மார்க்சியப் பெரியாரியல் அறிஞரும் சிறந்த திறவினை யாளருமான வே.ஆனைமுத்து 21.06.1925இல் பெரம்பலூர் மாவட்டத்தில் முருக்கன்குடி எனும் சிற்றூரில் பிறந்தார். 96 ஆண்டுகள் வாழ்ந்து 06.04.2021 அன்று மறைந்த அவருக்கு 2025 நூற்றாண்டு ஆகும். அவர் தம் அகவை 23 முதல் எழுதியவை 1948இலிருந்து திராவிட நாடு, பல்லவ நாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் வெளி யாயின. அவர் தம் அகவை 25இல் ந. கணபதியுடன் இணைந்து, அவ்விருவர் முதலீட்டில் ‘குறள்மலர்’ எனும் கிழமை இதழை 1950இல் தொடங்கினர். அவ்விதழுக்குக் கடலூர் திருக்குறளார் வீ. முனிசாமி ஆசிரியராகவும் வே. ஆனைமுத்து துணை ஆசிரியராகவும் விளங்கினர். அவ் விதழில் வே. ஆனைமுத்து, கட்டுரைகள் பல தொடர்ந்து எழுதினார். வே.ஆனைமுத்து தம் வாழ்நாளில் 70 ஆண்டுக் காலத்தில் எழுதியவை ஏராளம்.

v aanaimuthu book on thesiya ina viduthalaiவே. ஆனைமுத்து பல்வேறு காலக்கட்டங்களில் தேசிய இனங்களின் விடுதலை, தமிழ்த்தேசத் தன்னுரிமை பற்றி எழுதிய 47 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ள “தேசிய இன விடுதலை” எனும் நூல், ‘திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ என்ற பெயரில் 2012இல் வெளியிடப்பட்ட 15 நூல்களுள் ஒன்றாகும். அந்நூலில் பொதிந்துள்ள கருத்து களின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.

15.08.1947இல் பிரித்தானியர் ஆளும் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்படைத்து வெளியேறிய போது 48 விழுக்காடு நிலப்பரப்பு 565 மன்னர்கள் ஆட்சியின்கீழ் இருந்தது. 40 விழுக்காடு பரப்பு ­552 மன்னர்கள் ஆட்சிப் பகுதிகள் இந்தியாவுடனும் 13 மன்னராட்சிப் பகுதிகள் பாகிஸ்தானுடனும் இணைந்தன. காசுமீரம் 27.10.1947இல் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைந்தது. அய்தராபாத் மன்னராட்சிப் பகுதி 17.9.1948இல் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப் பட்டது. (பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக இருந்த 60 விழுக்காடு பரப்பு, அவற்றை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுடன் போர்களின் மூலம் 1700-1800க்கு இடையில் சிறுகச் சிறுக பிரித்தானியர் கைப்பற்றினர். 40 விழுக்காடு நிலப்பரப்பை ஆண்ட மன்னர்கள் பிரித்தானியருக்கு அடிபணிந்தும், சமாதான உடன்படிக்கைகள் மூலம் அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து-கட்டுப்பட்டும் மன்னர்களாக நீடித்தனர்).

1934 மே மாதத்தில் பாட்னாவில் கூடிய இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானம் இயற்றப்பட்டது.

“இந்தியத் தேசியக் காங்கிரசு, இந்தியாவிற்கு விடுதலை பெற்றிடுவதற்காகப் பாடுபடுகிறது. இந்தியத் தேசியக் காங்கிரசு சுதந்திர நாட்டில், வெளியார் தலையீடு இல்லாமல், வயது வந்த அனை வருக்கும் வாக்குரிமையளித்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய அவை மூலமாக இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ளும்.”

1939 நவம்பர் காங்கிரசுத் தீர்மானமும் 1945 சாப்ரு குழுவின் அறிக்கையிலும் மேற்காணும் கருத்தே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

1938இல் திரிபுராவில் சுபாஷ் சந்திர போசு தலைமையில் நடந்த காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், “உண்மையான கூட்டாட்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், சனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் அடங்கியதாகவும், சம அந்தஸ்தும் சம வாய்ப்பும் உள்ள சுதந்திரப் பிரதேசங்கள் ஒன்று சேர்ந்த தாகவும் கூட்டாட்சி இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

காந்தியடிகள் “மாநிலங்கள் விரும்பி விட்டுக் கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே நடுவண் கூட்டாட்சி அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். மற்ற வகையில் ஒவ்வொரு மாநிலமும் சுதந்திர அந்தஸ்துடன் விளங்க வேண்டும்” என்கிற கருத்தைக் கூறியிருந்தார்.

ஆனால் நடந்தது என்ன?

15.08.1947இல் அரசுரிமை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான அவை 09.12.1946இல் கூடியது. அதாவது அதிகாரம் கைமாற்றப்படுவதற்கு 250 நாள்கள் முன்னதாகக் கூடியது எப்படி?

09.12.1946இல் கூடிய போது அரசமைப்புச் சட்ட யாப்பு அவையில் மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். 18.07.1947இல் பிரத்தானிய நாடாளுமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளின் பிரிவினைச் சட்டம் நிறைவேறியது. இதனால் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 90 உறுப்பினர்கள் கழிந்தனர்.

9 மாகாணச் சட்டமன்றங்களுக்கு 1946இல் நடந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் அரசமைப்புச் சட்ட யாப்பு அவைக்கு வந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 229. 552 மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்த போதிலும், 29 மன்னர்கள் சார்பாக மட்டும் அரசமைப்புச் சட்ட யாப்பு அவைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 பேர்கள் ஆவர். 14.08.1947 அன்று கூடிய போது அவையின் மொத்த உறுப்பினர்கள் 299 (229 + 70).

மேலே கண்டுள்ள 229 உறுப்பினர்கள் 1946இல் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்றத் தேர்தலில், வயது வந்த (அகவை 21 நிறைவடைந்த)வர்களுள் வரி செலுத்துவோர், குறிப்பிட்ட அளவு சொத்துடையோர் என 14 விழுக்காட்டினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்களாக வாக்களித்தனர்.

இப்படி அமைந்த அவையில் 1949 நவம்பர் 26 அன்று நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டப்படி தான் 26.01.1950 முதல் இன்று வரை அரசின் உறுப்புகள் இயங்கி வருகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவில் ‘இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்’ என்று கூறப்பட்டுள்ளதன்றி, அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘கூட்டாட்சி’ என்ற சொல் இடம்பெறவே இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும் “இறையாண்மை கொண்ட சோசலிச, மதச் சார்பற்ற சனநாயகக் குடியரசு” என்று தான் உள்ளதே தவிர, ‘கூட்டாட்சி’ என்ற சொல் இடம்பெறவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாம் அட்டவணையின்கீழ் பட்டியல் 1 -ஒன்றிய அதிகாரங்கள் 97 பொருள்களும், பட்டியல் 2 - மாநிலங்களின் அதிகாரங்கள் 61 பொருள்களும், பட்டியல் 3-ஒத்திசைவு (பொது) அதிகாரங்கள் 47 பொருள் களும் பிரிவு 248 எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசுக்கு எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரிவு 249இல் மாநில அரசுகளின் அதிகாரத்தின்கீழ் உள்ள பொருள்கள் தொடர்பிலும் தேவை எனின் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

1976 நெருக்கடி நிலையின் போது அரசமைப்புச் சட்டத்தில் 42ஆம் திருத்தத்தின் மூலம் பட்டியல் 2 மாநிலங் களின் அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வி, காடுகள், வன விலங்கு-பறவைகள் பாதுகாப்பு ஆகியன பட்டியல் 3 ஒத்திசைவு (பொது) அதிகாரங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

1935இல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ‘இந்திய அரசாங்கச் சட்டம்’ (Government of India Act - 1935) கூட “அனைத்திந்திய மாகாணங்கள் மற்றும் மன்னர்களின் கூட்டமைப்பு” என்று கூறியது. அதில் மாகாணங்கள் தன்னாட்சி அலகுகளாக இயங்க வகை செய்யப்பட்டிருந்தது.

பிரித்தானியர் ஆட்சியில் இருந்த மாகாணத் தன்னாட்சி அளவிற்குக் கூட விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்குத் தன்னாட்சித் தன்னுரிமைகள் வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றம் விரும்பினால் சட்டம் இயற்றுவதன் மூலம் புதிய மாநிலங்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளையோ, எல்லைகளையோ, பெயர்களையோ மாற்றலாம் என அரசமைப்புச் சட்டப் பிரிவு 3 கூறுகிறது.

1947 ஆகஸ்டில் 13 மாநிலங்களே இருந்தன. இப்போது 28 மாநிலங்களும் 9 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ளன. தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திரப்பிரதேசம் தனி மாநிலமாக்கிட வேண்டும் என்பதற்காக பொட்டி சிறீராமுலு என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர் துறந்த பின்னரே 01.10.1953இல் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. எஞ்சிய சென்னை மாகாணம் 01.11.1956இல் தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் என மொழிவழி பிரிக்கப்பட்டன. மராத்தி மொழிப் பேசும் மக்கள் வாழிடங்கள் தனியாக மகாராட்டிர மாநிலம் அமைக்கப்படக் கோரியப் போராட்டத்தில் 107 பேர் உயிர் துறந்தனர். அதன் பின்னரே 01.05.1960இல் பம்பாய் மாகாணம் மகாராட்டிரம், குசராத்து என மொழிவழி மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன. மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா ஆகியவை மொழிவழியாக நான்கு மாநிலங்களாக 20.01.1972இல் பிரிக்கப்பட்டன.

31.10.2019இல் ஜம்மு-காசுமீரத்திற்கு தனி உரிமை அளிக்கப்பட்டிருந்த அரசமைப்புப் பிரிவு 370 நீக்கப்பட்டதுடன் ஜம்மு-காசுமீரமும் லடாக்கும் இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாக்கப்பட்டன என்பது தனி வரலாறு ஆகும்.

மேற்கூறிய வரலாற்று அடிப்படையில் தேசியம் என்றால் என்ன? ஏன் வேண்டும் தமிழ்த் தேசத் தன்னுரிமை (Autonomous Tamilnadu) அல்லது சுயநிர்ணய உரிமை உடைய தமிழ்நாடு என்பதை அறிதல் வேண்டும்.

தேசிய அடையாளத்தின் தோற்றம்

அய்ரோப்பா கண்டத்தில் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவுப் புரட்சி, அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, அரசியல் விழிப்புணர்ச்சி, தேசம்-மொழி பற்றிய கருத்துரு வாக்கம், மரபு வழி பண்பாட்டுணர்ச்சி, பகுத்தாய்தல் ­பன்முகச் சிந்தனை மலர்ச்சி ஆகியவை மக்களுக்குப் புத்தெழுச்சியை உருவாக்கியது. 1760-1840 காலக்கட்டத்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக புதிய பொருளுற் பத்தித் தொழிற்சாலைகள் உருவானதால் புதிதாக தொழில் முதலாளி வகுப்புத் தோன்றியது. தொழிலாளர் வகுப்பும் தோன்றியது.

1789இல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதனையொட்டி பிரெஞ்சு மக்களுக்குத் தேசியம் என்ற கோட்பாடு முகிழ்த்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பே அய்ரோப்பாவில் டச்சு மொழி-இன மக்கள் மொழி அடிப் படையில் 1581இல் நெதர்லாந்து என்ற தனி நாட்டை உருவாக்கினர். நெதர்லாந்தின் இப்போதைய மக்கள் தொகை 1.83 கோடி ஆகும்.

பல ஆட்சிப் பகுதிகளாக இருந்த இத்தாலி, மொழி அடிப்படையில் 1859-1870இல் ஒரு நாடாக உருவானது. இத்தாலியின் இப்போதைய மக்கள் தொகை 5.91 கோடி. 25 ஆட்சிப் பகுதிகளாக இருந்த செருமனி, மொழி அடிப்படையில் 1866-1871இல் ஒரே நாடாக உருவாயிற்று. முதலாளியப் பொருளுற்பத்தியின் உந்துவிசையால் சமூகம், அரசியல் தற்சார்பு, மொழி, வரலாறு, பொது நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனி நாடுகள் அய்ரோப்பாவில் அமைந்தன. இப்போது 74.4 கோடி மக்கள் தொகைக் கொண்ட அய்ரோப்பா கண்டத்தில் உள்ள 44 நாடுகள் அய்க்கிய நாடுகள் அவையில் உறுப்புகளாக உள்ளன. இவற்றுள் 27 நாடுகள் இணைந்து ‘அய்ரோப்பிய ஒன்றியம்’ என்ற அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக 01.11.1993 முதல் செயல்படுகிறது.

பிரிட்டனுடன் இருந்த தெற்கு அயர்லாந்து 1922இல் ஓர் உடன்படிக்கையின் மூலம் தனி குடியரசு நாடாகி உள்ளது. அயர்லாந்தின் இப்போதைய மக்கள் தொகை 53 இலட்சம் ஆகும்.

இரஷ்யாவில் சோசலிச புரட்சியை வழிநடத்தியத் தலைவர் வி.அய். இலெனின் 1912இல் அவரவர் பேசும் மொழி அடிப்படையில் மொழிவழி குடியரசுகள் ஏற்படுத்தப் படும் என்றும் அவ்வப் பகுதியின் மொழியே ஆட்சி மொழியாக ஆக்கப்படும் என்ற நம்பிக்கையை அம்மக்களுக்கு உண்டாக்கினார். அதேபோல புரட்சி வெற்றியடைந்த பின் 1917-1922க்கு இடையில் 15 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் தத்தம் மொழியின் அடிப்படையில் தனித்தனி குடியரசுகளைப் பெற்று, 1922 முதல் 1991 வரை “சோவியத்து சோசலிச குடியரசுகள் ஒன்றியம்” என்ற கூட்டாட்சியாக விளங்கியது. 1991 இறுதியில் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து விட்டன. மொழி அடிப்படையில் 16.12.1971 பாகிஸ்தானி லிருந்த ‘வங்க தேசம்’ தனி நாடாயிற்று.

தமிழ்த் தேசம் -தமிழ்த் தேசியம்

1.          ஒரு பொது மொழி.

2.          அம்மொழிப் பேசப்படும் தொடர்ச்சியான வாழ்விடப் பரப்பு.

3.          அதற்குரிய நெடுங்கால வரலாறு.

4.          அந்த வரலாற்று வழி உருவாகும் பண்பாட்டு அடிப் படையில் மக்களுக்குள் வளரும் பொதுவான உளவியல்.

இந்த நான்கும் அமையப்பெற்ற மக்கள் சமுதாயத் தையே தேசம் - தேசிய இனம் என்று வரையறுக்கின்றோம்.

2500 ஆண்டுகளுக்கு முந்திய நூலான தொல்காப்பியத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் நாடு என்பதைக் குறிப்பதாகும்.

‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். 1908இல் பண்டித அயோத்தி தாசர் ‘தமிழன்’ என்ற பெயரில் இதழ் நடத்தினார். 1905இல் தஞ்சை உலகநாதம் பிள்ளை ‘தமிழகம்’ என்ற இதழ் நடத்தியுள்ளார்.

1920 முதல் சென்னை மாகாணத்தில் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சி, மொழி வழியில் ‘தமிழ்நாடு பிரதேச காங்கிரசுக் கமிட்டி’, ‘ஆந்திரப் பிரதேச காங்கிரசுக் கமிட்டி’, ‘கேரள காங்கிரசு கமிட்டி’ என இயங்கியுள்ளன. சென்னை மாகாண காங்கிரசுக் கமிட்டி என செயல்படவில்லை. 1928இல் மோதிலால் நேரு தலைமையிலான குழுவும் மொழிவழி மாகாணங்கள் அமைய வேண்டும் எனக் கூறியது. 1925 முதல் 1946 வரை இந்தியப் பொது வுடைமைக் கட்சி மொழிவழி தேசிய இனங்கள் இருப்பதை ஏற்றிருந்தது. அதன்பின் அதனைப் புறந்தள்ளிவிட்டது என வே. ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார்.

1938இல் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்த போராட்டத்தின் போது 11.09.1938 அன்று சென்னை கடற்கரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என அறிவித்தார்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மகளிர் -கைக் குழந்தையுடன் சிறை சென்ற பெண்கள் என மொத்தம் 1,198 பேர் ஏற்ற சிறை வாழ்க்கையும் அப்போது சிறையில் நடராசன், தாலமுத்து மாண்டதும் தமிழர்களிடையே தாய்மொழி உணர்வும் தமிழர் என்ற ஓர்மை உணர்வும் பெருகக் காரணமாயிற்று. மீண்டும் 1965இல் ஏற்பட்ட இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரானப் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையினாலும் துப்பாக்கிச் சூட்டிலும் இரு நூற்றுக் கும் மேற்பட்டத் தமிழர்கள் கொல்லப்பட்டதும் ஆயிரக் கணக்கானத் தமிழர்கள் சிறைப்படுத்தப்பட்டதும் தமிழ்­தமிழர் - தமிழ்நாடு என்ற பேருணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசு மாநிலங்கள் செயல்படுவதற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளைக் காலந்தோறும் உருவாக்கி வருகிறது. அதிகாரங்கள் ஒன்றியத்தில் குவிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என ஒற்றை ஆட்சி முறையை நோக்கிய இந்திய வல்லாட்சியின் போக்கினால் தேசிய இனங்களின் எழுச்சித் தடுக்க முடியாததாக உருவெடுக்கின்றது. தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க தேசிய இன உணர்வும் தூண்டப்படுகிறது.

தமிழ்த் தேசிய இன எழுச்சி என்பது ஒற்றைக் கூறு கொண்டதாக இல்லாமல் சாதி ஒழிப்பு, முதலாளிய எதிர்ப்பு, சமானியச் சமுதாய அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முகத் தன்மை கொண்டதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ‘இந்தியத் தேசியம்’ என்ற பார்ப்பனிய-முதலாளியப் பொய்க் கட்டுமானத்தை தகர்த்திட வேண்டும்.

‘இந்தியா ஒரு நேஷனா?’ என்ற வினாவை பெரியார் 1930இல் எழுப்பி, ‘பல நேஷன்களைக் கொண்ட துணைக் கண்டம்’ என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தேசிய மறுமலர்ச்சிக்கு வருண-சாதியமைப்பு என்னும் தளையை அறுத்தெறிவது தேவையாகின்றது. சமூக நீதிப் போராட்டமும் மொழிவழித் தேசிய எழுச்சியும் ஒரு முனையில் சேர்த்ததில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு தான் முதலாவது ஆகும். காரணம் பெரியார்­ - பெரியாரின் கொள்கைகள்.

“தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை தமிழன்­தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத் தன்மையிலிருந்து, அடிமைக் குடியாய் இருப்பதிலிருந்து கடுகளவும் மாற்றமடைய முடியாது” என 1960இலும் 17.9.1973இலும் பெரியார் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தேசியம் என்பது இந்துத் தேசியமாக ­வல்லாண்மையாக - ஒற்றைக் கலாச்சாரமாக்கும் முயற்சி களை முறியடித்தாக வேண்டும். சனநாயகம் என்ற பெயராலேயே சனநாயகத்தை ஒழிக்கும் முயற்சியையும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயராலேயே தமிழர் ஓர்மைக்கு எதிராக உள்ள சாதியத்தை வளர்க்கும். தமிழ்த் தேசியத்தை அழிக்கும் முயற்சிகளையும் புறங்கண்டாக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒவ்வொரு அரசியல் கட்சி யிலேயும் இந்து கலாச்சார உணர்வை உட்புகுத்தி முற்போக்கு உருவாவதைத் தடுத்து வருகின்றது.

தாங்களே விரும்பி ஒன்று சேருகிற தேசிய இனவழிப்பட்ட சோசலிச (சமதரும) குடியரசுகள் (மாநிலங்கள்) ஒருங்கிணைந்த - உண்மையான ஒரு கூட்டாட்சியினை இந்தியாவில் காண்பது என்கிற குறிக்கோள் நெடுந்தொலைவில் இருக்கிற ஒன்றே ஆகும்.

இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருப்பது பார்ப்பனியம். பார்ப்பனியம் வீட்டு வாழ்க்கை, சமய வாழ்க்கை, சமுதாயம் ஆகிய துறைகளில் ஆதிக்கம் பெற்றுள்ளதோடு கல்வி, அரசு நிர்வாகம், நில உடைமை அமைப்பு என எல்லாவற்றிலும் பார்ப்பனிய முறையை ஒழிக்கும் நோக்கில் போராட வேண்டும்.

தமிழ்நாட்டிற்குத் தன்னுரிமை என்பது ஓர் அரசியல் கருத்தியலும் குறிக்கோளும் ஆகும். இக்குறிக்கோளை அடைந்திட தொடர்ந்து போராடுவோம்!

- சா. குப்பன்