செங்கதிரின் உள்ளாடைக் கருந்துளையாம்.

               செம்பெரியார் மேலாடைக் கருஞ்சட்டையாம்

வெண்முகத்தின் சுடர்நெற்றி வெள்ளி வீதியாம்

               வியன் கன்னம் இரண்டில் வெண்முகில் புரளுமாம்

பொன் கைவிரல் இதழ்ப்பற்றிச் செந்தடி பொங்குமாம்

               போர்ப்பண்பின் ‘கருவண்ணம்’ திராவிடக் குறியீடாம்

வெஞ்சிறைகள் போராட்டக் காவல் கோட்டைகளாம்.

               வேங்கைக்கும் பெரியார்க்கும் ‘பாய்ச்சல்’ வேட்டைகளாம்.

 

தீப்பந்தாம் வெங்கதிரில் பிதிர்ந்து வீழ்ந்த

               தீப்பிழம்பின் உருண்டைதான் பூமியாகும்

பூப்பந்தாய் ஆவதற்குக் கோடி ஆண்டாம்.

               புத்துயிரின் வளர்ச்சியிலே மாந்தன் தானே

மாக்களினும் ஆறாம் அறிவினால் தேர்ந்தான்

               மாப்பொய்யர் ஆரியர் அவ்வறிவை ஏய்த்தார்.

நோக்குற்ற பெரியார்தாம் வெண்டெழுந்த

               நூற்றாண்டாய் அவ் ஏய்ப்பைச் சுட்டித் தீய்த்தார்.

 

தேர் இழுத்தார் மண்தெருவில் ஆத்திகர்கள்

               தெளிவுடைய பகுத்தறிவுப் பாதை தன்னில்

ஊர் இழுத்தார் நாத்திகத்தின் தலைவர் தாமே.

               உயிருடனே வயிற்றதனை வளர்க்கப் பூணூல்

மார்பினத்தார் மதமாயை தனை வளர்த்தார்

               மடத்தனத்தின் கீழ்மைதனை வெளிப் படுத்திச்

சீரினத்துத் திருக்குறளை மனுநூலுக்குச்

               செருப்புரட்சி நூலென்றே பெரியார் ஆர்த்தார்.

 

ஒரு பெரியார் விழிப்பினாலே பல நூற்றாண்டின்

               ஒரு கோடித் தலைமுறைகள் உறக்கம் தீர்ந்து

தெருக்கோடிப் புழுதியாகக் கண்ணில் வீழ்ந்து

               நெருக்கடியாய் உறுத்திய ஆரியத்தைத் தட்டிப்

பெரும்புரட்சித் தமிழ்நிலத்தில் வெடித்ததாமே.

               பெருமாற்றப் போர்க்குரல் வான் கிழித்ததாமே

மருட்டிநின்ற பார்ப்பனியம் வெருண்டதாமே

               மறுமலர்ச்சிப் புதுவிடியல் ஒளிர்ந்ததாமே.

 

ஈராயிரம் ஆண்டாய் விளையா மானம்

               ஈரோட்டில் பயிராகி மக்கள் பெற்றார்.

போராயிரங் களங்கள் புரிந்திட்டாலும்

               பூக்காத குமுகமாற்றம் ‘ஒருவர்’ செய்தார்.

தேர்; ஆயிரங்கோயில்; கடவுள் இல்லை

               திராவிடத் தலைவன் மானுடத்தின் எல்லை

ஓராயிரம் தடை வரினும் பெரியாற்றார்

               ஓடி ஓடிப் பல துறைகள் மலர வைத்தார்.

Pin It