிய புதிய அமைப்புகள் வேறுவேறு பெயர்களில் உருவாகவே வழி பிறக்கும்.
இந்தச் செய்திகள் எல்லாம் ‘ISIS இஸ்லாம் இல்லை’ என்ற இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ‘எந்து கொண்டு ஐ.எஸ். இஸ்லாமிகமல்லா’ என்ற மலையாள நூல் ஆசிரியர் கே.எம்.அஷ்ரப் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கமே இந்த நூலாகும். இது கே.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்களால் அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ். என்ற இந்த பயங்கரவாத அமைப்பு தேவையில்லை என்பதில் முஸ்லிம் உலகம் உறுதியாக உள்ளது. அதே சமயம் அவர்களுக்குப் பின்னால் இருந்து இதனை இயக்குவது யார் என்பதில் நிறைய ஐயப்பாடுகள் உள்ளன. துனிசியாவைத் தொடர்ந்து அரபு உலகில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி மேற்குலகத்தை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
எனவே அரபுலக முஸ்லிம் இளைஞர்களின் கோபத்தைத் திசை திருப்பவே ஐ.எஸ். என்ற இந்த இஸ்லாமிய விரோத அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. காலம் காலமாக இஸ்லாமிய உலகத்தைத் தீரமுடன் நிற்க வைத்த ஜிகாதிக உணர்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கவே இந்தப் பெயரில் ஒரு தவறான பாதையை உருவாக்கி முஸ்லிம் உலகத்தை நாசப்படுத்தி வருகின்றனர் என்று ஆசிரியர் கூறுகிறார்.
“ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம் சமுதாயத்தினால் மட்டுமே மிகவும் வலிமையான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அப்படிப்பட்ட கொள்கைகளை கொள்கை ரீதியாகவே தோற்கடிக்க வேண்டும். முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் இதற்கான கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்” என்று இந்நூலின் பதிப்புரை கூறுகிறது.
ஐ.எஸ். பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக ஆங்கிலத்தில் 20க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும், வளர்ப்பதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ள பங்கினைப் பற்றி மறைத்தும், குறைத்தும் பேசுகின்றன.
ஆனால் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களையே பயன்படுத்தியிருக்கின்றனர். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச் சார்பற்ற ஆய்வுகளையும் கவனத்தில் கொண்டுள்ளனர். ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திற்குக் காரணமான மத, சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களை ஆய்வு செய்து, ‘அல்ஜசீரா’ வெளியிட்ட அறிக்கைகளும் உதவிகரமாக இருந்துள்ளன.
பாலஸ்தீன் பத்திரிகையாளர் அப்துல் பாரி அத்வான் அரபியில் எழுதிய புத்தகம்தான் மற்றுமொரு முக்கியமான மூலம். இப்பிரச்சனை தொடர்பாக அரபு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளும், குறிப்புகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாத்தை மோசமானதாக உலகத்திற்கு முன்னால் காட்டுவதற்காக அமெரிக்க ஸியோனிஸ்ட் கூட்டணிதான் ஐ.எஸ்ஸை உருவாக்கியது என அவர்கள் வாதாடுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் வைக்கும் ஆதாரங்களைப் புறக்கணிக்க முடியாது. அமெரிக்காவும், அவர்களது கூட்டு நாடுகளும் ஐ.எஸ்ஸிற்கு உதவி செய்ததற்கான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளன.
ஐ.எஸ்ஸின் வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக இருப்பது இஸ்லாமியக் கருத்தியல்கள் மற்றும் வரலாறுகளைக் குறித்த தவறான விளக்கங்கள்தான். ஈமான், இஸ்லாம், கிலாஃபத், இஸ்லாமிய நாடு, ஜிகாது போன்ற முக்கியமான வார்த்தைகளுக்கு அவர்கள் தலைகீழாகப் பொருள் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட பொய்யான வாதங்களுக்கு இஸ்லாமிய வரலாறுகளையும், அடிப்படைகளையும் கொண்டுதான் பதில் தர வேண்டும். இஸ்லாம் முன்வைக்கும் ஜிகாதை ‘புனிதப் போராக’ பிரச்சாரம் செய்தபோது அதைக் கண்டித்து ஏராளமான புத்தகங்கள் வெளிவந்தன. ஐ.எஸ்ஸின் மொழியில் ஜிகாது என்றால் போரும் வன்முறையும்தான் என்றாகி விட்டது.
இது பற்றியே இப்போது ஏராளமான நூல்கள் வெளியிடப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் காரணம் சதித் திட்டங்கள்தான் என்ற வாதம் இருளைக் கொண்டு ஓட்டைகளை அடைப்பதற்குச் சமம் என்று ஆசிரியர் கூறுகிறார்.
ஐ.எஸ்ஸின் வரவு, அரசியல் சமூக சூழல், மத சிந்தாந்த விளக்கங்கள், தலைவர்கள் போன்றவை பற்றி இப்புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கம் பெறுவதற்கும், பார்வை விரிவாவதற்கும் ஏதுவாக பேரா.டி.கே.எம். இக்பால் எழுதிய ஓர் ஆய்வும் இணைக்கப்பட்டுள்ளது.
ISIS இஸ்லாம் இல்லை
K.M அஷ்ரப் கீழுபரம்பு
தமிழாக்கம்:v K.S. அப்துர் ரஹ்மான்
விலை: ரூ. 150.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
138, பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை - 600 012.