குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையின்போது முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதற்கு மோடி அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய உதவிக்குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும், மோடி அரசு நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் கடந்த வார இதழில் எழுதியிருந் தோம்.

உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைப் பெற்ற குஜராத் இஸ்லாமிய உதவிக் குழு, துரிதமான செயல்பாட்டில் இறங்கியிருக்கிறது. மாநிலம் முழுவதும் சேதப்படுத்தப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகளிடம் இழப்பீடு வேண்டி மனு அளிக்குமாறு அது வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இஸ்லாமிய உதவிக்குழு உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு குறித்து தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அப்படியே உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமானவை, கலவரத்தின்போது மாநில அரசின் உள்துறை அமைச்சகமே செயலிழந்து விட்டது என்பதும், வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு தரவும் அரசு முன் வரவில்லை என்பதுமாகும்.

சேத மதிப்பு குறித்த விபரங்களுடன் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்களை தனித்தனியாக ஆய்வு செய்து தேசத்திற்கான இழப்பீட்டுத் தொகையை நீதிபதி முடிவு செய்வார். இதனை தவறாமல் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது இஸ்லாமிய உதவிக் குழு.

கலவரம் நடந்தபோது மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க தவறிய மோடி அரசு அதன் இழப்புத் தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது, தவறு செய்த அரசு அந்தத் தவறுக்கான தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதைப் போன்றதுதான்.

மோடியின் அரசு இயந்திரம் கலவரத்தின்போது செயல்படாமல் போனது என்பதை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு 1/4/2002 மற்றும் 31/5/2002ல் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் வருடாந்திர அறிக்கை (2002-2003)யிலும் இதனை குறிப்பிட்டிருந்தது.

ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் சொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட மற்றும் தேசப்படுத்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பதை மோடி அரசு அப்போதே கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆயினும் நீதிமன்ற விசாரணைகளின்போது மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து மோடி அரசு அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, இழப்பீடு வழங்குவதில்லை என்பது எங்கள் (அரசின்) கொள்கை முடிவு. குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது கூட நாங்கள் இழப்பீடு தரவில்லை' என்று சம்பந்தமில்லாமல் நியாயப்படுத்தியது.

மோடி அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், இழப்பீடு வழங்குவது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 27வது பிரிவை மீறுவதாகும் என வாதாடியது. இந்த வாதத்தை நிலைநிறுத்த, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீட்டைத் தர முடியாது என்றது. பின்னர், 37 வழிபாட்டுத் தலங்களைத் தவிர்த்து அநேகமாக சேதப்படுத்தப்பட்ட எல்லா வழிபாட்டுத் தலங்களும் புணரமைக்கப்பட்டு விட்டன என்று பொய் சொன்னது குஜராத் அரசு.

ஆனால் இஸ்லாமிய உதவிக் குழுவின் மனுவின் மீதான நியாயத்தை உணர்ந்த உயர் நீதிமன்றம், இப்பிரச்சினையை சமரச திட்டத்தின் அடிப்படையில் இரு தரப்பு பிரதிநிதிகளும் ஆலோசனை செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது விருப்பத்தை வாய்மொழி உத்தரவாக தெரிவித்தது. இதையும் ஏற்றுக் கொள்ள குஜராத் அரசு மறுத்து இழப்பீடு தரக்கூடாது என்கிற அதன் நிலைப்பாட்டிலேயே உறுதி காட்டி வந்தது. இந்தப் பிரச்சினையை விடாத உயர் நீதிமன்றம், புனரமைக்கப்படாத 37 வழிபாட்டுத் தலங்களை உடனே புனரமைக்குமாறு வாய் மொழியாக உத்தரவு பிறப்பித்துப் பார்த்தது. இதையும் செயல்படுத்த மறுத்து விட்டது மோடி அரசு.

இறுதியாகத்தான் இஸ்லாமிய உதவிக் குழு அளித்த மனுவின் நியாயத்தை மறுக்க முடியாமல் சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மறு நிர்மானம் செய்து தர வேண்டும் என முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடந்த 8ம் தேதி வழங்கியது உயர் நீதிமன்றம்.

இழப்பீடுகளைப் பெற 10 வருடங்கள் கடந்துள்ளது என்றாலும், இதை ஒரு வேண்டுகோளாக ஏற்று மாநில அரசு 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட, இழப்புக்குள்ளான தரப்பிற்கு பொருளாதார உதவி வழங்குகிறோம் என்ற நோக்கில் இதனை அணுக வேண்டும். மாறாக, பாதிக்கப் பட்டவர்கள் இழப்பீட்டை பெறுவதற்காக சண்டையிடுவதாக எண்ணி விரோத மனப்பான்மை யோடு இதனை அரசு அணுகக் கூடாது என்று கூறும் இஸ்லாமிய உதவிக் குழுவும், வேறு தொண்டு நிறுவனங்களும் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை புணரமைக்க தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருளாதார உதவிகளை ஏற்கெனவே செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It