1920களில் இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்த பேராளுமையாளரான பெரியார் (கள்ளுக் கடை மறியல்) போராட்டத்திற்குத் தலைமை ஏற்றதற்காக கோவை சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். அதிகாரத்தைக் கண்டு அஞ்சிடாமல் உண்மைகளை வெளிப்படுத்திட ஓர் இதழ் தொடங்கிட சிறையிலேயே திட்டமிட்டார். சுயமரியாதை இயக்கத்தின் பேரிகையாகவும் சமூகத் தீமைகளை எதிர்க்கும் போர்க் குரலாகவும் ‘குடிஅரசு’ உதித்தது.
ஒரு நூற்றாண்டுக்கு முன், பெரியார் ஈ.வெ. இராமசாமி கோவை சிறைக் கொட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, “அதிகாரத்திற்கு அஞ்சிடாமல் உண்மைகளை விளம்பு வதற்காக” ஓர் இதழ் வெளியிடச் சிந்தித்தார். அந்தச் சிந்த னையின் செயல்வடிவமாக வெளிவந்த தமிழ்க் கிழமை ஏடான குடிஅரசு, சுயமரியாதை இயக்க பேரிகையாக மட்டுமின்றி, சாதி ஒடுக்குமுறை, பிரித்தானிய குடியேறிகளின் அடக்குமுறை, சமயப் பழமைவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடும் தளமாகவும் திகழ்ந்தது.
1920களில் பெரியார் இந்தியத் தேசியக் காங்கிரசில் பெருந்தகைமையராக விளங்கிய போது, அவர் தலைமையில் போராட்டம் நடத்தியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். நியாயமான கருத்துகளைத் துணிவுடன் வெளிப்படுத்த வலிமையான ஊடகத்தின் தேவை பற்றி, இந்தச் சிறைவாச காலத்தில் அவருடன் சிறையிலிருந்த உடன் போராளியான வ.மு. தங்கபெருமாள் பிள்ளையுடன் கலந்து பேசினார். இந்த எண்ணத்தின் விளைவாகத் தோன்றியதே குடிஅரசு. அது சமூகநீதி மற்றும் பகுத்தறிவுப் போராட்டத்திற்கான முக்கியக் கருவியாயிற்று.பெரியார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் 1923 சனவரி 19 அன்று ‘குடிஅரசு’ என்ற பெயரினை முறைப்படி பதிவு செய்தார். இதனை சா.சு. இளங்கோ “குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் இதழ்
சென்னை பெரியார் திடலில் உள்ள பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும் குடிஅரசு இதழ்களைக் கவனத்துடன் படித்ததில், குடிஅரசு முதல் இதழ் 1925 மே 2ஆம் நாள் (காரிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அத்தொடக்க விழாவில், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்தின் தலைவர் திருவளர் திரு. சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், “உயர்ந் தோர்-தாழ்ந்தோர் மனப்போக்கை ஒழித்திடவும் சமன்மை உணர்வைப் பரப்பவும் பாடுபட்டால் மிகவும் மகிழ்வேன்” என்று பேசினார்.
அவ்விழாவில் பேசிய பெரியார், அச்சத் தினாலோ, ஒரு பக்கச் சாய்வினாலோ நியாயமான கருத்துகளை வெளிப் படுத்தத் தயங்குகின்ற மற்ற இதழ்களின் போக்கைச் சாடினார். முதல் இதழில் அவர் எழுதிய ஆசிரியவுரையில், “நம் தாய் நாடு அரசியல், பொருளியல், சமுதாயவியல் என அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கி ஒளிர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனே குடிஅரசு இதழ் தொடங்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
பெரியாரையும் தங்கபெருமாள் பிள்ளையையும் இணை ஆசிரியர்களாகக் கொண்டு, ஈரோட்டில் இருந்து குடிஅரசு இதழ் வெளியானது. இரண்டாம் இதழிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் என வெளியிடப்பட்டது. ஆனால் 1943 முதல், இதழ் வெளியாகும் நாள் சனிக்கிழமை என மாற்றம் பெற்றது. இதழ் தொடங்கப்பட்ட சில மாதங்களில், காங்கிரசுத் தலைவர் களுக்கும் பெரியாருக்குமிடையிலான முரண்பாடு முற்றியது. எனவே 1925இல் பெரியார் கட்சியை விட்டு வெளியேறினார். அதன்பின், பெரியார் சுயமரியாதை இயக்கப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்; குடிஅரசு இயக்கச் செய்தி ஏடு ஆயிற்று.
தொடக்க ஆண்டுகளில் இதழில் ஆசிரியரின் பெயர் “ஈ.வெ. இராமசாமி நாயக்கர்” என அச்சிடப்பட்டது. 1927 திசம்பர் 18க்குப் பின்பு பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர் நீக்கப்பட்டது.
இதழின் தொடக்க ஆண்டுகளில் பரந்துபட்டக் கருத்துகளைத் தெரிவிக்கும் காட்சிகளைக் கொண்டிருந்தது. மேலட்டையில் பாரதத்தாய், உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இந்து, கிருத்துவம், இசுலாம் பற்றிய சமயக் குறியீடுகள் இடம்பெற்றி ருந்தன. 1926 ஏப்பிரல் முதல் 1927 திசம்பர் வரை ‘மகாத்மா காந்தி வாழ்க’, ‘கதர் வாழ்க’ ஆகிய முழக்கங்களும் மேற் சொன்ன படங்களுடன் இடம்பெற்றிருந்தன. பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வந்த பின்னரும் காந்தியா ருடைய திட்டங்களான கதர் இயக்கம் முதலானவற்றை ஆதரித்து எழுதியதுடன் அவற்றின் சிறப்பினை உணர்த்தும் நூற்பு இராட்டினம் படத்தை இடம்பெறச் செய்தார். அத்துடன் அவை சாற்றும் கருத்தியலை அப்படங்களின் அடியில் இடம்பெற்றிருந்தன.
தொடக்கத்தில் குடிஅரசு இதழின் விலை ஓர் அணா (ரூபாயில் 16இல் ஒரு பங்கு)வில் இருந்து ஒன்றரை அணா வாகவும் பின்னர் இரண்டு அணா எனக் காலப்போக்கில் உயர்த்தப்பட்டது. 1943 அக்டோபர் 30 வரை மகளிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாதி விலையில் குடிஅரசு வழங்கப்பட்டது.
பி.ஆர். அம்பேத்கர், இராபர்ட் கிரீன் இங்கர்சால், பெட்ரண்டு ரசல், ஜார்ஜ் பெர்னார்டு ஷா, காரல் மார்க்சு, பிரெடரிக் எங்கெல்சு, வால்டேர், ஜீன் ஜாக் ரூசோ போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் குடிஅரசு பதிப்பகம் முக்கியப் பங்காற்றியது.
தெளிவான நோக்கங்கள்
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சோசலிசம், நாத்திகம், உழைப்பாளர் நலன், மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய நோக்கங்கள் தெளிவாகவும் உறுதியுடனும் முன்வைக்கப்பட்டன.
சி. இராசகோபாலாச்சாரி, ம. சிங்காரவேலர், கி.ஆ.பெ. விசுவநாதம், திரு.வி. கலியாணசுந்தரனார், மறைமலை அடிகளார், க.ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா), மு. கருணாநிதி (கலைஞர்) ஆகியவர்களும் குடிஅரசு இதழில் எழுதியவர்கள். முதனமையான பெண் செயற்பாட்டாளர் களான மூவலூர் இராமாமிர்தம், குஞ்சிதம் ஆகியோர் குடிஅரசு இதழில் எழுதி வந்ததையும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவுகூர்கிறார். திருக்குறளையும் பாரதியார் பாடல்களை யும் குடிஅரசுப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எழுத்தறிவு பெற்ற மக்கள் ஏழு விழுக்காடாக இருந்த அக்காலத்தில் பெரியார் முற்போக்கான கருத்துகள் பலவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
நாகை காளியப்பன் உள்ளிட்ட பெரியாரின் தோழர்கள் மலேசியா சென்று அங்குள்ள தமிழர்களிடம் குடிஅரசு இதழுக்கு உறுப்பினர் கட்டணங்கள் (சந்தாக்கள்) திரட்டிக் கொண்டு வந்தனர் என்பதையும் திரு. இராசேந்திரன் தெரிவிக்கிறார். மார்க்சு-எங்கெல்சு எழுதி வெளியிட்ட பொதுவுடைமைக் கட்சி அறிக்கையையும் சோவியத்து ஒன்றியத்தின் அய்ந்தோண்டு திட்டத்தையும் பெரியார் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’ நூலை இந்திய மொழிகளில் முதலாவதாகத் தமிழில் குடிஅரசு இதழில் வெளியிடப்பட்டது.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
1935 சனவரி 13 நாளிட்ட இதழில் அறிமுகம் செய்யப் பட்ட சீர்திருத்திய தமிழ் எழுத்துகளை (15) குடிஅரசு அப்போதிருந்தே பின்பற்றி வந்தது. அவ்விதழின் துணிவான கருத்துகள் காரணமாக அதிகார வர்க்கத்துடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. 1933 திசம்பர் 30 இதழில் “இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?” என்று தலைப்பிடப் பட்ட ஆசிரியவுரை எழுதியமைக்காகப் பெரியார் கைது செய்யப்பட்டார் (ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது). இதழின் வெளியீட்டாளர் என்பதற்காகப் பெரியாரின் தங்கை கண்ணம்மாள் கூட சிறைப்படுத்தப் பட்டார்.
குடிஅரசு இதழ் குறுகிய காலம் (19.11.1933 இதழுக்குப் பின் 12.01.1935 வரை) தடை செய்யப்பட்டிருந்தது. மீண்டும் 13.01.1935 முதல் தொடர்ந்து வெளியிடப்பட்டது. குடிஅரசு தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் பெரியார் 26.11.1933 முதல் ‘புரட்சி’ கிழமை இதழும் (அதுவும் 17.06.1934 முதல் நிறுத்தப்பட்டதால்) 26.08.1934 முதல் ‘பகுத்தறிவு’ இதழும் வெளியிட்டார். அதன்பின் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941, 1942 ஆண்டுகளில் இதழ் நீண்டகாலம் நிறுத்தப்பட்டு, பின்னர் வெளியிடப்பட்டது. சுமார் 24 ஆண்டுகள் வெளிவந்து கொண்டிருந்த குடிஅரசு 1949 நவம்பர் 05 இதழுடன் விடைபெற்றுக் கொண்டது.
(06.06.2025 நாளிட்ட The Hindu ஏட்டில் வெளியான கட்டுரை)
தமிழாக்கம் : சா. குப்பன்