(1) திராவிடம் மொழி? திராவிடம் இனம்? திராவிடம் நாடு?
திராவிட வல்லுநர் மன்றம் சென்ற மே 18ஆம் நாள் இரவு ‘The DRAVIDIAN STOCK’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் உங்கள் உரை கேட்டேன். அதே உரை மே 21ஆம் நாள் முரசொலி நாளேட்டிலும் வெளியிடப்பட்டிருக்கக் கண்டேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தம்மைப் பற்றி Dravidian Stock என்று அறிமுகம் செய்து கொண்டிருப்பதை ஒட்டி எழுந்துள்ள விவாதத்தில் உங்கள் பங்களிப்பாக இந்த உரை அமைந்துள்ளது.
திராவிடம் என்ற சொல் அரசியல் அரங்கில் புழங்கத் தொடங்கிய வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்து விட்டுச் சொல்கின்றீர்கள்:
”எல்லாம் தெரிந்திருந்தும், கற்றறிந்த சிலரே இதில் உள்நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர்.”
உங்கள் நெடுக்குச் சாலின் ஊடே குறுக்குச் சால் ஓட்டும் அந்தக் கற்றறிந்த சிலரில் யாரெல்லாம் உண்டோ இல்லையோ – நான் உண்டு என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. சில நாள் முன்னதாக ஆதன் வலைக்காட்சிக்கு நான் இதே பொருள் குறித்து வழங்கி விரிவாகக் காணப்பெற்ற செவ்வியையே ”ஒருவர் ஒரு நேர்காணலில்” கூறியவை என்று சொல்லி மறுத்துரைக்க முற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவு.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் திமுக நண்பர்களுக்கு அரசியல் கல்வி புகட்டும் உங்கள் பாராட்டத்தக்க முயற்சி இந்த உரையிலும் வெளிப்படுகிறது.
நீங்கள் சொல்கின்றீர்கள்: 'தமிழ்' என்பது நம் மொழியின் பெயர், ’தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், 'தமிழ்நாடு' என்பது நம் நிலத்தின் பெயர். நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியானால் திராவிட மொழி, திராவிட இனம், திராவிட நாடு என்பன எங்கிருந்து வந்தன என்ற கேள்வி சரியானதுதான்.”
நம் மொழி தமிழ். இனம் தமிழர் நிலம் தமிழ்நாடு இது நூற்றுக்கு நூற்றுக்கு உண்மை என்று அறுதியிட்டுரைக்கின்றீர்கள். அதாவது திராவிட மொழி என்றோ திராவிடர் இனம் என்றோ திராவிட நாடு என்றோ எதுவும் இருக்க முடியாது என்பதை அனைவர்க்கும் அறைந்து சொல்கின்றீர்கள். இது மாறா உண்மை. நேற்றும் இன்றும் நாளையும் உண்மை. இடைக்கால உண்மையன்று. முக்கால உண்மை. யார் எப்போது சொன்னாலும் திராவிடம் மொழியோ இனமோ நாடோ ஆகாது என்று பொருள்.
அப்படியானால் திராவிடம் என்ற சொல் ஒருபோதும் மொழியையோ இனத்தையோ நாட்டையோ குறித்திருக்க முடியாது.
ஆனால், ”’திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது” என்று அறிவிக்கவும் செய்கின்றீர்கள். இந்த மாற்றம் எப்போது எப்படி நிகழ்ந்தது? இது இயற்கையாக நிகழ்ந்த மாற்றமா? நீங்கள் வலிந்து இட்டுக்கட்டிய மாற்றமா?
”இனம் என்று எடுத்துக் கொண்டால் உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள் (Ethnic Race) இருந்தன. தேசிய இனங்களாகப் (National Race) பரிணாம வளர்ச்சி பெற்றன. நம் பழைய மரபினத்தின் பெயர் ’திராவிடர்’ என்பது.”
சுபவீ அவர்களே! நம் பழைய மரபினத்தின் பெயர் திராவிடர் என்று எங்கே படித்தீர்கள்? இதற்கு இலக்கியச் சான்று உண்டா? வரலாற்றுச் சான்று உண்டா? தொல்காப்பியம் “தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற போதே நாம் தேசிய இனம் ஆகி விட்டோம். தமிழ்த் தேசிய இனமாக இருந்தோம், தமிழ்த் தேசமாக வளர்ந்து நிற்கிறோம். இப்போது போய் திராவிடம் என்று செயற்கையாக ஒரு வடமொழிப் பெயரைச் சூட்ட வேண்டிய தேவை என்ன?
அறிஞர் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டினை அறிந்தேற்றுப் போற்றிய பாவாணரே திராவிட மொழிக் குடும்பம் என்ற அன்னாரின் விளக்கத்தை ஏற்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாத செய்தியா? தமிழ், தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் பேசியோரைத் திராவிட இனம் என்று சேர்த்தடைத்ததும், அதே போல் சென்னை மாகாணத்தைத் திராவிட நாடெனக் குறித்ததும் வரலாற்றுப் பிழைகள் என்பதை உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லையோ?
எப்படியானாலும், திராவிடம் மொழியோ இனமோ நாடோ அல்ல என்ற தெளிவு உங்களுக்கு இருப்பது நன்று. திமுக நண்பர்களுக்கும் உங்கள் தெளிவு தொற்றிக் கொள்ளட்டும்.
ஆனால் திராவிடர் என்பதற்கு நீங்கள் தரும் புத்தம்புது இலக்கணம் அந்த சொல் மீது நீங்கள் கொண்டிருக்கும் மையலையே காட்டுகிறது. நாளை பார்ப்போம். (27/05/2021)
(2) செருகலும் உருவலும் திராவிட உத்திகளா?
நம் மொழி தமிழ், நம்மினம் தமிழினம், நம் நிலம் தமிழ்நாடு என்பதில் உங்களுக்குள்ள தெளிவைப் போற்றும் போதே, நம் மொழியையும் இனத்தையும் நாட்டையும் வேறு பெயரால் அழைக்கும் முயற்சிகளை மறுதலிக்காமல் அந்தத் தெளிவு நிறைவு பெறாது என்பதைச் சுட்டிகாட்டாமல் இருக்க முடியவில்லை.
இனப் பெயராகவும் நாட்டுப் பெயராகவும் திராவிடம் என்ற சொல்லை ஆள முடியாது என்ற முடிவுக்கு வந்த பிறகும் அந்தச் சொல்லை விட்டு விட மனமில்லை உங்களுக்கு! எனவே திராவிடம் என்பது ஒரு கருத்தியல் என்ற கண்டுபிடிப்பைச் செய்துள்ளீர்கள்.
அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசனார், பெரியார்… இவர்கள் எல்லாம் திராவிடம் என்று சொல்லவில்லையா? சொன்னார்கள் அதானல் என்ன? அவர்கள் சமத்துவத்தை, சமூகநீதியைச் சொன்னார்கள் என்கின்றீர்கள். இதிலிருந்து ஒரு புதிய வரையறையைச் சமைக்கின்றீர்கள். அதாவது திராவிடம் என்பது ஒரு கருத்தியலின் பெயர் என்கின்றீர்கள். இதிலேயே நீங்கள் உறுதியாக நின்றால் நல்லது.
திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளட்டும். நீங்களும் உங்களை திராவிடர் என்றே சொல்லிக் கொள்வதில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஒரு கருத்தியலின் பெயரைச் சூட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
தமிழர்களில் சிலர் பொதுமையராக இருப்பது போல் வேறு சிலர் திராவிடர்களாக இருக்கட்டும். இன்னுஞ்சிலர் பிற்போக்காளர்களாகவே கூட இருக்கட்டும். ஆனால் அனைவரும் இனத்தால் தமிழர்களே!
ஆனால் திராவிடர் என்பதற்கு ஒற்றை இலக்கணம் உரைத்து அதில் ஊன்றி நிற்க உங்களால் முடியவில்லையே! திராவிடர் என்றால் யார்?
”சாதி பேதமற்ற இந்துக்களே திராவிடர்கள்”!
”சாதி பேதமற்ற, பாலின சமத்துவத்தை ஏற்கும் தமிழர்கள் திராவிடர்கள்!”
”பார்ப்பனர் அல்லாத அனைவரும் திராவிடர்கள்”!
”சாதி இழிவையும் தீண்டாமையையும் ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் திராவிடர்கள்”!
இத்தனையும் உங்கள் விளக்கங்கள்! அல்லது எப்படியும் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் விளக்கங்கள்!
ஆனால் திராவிடர் என்பதற்குத் தந்தை பெரியாரும் மானமிகு ஆசிரியர் வீரமணியும் சொல்கிற விளக்கத்தை உங்கள் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே அதன் பெயர் சுட்டி நிற்கிறது.
தமிழர் என்றால் சாதி நுழைந்து விடும், திராவிடர் என்றால்தான் சாதி வராது என்கிறார்களே? ஆதன் வலைக்காட்சிக்காக என்னிடம் செவ்வி எடுத்தவரின் இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் போதுதான் பாவேந்தர் ”பொங்குதமிழர்” என்கிறாரே? பெரியார் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்கிறாரே? அவர்கள் சொன்ன தமிழரும் சாதித் தமிழர்தானா? என்று திருப்பிக் கேட்கிறேன்.
பாவேந்தரோ பெரியாரோ திராவிடர் என்று சொல்லவில்லை என்பதன்று என் வாதுரை. பாவேந்தர் திராவிடர் என்ற போதும் தமிழரையே குறித்தார் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டும் அவரது திராவிட நாட்டுப் பண்ணே சான்று.
”தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கம் ஏற்புடைத்த அறிவியல் காரணம் ஏதுமின்றி ”திராவிட நாடு திராவிடருக்கே!” என்ற முழக்கமாக மாற்றி எழுப்பப்பட்ட காலத்தில் திராவிட நாடு என்பது நாட்டையும் திராவிடர் என்பது இனத்தையும் குறிக்குமாறு தான் செய்யப்பட்டன அல்லவா? பெரியார் இந்த முழக்கத்தைக் கைவிட்டு ”தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கத்தை மீட்டெடுத்தமைக்கும், அண்ணா பழைய முழக்கத்தை விடாமல் தொடர்ந்தமைக்கும் திராவிட(ர்?) இயக்க அறிவாளராக நீங்கள் தரும் விளக்கம் என்ன?
இறுதியாக ஒன்று: இந்த விவாதத்துக்கு மையமான அறிஞர் அண்ணா உரையை – அந்த உரையின் மையமான Dravidian Stock என்பதை மெய்யாலுமே நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகின்றீர்களா? அண்ணாவின் உரை சொல்லும் ஆயிரம் செய்திகள் என்கின்றீர்கள்! 999 செய்திகளைச் சொன்னீர்கள், ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லாமல் விட்டீர்களே, ஏன்? அது என்ன தெரியுமா? உரையை மீண்டும் படியுங்கள்:
"I claim Sir, to come from a country, a part of India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian….”
“நான் ஒரு நாட்டிலிருந்து வருகிறேன், அது இப்போது இந்தியாவின் பகுதியாக உள்ளது. ஆனால் அது வேறு கூட்டத்துக்குரிய நாடெனக் கருதுகிறேன், அது பகைமை கொண்டதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நான் திராவிடக் கூட்டத்தை சேர்ந்தவன். என்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.”
(Stock = கூட்டம் என்று தமிழாக்கம் செய்கிறேன். இனம் என்று சொல்வதிலும் தவறில்லை.)
மற்றதையெல்லாம் எடுத்துக்காட்டிய நீங்கள் ஒரு நாட்டைச் சொல்லி (அது தமிழ்நாடாகவோ திராவிட நாடாகவோ இருக்கட்டும்) அந்த நாட்டிற்குரிய இனத்தைச் சொல்கிறார் என்பதை மட்டும் ஏன் மறைத்தீர்கள்? அண்ணா சொன்ன திராவிடமும் கூட வெறும் கருத்தியல்தான் என்ற உங்கள் செருகலுக்காகச் செய்த உருவல்தானா இது?
அண்ணா கருத்தியலையே சொன்னார் என்ற உங்கள் செருகலை நிலைநிறுத்துவதற்காக அவர் நாடாகச் சொன்னதை உருவி விட்டீர்களோ? என்ற ஐயம் எழுகிறது. உங்களைப் பொறுத்த வரை இந்தச் செருகலும் உருவலும் கூட திராவிட உத்திகள் என்றே புரிந்து கொள்ளலாமா?
எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்கிக் கொள்ளட்டும்!
அண்ணா தமதுரையில் குறிப்பிட்ட தன்தீர்வுரிமை (self-determination – சுய நிர்ணயம் அல்லது சுருக்கமாகத் தன்னுரிமை) என்ற கொள்கையையும் கூட உங்களால் உவந்தேற்க முடியவில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது. நாளை பார்ப்போம். (28/05/2021)
(3) தமிழ்த் தேசியம் மீது உங்கள் திராவிடத்துக்கு ஏன் ஒவ்வாமை?
திராவிடம் மொழியோ, இனமோ, நாடோ இல்லை என்றாலும் அது ஒரு கருத்தியலின் பெயர் என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்பதைத் தெளிவாக்கியுள்ளீர்கள். நன்று.
திராவிடம் ஒருகாலத்தில் இனத்தையோ நாட்டையோ குறித்திருந்தாலும் அது ஒரு கருத்தியலைக் குறிக்கும் நிலைக்கு மலர்ச்சி கண்டுள்ளது என்றும் உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ளலாம். நன்று.
ஆனால் ஒரு காலத்திலாவது அது இனமாகவோ நாடாகவோ இருந்ததா? பிறகு எப்போது இனத்தையோ நாட்டையோ குறிக்காத நிலை உருவாயிற்று என்பதற்கு உங்களிடம் எந்த விளக்கமும் இல்லை. ஏனெனில் தந்தை பெரியார் ”தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே!” என்று மாற்றிக் கொண்ட போதும், அறிஞர் அண்ணா அதே முழக்கத்தை எழுப்பிய போதும் திராவிடம் என்பதை நாட்டுக்கும் இனத்துக்கும் பெயராகக் கொண்டார்கள் என்பதில் ஐயமிருக்க முடியாது.
அப்படி அவர்கள் முழங்கியது பிழை என்றால் பின்னோக்கிப் பார்த்துக் குற்றாய்வு செய்வதில் ஓர் அரசியல் மாணவனாக எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. உங்களுக்கும் எவ்விதத் தயக்கமும் இருக்கக் கூடாது என்றே எதிர்பார்க்கிறேன்.
பெரியார் 1956க்குப் பின் இந்தத் தவறான முழக்கத்தைக் கைவிட்டுத் “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற சரியான முழக்கத்திற்கே மீண்டு விட்டார். அண்ணா இறுதி வரை மீளவில்லை. அவர் தனிநாடு கோரிக்கையை அரசியல் அரங்கில் கைவிட்டாரே தவிர திராவிட இனம், திராவிட நாடு என்ற கருத்தாக்கங்களை இறுதி வரை கைவிடவில்லை.
பெரியார் கடுமையாகச் சாடிய போதும் கைவிடவில்லை. ஈவெகி சம்பத் கூர்மையாகச் சுட்டிக் காட்டிய போதும் கைவிடவில்லை. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போதும் அந்தக் கோரிக்கைக்கான காரனங்கள் மறைய வில்லை என்பதை அண்ணா தெளிவாக்கினார்.
எனவே அறிஞர் அண்ணா அவர்களே திராவிடத்தை இனப் பெயராகவோ நாட்டின் பெயராகவோ ஆளவில்லை, அதனை ஒரு கருத்தியலின் பெயராக மட்டுமே கொண்டார் என்று சொல்வதற்கு அடிப்படை ஏதுமில்லை.
இப்போதைய நெருக்கடிச் சூழலில் இந்த வரலாற்று வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், பெரியார், அண்ணாவின் சமூக நீதிச் சிந்தனைகளைப் பொதுவாக முன்னெடுப்போம் என்றும், அந்தச் சிந்தனைத் தொகுப்பை திராவிடம் என்று அழைப்போம் என்றும் நீங்கள் கருதுவதாகப் புரிந்து கொள்கிறேன்.
திராவிடம் என்று பெயரிட்டாலும், வேறு பெயரிட்டாலும், இந்துத்துவ (பார்ப்பனிய) வல்லரசியத்துக்கு எதிராக பெரியார், அண்ணா சிந்தனைகளைக் கருத்தியல் படைக்கலனாக்குவதில் எனக்கு மாறுபாடில்லை. வரலாற்றைத் திரிக்காமலே அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன்.
ஆனால் அதற்காகப் பெரியாரும் அண்ணாவும் கூட திராவிடத்தை இனமாகவோ நாடாகவோ வரையறுக்கவில்லை, கருத்தியலாக மட்டுமே முன்வைத்தார்கள் என்று வாதிடத் தேவையில்லை. குறிப்பாக, மாநிலங்களவையில் 59 ஆண்டுகள் முன்பு அண்ணா ஆற்றிய உரையில்,
“நான் ஒரு நாட்டிலிருந்து வருகிறேன், அது இப்போது இந்தியாவின் பகுதியாக உள்ளது. ஆனால் அது வேறு கூட்டத்துக்குரிய நாடெனக் கருதுகிறேன், அது பகைமை கொண்டதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நான் திராவிடக் கூட்டத்தை சேர்ந்தவன். என்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்”
என்று இந்திய வல்லரசியத்தின் ஆட்சி மன்றத்தில் நின்று முழங்கியதை மறைக்கத் தேவையில்லை. அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் பிற்பகுதியை நீங்கள் எடுத்துக்காட்டுவதும் சரியானதே.
”உலகத்தவர்க்குக் கொடுப்பதற்கு, மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறுபட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே நான் அப்படி அழைத்துக் கொள்கிறேன்" என்கிறார் ("and it's only because I consider Dravidians have something concrete, something distinct, something different to offer to the world at large')”
மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறுபட்ட அவற்றையே திராவிடக் கருத்தியல் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், சரிதானே? அதாவது திராவிட நாடு திராவிட இனத்துக்குரியது, அந்த இனத்துக்குரிய விழுமியங்களே திராவிடம் என்பதுதான் அண்ணா அவர்களது உரையின் சாறம்.
இதை எடுத்துக்காட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? என்னைப் பொறுத்த வரை திராவிடம் என்ற பெயரைத் தவிர வேறு மறுப்பு ஒன்றுமில்லை. ”பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஒதுக்கித் தள்ளி விட்டு தமிழையும் தமிழினத்தையும் தமிழ்நாட்டையுமே அண்ணா குறித்ததாகக் கொண்டு போற்றுவேன்.
திராவிடக் கூட்டம் அல்லது திராவிட இனம் என்று அண்ணா கூறியதை மீட்டுப் பயன்படுத்துவது போலவே அதே உரையில் அவர் குறிப்பிட்ட தன் தீர்வையும் (சுயநிர்ணயம் self-determination) நினைவிற்கொள்ளுங்கள் என்று நான் வேண்டிக் கொள்ளவே செய்தேன்.
இதற்கும் நீங்கள் மறுப்புச் சொல்கின்றீர்கள். பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதற்கு முன்பு அண்ணா அப்படிச் சொன்னார், ஆனால் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு மாநில சுயாட்சிக் குறிக்கோளை ஏற்றுக் கொண்ட பின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை பொருந்தாது என்பது உங்கள் நிலைப்பாடு.
தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம் (தேசம்) என்பதும், எல்லாத் தேசிய இனங்களையும் போல் தமிழ்த் தேசிய இனமும் தன்தீர்வுரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டது என்பதும் அடிப்படை உண்மைகள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? பிரிவினையா? மாநில சுயாட்சியா? என்பது அரசியல் கோரிக்கை தொடர்பான வினா. மாநில சுயாட்சி கோருவதால் தேசிய இனம், தேசம் என்ற தகுநிலை போய் விடாது.
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, மாநில சுயாட்சிக் குறிக்கோளை திமுக ஏற்றுக் கொண்ட பின் ”மாநில சுயாட்சி” என்ற தலைப்பிலேயே முரசொலி மாறன் எழுதிய நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் நாவலர் நெடுஞ்செழியன் சொல்கிறார்:
“இந்தியாவில் மொழிவழித் தேசிய இனத்தின் வழிவந்த மாநிலங்கள் உண்மையான முழுப் பொருளும் பொதிந்த மாநில சுயாட்சி கொண்டனவாக இருக்க வேண்டும் என்பதையும் அந்த மாநிலங்களெல்லாம் தாமே விரும்பி ஏற்படுத்தும் முறையில் மத்திய கூட்டாட்சி அமைய வேண்டும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகம் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தி வருகிறது.”
திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பிறகும் தமிழ்த் தேசிய இனம் என்ற கருத்தாக்கத்தை அண்ணா மட்டுமல்ல, கலைஞரும் வைகோவும் கூட எடுத்துரைத்த தருணங்கள் உண்டு. இது என்னை விடவும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இன்னொன்றையும் தெளிவாக மனத்திற்கொள்ள வேண்டும். அதாவது மாநில சுயாட்சிக் குறிக்கோளை அடைவதற்கும் கூட தேசியத் தன் தீர்வுரிமை இன்றியமையாதது. தன் வாழ்வைத்தானே தீர்வு செய்து கொள்ளும் உரிமையற்ற ஒரு தேசிய இனம் பிற இனங்களோடு சேர்ந்து கூட்டாட்சி காண்பது எப்படி? மாநில சுயாட்சி என்பது திமுகவின் குறிக்கோள் மட்டுமல்ல, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் குறிக்கோளும் அதுவேதான் என்றால் தன்தீர்வுரிமை இல்லாமல் மாநில சுயாட்சி அடைவது எப்படி? என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.
திமுக ஆட்சி செய்யட்டும், மாநில ஆட்சிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைகள் செய்யட்டும். வரவேற்போம்! ஆனால் மாநில சுயாட்சிக்குச் செல்லும் வழி இதுவன்று, வேறு.
விடுதலையின் வழியாகத் தன்னாட்சி (சுயாட்சி) உண்டே தவிர விடுதலைக்குத் தன்னாட்சி மாற்றாகாது. விடுதலை என்றாலும் தன்னாட்சி என்றாலும் தேசியத் தன்தீர்வுரிமைதான் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
திராவிடம் என்ற கருத்தியலை விளக்குவதற்கு நீங்கள் இவ்வளவு இடர்ப்பட்டிருக்கத் தேவையில்லை. ”பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்தான் நான் சொல்லும் திராவிடம்” என்று நீங்கள் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்க முடியும். ஏன் அப்படிச் செய்யவில்லை? பெரியார் பெயரோடு தமிழ்த் தேசியம் இணைந்து வருவதை நீங்கள் விரும்பவில்லையா? தமிழ்த் தேசியம் மீது திராவிடத்துக்கு – உங்கள் திராவிடத்துக்கு – ஏன் இந்த ஒவ்வாமை?
தமிழ்ச் சூழலில் சமூக நீதிக்கும், நிகர்மைக்குமான போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியம் ஒன்றே வழி என்பதை ஏற்றுக் கொண்டு சிலபல வரலாற்றுக் காரணங்களால் அதற்கு நீங்கள் திராவிடம் என்று பெயரிட்டுக் கொள்வதானால் அது உங்கள் உரிமை.
தமிழ்த் தேசிய உள்ளடக்கத்தின் உருத்திரிந்த வடிவமே திராவிடம் என்று நான் பல முறை கூறியதில் மாற்றமில்லை. தமிழ்த் தேசியத்தின் மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் மக்கள் பெருந்திரள் இயக்கமாகவும் அதற்கான கருத்தியலாகவும் திராவிடத்துக்குரிய வகிபாகத்தை அறிந்தேற்பதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்துக்குத் தயக்கமில்லை.
அதே திராவிடம் மாநில ஆட்சி என்னும் இறைமையற்ற அதிகார மாயையில் வீழ்ந்து பதவி அரசியலில் மூழ்கிய பின் மொத்தத்தில் தன் முற்போக்கு உள்ளடக்கத்தை இழந்து நிற்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.
அந்த உள்ளடக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உரிய பங்களிப்புச் செய்ய வேண்டிய நீங்கள் ஒரு சீரழிந்த அரசியல் பண்பாட்டுக்கு முட்டுக் கொடுக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது தோழரே!
தமிழ்த் தேசியத்துக்கான உங்கள் உழைப்பையும் ஈகத்தையும் நாங்கள் மறந்தோமில்லை. இப்போது தமிழ்த் தேசியத்தின் மீது ஒவ்வாமை கொண்டு, இதுதான் உங்கள் திராவிடமா? என்று கேட்க வைத்து விட்டீர்களே!
அப்படி இருந்த சுபவீதானே இப்படி ஆகிப் போனார்? இப்படி இருக்கும் சுபவீ அப்படி ஆக மாட்டாரா? என்ற ஏக்கத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறேன். (03/06/2021)
- தியாகு