கடவுள் மறுப்பை பேசிக் கொண்டிருக்கிற பெரியார் இயக்கம் வள்ளலாருக்கு ஏன் விழா எடுக்கிறது? என்பது ஒரு அடிப்படையான கேள்வி. நாங்கள் ஏற்கெனவே தொடர்ச்சியான வைதீக எதிர்ப்பு மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். வள்ளலாரின் 200ஆவது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு அரசும் ‘வள்ளலார் 200' என்ற விழா நடத்தியிருக்கிறது. பெரியார் இயக்கம் வள்ளலார் மீது எப்படியான பார்வை வைத்திருக்கிறது என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இருக்கிறது. பெரியார் கடவுள் மறுப்பை பேசினார் என்பது உண்மை. பெரியார், சமூக விடுதலையை முன்வைத்துத் தான் கடவுள் மறுப்பைப் பேசினார் என்ற கருத்துக்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரியார் என்றால் இந்துமத விரோதி, கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்று கூறியவர், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் என்ற இந்த மூன்று சொற்றொடர்களிலேயே பெரியாரைச் சுருக்கி வைத்து, சமூகத்திலிருந்து பெரியாரைத் தனிமைப்படுத்தி விடலாம் என்ற முயற்சி வைதீகர்களால், சனாதனவாதிகளால் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வருகிறது.

பெரியாரின் சிந்தனை மரபையும், கடந்த கால செயல் பாடுகளையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இதில் எந்தச் சந்தேகமும் இருக்காது என்று தான் நாங்கள் நினைக்கிறோம். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலேகூட உறுப்பினர்களாகச் சேர்கின்றவர்கள் கடவுள் மறுப்பாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலேயே பெரியார் கூறியிருக்கிறார். பிறகு காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக பல சமூகச் சீர்திருத்தவாதிகளை, சமூகத்தை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறவர்களை வைதீகம், சீரணித்து உள்வாங்கிக் கொண்டு எப்படி ஏப்பம் விட்டுவிட்டது என்று உணர்ந்த காரணத்தால் அத்தகைய ஆபத்து தனக்கும் வந்துவிடக் கூடாது என்று கருதி அவர் கடவுள் மறுப்பு என்ற கோட்பாட்டை முன்வைத்தாலும், அவர் எதற்காக அதை வைத்தார் என்பதைக் கடந்தகால வரலாறுகளின் மூலமாகச் சான்றுகளோடு நாம் சுட்டிக்காட்ட முடியும்.

அந்த வகையில் நான் ஒரே ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெரியார் கூறுகிறார், “என்னுடைய முதலாவது கொள்கை இந்த நாட்டிலே இருக்கக்கூடிய உயர்வு தாழ்வு, அதற்கு ஆதரவான வர்ணாசிரம தர்மம், அதை ஆதரிக்கிற மதம், வர்ணாசிரமத்தை ஆதரிக்கிற சாஸ்திரம், வர்ணாசிரமத்தை ஆதரிக்கிற புராணம் இவைகளால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஆகியவைகள் ஒழிய வேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான கொள்கை” என்று 1951-ஆம் ஆண்டு பெரியார் கூறியிருக்கிறார். எனவே வர்ணாசிரமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்து தான் பெரியார் இயக்கத்தை நடத்தினார். வர்ணாசிரமத்திலிருந்து சாதி உருவாகியிருந்தாலும்கூட, சாதி எதிர்ப்பு மாநாடுகளை பெரியார் நடத்தி இருந்தாலும் கூட சாதி எதிர்ப்புக் கொள்கை இந்தச் சமூகத்தில் இருந்தாலும் கூட அந்தச் சாதி எதிர்ப்புக் கொள்கையையும் வர்ணாசிரமம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்; அதை விட ஆபத்தானது வர்ணாசிரம தர்மம் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் அவர் இறுதி வரை வைத்த முழக்கம், ‘சூத்திரர்கள் இழிவு ஒழிப்பு'. சூத்திர இழிவு ஒழிப்பைத்தான் பெரியார் தனது இறுதி பேச்சிலேகூட கூறினார். ‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே' என்று தான் பெரியார் கூறினார்.

சாதி ஒழிந்தாலும் கூட, வர்ணாசிரமம் இருந்து கொண்டு இருந்தால் சாதி ஒழிப்பு சமூகத்தையும் வர்ணாசிரமம் விடாமல் கவ்விக் கொண்டுவிடுகிற ஆபத்து என்றைக்கும் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த வர்ணாசிரம எதிர்ப்பு என்ற கோட்பாட்டின் கீழ் தான் பெரியார் இயக்கங்களை நடத்தினார். வர்ணாசிரமத்தை எதிர்த்த, வைதீகத்தை எதிர்த்த அத்தனை தலைவர்களுடனும் பெரியார் நெருக்கமாக இருந்திருக்கிறார். குறிப்பாக குன்றக்குடி அடிகளாரும், பெரியாரும் கொண்டிருந்த நட்பைக் கூறலாம். குன்றக்குடி அடிகளார் சைவத்திலே மிக ஆழமான பற்று கொண்டவர். பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டது தமிழ்நாட்டின் வரலாறு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடிகளாருக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட நெருக்கம் என்பது சூத்திர இழிவு ஒழிப்பு, சமுதாய இழிவு ஒழிப்பு என்ற தளத்தின்மீது நின்று தான் அந்த உறவே உருவானது. பெரியார், கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தைக்கூட சூத்திர இழிவு ஒழிப்பு என்ற அடிப்படையில் தான் போராட் டத்தை முன்னிறுத்தி நடத்தினார்.

ஒரு செய்தியைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் இராமன் கடவுள் அவமதிக்கப்பட்டான் என்று ஒரு பெரிய பிரச்சனை தமிழ்நாட்டிலே உருவாக்கப்பட்டு, அது தேர்தல் பிரச்சனை யாகவும் உருவாக்கப்பட்டு, பெரியாருக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நாடு முழுவதும் கட்டவிழ்க்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அடிகளார் ஒரு கருத்தை கூறினார். “இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில் ஆத்திகம் என்ற சிந்தனை, உயர்சாதியின் நலம் காப்பது; நாத்திகம் என்ற சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பது” என்றார் அடிகளார்.

சைவத்திலே நம்பிக்கையுள்ள, பக்தியிலே நம்பிக்கை யுள்ள அன்றாடம் கடவுளை வழிபடுகிற அடிகளார் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப, நாத்திகத்தினுடைய வரையறை யறையும் அன்றைக்கு மாறியிருக்கிறது. காலத்துற்கேற்ப ஒரு சொல்லினுடைய தன்மை மாறுபடுகின்றது. வரலாற்றின் தேவைக்கேற்ப அந்தக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதனடிப்படையில்தான் அடிகளார் துணிவாக அதைக் கூறினார். அப்போது பெரியார் நடத்திய உண்மை பத்திரிக்கையில் அடிகளாரின் படத்தை அட்டைப் படத்தில் பதிவிட்டு, இந்த நான்கு வாசகங்களை மட்டும் பெரியார் வெளியிட்டார். அடிகளாருடன் கை கோர்த்துக் கொண்டு நேரடியாக விவாதங்களை பெரியார் நடத்தியிருக்கிறார். இந்த விவாதங்களெல்லாம் எதற்கு நடந்திருக்கிறது என்றால், இந்த மக்களின் இழிவு ஒழிப்பு கிளர்ச்சிக்காகவே ஆகும். இந்த வகையில் அடிகளாருக்கும், பெரியாருக்கும் இருந்த நெருக்கமான உறவு என்பது வரலாற்றுப் பாடமாக இருந்து கொண்டிருக்கிறது.

கடவுள் மறுப்பு என்பது பெரியார் பேசியது, சூத்திர இழிவு ஒழிப்புக்கான ஒரு அடிப்படைக் குறிக்கோள். வைதீகம் இன்றைக்கு வேறு வேறு வடிவில் உருமாறி வந்து கொண்டி ருக்கிற இந்த நேரத்தில், பெரியாரை இந்து மதம் என்று இல்லாத ஒன்றிற்குள் அடைத்து வைத்து, இழிவு படுத்துகிற போக்கு இருப்பதனால்தான் வைதீகத்தை எதிர்ப்பவர்களை ஓரணியில் திரட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

வள்ளலார் என்றாலே ஆறாம் திருமுறையை விட்டுவிட்டு மற்றதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிற போக்கு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இறுதியாகவள்ளலார் எந்த சிந்தனைக்கு வந்தார் என்பதைப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

சைவத்தில் பற்று வைத்து பிறகு சிந்தனை வளர்ச்சிப் போக்கில் சைவத்தின் மனித சமத்துவ எதிர்ப்புக் கருத்துக் களை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதுதான் வள்ளலாரின் தனித்துவம். அவர் சுய மத மறுப்பாளர். சைவத்துடனேயே அவர் வாழ்நாள் முழுதுவம் போராட வேண்டியிருந்தது.

நாம் இலட்சியம் வைத்துக் கெண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம் வைக்க வேண்டாம்; இதுதான் தனது கடைசி பத்தாண்டுகளில் வள்ளலார் மக்களிடம் முன்வைத்த வேண்டு கோள். அது மட்டுமல்ல சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம் என்று அனைத்து மதங்களையும் அதன் தத்துவங்களையும் எதிர்த்த புரட்சிக்காரராக அவர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 51 ஆண்டுகள். ஆனால் தனது ஆறாம் திருமுறையில் அவர் எழுதிய புரட்சிக் கருத்துக்கள் இன்று வரை இருட்டடிக் கப்படுகின்றன. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்; கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவே; அம்பலத்தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே, அருள் விருந்தே; அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்; அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” போன்ற பாடல்களோடு அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை என்று மங்களம் பாடி அவரது சீடர்கள் பலரும் முடித்து விடுகிறார்கள். வரலாற்றில் பார்ப்பனியம் தனது எதிர்ப்புச் சிந்தனைகளை ஜீரணித்து ஏப்பம் விட்ட சதிகளுக்கு இது மற்றொரு சான்று.

1872-இல் ஞானசபையை உருவாக்கிய அவர் அதற்கான விதிகளில் சாதி மறுப்பு, சமய மறுப்புகளை உள்ளடக்கமாக்கினார். வள்ளலார் தொடக்க காலங்களில், சைவப் பற்றோடு தாம் எழுதிய பாடல்களை அச்சு ஏற்றவே விரும்பவில்லை. ஆனால், மக்களிடத்தில் அதற்கு மிகவும் செல்வாக்கு இருந்தது. இறுக்கம் இரத்தின முதலியார் அவரது பாடல்களைத் தொகுக்க விரும்பி அடிகளாரின் சம்மதம் பெற பெரும் போராட்டமே நடத்த வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அடிகளார் தனது பாடல்களை அனுப்பி ஒப்புதல் தரும் வரை, தாம் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக அடிகளாருக்கு கடிதம் எழுதினார். இதற்குப் பதறிப் போய் பதில் எழுதிய வள்ளலார், தங்களது பட்டினி அறிவிப்பு தன்னை பாதித்தது என்றும், தாம் உண்ணும் உணவு உடம்பில் ஒட்ட மறுக்கிறது என்றும் இரண்டு மாதங்களில் பாடல்களை அனுப்பி வைப்பதாக பதில் எழுதுகிறார். இவ்வளவு ஆர்வமும், துடிப்பும் உடைய இரத்தின முதலியார், ஆறாம் திருமுறையை பதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பழமை வாதிகளுக்கு ஆறாம் திருமுறை அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டது.

வள்ளலார் ஓர் இறைப்பற்றில் நம்பிக்கை கொண்டவர் என்றாலும், அதை வர்ணாசிரமக் கட்டமைப்புக்கு பயன்பட்டதைக் கடுமையாக எதிர்த்தவர். கோவில்கள், ஆச்சாரங்கள், சடங்குகள், உருவ வழிபாடுகள் அத்தனையும் எதிர்த்த அவர், தான் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த சைவ மதத்திலிருந்தும் ஒதுங்கி நின்றார். சாதிக்கு அடிப்படையாக இருக்கின்ற வர்ணா சிரமக் கட்டமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து உணர முடிகிறது.

பிராமணியம் என்ற வருணக் கட்டமைப்பு அழிக்கப்படாத வரை, சாதி முற்றாக ஒழிக்கப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்ற உறுதியான முடிவு வள்ளலாருக்கு இருந்ததைப் போலவே பெரியாருக்கும் இருந்தது. சாதி ஒழிப்புக்கு அடிப்படை வர்ணாசிரம ஒழிப்பு என்ற கருத்தில் பெரியார் எப்படி உறுதியாக இருந்து, இறுதிவரை சூத்திர இழிவு ஒழிப்பு என்பதற்காகப் போராடினாரோ, அதே புள்ளியில் தான் வள்ளலாரும் இணைந்து நிற்கிறார். வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பெரியாரின் குடிஅரசு பதிப்பகம் வெளியிட்டது.

ஒருமுறை வடலூருக்குச் சென்ற பெரியார் உள்ளே செல்ல மறுத்து விட்டார். வெளியில் அறிவிப்புப் பலகை ஒன்றில், ‘ஊன் உணவு சாப்பிடுபவர்கள் உள்ளே வரக்கூடாது' என்று எழுதி இருந்தது. நிர்வாகிகள் பரவாயில்லை உள்ளே வாருங்கள் என்று அழைத்தாலும் இந்த அறிவிப்பிற்குப் பிறகு உள்ளே வருவதற்கு என் மனசாட்சி இடம் தரவில்லை என்று கூறி பெரியார் உள்ளே நுழையாமலேயே திரும்பி விட்டார்.

வள்ளலாரும், பெரியாரும் இணைந்த புள்ளி என்பது வர்ணாசிரம ஒழிப்பு என்பது தான். குன்றக்குடி அடிகளாரையும், பெரியாரையும் இணைத்த புள்ளியும் இதே புள்ளி தான்.

(சிந்தனையாளன் பொங்கல் மலர்-2023 கட்டுரை)

- விடுதலை க.இராசேந்திரன்

Pin It