மருத்துவம் புரிந்தவர்கள் மருத்துவர்கள் அல்லது வைத்தியர்கள் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டார்கள்.  இதில் திறன் பெற்ற மருத்துவர்கள் தொல்காப்பியத்தில் “நோய் மருங்கறிஞர்” (தொல்காப்பியம் சொல்: 183) என்று சிறப்பாக அழைக்கப்பட்டனர்.

இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் நாடி பிடித்துப்பார்க்கும் மருத்துவம் புரிபவர் (Physician) மருத்துவன், மருத்தன், மா மாத்திரர், வைத்தியன் மற்றும் சவர்ணன் போன்ற சொற்களால் குறிப்பிடப்பட்டனர் (ஆசிரிய நிகண்டு).  இது போன்று அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் (Surgeon) சல்லியக்கிரியைப் பண்ணுவான், அங்க வைத்தியன் என்றும் அழைக்கப்பட்டனர்.

மருத்துவம் புரியும் பெண்கள் மருத்துவி என்றும், பிரசவம் பார்க்கும் பெண் மருத்துவச்சி என்றும், சிகிச்சைக்குத் துணை நிற்கும் பெண்கள் தாதி, செவிலி என்றும் அழைக்கப்பட்டனர்.

பரிகாரம் என்னும் சொல் நோய் நீக்கல், பராமரித்தல் என்று பொருள்படுவதால் பரிகாரி என்னும் சொல்லால் நோய் நீக்குபவரைக் குறிப்பிட்டனர்.  (பரியாரி என்ற சொல் இன்றும், கிராமங்களில் நாவிதர்களை அழைக்கும் சொல்லாக உள்ளது).

நச்சை நீக்கும் சிகிச்சை அளிப்பவர் விஷ வைத்தியன், விட ஹாரி என்று குறிக்கப்பட்டார்.

இசை ஞானி

மருத்துவர்கள் சங்க காலத்தில் சிறந்த இசைப் புலவர்களாக இருந்துள்ளனர்.  எ.கா.: மருத்துவர் நல்லச்சுதனார் - இவர் பரிபாடலில் முருகனைக் குறித்து எழுதியதோடு அப்பாடல்களில் 6, 8, 9, 10, 15, 19 ஆகிய பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.  (பரிபாடல்: ப. xxiii).  இதே போல உறையூர் மருத்துவன் தாமோதரனார் புறநானூற்றிலும், குறுந்தொகையிலும் பாடல்களை எழுதியுள்ளார்.  இவர் மூன்றாம் தமிழ்ச்சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  (புறம் - முன்னுரைப்பகுதி).

மற்றொரு பெருமையாக அரசருக்கு நல்வழி காட்டும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று சிலப்பதிகாரம் சுட்டும் ஐந்து, எட்டுப்பேர்கள் கொண்ட சபைகளில் மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.  இவர்கள் அரசருக்கும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மருத்துவ சேவை புரிந்து வந்திருக்கின்றனர்.  (சிலப்பதிகாரம்: பக். 146).  (K.A.(K.A.N. Sastri. The Cholar - P. 69)

இதைவிடப் பெருமைப்படும் விதமாக ஆனைமலைக் கல்வெட்டின்படி, மருத்துவப் புலவர் மாறன்காரி அல்லது மூவேந்த மங்கலப் பேரரையன் என்று அழைக்கப்பட்டவர், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் பராந்தகன் அரசவையில் முதல் அமைச்சராக இருந்தார்.  இம்மருத்துவர் கவித்துவத்தில் சிறந்த புலமை பெற்றிருந்ததற்காக மதுரகவி என்னும் பட்டமளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார். ($II VOL XIV NO2 Lines 1-4) இவருடைய தம்பி மாறன் எயினன் மாறன்காரி மறைவுக்குப் பிறகு இதே அரசவையில் அமைச்சராக இடம் பெற்றார்.

கி.பி. 1062 - 1067 - ஆம் ஆண்டைச் சேர்ந்த வீர இராஜேந்திர சோழனின் திருமுக்கூடல் கல்வெட்டின்படி,

“ஆலம் பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன்

அசுவத்தாம பட்டனுக்கு.....”

என வரும் கல்வெட்டு வரிகள் ஆலம்பாக்கம் என்ற ஊரிலிருந்து மருத்துவரை அழைத்து வந்து மருத்துவ சேவை புரிய ஏற்பாடு செய்திருப்பதை அறிய முடிகிறது.  இதன்படி திறமை, அனுபவம் ஆகியவற்றிற்காக அதிக அளவில் ஊதியம் கொடுத்து அரசர்கள் மருத்துவர்களைக் கூட்டி வந்து உயர்ந்த நிலையில் வைத்திருந்தது புலப்படுகிறது.

அக்காலத்தில் மருத்துவர்கள் சவர்ணன், வைத்தியன், மருத்துவன் சல்லியன், அங்க வைத்தியன் முதலிய அடைமொழிகளுடன் மற்றவர்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்டப்பெற்றுள்ளனர்.

எ.கா:  

1. சவர் அரையன் மதுராந்தகன் (ARE 248 / 249 / 1923)

2. களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறன் காரி (E1 VOL. VII./(E1 VOL. VII./N0.33: PP. 317 - 320)

3. அங்க வைத்தியன் கூத்தபெருமாள்   (ARE 429 / 1909)

எ.கா.: சோழர் காலத்தில் மருத்துவத் தொழில் புரிந்த பலர் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் அரசரோடு தொடர்புடையவர்கள்.  இவர்களின் பெயர்கள் சிலவற்றைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.  அவர்கள், சவர்ணன், அரையன் சந்திரசேகரன், கோதண்டராம அசுவத்தாம பட்டன், மங்களாதி ராசன் சீராளன் - என்பவர்கள்.  இம்மருத்துவர்கள் ‘சைவ சிகாமணி’, ‘சிவ கீர்த்தி கடகமெடுத்த கூத்தபிரான்’ எனச் சிறப்புப் பெயர் பெற்றிருந்திருக்கின்றனர் (நடன காசிநாதன் - அருண்மொழி ஆய்வுத் தொகுதி, சென்னை 1988 - பக். 165).

இது போலவே திறன் மிக்க மருத்துவர் சிறப்புப் பட்டத்துடன் சிகாமணி, வைத்திய சிகாமணி,  (ARE- 98 / 1927-28) வைத்திய ராஜா (ARE 125 / 1906), வைத்திய சக்கரவர்த்தி, (ARE 130 / 1906) வைத்தியப் புரந்தரன் என்று அழைக்கப்பட்டனர் என்று கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறது.

பரம்பரை மருத்துவம் புரிந்த குடும்பம் வைத்திய குலம், மருத்துவ குலம் என்று அழைக்கப்பட்டது.  (இன்று நாவிதர்கள் தங்களை மருத்துவ குலம் என்று அழைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.)

சங்க காலத்தில் தொழில்களுக்கேற்ப தனித்தனி வீதிகளில் அல்லது பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.  இதன்படி புகார் நகரின் அமைப்பைக் குறிப்பிடும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் “ஆயுர் வேத மருத்துவர் வீதி”-யைக் குறிப்பிடுவது அக்காலத்தில் ஆயுர்வேதம் மருத்துவச் சிகிச்சை இருந்துள்ளதைத் தெரியப்படுத்துகிறது.

இதே போல் மருத்துவக் குடும்பங்கள் வாழ்ந்த ஊர் மருத்துவக்குடி என அழைக்கப்பட்டது. எ.கா. தஞ்சை மாவட்டத்தில் திரைமூர் நாட்டைச் சேர்ந்த திருக்குரங்காடுதுறை கிராமத்தினருகில் மருத்துவக் குடும்பங்கள் வாழ்ந்த பகுதி மருத்துவக்குடி என்று அழைக்கப்பட்டது.  இன்றும் அப்பெயராலே அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  (FR. Heming Sway. Gazatteer of Thanjavur District(FR. Heming Sway. Gazatteer of Thanjavur DistrictVol. 1. P.216).

மருத்துவத்தை அறச் செயல்களுள் ஒன்றாகக் கருதினர்.  “மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்” என்ற நற்றிணைப் பாடல் வரி, மருத்துவனை (136) அறவோன் எனப் புகழ்கிறது.

சங்க காலத்தில் மருத்துவம் பார்க்க நோயாளி பெரும் பொருள் கொடுத்து மருத்துவம் பெற்றதாகவோ அல்லது மருத்துவர் நோயாளியிடம் பொருள் ஏதும் வாங்கியதாகவோ, எந்தச் செய்திகளும் அறிய இயலவில்லை.

பழந்தமிழ் நாட்டில் மருத்துவமானது இயற்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே மூலமாகக் கொண்டமைந்தது.  இயற்கையாகக் கிடைப்பதற்கு விலை கொடுக்க வேண்டிய சூழ்நிலை பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்பட வழிவகுக்கும் என்றும், அங்கப் பொருளாதார உரிமை தடைப்படும் என்றும் எண்ணப்பட்டது.  இதைக் கருத்தில் கொண்டே அக்கால மருத்துவத் துறையினர் இக்கோட்பாட்டினை எண்ணிச் செயல்பட்டுள்ளனர்.

சங்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் பொருளீட்டும் நோக்கம் ஏதுமின்றிச் சேவை மனப்பான்மையுடனே மருத்துவம் செய்து வந்துள்ளனர்.  எனினும் வசதியுள்ள நோயாளிகளுக்கு மருந்து தயாரிக்கும் போது, ஒரு பகுதியை வசதியற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒதுக்கிவிடுவர்.  இதனை ‘மருத்துவ பாகம்’ என அழைத்தனர்.  (இரா. மாதவன், மருத்துவ நோக்கில் தமிழரின் பொருளாதாரம், (Friday Seminar Paper - 111 T.S. 1965 / P. 37).

நாளடைவில் மருத்துவர்கள் தங்கள் தேவையைக் கருத்திற்கொண்டு பண்டங்களை வெகுமதியாகப் பெற்றனர்.  மருத்துவ சிகிச்சைக்குத் தவறாது கூலியினைக் கொடுக்க ஒளவையார் உலகநீதியில் வலியுறுத்துகிறார்.

“... (அஞ்சுபேரக்)... கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சிக் கூலி.”

“மகா நோவு தன்னைத் தீர்த்த மருத்துவன் கூலி.”    (உலக நீதி: 11)

இடைக்காலத்தில் மருத்துவமனைகள் தோன்றிய பொழுது நெல், மற்றும் பொற்காசு ஊதியமாக வழங்கப்பட்டன.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள்:

மருத்துவர்கள் மருத்துவத்தைத் தங்கள் சந்ததிக்கும், பயில விரும்பும் மற்றவர்களுக்கும் கற்பித்தல் உண்டு.  சிறந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள், ‘வைத்திய விருத்தி’ எனவும்,  ‘சல்லிய விருத்தி’ எனவும் வழங்கப்பட்டன என்பதைக் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது.

வைத்திய விருத்தி:

தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள அச்சுத மங்கலம் எனும் ஊரில் சோமநாத சுவாமி கோயிலில் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சோமநாத மங்கலத்து மகா சபையினர் தங்கள் ஊர்ப் பொதுவான நிலத்தை வைத்திய விருத்தியாக அளித்ததைக் குறிக்கிறது. (Nannilam(NannilamInscription Voll. TNSDA: 272 / 1978).

புதுக்கோட்டை திருவரங்குளத்தில் உள்ள ஹரிதீர்த்தேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய மன்னரின் குலசேகர தேவரினால் நிம்பவனம் என்ற இடத்திலுள்ள வயிச்சாச்சிரியன் என்பவனுக்கு வைத்திய விருத்தியாக நிலக்கொடை அளிக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.  (ARE(ARE280 / 1914; IPS Vol. II No. 575).

இது போலவே மருத்துவம் செய்யும் மருத்துவப் பண்டிதர்களுக்கு 12 வேலி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதாக இரண்டாம் குலோத்துங்கனின் 13-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு குறிக்கிறது. (நடன காசிநாதன், அருண் மொழி: ஆய்வுத்தொகுதி: பக். 164)

சல்லிய விருத்தி:

ஆயுதக் கருவிகளைக் கொண்டு சிகிச்சை செய்யும் மருத்துவம் சல்லியக்கரணி என்று அழைக்கப்பட்டது.  அத்தகைய மருத்துவக் கலையைப் பயிற்றுவித்துப் பரப்பும் பொருட்டு, சல்லிய மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலக்கொடை சல்லிய விருத்தி எனப்பட்டது.

முதலாம் இராஜேந்திரனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு (ARE 350 / 1907 - (கி.பி. 1016).  இராஜராஜனின் தமக்கை குந்தவையார் திருவிசலூரில் சல்லிய விருத்திக்கென நிலக்கொடை அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.

விஷ விருத்தி:

விஷக்கடிகளுக்கு மருந்தாக அமைந்த பச்சிலை மூலிகைகளை வளர்ப்பதற்குரியதாக மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் இறையிலி நிலம் விஷ விருத்தி என்று அழைக்கப்பட்டது. (SII Vol.(SII Vol.V.No. 260 - ARE 156 / 1920).

இடைக்காலத்தில், திறமை மிக்க மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.  மேலும் எந்த ஒரு கொடை அல்லது மானியம் எந்தவொரு நோக்கத்துடன் வழங்கப்பட்டாலும், அதில் ஒரு பங்கு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எ.கா.  பல்லவ நந்திவர்மன்களின் ஆட்சிக் காலத்தில் குமாரமங்கல வெள்ளத்தூர் என்னும் கிராமம், பொது மானியமாக வழங்கிய போது அதில் ஒரு பங்கு ஒரு மருத்துவனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  (க்ஷ. சுயஅய சுயடி.  (B. Rama Rao. “Interesting Aspects of Health Care in Tamil(B. Rama Rao. “Interesting Aspects of Health Care in TamilNadu History” Article Studies in History of Medical andScience (Ed.) Hakeem Abdul Hakeem Vol. XIV. No. 1-2,New Delhi - (1995 - 1996) Rp. P.-67).

சில நேரங்களில் சிறப்புக்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. எ.கா. குந்தவை அரசி சவர்ணன், அரையன், சந்திரசேகரன் என்ற மருத்துவரின் சேவையைப் பாராட்டி, 12 காசிற்கு நிலமும், வீடும் வாங்கி நன்கொடை அளித்துள்ளார்.  (ARE SIE 1924 - 25 - P.25)..  சவர்ணன், அரையன், மதுராந்தகன் எனும் மருத்துவனுக்கு அவர் சேவையைப் பாராட்டி, நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. (AR SIE 1923 - 23 P.16; 1925 - 24 / P. 16).

இதே போல இராஜேந்திர சோழனால் ஒரு மருத்துவருக்கு, திருவாமாத்தூரில் நிலம் கொடையாகவும், (ARE 182 -19 / 1922) சோழன் கோனேரின்மை கொண்டானின் கல்வெட்டில் வைத்திய சிகாமணி என்ற பட்டம் பெற்ற மருத்துவருக்கு நிலம் கொடையாகவும், (ARE 98 /1927 - 28; Nannilam Ins. Vol. II. TNSDA No. 322 - 1978) திருபுவன சுந்தரத்தேவரின் கல்வெட்டின்படி சவர்ணன் பராசிரியன் ஆதித்த தேவன் திருவம்பலப்பெருமாள் என்ற அங்க வைத்தியருக்கு வானவன்மாதேவி எனும் கிராமம் இறையிலி கொடையாக (TAX - Free Grant)  வழங்கப்பட்டுள்ளது.  (SII Vol. XXII pt. 1. ARE 13 /1906).

சல்லியக் கிரியா போகம்:

இதுபோல அறுவை மருத்துவன், அரையன், உத்தம சோழன் என்ற ராஜேந்திர சோழ பிரயோகத்தரையனுக்கு 4 வேலி, 4 மா சல்லியக்கிரியா போகமாக (அறுவை மருத்துவத்தை விருத்தியடையச் செய்வதற்காக மானியம்) வழங்கப்பட்டது.  (ARE No. 350 / 1907).

வைத்திய போகம்:

குந்தவையால் வண்ணக்கண்ணுவன், அரையன், பாராசுரன் அம்பலவன், மங்கலப் பேரரையன் என்ற மருத்துவனுக்கு திருநல்லம் மக்கள் உடல் நல மருத்துவப் பராமரிப்புக்காக  ஆதுலர் போகம் என்ற பெயரில் (நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட) கொடை வழங்கப்பட்டுள்ளது.  (ARE(ARE639 / 1909; Sii Vol. XXVI No. 684 & P (IV).

இவ்வைத்திய போகம் என்பது மருத்துவர் களுக்கும் அவர்கள் சந்ததியினருக்கும் அனுபவித்துக் கொள்ளும் பொருட்டு, மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் நிலம் ஆகும்.

உதயேந்திரம் மற்றும் தண்டந்தோட்டம் செப்பேடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், திறமை வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கும் பொருட்டு, வைத்திய போகம் என்ற நிலப் பங்கினை மருத்துவர் களுக்குக் கொடுத்து வந்த செய்திகளைத் தெரிவிப் பதாக டாக்டர். சி. மீனாட்சி அவர்கள் தெரிவிக் கிறார்கள். (அறிவியல் தமிழகம்: பக். 128- 152).

“விளை நிலமாய் இறைவயல் நிலமும் வைத்திய போகமும்”  என்பது வைத்திய போகம் பற்றிய கல்வெட்டு வாசகமாகும்.  (ARE 307 / 1902:(ARE 307 / 1902:Sii Vol. ii No. 936).

விஷ ஹார போகம்:

நச்சுக்கடியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விஷ வைத்தியர்களுக்கு ‘விஷ ஹார போகம்’ என்ற பெயரில் கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு பாம்பின் விஷத்தை நீக்கிய விடகாரி மருத்துவன் ஒருவனுக்கு விஷஹார போகமாக நிலம் வழங்கப்பட்ட விவரத்தைத் தருகிறது. (Sii.(Sii.Vol. III, No. 177: ARE 36 / 1898).

முதலாம் ராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேட்டுத் தொகுதியிலிருந்து, விஷ முறிவுக்குப் பயன்படும் மூலிகைச் செடிகளைப் பயிரிடுவதற்காக ‘விஷ போகம்’ என்ற பெயரில் மருத்துவர்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.  (கரந்தை செப்பேட்டுத் தொகுதிகள் எண். 11, பாடல் 224)

மருத்துவப் பேறு:

கிராம மருத்துவருக்கு வாழ்க்கைச் செலவுக்கு வருவாயாக வரி இல்லாமல் விடப்பட்ட நிலம் மருத்துவப் பேறு என அழைக்கப்பட்டது.

“இன்னாட்சி ஆரப்பாழ் நாய் வாலமும்

மருத்துவப் பேறும் பள்ளியும் உட்பட.” (Sii: Vol. 11 No.4)

வைத்தியக் காணி:

நோயாளிகளிடம் எதையும் எதிர்பாராது மருத்துவம் புரியும் வைத்தியர்களுக்கு அரசாங்கத்தாலோ, கிராமசபை மூலமாகவோ நிரந்தரமாகப் பரம்பரை உரிமையாக அனுபவிக்க வழங்கப்படும் நிலம் “வைத்திய காணி,” என வழங்கப்பட்டது.

எ.கா.: செங்கல்பட்டு மாவட்டம், குன்னத்தூரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள ராஜராஜ தேவனின் 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் “வைத்தியக் காணி” என்ற பெயரில் சவர்ண காஸ்யபன் குலோத்துங்க சோழன், மங்களாதி ராஜன் சீராள தேவன் என்ற மருத்துவனுக்கு நிலம் கொடையாக வழங்கப்பட்ட விவரங்கள் காணப்படுகின்றன.

மருத்துவக் காணி வழக்கு:

மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட “வைத்தியக் காணி” நிலத்தை முறைதவறி அனுபவித்து வந்தமைக்காக காஸ்யபன், அரையன் அறை சாண ராஜ கேஸரி, மங்கலப் பேரரையனின் காணி நிலமும், மனையும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு, மீண்டும், அவனுக்கு அந்த நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றிக் கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் ராஜேந்திரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. (நடன காசிநாதன், அருண்மொழி ஆய்வுத் தொகுதி - 1988: பக். 165-6)

இவ்விவரங்களிலிருந்து மருத்துவர்கள் பழங் காலத்தில் நன்னிலையில் வைக்கப்பட்டிருந்ததையும், கண்காணிப்பிலும் இருந்ததையும் உணர முடிகிறது.

Pin It