செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்த கட்சியே யாயினும் எந்த இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத்தினருள் அபிப்பிராய பேதங்கள் எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதும் சரித்திர சம்மதமான யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும். உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை கேட்டும், கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும் பலத்தையும் குறிக்கிறதேயன்றி வேறில்லை. பார்ப்பன ரல்லாதார் கட்சி ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதும் இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளும் விஷமங்களும் எண்ணிறந்தன. இதன் உண்மையறியாது நம் மக்கள் இன்னும் ஏமாந்தே வருகின்றனர்.

periyar and kuthoosi gurusamyசில தினங்களுக்கு முன் சென்னை அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற்காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளை பிரிதோரிடம் பிரசுரித்துள்ளோம். யாராயிருந்த போதிலும் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லவும், குறையைத் தெரிவித்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்பதை நாம் ஒப்புக் கொண்ட போதிலும் இந்தியாவுக்கு வழங்கப்போகும் சீர்திருத்தங்கள் பிரஸ்தாபத்தில் இருக்கின்றன. கட்சி பலத்தை உத்தேசித்து ஏகோபித்த ஆக்க வேலையில் ஈடுபட வேண்டிய பொழுது இத்தகையதோர் சம்பவம் நடந்ததையறிய உண்மையில் வருந்துகிறோம்.

அஃதெவ்வாறாயினும் இத்தகையதோர்த் தீர்மானம் கொணர்ந்த அங்கத்தினரே முன்யோசனையுடனும், பகுத்தறிவுடனும் நடந்து மேற்படி தீர்மானத்தை வாபீஸ் வாங்கிக் கொண்டதறிய சந்தோஷிக்கிறோம். பார்ப்பன ரல்லாதார் கட்சி கட்டுக் குலைந்து போகப் போகிறது என்று அகந்தையும் வீராப்பும் கொண்டிருந்த எதிரிகள் சூடுகண்ட பூனை போலடங்கினறென்றே சொல்லுவோம். பார்ப்பனரல்லாத மக்கள் ஒறுமைப்பட்டு ஆக்க வேலையில் முழு மனதுடன் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.08.1932)

Pin It