2024 பொதுத் தேர்தல் முடிவுகள் - இந்துத்துவ பாசிசத்திற்கு ஏற்பட்டுள்ள தற்காலிகத் தடை!

2024 சூன் 04 அன்று 18ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ‘400 இடங்களுக்குமேல் வெல்வோம்’ என்று முழங்கி வந்த பாரதிய சனதா கட்சி 240 இடங்களை மட்டுமே பெற்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுடனான பெரும்பான்மையுடன் பா.ச.க. வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்பட்டு, இந்து ராஷ்டிரம் நிறுவப்படும்; மொழிவழி மாநிலங்கள் ஒழிக்கப்பட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்கிற நிலை ஏற்படும்; சனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப் படும் என்று எதிர்க்கட்சிகளாலும் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இயக்கங்களாலும் வெகுமக்களாலும் அஞ்சப்பட்டது. பா.ச.க. மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்குரிய 272 இடங்களைக்கூட எட்டாததால் இந்த அச்சம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

சனநாயகத்தில் மய்யமானவர்கள் மக்களே அல்லவா? நரேந்திர மோடி என்ற ஒற்றை மனிதரையே வழிபடத்தக்க மூலவராக முன்னிறுத்தியது பா.ச.க. அவர் ஒருவரே அக்கட்சியின் தேர்தல் பரப்புரையாளராகத் தேர்தல் களத்தில் சுற்றி சுற்றி வந்தார். தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்தார். மோடியால் உருவாக்கிப் பரப்பப்பட்ட 400 தொகுதிகளில் வெற்றி என்ற மந்திரத்தையே ஊடகங்கள் பின்பாட்டுப் பாடின. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு என ஊடகங்கள் அதையே உச்சாடனம் செய்தன. 04.06.2024 அன்று வெளியான மக்கள் தீர்ப்பு அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கலாம். பாசிச பா.ச.க.வுக்கு எதிராக முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் அணிதிரண்டு நின்ற தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி நாம் கொண்டாடத் தக்கதாகும். இந்திய அளவில் காங்கிரசும் பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் புத்தெழுச்சிப் பெற்று ஈட்டியுள்ள வெற்றி கூட்டாட்சி முறைமைக்கு வலுசேர்ப்பதாகும்.

இண்டியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளாக சமூக நீதி, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, கல்வியிலும் அரசுப் பணி களிலும் மக்கள் தொகை விகிதாசாரப்படி இடஒதுக்கீடு அளிக்கப்படும், இடஒதுக்கீடு வழங்க 50 விழுக்காடு உச்சவரம்பு அகற்றப்படும் என அறிவித்ததும் மோடியின் எதேச்சாதிகார-சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்படியான சனநாயக ஆட்சியை மீட்டெடுப்போம் என காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல் காந்தி எதிர்க்குரல் எழுப்பியதும் பா.ச.க.விற்குச் சரிவு ஏற்படுத்திய மக்கள் தீர்ப்புக்கு முதன்மை காரணி யாகும். வெகுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள பணவீக்கம், பண்டங்களின் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை என எதைப் பற்றியும் மோடி பரப்புரை யில் வாய்திறக்கவே இல்லை என்பதும் பா.ச.க.வின் சரிவுக்குக் காரணம் ஆகும்.

இந்த நிலையிலும் பா.ச.க. தனித்து ஆட்சி அமைப்ப தற்குரிய 272 இடங்கள் பெறமுடியாவிட்டாலும் 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சி என்றாகியுள்ளது. பா.ச.க. தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளான தெலுங்குதேசம் 16 இடங்கள், அய்க்கிய ஜனதா தளம் 12 இடங்கள், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5 என மொத்தம் 293 இடங்களைப் பெற் றுள்ளதால் நரேந்திர மோடி தலைமையில் 3ஆம் முறையாக ஆட்சியதிகார பீடத்தில் அமரும் வாய்ப்பைப் பெற்றுவிட்டது.

இண்டியாகூட்டணியும்காங்கிரசுக்கட்சியும்அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்புகள் அளிக்கப்பட ஆவன செய்வோம் என்றும் மக்களின் அன்றாடச் சிக்கல்களுக் கானத் தீர்வுகளை முன்வைத்தும் பா.ச.க. ஆட்சியில் சனநாயக நடைமுறைகள் அரிக்கப்பட்டதையும் பன் மைத்துவத்திற்கு எதிராக மக்களைப் பிளவுபடுத்தியப் போக்கினை எடுத்துக் காட்டியும் பா.ச.க. மோடியின் கூட்டாளிகளான பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளங்களை ஏகபோகமாக்கிவிட்டதை அம்பலப்படுத்தி யும் பரப்புரை செய்தனர். ஆனாலும் காங்கிரசுக் கட்சி 99 இடங்களையும் காங்கிரசு உள்ளிட்ட இண்டியா கூட்டணி 234 இடங்களைத்தான் பெற முடிந்தது. ஆட்சியமைத்திட மேலும் 38 இடங்கள் தேவை என்ற நிலையில் வலிமையான எதிர்க்கட்சியாக இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பா.ச.க. மோடியின் அதிகார முறைகேடுகளும் தரங் கெட்ட பரப்புரையும் கயமைப் போக்கின் உச்சம் ஆகும்.

தேர்தல் தொடங்கும் போதே இரண்டு முதலமைச்சர்களைச் சிறையில் அடைத்தது மோடியின் வல்லதிகார அரசு.

புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்க் கட்சியி னரை அச்சுறுத்தியதுடன் விசாரணை என்ற பெயரில் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதைத் தடுத்தது. வெகு மக்களுக்கான ஊடகங்கள் அனைத்தையும் மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள தால் மோடியின் பரப்புரையை மட்டுமே ஒளிபரப்பின. எதிர்க்கட்சியினரின் பரப்புரை ஒளிபரப்பவிடாமல் தடுக்கப்பட்டது. விதிவிலக்காக சில ஊடகங்களே எதிர்க் கட்சியினரின் தேர்தல் பரப்புரைகளை ஒளிபரப்பின.

மோடியின் பரப்புரை வசதிக்கேற்ப ஏழு கட்ட வாக்குப் பதிவை 44 நாள்களில் நடத்திடத் திட்டமிட்டது தேர்தல் ஆணையம்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைகளின் போது, அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளாத எதிர்க் கட்சியினரை இராமருக்கு-இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறினார். இசுலாமியர்களை ஊடுருவல்காரர்கள், அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் என்று சாடினார். பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து இசுலாமியர்களுக்கு எதிர்க்கட்சியினர் கொடுத்து விடுவார்கள் என்றும் இரண்டு எருமைகள் இருந்தால் ஒரு எருமையைப் பறித்துக் கொடுத்து விடுவார்கள் என்றும் மக்களை அச்சமூட்டினார். “நான் சாதாரணப் பிறவி அல்ல; குறிப்பிட்டக் கடமையை நிறைவேற்று வதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று நா கூசாமல் நரேந்திர மோடி பேசினார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் “உங்களைத் தென்னிந்தியர்கள் இழிவாகப் பேசுகின் றார்; நடத்துகின்றனர்” என்று கூறி இனப்பகை மூட்டினார். ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக் குரியவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தத் தமிழரான வி.கே.பாண்டியனை ஒரிசாவில் ஆட்சி செய்ய அனுமதிக்கலாமா என்று மோடியும் அமித்சாவும் வினவினர். புரி செகந்நாதர் கோயில் கருவூலத்தின் காணாமல் போன திறவுகோல் தமிழர்களிடம் உள்ளது எனத் திருட்டுப் பழி சுமத்தினார் மோடி. அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒடிசாவின் கனிம வளங்கள் பாண்டியன் மூலம் தமிழ்நாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகின்றன என்றார். இவ்வாறு மதம், மொழி, இனம், சாதி, கடவுள் ஆகியவற்றின் பெயரால் பா.ச.க. தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாகப் பரப்புரை செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகளைச் சிறிதும் மதிக்காமல் வெளிப்படையாக மீறி நடந்த மோடியின் செயல் களைத் தடுக்காமல் ஒரு பக்கச் சாய்வாகத் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மேற்கூறியவாறு பா.ச.க. மோடி பற்பல முறை கேடான கயமைச் செயல்களைச் செய்தும் சரிவுக்குக் காரணங்கள் யாவை?

மக்கள் அன்றாட வாழ்வில் அல்லல்பட்டுக் கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களைக் களையாமை, இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமை, வேலைகள் செய்வோர் குறைவான கூலி பெறும் நிலையை மாற்றிட முயலாமை, சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் போதுமான வருவாய் பெற முடியாத நிலையைப் போக்கிட அரசு போதுமான உதவிகள் செய்யாமை, இன்றியமையாப் பண்டங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமை, உயர் வருமானம் பெறுபவர்களுக்கும் குறைந்த வருமானம் பெறுபவர் களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகும் நிலையைச் சரிசெய்திட திட்டங்கள் இன்மை என்பன பா.ச.க. மோடி ஆட்சியின் மீது மக்களிடையே கசப்பை வளர்த்தன.

ஆர்.எஸ்.எஸ்.இன் நிகழ்ச்சிநிரல்படி இந்து மக்களுக்கு இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறியூட்டி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியதும், இசுலாமிய மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதும், பா.ச.க. ஆட்சி கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற்றப்பட்டதும் மதச் சிறுபான்மை யினருக்கு வெறுப்புணர்வை மூட்டின.

மேலும் பா.ச.க. மோடி அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வஞ்சகமாகக் குறைவான நிதியளித் திடல், இயற்கைச் சீற்றங்களினால் ஏற்பட்ட பேரழிவு களைச் சீர்செய்வதற்கான மறுகட்டமைப்புக்கு நிதியுதவி செய்யாமை ஆகியன மாநிலக் கட்சிகளையும் மக்களையும் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகச் சீற்றம் கொள்ளச் செய்தது.

2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பினால் வெகுமக்களின் பொருளாதாரச் சிக்கல்களை ஓரளவேனும் தீர்க்க கூட்டணி ஆட்சியில் முயற்சி மேற் கொள்ளலாம். அரசின் அடக்குமுறை, அச்சுறுத்தல்கள், மக்கள் கருத்துகளைப் கூறவே அஞ்சும் நிலை சிறிதளவேனும் மாறலாம். ஊடகங்களும் உயரதிகார அரசின் அமைப்புகளும் முதுகெலும்புடன் செயல்படு பவையாக மாறும் என எதிர்பார்க்கலாம். கடந்த பத்தாண்டுகளில் பறிக்கப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்பட்ட மாநிலங்களின் அதிகாரங்கள் படிப்படியாக மீளப்பெற்றிட லாம் என்ற நம்பிக்கை ஆட்சியில் கூட்டாளிகளாக உள்ள மாநிலக் கட்சிகளால் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

ஒன்றிய கூட்டணி அரசு இவற்றை நிறைவேற்றிடவும் இந்துத்துவப் பாசிசத்தை முற்றிலும் முறியடிக்கவும் சனநாயகத்திற்கான மக்கள் இயக்கங்கள் இந்திய அளவில் ஒன்றிணைந்து கருத்தொற்றுமையுள்ள எதிர்க்கட்சிகளுடன் இணைந்தும் தனித்தும் தொடர்ந்து மக்கள் திரள் போராட் டங்களை நடத்த வேண்டும்.

- சிந்தனையாளன் ஆசிரியர் குழு