பிற்காலச் சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மன்னனாகக் கருதப்படுபவன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன். இம்மன்னன் கி.பி.957-இல் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். இவ் வரசனுக்குரிய மதுரைகொண்ட கோ இராசகேசரிவர்மன், பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீ சுந்தரசோழ தேவர், மதுராந்தகன் சுந்தரசோழன் போன்ற சிறப்புப் பெயர்கள் பாண்டியரோடு போர் புரிந்து வெற்றி பெற்றதை வெளிப்படுத்துகின்றன.

சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்த வர்கள் ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழித் தேவன் ஆகியோர் ஆவர். அவர்களுள் ஆதித்த கரிகாலன் இளைஞனாக இருந்தபோதே வீரபாண்டியனைப் போரில் கொன்றான் என்று ஆனைமங்கலம் செப்பேடுகள் குறிப்பிடு கின்றன. சுந்தரசோழன் தன் மூத்த மகன் ஆதித்த கரிகால னுடைய வீரச்செயலையும் ஆற்றலையும் கண்டு கி.பி.966­இல் இளவரசுப் பட்டம் கட்டினான். மற்றொரு மகனாகிய அருண்மொழித்தேவன் என்கின்ற முதலாம் இராசராச சோழன் என்பவன் எத்திசையும் புகழ்ப் பரப்பி அரசாண்ட மன்னவன் ஆவான். குந்தவைப் பிராட்டி வேங்கி நாட்டுக் கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத் தேவனுக்கு மணம் முடிக்கப் பெற்றாள். வல்லவரையன் குந்தவையை மணம் முடித்தப்பின் சோழ நாட்டிலேயே தங்கி விட்டான்.

சுந்தரசோழனுடைய ஆட்சியின் கடைசிக் காலத்தில் அவன் மிகவும் துன்பமடையக் கூடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அது இவனுடைய முதல் மகனும் பெரும் ஆற்றல் வாய்ந்த வீரனாகிய ஆதித்த கரிகாலன் கி.பி.969-இல் சோழநாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டதே ஆகும். இத்துன்ப நிகழ்ச்சியினால் சுந்தரசோழன் துக்கம் தாங்காமல் அவ்வாண்டிலேயே காஞ்சி மாநகரில் அமைந்த பொன்மாளி கையில் உயிர் துறந்தான்.

சுந்தரசோழன் இறந்தவுடன் அவ்வேந்தனுடைய மனைவி வானவன் மாதேவி என்பாள் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் கணவனுடன் உடன்கட்டை ஏறினாள். அம்மா தேவியின் செயற்கருஞ்செயல் பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது.chozhar kalvettuசுந்தரசோழன் காஞ்சி மாநகரத்தில் உள்ள பொன்மாளி கையில் இறந்ததால் அம்மன்னனைப் பொன்மாளிகையில் துஞ்சின தேவர் என்று சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து :

இப்படுகொலைக் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் இடையே சில கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் :

மூத்த கிளை வழிவந்த உத்தமசோழன் தனக்கு முடி சூட்டப்படும் காலத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தான். ஆனால் சுந்தரசோழன் தன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு பரகேசரி என்ற பட்டப் பெயருடன் இளவரசுப் பட்டம் சூட்டினான். இதனால் உத்தமசோழன் சீற்றம் அடைந்தான். அம்மணி முடியை அடைவதற்குரிய சூழ்ச்சிகளில் அவன் ஈடுபட்டு உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்தினான். மேலும் கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரிலிருந்த சிலரின் உதவிக்கொண்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டான் என்பது பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தாகும்.

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் கருத்து :

ஆதித்த கரிகாலனைக் கொன்றது உத்தமசோழன் அல்லன் என்பதை சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள உடையார்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வெட்டப்பட்ட முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

அக்கல்வெட்டு ஆதித்தக்கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அக்கொலை யைச் செய்தவர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராசன், மலையனூரானான ரேவதாச கிரமவித்தன் ஆகிய பார்ப்பனர்கள் ஆவர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. அவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராசன், இருமுடிச்சோழ பிரமாதிராசன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்கப் பணியில் அமர்ந்திருந்த பார்ப்பனர்கள் ஆவர்.

அவர்கள் அரசியல் அலுவலர்களாக இருந்தும் தம் இளவரசனான ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்ற மைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழனின் மகனாகிய உத்தமசோழன் என்பவன்தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து ஆதித்த கரிகாலனைக் கொன் றான் எனப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடு கின்றார். இக்கருத்தினை அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டி மறுத்துரைக்கிறார்.

உத்தமசோழனுக்கு அக்கொலையில் தொடர்பு இருந் திருப்பின் ஆதித்த கரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் இராசராசன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி, அதனை அந்த உத்தம சோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்கமாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தமசோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் தான் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிமக்களிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது. உத்தமசோழன் சூழ்ச்சியினால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால், முதலாம் இராசராசன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்பது ஒருதலை.

உத்தமசோழன் இளவரசனாக இருந்த ஆதித்த கரிகாலனைக் கொன்று பட்டம் சூடியிருந்தால், அவனுக்கு மக்கள் ஆதரவும் அரசு அலுவலர்கள் ஆதரவும் என்றும் கிடைத்திருக்கமாட்டா. அதனால் உள்நாட்டில் கலகமும் உட்பூசலும் அமைதியின்மையும் ஏற்பட்டிருக்கும். அதனால் சோழநாட்டில் எந்தவிதக் குழப்பமுமின்றி அமைதியாக உத்தமசோழன் ஆட்சி நடைபெற்றது என்பதைப் பல கல்வெட்டுகள் காட்டி நிற்கின்றன.

ஆகவே எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசு அதிகாரிகளும் அவர்கள் உடன்பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து, ஆதித்த கரிகாலனை வஞ்சக மாகக் கொன்றுவிட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தமசோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதினைத் தெளிவாக அறியலாம்.

இதில் பஞ்சவன் பிரமாதிராசன் என்பவன் பாண்டிய நாட்டில் அரசியல் அதிகாரியாக இருந்தவன் ஆவான். ஆனால் சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆதித்த கரிகாலன் கி.பி.966-இல் பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வீரபாண்டியனைக் கொன்று வெற்றி வாகை சூடினான். அதனால் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன் முடிதலைக் கொண்ட கோப்பரகேசரி வர்மன் எனப் பாராட்டப் பெற்றான். இதனால் பாண்டியர்க்கும் சோழர்க்கும் பகை ஏற்பட்டது. சோழநாட்டைச் சேர்ந்தவனும் பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரியுமான பஞ்சவன் பிரமாதிராசன் தன்னு டைய சகோதரர்களுடன் சேர்ந்து நால்வருமாக ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து நயவஞ்சகமாகக் கொலை செய்தனர்.

ஆதித்த கரிகாலன் கொலை -உடையார்குடி கல்வெட்டு

உடையார்குடி அனந்தீசுவரர் கோயிலில் பொறிக்கப்பட்ட முதலாம் இராசராசன் (கி.பி.987) உடைய 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களையும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றியும் குறிப்பிடுகி ன்றது. இதோ,

ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி வர்மர்க்கு யாண்டு 2­வது வுடகரை பிரமதேயம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைக் கொண்ட கரிகால சோழனைக் கொன்ற த்ரோகி களான சோமன், தம்பி ரவிதாஸான பஞ்சவன் பிரஹ்மாதிராஜனும் இவன் தம்பி ஆன இருமுடிச் சோழ பிரமாதிராஜனும் இவர்கள் உடன்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாறும் இவர்கள் மக்களும் இவர் பிரமாணிமார் பேராலும்.

வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த சபை உறுப்பினர்களும் கோட்டையூர் பிரமஸ்ரீராஜனும் புல்லமங்க லத்தைச் சேர்ந்த சந்திரசேகர பட்டரும் சேர்ந்து கலந்து ஆலோசித்து அந்தக் கொலைகாரர்களின் நிலபுலன்களைப் பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விற்று விற்றுவந்த தொகை சக்கரவர்த்தியின் பண்டாரத்தில் சேர்த்தனர். அக் கொலைக் குற்றம் புரிந்த அனைவரும் நாடுகடத்தப்பட்டனர். கொலைக்குற்றம் புரிந்தவர்க்கு லேசான தண்டனையே வழங்கப்பட்டது. காரணம் பிராமணன் கொலைக்குற்றம் செய்தாலும் அதற்குத் தண்டனையாக மரணதண்டனை விதிக்கக் கூடாது என மனுசாத்திரம் குறிப்பிடுகின்றது.

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் நான்கு பார்ப்ப னர்கள் என்பதினை முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார்.

கல்கி கிருட்டிணமூர்த்தி அவர்கள் தான் எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் புதினத்தில் உத்தமசோழன் பழுவேட்டரையர் சம்புவராயர் ஆகியோர் ஆதித்த கரிகாலனைக் கொல்ல விழைவது போலவும் சதித்திட்டம் தீட்டுவது போலவும் காண்பித்திருப்பார். குந்தவை தேவி ஆதித்த கரிகாலனைத் தவிர்த்து இராசராசன் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பமுடையவளாக இருந்தாள் என எழுதியிருக்கிறார். கற்பனைக் கதைமாந்தரான நந்தினி, வீரபாண்டிய னுக்காகப் பழிவாங்க, ஆதித்த கரிகாலனைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டுவது போலவும் அவர்களுக்கு அந்த நான்கு பார்ப்பனர்கள் உதவியாக இருந்தது போலவும் எழுதியுள் ளார். கி.பி.969-இல் ஆதித்த கரிகாலன் நான்கு பார்ப்பனர் களால் கொல்லப்படுகிறான் என்ற வரலாற்று உண்மையை ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கடந்த பின்னரும் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல வரலாற்று உண்மையைத் திரித்து மறைத்துப் பார்ப்பனர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்களாகிய நாம் விளங்கிக் கொள்வோம்!

அடிக்குறிப்புகள்

1. S.I.I. Vol.III No.142.

2. அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம் -ப.78 மற்றும் S.I.I. Vol – III, vz: 205.

3. S.I.I Vol-III No-6, S.I.I Vol – V NOS 723, 980.

4. K.A.N. Sastri, cholas page 157-158.

5. Ep.Ind vol XXI – No.27.

6. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம் ப-76.

7. மேற்படி நூல் ப.77.

8. S.I.I. Vol. III No.138,142,143,145

9. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம் ப-77.

10. Ep. India Vol – XXI, No : 27

11. Bahler.G, The laws of Manu, oxford – 1886, P-449.

(சிந்தனையாளன் பொங்கல் மலர்-2023 கட்டுரை)

- முனைவர் ப.வெங்கடேசன்

Pin It