பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?
பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!
பகுதி 3
சுலைமானியின் படுகொலைக்குப் பின்னர் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சார்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய அணிகளுக்கும், எதிரணியின் ரசியா மற்றும் சீனாவுக்கும், ஏன் பக்கத்து நாட்டு பாகிஸ்தான் படைத் தளபதிக்கும் கூட அமெரிக்கச் செயலர் போம்பேயோ தொலைபேசியில் கலந்தாலோசித்தார். ஆனால், எண்ணெய் இறக்குமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடும், மத்திய கிழக்கில் 80 லட்சம் தொழிலாளர்களை வைத்திருக்கும், மத்திய கிழக்கில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் இந்தியப் பொருளாதாரத்தையும், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களையும் நேரடியாகப் பாதிக்கும் நிலையிலும் உள்ள இந்தியாவுடன் தொலைபேச மறந்து விட்டார்.
இந்தக் கொலையின் காரணமாக எண்ணெய் விலை உயர்வு கண்டு இந்திய ரூபாயின் மதிப்பு விழ ஆரம்பித்து விட்டது. நாட்டில் பொருட்களின் விலையேற்றம் கண்டு பணவீக்க விகிதம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே மக்கள் பொருட்களை வாங்க வழியின்றி இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், மேலும் பொருட்களின் விலையேற்றம் என்பது இந்தியப் பொருளாதாரத்தை பெருநோயாளியாக்கி படுத்த படுக்கை ஆக்கிவிடும். அதோடு மத்திய கிழக்கில் ஏற்படும் பதற்றம் அங்குள்ள இந்தியத் தொழிலார்கள் அனுப்பும் பில்லியன் டாலர் அந்நிய செலாவணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அது மேலும் இந்தியப் பொருளாதாரத்தை குற்றுயிரும் குலையுயிருமாக்கி விடும்.
இத்தனைக்கும் இந்தியா, சீனாவைக் கண்காணித்து கட்டுபடுத்தி வைக்க உதவும் அமெரிக்காவின் “முக்கிய ஆசியக் கூட்டாளி” என அறிவித்திருந்தார்கள். இந்த அளவு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும், கூட்டாளியின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் இந்தப் பிரச்சனையில் இந்தியாவைப் புறக்கணித்து, அவர்கள் தனது முக்கிய கூட்டாளியின் நலன்களின் மீதான “அக்கறையைக்” காட்டி இருக்கிறார்கள். அதன்பிறகு, ஈரான் அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்திய பின்பும் கூட எவ்விதத் தொடர்போ, கலந்தாலோசிப்போ நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகவில்லை. அவர்கள் தனது நலனுக்குத் தோதான ஒருவரை “பிரதமராகவும்”, “புதிய தேசப் பிதாவாகவும்” தேர்ந்தெடுத்து நமக்கு அனுப்பினாலும், முக்கிய நிகழ்வுகளின்போது, நமது நலனை மட்டுமல்ல இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தயாராக இல்லை என்பதையே உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். எனில் இந்தியா தன்னை ஒரு பொருட்டாக மதிக்கத்தக்க அளவில் முக்கியமான பொருளாதார, ராணுவ, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இல்லையா? அப்படி இல்லையென்றால் ஏன் அமெரிக்கா, இந்தியாவை முக்கிய கூட்டாளியாக அறிவிக்க வேண்டும்? அப்படி முக்கியத்துவம் இருக்கிறது என்றால் எந்த விதமான முக்கியத்துவத்தை இந்தியா கொண்டிருகிறது? உலக அரங்கில் இந்தியாவின் நிலை என்ன?
எண்ணெய் பணம் வாழ்க்கை
உலகின் இன்றைய அரசியல் நிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதன் மூலம் உலகில் இந்தியாவின் நிலையையும், அதன் இடத்தையும் புரிந்து கொள்ளலாம். உலகின் ஓர் அங்கமான இந்தியாவைத் தனித்துப் பார்க்க இயலாது. உலகத்தை மட்டுமல்ல, நமது வாழ்க்கையையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் இரண்டு விவகாரங்களை புரிந்து கொண்டே ஆக வேண்டும். ஒன்று பணம், இன்னொன்று அதனைக் கொடுத்து வாங்கும் பொருட்களை செய்யத் தேவையான எரிபொருள். இந்த இரண்டில் ஈதாவது ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும், நாம் வாங்கும் காய்கறி அளவிலும், பலசரக்கு சாமான் அளவிலும் கொஞ்சம் குறைத்தோ, இல்லை வாங்காமலோ இருக்க வேண்டி வரும், சமீபத்தில் வெங்காயம் வாங்க முடியாமல் போனது போல.
பணம் என்பது ஒரு பொருளைக் கொடுத்து மறுபொருளை வாங்கப் பயன்படும் ஒரு பரிமாற்ற ஊடகம். பண்டைய காலம் போன்று உப்புக்குப் பதில் நெல் என்ற முறையில் கொடுத்து வாங்க முடியாது. அப்படியே முடிந்தாலும் எப்போதும் எல்லோரும் பொருளை கட்டிக் கொண்டு அலைந்து, தேவையான பொருள் கிடைக்கும் இடம் சென்று வாங்க முடியாது. அதேசமயம் ஒருபடி உப்புக்கு அரைபடி நெல் என்பது போல எல்லாப் பொருளுக்கும் ஒப்பான மற்ற பொருட்கள் எவ்வளவு என நிர்ணயித்து வாங்கி - விற்க முடியாது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, நெல், கம்பு போன்ற தானியங்களை அளக்க பொதுவான படி, அரைப்படி, கால்படி என்பது போல எல்லா பொருட்களுக்கும் இது இத்தனை ரூபாய்கள், அது அத்தனை ரூபாய்கள் என்ற பொதுவான அளவு உருவாக்கப்பட்டது.
ஒரு பொருளை உருவாக்க ஆகும் பொருள், காலம், உழைப்பைப் பொருத்து அதன் மதிப்பு இத்தனை ரூபாய்கள் என நிர்ணயிக்கப்பட்டு, கொடுக்கல் - வாங்கல் (வர்த்தகம்) நடைபெறுகிறது. இது நமக்குள்ளே நடைபெறும் வியாபாரம். அதையே வெளிநாட்டுக்கு விற்று - வாங்க நேர்ந்தால்? அவர்கள் நமது ரூபாயை வைத்து என்ன செய்வார்கள்? நாம்தான் அவர்கள் தினாரை வைத்து என்ன செய்வது? எனில் வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவான ஒரு நாணயம் வேண்டும். அந்த நாணயத்தைக் கொண்டு ஒரு நாட்டில் பொருளை விற்று பிற நாட்டில் பொருளை வாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அந்தப் பொதுவான நாணயத்தில் எல்லாப் பொருட்களின் மதிப்பை நிர்ணயித்தால் உதாரணமாக அரிசி கிலோ 3 டாலர்கள், சமையல் எரிவாயு ஒரு கலன் 25 டாலர்கள் என கணக்கிட்டால் உலகின் எந்த மூலையிலும் அந்தப் பொருளை டாலரில் வாங்கி டாலரில் விற்கலாம். அதையே வெளியூரில் பொருளை வாங்கி உள்ளூரில் விற்கும் போது, அந்த நாணயத்துக்கு நிகரான உள்ளூர் நாணயம் எவ்வளவு என கணக்கிட்டு, உள்ளூர் நாணயத்தில் விற்கலாம். எல்லாம் சரி. எல்லாப் பொருளையும் அந்த நாணயத்தில் மதிப்பிட்டால், அந்த நாணயத்திற்கு எப்படி மதிப்பை நிர்ணயிப்பது? அதற்கு நிகராக ரூபாயின் மதிப்பை எப்படி நிர்ணயிப்பது?
தங்கம்.... உலகில் இது கிடைப்பதும், உருவாகுவதும் அவ்வளவு எளிதல்ல. அதனால் அதற்கு மதிப்பு அதிகம். எனவே தங்கத்தை வைத்து அந்தப் பொதுவான நாணயத்துக்கான மதிப்பை எல்லோரும் கூடி விவாதித்து நிர்ணயித்தார்கள். அதாவது ஒரு கிராம் தங்கத்திருக்கு முப்பது டாலர்கள் என்பது போல. ஒரு டாலருக்கு ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமென்றால், அதே அரிசிக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமோ அதுவே ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் அதிகளவு தங்கத்தை இருப்பாக வைத்திருந்த அமெரிக்கா தனது தங்க இருப்புக்கு நிகராக டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது எனவும், அந்த டாலருக்கு இணையாக மற்ற நாணயங்களின் மதிப்பை கணக்கிடுவது எனவும் முடிவானது. அந்த டாலரை அடிப்படையாக வைத்து உலக வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டாலர் உலகப் பணமாக மாறியது.
எழுபதுகள் வரை இந்த தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட டாலர் வர்த்தக முறை (goldbacked dollar) நடைமுறையில் இருந்தது. பொருட்களைக் கொடுத்து டாலரை வாங்கி வைத்துக் கொண்ட நாடுகள் மற்ற நாட்டிலிருந்து பொருட்களை வாங்க, இந்த டாலரை பயன்படுத்திக் கொண்டார்கள். அதுபோக மீதம் உள்ள டாலரை இருப்பாக வைத்துக் கொண்டார்கள். அதன் பொருள் அதற்கு இணையான தங்கத்தை வைத்திருக்கிறோம் என்பது. தேவைக்கு அதிகமாக இருந்தால் இந்த காகித ரசீதைக் கொடுத்து தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி சென்று கொண்டிருந்த போது, அமெரிக்கா சும்மா இருக்காமல் வரைமுறையின்றி வியட்னாம் உட்பட பல போர்களில் ஈடுபட்டது. அமெரிக்காவின் ராணுவ செலவு அதிகமானது. செலவை ஈடுகட்ட அதிக அளவு டாலரை அச்சடிக்க ஆரம்பித்தது. அதன் பொருள் தன்னிடம் உள்ள தங்கத்தை விட அதிகமான டாலர்கள் உருவாக்கப்பட்டன. இது பித்தலாட்டம் அல்லவா?
நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு ஈட்டிய, தங்களிடம் இருப்பாக உள்ள டாலர் காகிதங்களுக்குப் பதிலாக தங்கத்தைக் கோரின. நெருக்கடி முற்றியது. இறுதியில் இந்த தங்கத்தின் அடிப்படையிலான முறையைக் கைவிடுவதாக 1971ல் அறிவித்தார் அமெரிக்க அதிபர் நிக்சன். தேவையின் அடிப்படையில் மதிப்பை நிர்ணயிக்கும் (Fiat) முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதாவது சந்தையில் பொருட்களை வாங்க, விற்க எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவு பணம் அச்சடித்து வெளியிடப்படும். தேவைக்கு அதிகமாக அடித்தால் பண மதிப்பு குறையும் (பணவீக்கம்), அதிகமாக தக்காளி விளைந்தால் ரூபாய்க்கு ஒரு கிலோ என விற்பதைப் போல. குறைவாக அடித்தால் தேவை அதிகமாக இருப்பதால் மதிப்பு உயரும். வெங்காயம் விலை ஏறியது போல. அப்படி என்றால் பணம் ஊடகம் இல்லை, அதுவும் பொருளா என்று கேட்டால் இல்லை என்று மறுக்க முடியுமா? வெறும் காகிதம் எப்படி பொருளாகும்? அது இல்லையென்றால் பொருள் வாங்கி விற்க முடியாதே! அந்தத் தேவைதான் அதன் மதிப்பு. அப்படியென்றால் மோடி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னாரே, அது எப்படி? அதுவரை செல்லும் என்றும், நம்பலாம் என்றும் சொன்னது யார்? அரசு. அதனால்தானே நம்பினோம்? அப்படி என்றால் நமது நம்பிக்கை இல்லாமல் போனால்? அரசு அது செல்லாது என்று சொன்னால்? அடுத்த நிமிடமே காகிதம்தான்.
அமெரிக்கா தலைமையிலான உலக உருவாக்கம்
சரி அரசு சொல்லி நாமும் நம்பிக்கை வைப்பது போல, ஒரு நாடும் இன்னொரு நாடும் நம்பிக்கை வைத்தால் அவரவர் பணத்திலேயே வர்த்தகம் செய்து கொள்ளலாமே? அப்புறம் எதற்கு டாலர்? அங்குதான் அவர்கள் வைத்தார்கள் செக். அமெரிக்கா சவுதியுடன்ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனி எண்ணெய் வேண்டுமானால் நாங்கள் டாலர் கொடுத்தால்தான் கொடுப்போம் என அறிவிக்கச் சொன்னார்கள்.பொருள் உற்பத்தி செய்ய வேண்டுமானால் எண்ணெய் வேண்டும், எண்ணெய் வேண்டுமானால் டாலர் வேண்டும். எனவே டாலரை உலகப் பணமாக ஏற்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
உள்ளூரில் பணத்தை சேமிக்கவும், ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கவும் வங்கி இருக்கிறது. அதுவே நாடுகளுக்கு இடையில் கொடுத்து வாங்க வேண்டுமென்றால்? அப்படி நிகழ ஒரு பணப்பரிமாற்ற அமைப்பு (swift) உருவாக்கப்பட்டிருந்தது. அதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. எண்ணெயின்றி பணப்பரிமாற்றம் இன்றி எதுவுமில்லை. ஆதலால், வேறுவழி இன்றி நாடுகள் டாலரை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக முறைக்கு முக்கல், முனகலுடன் ஒப்புக் கொண்டன.
உள்ளூரில் தேவை இருப்பதால் ரூபாய்க்கு மதிப்பு இருப்பதை போல, எண்ணெய் வாங்கவும், நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் செய்யவும் டாலர் தேவைப்படுவதால் அதற்கும் மதிப்பு உண்டானது. டாலர் உலகப் பணமாக நிலைநிறுத்தப்பட்டது. முன்பு போலவே எல்லாப் பொருட்களும் டாலரில் விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரிலேயே வர்த்தகம் தொடர்ந்தது.
இப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு தொடர வேண்டுமானால், எல்லா எண்ணெய் விற்பனையும் டாலரிலேயே தொடர வேண்டும். இல்லையென்றால் டாலர் வெறும் காகிதமாகும். கொஞ்ச காலம் இது தொடர்ந்தது. எவ்வளவு காலம் இப்படியே போகும்? உன் டாலருக்கு மட்டும் என்ன கொம்பு முளைத்திருக்கிறதா என்ன? என் பணமும் அதே வேலையைச் செய்யுமே என கேட்காமல் இருப்பார்களா என்ன? கேட்பார்கள். ஆனால் அவர்கள் வாயை மூடி அடக்க வேண்டும்? எப்படி?
பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி மத்திய கிழக்கிலேயே நடைபெறுகிறது. அங்கிருந்து எங்கு எண்ணெயைக் கொண்டு செல்ல வேண்டுமானாலும் கடல் வழியாக கப்பல் மூலமே செல்ல வேண்டும். அப்படி செல்லும் முக்கிய வழிகள் அனைத்திலும் அமெரிக்கா ராணுவ நிலைகளை உருவாக்கியது. அதன் பொருள் அவர்கள் இசைவின்றி எந்தக் கப்பலும் கடந்து செல்ல முடியாது. கடலில் எந்த இடத்திலும் சென்று தாக்கும் வலிமையான விமானம் தாங்கிக் கப்பல்கள், யாரும் கண்டறிய முடியாத எந்த இடத்தையும் சென்று தாக்கும் போர் விமானங்கள், ஒரு வட்டம் போட்டால் அந்த வட்டத்திற்குள் துல்லியமாக வந்து விழுந்து தாக்கும் ஏவுகணைகள் என யாரும் எதிர்க்கத் தயங்கும் வலிமையான ராணுவம் உருவாக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணெய் வளங்கள் உள்ள பெரும்பாலான நாடுகளை ஒப்பந்தம் மூலமோ, மிரட்டியோ, சிஐஏ மூலம் சதிவேலைகள் செய்தோ கட்டுக்குள் கொண்டு வந்தது. தனது நிறுவனங்களே உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்த வைப்பதன் மூலம் எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்தியது. எண்ணெய் வளம், அதன் உற்பத்தி, கொண்டு செல்லும் நீர்வழிப் பாதை, வாங்கும் பணம், அதனைப் பரிமாற்றும் செய்யும் அமைப்பு என எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், திமிற முடியுமா என்ன? திமிறினால் எண்ணெய் கிடைக்காது. உலகின் யாருடனும் எந்தப் பொருளையும் வாங்கி - விற்க முடியாது, வர்த்தகம் நின்று போகும். அதையும் மீறி எவரும் திமிறினால் தனது ராணுவ - அரசியல் - பொருளாதார வலிமையைக் கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்தது அமெரிக்கா.
அதில் எண்ணெய் எரிவாயு வளம் கொண்ட இருநாடுகள் மட்டும் அடங்காமல் திமிறி எதிர்த்து நின்றன. ஒன்று ஈரான் மற்றொன்று சோவியத் ஒன்றிய ரசியா. இசுலாமிய புரட்சிக்குப் பின்னர், எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கி எதிர்த்து நின்ற ஈரானை வழிக்குக் கொண்டு வர ஈராக்கின் சதாமை ஏவி போர்த் தொடுக்க வைத்தது. ஒன்பது ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் ஈரான் வெற்றி பெற்றாலும், அது பொருளாதார ரீதியாக எழுந்து நிற்க முடியாத அளவுக்கு பலவீனமானது.
எழுபதுகளில் ஐரோப்பாவுக்கான ரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி அதிகமாகத் தொடங்கியது. 1980ல் ரசியாவில் இருந்து ஜெர்மனிக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழிக்கு மாற்றாக அதன் கடும் எதிர்ப்பையும் மீறி குழாய் பதித்து நிலவழியாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. ரசியாவை ஆயுதப் போட்டியில் ஈடுபட வைத்தும், 1979ல் அதனை ஆப்கானிஸ்தான் போரில் ஒரு பத்தாண்டுகள் ஈடுபட வைத்தும் அதனை பலவீனமடையச் செய்தது. இறுதியில் 1990ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஆதரவான தொழிலதிபர்கள் ரசியாவில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். இனி எதிர்த்து நிற்க எவரும் இன்றி அமெரிக்கா தலைமையிலான ஒற்றை துருவ உலகம் கட்டமைக்கப்பட்டது (unipolar order).
- சூறாவளி