காலம் காலமாகப் போர் அழிவையே ஏற்படுத்தி வருகிறது. பகையையும் பழிவாங்கும் தீய எண்ணங் களையும் வளர்த்து போர் செய்யத் தூண்டுகிறது. தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதற்குப் பதிலாக அச்செயல்களை ஊக்குவித்து நிரந்தரப்படுத்துகிறது. பெரும்பான்மையான ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வியலைச் சிதைக்கிறது. வல்லரசுகளின் மரண விளையாட்டுகள்தான் போர்கள். இப்போர்கள் முடிவில் அழிவைத்தான் மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் அளித்து வருகின்றன. பொருளாதாரம் எந்த நாட்டிலும் அமைதியற்றச் சூழலில் வளர்ச்சி அடைவதில்லை. அறிவார்ந்த மக்களின் கருத்துகளைப் போர்கள் புறந்தள்ளி வருகின்றன. அரசின் நிதியாதாரங்களைச் சிதைத்து நீண்ட காலக் கடன் சுமைகளை நாட்டின் மீது போர் திணிக்கிறது.

பொருளாதாரத்தின் முதல் ஆய்வறிஞர் ஆதம் சுமித் ‘நாடுகளின் செல்வம்’ என்ற நூலில் பழங்காலப் போர்க் களங்களில் சத்தமில்லை; மனிதனின் ஓலம்தான் இருந்தது. புகை இருக்காது; காயங்களுக்கும் மரணங்களுக்கும் கண்ணுக்குப் புலனாகாத காரணங்கள் ஏதுமில்லை. நெருங்கித் தாக்கும் வரை ஆயுதங்கள் தன்னை ஒன்றும் செய்யாது என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்திருந்தான். (In an ancient battle, there was no noise but what arose from the human voice; there was no smoke, there was no invisible cause of wounds or death. Every man, till some mortal weapon actually did approach him, saw clearly that no such weapon was near him - Adam Smith, Wealth of Nation).

ஆடம் ஸ்மித் காலம் தொடங்கி இன்று வரை போர்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பொது நிதியிலிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகள் போர்களுக்காக ஒதுக்கப்பட்டன. எனவே போர்களுக்காகப் பொதுச் செலவினை அதிகமாக மேற் கொள்ளக்கூடாது என்று பல பொருளாதார அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். பொதுச் செலவைக் குறைக்க வேண்டும் என்ற பொருளியல் கோட்பாடு 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் செல்வாக்கினைக் பெறத் தொடங்கியது. எனவேதான் 1786இல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியோன் ஸே என்ற பொருளியல் அறிஞர் அரசு செய்யும் பொதுச் செலவு என்பதே உலகம் தழுவிய கொடியக் கோட்பாடு (The growth of public expenditure was a universal evil) என்றார்.russel and bernard shawமுதல் உலகப் போரின்போது நாட்டுப்பற்று என்கிற தவறான கருத்தை முன்னிறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போர்த் தொடுப்பதைச் சரியென்று வாதாடினர். முதல் உலகப் போர் முடிவுற்ற பிறகு ஐரோப்பிய நாடு களில் பெருமளவிலான பொருளாதாரச் சீரழிவுகள் தொடங்கின. காரணம் 3 கோடிக்கு மேல் போர்வீரர்கள் மாண்டனர். ஒரு கோடியே 30 இலட்சம் பொது மக்கள் மாண்டனர். நிதி இழப்பு மட்டும் 2 இலட்சத்து 81 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது. இன்றைய மதிப்பில் பல இலட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப் படுகிறது. இக்காலக்கட்டத்தில் இரண்டு அறிஞர்கள் முதல் உலகப் போரினைக் கடுமையாக எதிர்த்தனர்.

மெய்யியல் அறிஞரான பெர்டன்ட் ரசல் முதல் உலகப் போருக்கு எதிராக இங்கிலாந்தில் பரப்புரை செய்தார். போர்களால் எந்தவிதப் பயனும் முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று பல கட்டுரைகளையும் எழுதினார். இங்கிலாந்து நாட்டின் அழைப்பை ஏற்றுப் போர்ப்படையில் இளைஞர்கள் சேரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக பெர்டன்ட் ரசல் 6 மாதச் சிறைத் தண்டனைப் பெற்றார். வன்முறைக்கு எதிராக பிற்காலத்தில் களம் அமைத்துப் போராடிய காந்தியார் முதல் உலகப் போரின் போது இலண்டன் மாநகரில் தங்கி யிருந்தார். பிரித்தானியப் போர்ப்படையில் சேரும்படி வலியுறுத்தி போர்ப்படையில் சேருவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். முதல் உலகப் போரில் ஈடுபட்டு 74 ஆயிரம் இந்திய வீரர்கள் மாண்டனர். காந்தியின் இத்தகைய முரண் பாட்டை காந்தியின் நண்பர்கள் உட்பட வெளிநாட்டு அறிஞர்கள் பலர் அதைப் பற்றி கேள்வி எழுப்பிய போது இறுதி வரை காந்தி எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா இங்கிலாந்து நாட்டில் முதல் உலகப் போருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். வீணான போர்க் கூச்சலைத் தேசியம் என்று அழைப்பது பித்தலாட்டம் என்றார். பெர்னாட்ஷாவிற்கு எதிராகப் போர் வெறியர்கள் மக்களைத் தூண்டினர். அவரின் நாடகங்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக பெர்னாட்ஷா பல மாதங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தார். போர் முடிவுற்றதும் ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், நோய்கள் ஆகியன பெருகின. பெர்னாட்ஷா போரின் போது கூறிய கருத்துகள் மெய்ப்பிக்கப்பட்டன. பெர்னாட்ஷாவின் நாடகங்கள் போருக்குப் பின் பல நாடக அரங்குகளில் பல ஆண்டுகள் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. முதல் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளிடையே நடைபெற்ற போராகும்.

முதல் உலகப் போர் கற்பித்த பாடங்களை மறந்து ஏகாதிபத்திய நாடுகள் மீண்டும் போர்களில் இறங்கின. 1939ஆம் ஆண்டில் தொடங்கி 1945இல் முடிவுற்ற இரண்டாம் உலகப் போரின் மொத்தச் செலவு அன்றைய அமெரிக்க நாணய மதிப்பில் பல இலட்சம் கோடி ரூபாய்களாகும். 2.5 கோடி இராணுவ வீரர்களும் 2 கோடி மக்களும் உயிரிழந் தனர். இதைத் தவிர ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய அணுக்குண்டு தாக்குதல் மிகவும் கொடுமையானது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நடந்த அணுக்குண்டு தாக்குதல்களில் கருங்கற்கள் கூட உருகி கரைந்தன என்பதை இக்கட்டுரையாசிரியர் 2010ஆம் ஆண்டு ஜப்பானின் நாகசாகி நகரில் இயங்கிவரும் போர் நினைவகக் காட்சியகத் திற்குச் சென்றபோது கண்டார். அணுகுண்டு தாக்குதல்களால் மனிதக் குலத்திற்கு ஏற்பட்ட சீரழிவைக் காட்சியகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள படங்கள் பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்கின்றன. அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள், ஆளுமைகள் உட்பட பல இலட்சம் பேர்கள் அணுகுண்டு வீசுவதனால் ஏற்படும் சீரழிவுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கருத்தினை அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் எழுதியுள்ளனர்.

போர்களில் ஏற்பட்ட மாபெரும் அழிவுகளுக்காகச் செய்யப்பட்ட பொதுச் செலவினை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தியிருந்தால் உலகம் பல நன்மைகளைப் பெற்றி ருக்கும்; மானுடத்தின் துயரங்கள் பல நாடுகளில் துடைக்கப் பட்டிருக்கும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஐக்கிய நாடுகள் மன்றமும் அதன் துணை அமைப்புகளும் தோற்றுவிக்கப் பட்டன. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகள் எப்போதும் ஏற்படக் கூடாது என்ற தன்மையில்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பு 1948இல் உலக மானுட உரிமைகள் பிரகடன அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பிரகடனத்தை பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த சட்ட அறிஞர் ரெனே காசினும் உலகப் போரின்போது அமெரிக்கா நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ரூஸ்வெல்டின் துணைவியார் எலினாரும் இணைந்து இரவு பகலாகப் பணியாற்றி இந்தப் பிரகடன ஆவணத்தை உருவாக்கினர். அப்போது போதிய மின் விளக்கு வசதிகள் கூட இல்லாத நேரமாகும். மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு இந்த ஆவணத்தை எழுதி விரைந்து முடித்தனர். அப்போது ரெனே காசின் மனிதனின் மனம் மாறக்கூடியது. இந்தப் போர் அழிவைக் கண்டு துடிதுடித்த மனங்களின் உணர்வுகள் மறையும் முன்பே மானுட உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights, 1948) நாங்கள் ஓய்வின்றி எழுதினோம் என்று குறிப்பிட்டார்.

போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு களைச் சீரமைப்பதற்காகதான் பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகள் 1944இல் உருவாக்கப் பட்டன. முதலாளித்துவத்தை முழுமையாக ஆதரித்த இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் கீன்சு அமெரிக்காவின் பிரிட்டன்வுட்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட இந்த அமைப்புகளின் முதல் கூட்டத்தில் உரை யாற்றிய கீன்சு மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்காக இந்த நிதியங்கள் தாராளமாக நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். போர் செய்யும் நாடுகள் (Warfare Governments) தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் நல அரசுகளாகச் (Welfare Governments) செயல்பட வேண்டும் என்றும் கீன்சு குறிப்பிட்டார். ஆனால் போர்கள் தொடர்ந்தன. 1950க்குப் பிறகு போர்கள் மீண்டும் வெடித்தன. கொரியப் போர், வியட்நாம் போர், இந்திய பாகிஸ்தான் போர்கள் (1965, 1971, 2002, 2025), ஈரான்-ஈராக் போர், ஆப்கன் போர், வளைகுடாப் போர், இசுரேல்-பாலஸ்தீன போர்கள், இரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல போர்கள் தொடந்த வண்ணமே உள்ளன.

போர்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி மக்களை, பொருளாதாரத்தை, இயற்கை வளங்களை, சுற்றுச்சூழல்களைப் பெருமளவில் அழித்துச் சீர்கேடுகளை உருவாக்கி வருகின்றன. உலக நாடுகளில் சீர்கேடுகள் இல்லாத நாடுகளே இல்லை என்ற சூழல் தற்போது உருவாகி வருகிறது. சான்றாக இசுரேல்-காசா போரில் பயன்படுத்தப் பட்ட போர்க் கருவிகளால் ஏற்பட்டச் சுற்றுச்சூழல் கேடுகளின் அளவானது முதல், இரண்டாம் உலகப் போர்களில் ஏற்பட்ட இயற்கை மானுடச் சீரழிவை விஞ்சிவிட்டது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் விளக்குகின்றன.

பொது நிதியியல் என்பது முழுமையாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. அரசின் பொதுச் செலவில் போருக்கான செலவு பன்மடங்காகப் பெருகி வருகிறது. நாடுகளின் வரி வருவாயைக் காட்டிலும் நாட்டின் பொதுக்கடன் பெருகி வருகிறது. நாட்டின் நிதியியலின் கூறுகள் நாளும் சிதைக்கப்பட்டு ஆயுதத் தளவாடங்களின் செலவிற்காக அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன (Public Finance has become war Finance). உலகின் வளர்ந்த நாடாகத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த நாட்டு வருமானத் தைவிட அதன் கடனளவு அதிகரித்து உள்ளது. இதே நிலைமைதான் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது.

இக்கட்டுரையாசிரியர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் திறந்த பகுதியில் Economics of War என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவு வீதங்களை காட்டிலும் இந்தியா உட்பட பல நாடுகளில் போர்ச் செலவுகள் பெருகி வருகின்றன. போர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே சுவிடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக் ஹோமில் செயல்பட்டு வரும் அமைதிக்கான பன்னாட்டு ஆய்வு நிறுவனம் (Stockholm International Peace Research Institute, (SIPRI)) 1966ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க பொருளாதார அறிஞரான குன்னர் மிர்தல் இந்த அமைப்பின் தலைவராக 1967 முதல் 1973 வரை பொறுப்பேற்றிருந்தார். மிர்தல் வியட்நாம் மீது போர் தொடுத்தபோது அமெரிக்காவைக் கண்டித்து அறிக் கைகள் வெளியிட்டவர். உலகில் மத அடிப்படையில் பிளவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 1933இல் முதன்முதலாக மானுட அறிக்கை வெளியிடப்பட்டது. 1973இல் வெளியிடப்பட்ட இரண்டாம் மானுட அறிக்கையில் கையொப்பமிட்ட அறிஞர்களில் மிர்தலும் ஒருவர். அவ்வறிக்கையில் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றாது, நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நமக்கு நாமே பொறுப்பு என்ற மேற்குறிப்பிட்ட கருத்தியலே வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமய மாக்கல் என்ற திட்டம் 1991இல் தொடங்கியது. 1995ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) வரித் தடைகள், வர்த்தகத் தடைகள் நீக்கி உலகளவிலான வணிகத்திற்குச் சமமான சந்தையை உருவாக்கும் நோக்கத்தோடுதான் உருவாக்கப் பட்டது. ஆனால் போர்ச் செலவுகள் பற்றி உலக வர்த்தக நிறுவனத்தின் கொள்கைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உலகில் பொருட்களின் சந்தைகளோடு ஆயுத உற்பத்திச் சந்தைகளும் பெருகின; குறைக்கப்படவில்லை. தனியார் ஆயுத உற்பத்தியின் அளவு பல இலட்சம் கோடி களைக் கடந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதற்கு உலகளவில் எந்த நாடும் எவ்விதத் தடையும் விதிக்க முன் வரவில்லை. ஆனால் 2025இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் ஓர் உலக வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக உலக வர்த்தக அமைப் பின் குறிக் கோள்கள் முழுமையாகத் தகர்க்கப்பட்டுவிட்டன.

இந்தியா, சீனா, கனடா, வியட்நாம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை அறிவித்தார் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப். இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் மட்டும் 7 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குச் சரிவுகள் ஏற்பட்டன. பன்னாட்டு நிதியம் உலகளவிலான பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2.8 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு அளவிற்குச் சரிவைச் சந்திக்கும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் 1930களில் கண்டது போன்று ஒரு பெரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை செய்த பிறகு டிரம்ப் தனது வரிக்கொள்கையை மாற்றிக்கொண்டு சீனாவுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் ஐரோப்பிய நாடுகளோடு ஒரு வர்த்தகப் போரை அறிவித்துள்ளார். உலகளாவியப் பொருளாதாரச் சரிவை நோக்கிச் செல்லும் இத்தகையச் சூழலிலும் இந்தியா-பாகிஸ்தான் போர் நான்கு நாட்களில் முடிவுற்றது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் போரென்றால் இழப்புகள் இல்லை என்று யாரும் கூற முடியாது. ஒருவரை ஒருவர் பழிச் சுமத்தும் போக்குத்தான் போரில் முதன்மைக் கொள்கையாகச் செயல்படும். உண் மைகள் போர் எனும் இருளில் மறைந்துவிடும். இந்தியா­பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று இதுவரை 13 முறை அறிவித்த டிரம்ப் இசுரேல்-காசா போரைப் பற்றிக் கண்டும் காணாமல் இருக்கிறார். காசாவில் இசுரேல் நடத்தும் போர் வெறியாட்டத்தை நிறுத்த முன்வர வில்லை. இரஷ்யா-உக்ரைன் போர் 2022இல் தொடங்கி இன்றும் முடியவில்லை.

ஏழ்மை வறுமை ஏற்றத்தாழ்வுகள் இன்று உலகளாவிய பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நேரத்தில் போர் எவ்வகை ஆபத்தானது என்பதைப் பல வல்லுநர்கள் தொடர்ந்து சுட்டி வருகின்றனர். குறிப்பாக ஜோசப் ஸ்டிக்லிசும் லிண்டா பிலிம்சும் இணைந்து 145 இலட்சம் கோடி செலவில் ஒரு போர் (The Three Trillion Dollar War – The True cost of the Iraq Conflict, P.206, 2008) என்ற நூலை 2008இல் எழுதினர். ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஒரே ஆண்டிற்குள் செய்த செலவு 145 இலட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பீடு செய்தனர்.

இந்நூலில் அமெரிக்க அரசிற்கு 18 பரிந்துரைகளை நூலாசிரியர்கள் வழங்கியுள்ளனர். இந்தப் பரிந்துரைகள் இந்திய நாட்டிற்கும் பொருந்தும். தனியார்த் துறையில் ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இந்தப் பரிந்துரைகளில் முதன்மையான ஒன்று. முதலாளித்து வத்தை ஏற்றுக்கொண்ட இந்த இரு பொருளாதார அறிஞர் களும் தனியார்த் துறையில் ஆயுத உற்பத்தியை அனுமதித் தால் உலகில் போர் நிற்காது என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் தனியார்த் துறையில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதத் தளவாடங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. போர் நடை பெறும் பகுதிகளில் இந்த வணிகம் பெருகி வருகிறது. இதனால் மானுடத்திற்குப் பேராபத்து என்பதை அமைதியை விரும்பும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

ஸ்டாக்ஹோம் அமைதிக்கான பன்னாட்டு ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதத் தளவாடங்களைப் பற்றியும் ஆயுதத் தளவாடங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நாடுகள் பற்றியும் தொடர்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்த நாடுகளின் வரிசைப் பட்டியலில் உக்ரைன் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எல்லாவிதப் போர் ஆயுதங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தனியார் ஆயுத நிறுவனங்கள் இலஞ்சப் பணத்தை வாரி இறைத்து ஆயுதத் தளவாடங்களின் விலைகளைப் பன்மடங்காக உயர்த்தி மோசடி செய்து வருகின்றன. போபர்சு பீரங்கி தொடங்கி ரபேல் விமான கொள்முதல் செய்தது வரை பல கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. ஆனால் ஒன்றிய அரசு தனது அதிகாரப் பலத்தை வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து வருகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் சரிவை நோக்கிப் பயணம் செய்கிறது. அந்நிய முதலீடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை எடுத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். பல இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறி உள்ளன. வெளியேறிய முதலீடுகளின் மதிப்பு 353 மில்லியன் டாலர் என்று இந்து நாளிதழில் 23-5-2025 அன்று வெளி வந்துள்ளது.

இந்தியாவின் கடன் தொகை ஒரு பக்கத்தில் பெருகி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 174 விழுக்காடு அளவிற்கு ஒன்றிய அரசின் கடன் அளவு பெருகியுள்ளது. 2013-14ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் போது கடன் தொகை 58.6 இலட்சம் கோடி ரூபாய் அளவில் இருந்தது. 2023இல் நரேந்திர மோடி ஆட்சியில் 155.6 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது.

இச்சூழலில் போர் என்பது எத்தகைய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை ஸ்டிக்லிசு கூறிய கீழ்க்கண்ட கருத்தின் வழியாக அறிந்து கொள்ள முடியும். போர் தொடுப்பதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மற்ற கூறுகளிலிருந்து வேறுபட்டு பெரிய அளவிலான பொறுமையுடனும் அதிக எச்சரிக்கையுடனும் மிகுந்த விழிப்புடனும் செயல்படுத்தும் நடவடிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஊடகங்கள் எழுப்பும் இடைவிடாத கூக்குரல், அரசு ஆரவாரங்கள் தேசியத்தைத் தூண்டும் விதமாகக் கொடி அசைத்தல், பொறுப்பற்ற சாகசங்களை மேற்கொள்ளு தல் போன்றவற்றைத் தவிர்த்து நோக்கினால் போர் என்பது ஆண்களையும் பெண்களையும் கொன்று குவிப்பதாகும். அவர்களை முடமாக்கி செயலிழக்கச் செய்யும் கொடுஞ் செயலாகும். இதற்கான செலவுகள் துப்பாக்கியின் கடைசி குண்டு வெடித்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

போர் எரிபொருள் விலையை உயர்த்தும். அரசு நிதியில் பெரும் சரிவுகளை ஏற்படுத்தும். முதலில் கல்வி, சாலை வசதி, ஆய்வு போன்ற நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியை மடைமாற்றிப் போருக்காகச் செலவிடும் நிலையை உருவாக்கும். பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் போருக்காகச் செலவிடும் மொத்த செலவின் விளைவுகளை ஆய்வதில்லை. போர்ச் செலவில் மறைந்திருக்கும் பல உற்பத்திச் செலவுகளையும் ஆய்வதில்லை. போரில் ஈடுபட்டு முடமாக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு செய்யும் நீண்டகாலச் செலவினையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. போர்ச் செலவிற்காக அரசு எழுப்பும் கடன்கள், அதனால் பெருகும் கடன் தொகை வட்டித் தொகையையும் கணக்கிடுவதில்லை என்பது போன்ற எண்ணற்ற போர் செலவு தொடர்பான காரணிகளைக் கணக்கிட்டு ஜோசப் ஸ்டிக்லிசும் லிண்டா பிலிம்சும் அமெரிக்கா 145 இலட்சம் கோடி ரூபாயை ஒரே ஆண்டில் செலவிட்டு ஈராக் போரை நடத்தியது தவறு என்று புள்ளிவிவரங்களோடு வாதிட்டுள்ளனர்.

போர்ச் செலவினைக் கட்டுப்படுத்த இந்நூலாசிரியர்கள் 2008இல் அளித்த பரிந்துரைகளை அமெரிக்க அரசு ஆய்வு செய்ய மறுத்ததனால் 2024ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி அமெரிக்காவின் கடன் சுமை அமெரிக்காவின் தேசிய வருமானத்தைக் காட்டிலும் 121.28 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கடன் என்பது எதிர்காலத் தலைமுறையினர் மீது விதிக்கப்படும் வரி என்று தொன்மைப் பொருளாதார அறிஞரான டேவிட் ரிகார்டோ 19ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் குறிப்பிட்டார். இதை ஜேம்ஸ் புக்கனன் உள்ளிட்ட பொது நிதியியல் அறிஞர்கள் வழிமொழிந்துள்ளனர். எனவேதான் காரல் மார்க்சு ‘வரி போராட்டம் என்பது ஒரு வகையான வர்க்கப் போராட்டமே’ (tax struggle can be seen as one form of class struggle) என்று கூறினார். மக்கள் வரிச்சுமை, கடன் சுமை ஆகியவற்றை உணரக் கூடாது என்பதற்காகத்தான் சாதி மத பிளவுகள் ஊக்குவிக்கப்பட்டு மக்களின் கவனம் திசைத் திருப்பப்படுகிறது.

போர் என்பது மனித உயிரிழப்புகள், இயற்கை வளங்கள் அழிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிப் பொருளாதாரத் தையும் மானுடத்தையும் சிதைத்துவிடும் என்பதுதான் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை.

போர் வெறித் தவிர்ப்போம்;

மானுட நெறிகளைப் போற்றுவோம்.

- பேராசிரியர் மு.நாகநாதன்