பணம் இருந்தால் யாரும் இங்கே அரசியல் கட்சி தொடங்கலாம். கொள்கை வேண்டாமா? ‘ராஜரிஷிகள்’ காத்திருக்கிறார்கள், வேலையில்லாமல்! அவர்கள் தருவார்கள்.

ஆங்கிலத்தில், பார் தி பீப்பிள், பைதி பீப்பிள், ஆஃப் தி பீப்பிள் என்று மூன்றுக்கு மேல் முழங்க முடியாது. தமிழில் வேற்றுமை உருபு அதிகம். மக்கள், மக்களை, மக்களால், மக்களுக்கு, மக்களிலிருந்து, மக்களினுடைய, மக்களில், மக்களே என்று மக்களை முன்னிறுத்தத் தெரிந்தால் போதும்.

Vijaykanthநடிகர் விஜயகாந்தும் ‘மக்களை’ நம்பி அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். பரவலாக அறியப்பட்ட பிரமுகராகப் பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த் கட்சியில் இப்போது இணைந்திருக்கிறார். மேலும் சில ‘அறிவுஜீவி’கள் என்று நம்பப்படுகிற ஆசாமிகள் நேரம் பார்த்து இணையக்கூடும். வலம்புரிஜான், சுப்பு போன்ற எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

கட்சி ஆரம்பிப்பது என்று சில ஆண்டுகளாகவே தீவிரமாக அலசி ஆய்ந்து முடிவெடுத்த விஜயகாந்துக்கு எந்தச் சோதிடன் ஆலோசனை தந்தானோ, ‘தேசிய முற்போக்குத் திராவிட கழகம்’ என்று தன் கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். நாய்க்குட்டிக்குப் பெயர் சூட்டுவதாயிருந்தால் கூட அதில் ஏதோ ஓர் ஆசை, அபிப்பிராயம், நோக்கம் இருக்கும். கட்சிக்குப் பெயர் சூட்டும்போது, விஜயகாந்த்தும் பலவிதமாக யோசித்தே இருப்பார். ஆனால், ‘தேசிய முற்போக்குத் திராவிட கழகம்’ என்று இந்தப் பெயரை அவர் எப்படித் தேர்ந்தெடுத்தார்.

தேசியம் என்றால் என்ன?

முற்போக்கு என்றால் என்ன?

திராவிட கழகம் என்றால் என்ன?

விஜயகாந்த்தின் தேசியம் எது?

தமிழ்த் தேசியமா?

சாதுரியம் மிகுந்தோர்க்குக் கைகொடுக்கும் இந்திய தேசியமா?

முற்போக்கு என்பது கருத்தியலில் நாத்திகம், பகுத்தறிவு, பொருள்முதல்வாதம், வரலாற்று இயக்கவியல் கொள்கைகளைச் சார்ந்திருப்பது.

இவற்றை விஜயகாந்த்தால் ஏற்க முடியுமா? முதலில் தனது நெற்றியையாவது சுத்தப்படுத்தட்டும்.

அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் தனியுடைமைக்கு எதிராக நிற்பது முற்போக்கு, விஜயகாந்துக்கு இதில் உடன்பாடு உண்டா?

தொழிலாளி வர்க்க விடுதலையின் மூலம் வர்க்க பேதங்களை ஒழித்து, விஞ்ஞான சோஷலிசத்தை நோக்கி நடைபோடுவது முற்போக்கு. விஜயகாந்துக்கு இதில் ஆர்வமுண்டா?

‘ஆம்’, என்றால் நிதி ஆதாரங்கள் தூர்ந்து விடும். திருவிழாக் கூட்டம் ஓய்ந்து விடும். சரி, ‘திராவிட கழகம்’ எதற்கு? அது அவருக்கு ஒத்து வருமா? திராவிடம் (ர்) என்பது ஆரிய எதிர்ப்பின் முத்திரை. ஆரிய எதிர்ப்பென்பது மனுதர்மம் சாய்ப்பது; பாசிசம் ஒழிப்பது. இவையெல்லாம் அவருக்கு இசைவானவையா?

‘மொழியால் நான் தெலுங்கன். அதனால் திராவிடம் என்பது எனக்கு வசதியானது’ என்று கருதித் திராவிடத்தைத் தேர்ந்தெடுத்தாரா? இன்று ஒரு தெலுங்கனோ, கன்னடியனோ, மலையாளியோ தன்னைத் திராவிடன் என்று சொல்லத் துணிவதில்லை. ஏனென்றால், இவர்களெல்லாரும் ஆரியத்துடன் சமரசம் செய்து கொண்டவர்கள். மானமும் அறிவும் பெற்ற தமிழ் மக்களே தம்மைத் திராவிடர் என்று அறிவிக்கிறார்கள். எல்லா இந்திய மொழிகளும் சம்ஸ்கிருதத்துடன் கலந்து தனித்துவம் இழந்துவிட்டன. 

தமிழ் மாத்திரமே தனித்ததோர் செம்மொழியாக நிற்க முடியும் என்கிற பெருமிதம் வாய்ந்தது. செம்மொழி என்பதற்கு முதல் அளவீடும் நிபந்தனையும் அந்த மொழி பிறமொழிக் கலப்பில்லாமலும் தனித்தும் ஒளிர முடியுமா என்பதற்கான பதில்தான். தமிழ் தனித்து நிற்பதால் தான் ஆரியவயப்பட்ட அத்தனைபேரும் திராவிட இயக்கம் என்பதன் சரியான பொருளைப் புரிந்து கொண்டு பாய்கிறார்கள்.

திராவிடம் என்பது பொய், ஏமாற்று, விஞ்ஞானக் கேடானது என்று கூச்சலிடும் புலமைப் பகட்டர்களுக்குப் புரியாது. ராஜகோபாலாச்சாரி, சோ, குருமூர்த்தி போன்ற ‘திராவிடப் பகைவர்’களைக் கேட்டால் தெரியும், ‘திராவிடம்’ என்பது எத்தனை கசப்பானது; ஆபத்தானது என்று. பார்ப்பன எதிர்ப்பின் பகிரங்க அறிவிப்புத்தான் திராவிடன்(ம்) என்பது. விஜயகாந்த்துக்கு இதிலே விருப்பம் உண்டா?

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்கூட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள்தானே! அதுவும் திராவிடக் கட்சி தானே? என்று விஜயகாந்த் கேட்கலாம். அது திராவிடக் கட்சி என்றோ, பெரியாரிய மார்க்சியக் கருத்துக்களின் வழி நிற்பதே எமது இலட்சியம் என்றோ என்றேனும் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அறிவித்ததுண்டா?

அண்ணா திமுக என்று தான் அவர்கள் சொன்னார்கள். யார் இல்லை என்றது? அண்ணா எப்போதும் தி.மு.க.தான். மற்றவர்கள்தான், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் தான் எம்.ஜி.ஆர். கட்சியைத் திராவிடக் கட்சி என்று பேசி எழுதி வருகிறார்கள்.

Vijaykanthகலைஞர் மொழியில் சொல்வதானால், ‘நீதிக்கு எதிர்ச்சொல் அநீதி; சுத்தத்திற்கு எதிர்ச்சொல் அசுத்தம்; அதுபோல் தி.மு.க.விற்கு எதிர்ச்சொல் அதிமுக’. புரட்சியாளர்கள் உயிரோடு இருக்கும் நாட்களில் சமூக மாறுதலை விரும்பாத ஆதிக்க சக்திகளும் பழமைவாதிகளும், புரட்சியாளர்களின் கருத்துகளை மாத்திரமல்லாது அவர்களது உயிரையும் வேட்டையாடுகிறார்கள்.

அவதூறுகள், தண்டனைகள், சிறைச்சாலைகள், நச்சுக் கோப்பைகள், நாடு கடத்தல்கள், தூக்கு மேடைகள், பட்டினிக் கொடுமைகள் என்று அந்தப் புரட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், அந்தப் புரட்சியாளர்கள் மறைந்த பிறகு, விசித்திரமும் வேதனையுமான திருப்பங்கள் ஏற்படுகின்றன. புரட்சியாளர்கள் அபாயகரமற்ற வழிபாட்டுப் படங்களாக மாற்றப்படுகிறார்கள். எதிர்ப்பாளர்களோ தீவிர பக்தர்களாகிறார்கள்.

பக்தி வேடதாரிகள் உரக்க எழுப்பும் ஆராதனைப் பாடல்களால் வரலாறு, தத்துவம் எல்லாமே குழப்பத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. எதிர்ப்பாளர்களின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் போதனைகளிலிருந்து அவற்றின் சாரப் பொருளைக் களைந்து பதனப்படுத்துவது தான். மன்னர்களின் மணிமுடிகளில் சிலுவை ஏறியது இப்படித்தான்.

மார்க்சுக்கும் அதுவே நேர்ந்தது. அவர் வாழ்ந்த நாட்களில் மனிதரில் மிகச் சிறியவராகக் கூட அவரை மதிக்க மறுத்தவர்கள், அவர் இறந்த பிறகு ‘தெய்வங்களில்’ மிகப்பெரிய தெய்வம் என்றார்கள். புதிய புதிய பெயர்களில் மார்க்சியர்கள் வந்தார்கள். அவர்களது நோக்கம் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துவதுதான். அதைப் பதனப்படுத்துவதுதான். அப்படிச் செய்து விட்டால், ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்த் துடிப்பும், போர்க் குணமும் மிகுந்த தத்துவத்தை ஒரு பொழுதுபோக்குப் பொருளாக மாற்றிவிடலாம். இப்பொழுது அவர்கள் அதை ரசிக்கலாம். அதன் மீது சவாரி செய்யலாம். முடிந்தால் அதைத் தமக்குத் தொண்டூழியனாக மாற்றலாம்.

கடந்த கால வரலாற்றில் புரட்சிகரச் சிந்தனையாளர்களுக்கும் தத்துவங்களுக்கும் என்ன நேர்ந்ததோ அதுவே தான் இன்று திராவிட இயக்கத்துக்கும், தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒதுக்கப்பட்டோராய், ஒடுக்கப்பட்டோராய், சூத்திரராய், பஞ்சமராய் - அடிமைத்தனத்திலும் அந்த காரத்திலும் வீழ்த்தப்பட்ட தமிழினத்தின் விடுதலை இயக்கமே திராவிட இயக்கம்.

இந்த இயக்கத்தின் எதிரிகளெல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வாழ்ந்த நாட்களில் அவர்களை இழிவு செய்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள். ‘வேட்டை’யாடினார்கள். அந்தப் புரட்சியாளர்கள் மறைந்த பிறகு, அபாயகரமற்ற வழிபாட்டுப் படங்களாகவும் தெய்வங்களாகவும் மாற்றி வருகிறார்கள். ஆரியமும் அதன் அடிமைகளும் அய்யாவுக்கும் அண்ணாவுக்கும் தீவிர பக்தர்களாக மாறியிருக்கிறார்கள். அய்யா மீதும் அண்ணா மீதும் இத்தனை பாசம், இத்தனை பற்று எப்படி வந்தது இத்தனை பேருக்கு?

ஆம்; அதைக் கொச்சைப்படுத்த வேண்டும்.
ஆம்; அதைப் பதனப்படுத்த வேண்டும்.
ஆம்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்த்துடிப்பும் போர்க்குணமும் மிகுந்த தத்துவத்தை ஒரு பொழுது போக்குப் பொருளாக மாற்ற வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், அதை ரசிக்கலாம்; அதன் மீது சவாரி செய்யலாம்; முடிந்தால் அதைத் தமக்குத் தொண்டூழியனாக்கலாம்.

இந்தியா முழுவதும் அறிஞர் அண்ணாவுக்கு விழா எடுக்க வேண்டும் என்று ‘வாஜ்பேயி’ பேசியது அண்ணா மீது கொண்ட பற்றா? பாசமா? இல்லை; பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடுக்கும் புதிய போர்த் தந்திரம் இது. விஜயகாந்துக்கு இந்த விபரீத ஆசை, விளையாட்டு வேண்டாம். ‘திராவிட’ முத்திரை குத்திப் பார்ப்பனரைப் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்; திராவிட இயக்கத்துக்கு மாசு கற்பிக்கவும் வேண்டாம்!

முதல்வராக வேண்டும், நாடாள வேண்டும் அவ்வளவுதானே! இங்கே செருப்புகூட நாடாண்டதாகப் புராணக் கதை உண்டு. தமிழ்நாடு எந்த அசிங்கத்தையும் சுமந்து தீர்க்கும். 

இதற்குத் ‘திராவிட’ முத்திரை எதற்கு?

- ஆனாரூனா

Pin It