மார்ச் 1, 2012 முதல் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் என்கிற சக்தி வாய்ந்த விசாரணை அமைப்பு நாட்டில் இயங்கத் தொடங்குகிறது. இந்த புதிய விசாரணை அமைப்பு முழு அதிகாரத்துடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விசாரணை மற்றும் உளவு அமைப்புகளும் என்.சி.டி.சி.யின் கீழ் செயல்படும்.

மாநில அரசின் விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளும் சட்ட விரோதக் கைதுகள் மற்றும் தேடல்கள் குறித்தும் விசாரிக்கும் உரிமைகள் என்.சி.டி.சிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. நாட்டிலுள்ள உளவு அமைப்புகளான ரா (Research and Analysis Wing) மத்திய உளவுத்துறை (I.B), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (National Technical Research Organisation), பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சி (Defence Intelligence Agency) போன்ற புலனாய்வு நிறுவனங்கள் தனித்தனியாகவும், தங்கள் விருப்பப்படியும் இயக்கி வருகின்றன.

இந்த அமைப்புகளுக்குள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பில்லாமலும், ஒருங்கிணைப்பு இல்லாமலும் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக நெருக்கடியான கால கட்டங்களில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட ஒரு இயங்குமுறை இல்லாததால் இந்த அமைப்புகளுக்குள் அவசர காலத்தில் உதவிக் கொள்ளும் செயற்பாட்டில் பலவீனம் வெளிப்படுகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்பும் பலவீனமடைகிறது.

பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்து விட்டால் அதன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பின் மீது பழி சுமத்தும் போக்கும் நிலவுகிறது. அதோடு, இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல்களும் தொடர்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிந்தனையில் உதித்ததுதான் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் (NCTC).

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் என்.சி.டி.சி. இயங்கும். பாதுகாப்பு அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தில் இயங்கி வரும் பாதுகாப்பு நிறுவனங்கள் உள்பட நாட்டிலுள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளும் என்.சி.டி.சி.யின் கீழ் இயங்கும் எனத் தெரிகிறது. இது தவிர, நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநில அரசின் அனுமதியைப் பெறாமலே நேரடியாக மத்திய விசாரணை அமைப்புகளை களமிறக்கும் உரிமையும் என்.சி.டி.சி.க்கு அளிக்கப் பட்டிருக்கிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பாக செயல்படவிருக்கும் என்.சி.டி.சி.யை தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நர மோடி உள்பட 8 மாநில முதல்வர்கள் எதிர்க்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ள நரேந்திர மோடி, “சட்டம் - ஒழுங்கை மாநில அரசின் பட்டியலில் வைத்திருக்கிறது அரசியல் அமைப்பு. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொள்வது போலீஸ் மற்றும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த உரிமையை என்.சி.டி.சி. தடை செய்கிறது. இது இந்திய கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கிறது. அதனால் உடனடியாக என்.சி.டி.சி. தொடர்பான மத்திய அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்...'' என அலறியிருக்கிறார்.

இதே காரணத்தை முன் வைத்துத் தான் மோடியின் தோழியான ஜெயலலிதாவும் எதிர்ப்பு காட்டி வருகிறார். பெரும்பாலும் பாஜக முதல்வர்கள்தான் இந்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இனி, மத மோதல்களைத் தூண்டி விட்டோ, போலி என்கவுண்ட்டர்களை நடத்தியோ அல்லது குண்டு வெடிப்புகளை நடத்தி அதன் பழியை சிறுபான்மையினர் மீது போட்டோ அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்று நினைக்கும் மோடியும், மோடி சிந்தனை உடையவர்களும் என்.சி.டி.சி.யை எதிர்த்து வருகின்றனர்.

மற்றபடி பெரும்பாலான மாநில முதல்வர்களும், நாட்டு மக்களும் இதனை வரவேற்கிறார்கள். அதனால் நாட்டு மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து எக்காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு என்.சி.டி. சி. குறித்த அரசாணையை ரத்து செய்யாமல் அது அறிவித்தபடி மார்ச் 1 முதல் அமுல்படுத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Pin It