பெரியாரிடமிருந்து பிரிந்துவந்தபிறகும் திராவிட நாடு கோரிக்கையே அண்ணாவின் அடிப்படைக் கோரிக்கையாக இருந்தது. “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு”என்ற முழக்கத்தைத் தோற்றுவித்தவர் அண்ணாவா என்று தெரியாது. ஆனாலும் அம்முழக்கம் அவரது கட்சிக்காரர்களைவிட எதிர்க்கட்சிக்காரர் களாலேயே அதிகம் பரப்பப்பட்டது.
பெரியாரின் திராவிட நாட்டுக்கும் அண்ணாவின் திராவிட நாட்டுக்கும் அடிப்ப டையான வேறுபாடு இருந்தது. ஆந்திரம், கேரளம், தமிழகம் என்ற மூன்று மாநிலப் பகுதிகளின் கூட்டுப்பிரதேசமாகச் சென்னை மாகாணம் இருந்தமை, அந்த மூன்று மாநில மொழிக்கா ரர்களும் நீதிக்கட்சியில் பங்கேற்று இருந்தமை - நிலப்பகுப்பு, மொழித் தொகுப்பு இரண் டும்ஒன்றுக்கொன்று உடன்பாடான களநிலையை நிலவச் செய்தமை - ஆகிய சூழலில் மூவருக்குமான நாடு என்ற பொருளில் ‘திராவிட நாடு’ என்ற கருத்தியலைப் பெரியார் முன்வைத்தது அந்தக் காலக் கட்டத்திற்குப் பொருத்தமாயிருந்தது.
மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கை 1945 ஆம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. ஐக்கியக் கேரளம் என்ற கோரிக்கை கேரளத்திலும், விசாலாந்திரா என்ற கோரிக்கை ஆந்திரத்திலும் இடது சாரிகளால் முன்வைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கின. தெலுங்கானாப் போரைப் பொறுப்பேற்று நடத்தியதே கம்யூனிஸ்ட் கடசியின் விசாலாந்திராக் கமிட்டிதான். 1949 இல் பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா தனிக்கழகம் துவக்கியபோது, தென் இந்தியாவில் மொழிவழி மாநிலங்களின் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்பெற்றதால், சென்னை மாகாணம் என்ற பெரியாரின் திராவிடக் கட்டமைப்பின் உடைவுக்கான உட்கூறுகளாக அவை செயல்படத் தொடங்கி விட்டன என்பதைக் காணமுடிந்தது.
அந்த நிலையிலும் திராவிட நாடுதான் அண்ணாவின் இலட்சியமாக இருந்தது. பெரியாரே ‘திராவிட நாடு’ என்ற கோட்பாட்டைத் திருத்தி, தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு வந்த பின்னரும், அண்ணா ‘திராவிட நாடு’ என்ற முழக்கத்தைக் கைவிடவில்லை.
பெரியாருடைய திராவிட நாடும், அண்ணாவின் திராவிட நாடும் வடிவத்தில் (புவிப்பரப்பில்) மட்டுமே ஒன்றாயிருந்தன. உள்ளடக்கத்தில் இரண்டும் வெவ்வேறாயிருந்தன. பெரியாரின் திராவிட நாடு என்பது என்ன?
சென்னை மாகாணத்துக்குத் திராவிட நாடு எனப்பெயர் சூட்டி அதைப் பிரித்துத் தரவேண்டும் என்று பிரித்தானிய அரசிடம் பெரியார் கோரிக்கை வைத்தபோது மொழிச் சிக்கல் அவர் முன்கணிப்பில் எழவில்லை. மூன்று மொழியினரும் திராவிட மக்களேயாதலால், அவர்களின் சரித்திரம் சார்ந்த சகோதர உறவே தனிநாட்டின் ஆதாரப் பண்பாக நிலைக்கும் என்று அவர் கருதியிருக்க வாய்ப்பிருந்தது.
அன்றிருந்த சென்னையில், திராவிட மொழிகளின் உறுப்பினர்கள் ஒரே சட்டமன்றத்தையும், ஒரே ஆட்சி மையத்தையும் கொண்டிருந்தனர். நீதிக் கட்சி ஆடசியிலிருந்த போதும் இந்தத் திராவிட மொழிகளின் சக வாழ்வு நீடித்தது. எனவே சென்னை மாகாணத்தையே திராவிட நாடாகத் தக்க வைத்துக்கொள்வதை ஏற்க மற்ற மொழிக்காரர்களுக்கு மறுப்பிராது என்று பெரியார் கருதக் காரணங்களிருந்தன. எனவே கூட்டரசன்று; கூட்டுக் குடும்பமே - அவரது திராவிடத்தின் ஆட்சி முறை.
தமிழகம் தவிர மற்ற மூன்று மாநிலங்களில் திராவிடர் கழகம் போதிய அளவு பரவவில்லை யயன்றாலும், அவர்ளுக்கும் சேர்த்தே திராவிட நாடு கோரத் தமக்கு உரிமையும், தகுதியும் இருப்பதாகப்பெரியார் கருதியது தவறன்று. அந்தக் காலக்கட்டத்தில் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஆந்திர, கேரள, கர்நாடாக மாநிலங்களின் மக்கள் எதிர்க்கவில்லை என்பதும், அவர்கள் சார்பில் அரசிடம் வைத்த பெரியார் கோரிக்கைதான் ஏற்கப்படவில்çயே ஒழிய அம் மாநில மக்களின் பிரதிநிதியாகச் செயல்படப் பெரியாரின் தகுதியை அம்மக்கள் மறுக்கவில்லை என்தும் உண்மைகளாகும்.
அண்ணாவின் ‘திராவிட நாடு’ என்பதன் உள்ளடக்கம் வேறு. அது பெரியாரின் திராவிட நாட்டிலிருந்து மாறுபட்டிருந்தது. சென்னை மாகாணமே திராவிட நாடு என்று பெரியார் சொன்னதையே அண்ணாவும் சொன்னார் என்றாலும்அண்ணாவின் திராவிட அரசு பெரியாருடைய ஒற்றை அரசு அன்று; அண்ணாவின் அரசு கூட்டரசு; திராவிடக் கூட்டரசு.
திராவிடர் கழகம் 1944 இல் பிறந்தது. 1945 ஆம் ஆண்டிலேயே அண்ணா அவர்கள் திராவிட நாட்டில் திராவிடக் கூட்டரசுக் கோட்பாட்டைத் தன் நிலைப்பாடாகக் கொண்டிருந்தார் என்பது பலர் அறிந்திராத செய்தி. 1945 இல் கும்பகோணத்தில் அண்ணா ஆற்றிய உரை ‘திராவிடர் நிலை’ என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீடாக வந்தது. 1949 இல் அந்தச் சிற்றேடு காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. தடைநீக்கப்பட்டு 1979இல் மீண்டும் பதிப்பிக் கப்பட்ட ‘திராவிடர் நிலை’யில் அண்ணா திராவிட நாட்டுக்கு அளித்த விளக்கம் இது :
“ திராவிட நாடு தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்கிறோம். திராவிடக் கூட்டாட்சி நடத்துவதே எங்கள் நோக்கம். திராவிட சமஷ்டியிலே தெலுங்கரும், மலையாளிகளும் சேர்வர்... மூன்று மொழிகளும் சேர்ந்த கூட்டரசு நடைபெறும். அதிலோ தமிழர் தனி மொழியோடு வாழ்வர்; தெலுங்கரும் அவ்விதம். கேரளரும் அவ்விதமே. ஆளும் டெல்லி ஆட்சிக்குப் பதில் திராவிடக் கூட்டரசு நடக்கும் அது இன்றுள்ள சென்னை மாகாணமாகும்” . மூன்று மொழிக்காரர்களின் மாகாணமாகச் சென்னை இருந்தபோது அண்ணா எடுத்த நிலை இது.
திராவிட நாடு என்ற பெரியாரின் கட்டமைப் பாகிய சென்னை மாகாணததின் ஒற்றை ஆட்சி உடைந்து, மொழி வழி மாநிலங்கள் நான்காகப் பிரிந்து, நான்கு மாநில ஆட்சிகள் நடைமுறை யாகும் நிலை வந்தபோது, திராவிட நாடு என்ற தம் கருத்தியல் நெருக்கடிக்குள்ளாவதை உணர்ந்த பெரியார் அதை எளிதாக எதிர்கொண்டு மீண்டார். ‘தமிழ்நாடு’ என்ற அவரது மூலக்கருத்தியலுக்கே மீண்டும் திரும்பினார்.
ஆனால் அண்ணாவைப் பொறுத்தவரை அவரது பழைய நிலை மாறவில்லை. திராவிட நாடு சென்னை மாகாணமானலும் அல்லது தென்னிந்தியாவானாலும்அது ஒற்றை அரசன்று; கூட்டரசுதான் என்பதை 1957 ஆம் ஆண்டிலும் உறுதி செய்திருக்கிறார்.
“திராவிடக் கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மெய்ப்பிக்க ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ஆகியோர் முன் புள்ளி விவரங்களை வைக்க வேண்டுவது நம் பணியாக இருக்கவேண்டும்” என்று 1957 இல் ‘ஹோம்லேண்டு’ இதழின் ஆசிரியவுரையில் அவர் எழுதி யிருக்கிறார்.
‘மொழி வழி பிரிந்து இனவழி கூடுதல்’ என்று அண்ணா பேசியதன் பொருள் இதுதான். தாய்மொழியால் தமிழனாகவும்,தென்மொழிக் கலாச்சாரத்தால் திராவிடனாகவும் தம்மை அடையாளங் கண்டார் எனக் கருதலாம். தேசியத்தால் அன்று; கலாச்சாரத்தால் திராவிடர் - என்பதே அண்ணாவின் நிலை - என்பதே கலைஞரின் கூற்று.
திராவிட நாட்டைக் குறிப்பிடும்போ தெல்லாம், நாடு அல்லது தாய்நாடு என்ற சொற்களையே பயன்படுத்தினார் அண்ணா. திராவிட நாட்டைத் தேசம் எனக் குறிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.
‘ஸ்பெயினிலிருந்து ஒரு திராவிடன்’ என்று ஹீராஸ் பாதிரியார் பற்றி ஹோம்லேண்டில் எழுதுகையில், ‘இந்தக் கலாச்சாரத் தாய்நிலம் தனித்தன்மை வாய்ந்த சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பும் திராவிடர்கள், ஆரியப் பண்பாட்டைக் காட்டிலும் திராவிடப் பழம்பெரும் பண்பாடே உயர்வானது, சிறப்பானது, என்பதை உலகம் முழுமைக்கும் மெய்ப்பித்துக்காட்டிய ஒருவருக்குப் புகழஞ்சலியைச் செலுத்த வேண்டியது நியாயமே ஆகும்’ என்கிறார் அண்ணா.
இம்மேற்கோளில் பண்பாட்டு அடையா ளத்தில் மட்டுமே திராவிடர் - ஆரியர் எனப் பிரித்துப் பார்க்கிறார். திராவிடத்தைத் தாய்நிலம் என்றும், நாடு என்ற பொருளில் State என்றும் குறிப்பிடுகிறார். தேசம் என்ற சொல்லை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ திராவிட நாட்டைக் குறிப்பிட அவர் பயன்படுத்தவில்லை என்பது கவனத்திற்குரியது. மாறாக, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே தேசம் என்ற சொல்லை அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதே அளவு கவனத்துக்குரியது. ஹோம்லேண்டில் அவர் எழுதியதைக் கீழே படியுங்கள்.
“ஒரு தேசம் என்பது மொழியால் பிணைக்கப்பட்டது என்பதற்கு வழக்காட வேண்டியதில்லை. டெல்லியின் தேர்க்கால்களில் நாங்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாலும், தனித்தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் கொண்ட தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசம் என்ற மாபெரும் உண்மையைப் பண்டித நேரு ஏற்குமாறு செய்ய உறுதி பூண்டுள்ளோம்”. தேசம், தேசிய இனம் ஆகிய இரு சொற்களுக்கும் Nation என்ற ஒரே சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதுண்டு. அதைத்தான் அண்ணா செய்திருக்கிறார் மேலே கண்ட கட்டுரையில்.
தேசம் என்றால் அது தமிழ்த் தேசம்தான், திராவிட தேசம் அன்று; தேசிய இனம் என்றால் அது தமிழ்த்தேசிய இனம்தான்; திராவிடத் தேசிய இனமன்று என்பதில் அண்ணா மிகத் தெளிவாயிருந்தார்.
இருப்பினும் தமிழ்த் தேசியம் பற்றிய விவாதத்தை ஈ.வெ.கி. சம்பத் எழுப்பியபோது சம்பத்தைக் குழப்பும் முயற்சியில் ஒரு தவற்றைச் செய்தார் அண்ணா.
1961 இல் சென்னைக் கொத்தவால்சாவடியில் அவர்ஆற்றிய உரையில், தமிழ்த் தேசியம், திராவிடத் தேசியம், இந்தியத் தேசியம், ஆசியத் தேசியம், சர்வதேசியம், பிரபஞ்சத் தேசியம் என்று தேசியம் பலவகைப்படும். இப்படி எது தேசியம் என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை எனக் குறிப்பிட்டார். தேசியத் தெளிவுள்ள தலைவர் இதுபோன்ற தவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். அண்ணாவுக்கும் அடிசறுக்கும் என்பதே இதன் பாடம்.
உண்மையில் பெரியாரோடு சேர்ந்தும், பிரிந்தும் அவரைத் தொடர்ந்தும் தமிழியக்கத் துக்குத் தமிழ் மண்ணில் அழுத்தமான அடித்தள மிட்டவர்களில் அண்ணா முதல்வராக நிற்கிறார். மறைமலையடிகள், திரு.வி.க., போன்றவர்கள் முன்னோடிகளாக இருந்தாலும் தமிழ் மறுமலர் ச்சியை ஒரு அரசியல் இயக்கமாக்கி லட்சக்கணக் கான தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதை ஒரு பெளதிக ஆற்றலாக மாற்றித் தமிழ்த் தேசிய உணர்வைத் திராவிடப் பொட்டலத்தில் வைத்து வழங்கியவர் - ‘அண்ணா’ என்று தமிழர்களால் பாசத்தோடு அழைக்கப்பட்ட சி.என்.அண்ணா துரை அவர்களே ஆவர்.
அந்நாளில் நாடகங்கள், திரைப்படங்கள், கல்லூரி மன்றங்கள், இலக்கிய மேடைகள் ஆகிய பல தளங்களிலும் தமிழ் உணர்வு கோலோச் சியமைக்கு அண்ணாவின் இயக்கமே மூலவேராக இருந்தது; அண்ணாவே மூலவராக இருந்தார். கழகத் தலைவர்களின் சிறப்புரையைக் கட்டணம் செலுத்திக் கேட்கக் குழுமிய இளைஞர்களால் மண்டபங்கள் நிறைந்து வழிந்த நிகழ்வுகளில் தமிழார்வம் தளும்பிய காலம் அது.
தமிழில் 53 கிழமை இதழ்களை அண்ணாவின் இயக்கத்தினர் நடத்திய ஐம்பதுகள், தமிழின உணர்வின் உச்சிக்காலமாக இருந்தது. அத்தனை இதழ்களுக்கும் வாசகர்கள் இருந்தார்கள் என்பது அவர் இயக்கத்தின் விரிவையும் செறிவையும் குறிப்பதாக இருந்தது.
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட பிறகும், சம்பத், கண்ணதாசன் போன்ற தலைவர்கள் விலகிய பிறகும், அண்ணாவின் இயக்கம் சரியவில்லை. மாறாக 1967 தேர்தலில் அவரது கழகம் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக வளர்ந்து நின்றது என்பதை, அண்ணாவின் தனிநபர் ஆளுமையாகப் பார்ப்பதைவிட, அவர் மூலம் நிறைவுபெற முனைந்த தமிழ்த் தேசியத் தேவையின் தீவிரத்துக்கான குறியீடாகப் பார்ப்பதே சரியாயிருக்கும்.
சான்று: 1. திராவிடர் நிலை - அண்ணா, 1945, 2. ‘ Home land ’ - C.N.Annadurai, 09.06.1957, 3. ‘Home land ’ - Editorial, 14.06.1959, 4. ‘ Home land ’ - Editorial, 04.08.1957, 04.08.1957, 5. பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் (தொகுதி 2)