6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார்.
அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , "விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லாக் கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணியதற்குக் காரணம். இன்றைக்கு விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் போராளிகளாக.
அப்படிப்பட்ட எங்களுடைய இயக்கத்தின் கொடியினை உண்மையான ஒரு போராளியைக் கொண்டு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், எனவேதான் தகுதியான ஒரு போராளியைக் கொண்டு, எங்கள் விவசாயத் தோழர்கள் எல்லோரின் ஒப்புதலோடு தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கொண்டு எங்கள் இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்றோம்” என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்
தற்போது இரு நாட்களுக்கு முன்பு கோவையில் 'நாம் திராவிடர் கட்சி' என்ற புதிய கட்சி துவக்க விழாவில் அந்தக் கட்சியின் கொடியை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தை விட்டு வாக்கு அரசியலுக்கு வரப் போவதாக மிரண்டு போய் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சீமானின் தம்பிகள்.
அரசியல் விடுதலைக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தோடும், பண்பாட்டு விடுதலைக்கு திராவிடர் என்ற அடையாளத்தோடும் தான் பெரியார் முதற்கொண்டு இயக்கம் நடத்தி வருவதையும் பலமுறை எடுத்துச் சொல்லியும் இவர்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை.
முதன்மை எதிரியான இந்திய தேசியம் என்ற பெயரில் பார்ப்பனர்களின் குட்டு வெளிவந்து விடக்கூடாதென்றும், ஓரணியாய் தமிழர்கள் திரளக் கூடாதென்றும் பார்ப்பனர்களின் மறைமுக செயல்திட்டமே மபொசி முதற்கொண்டு சீமான் வரை பேசி வரும் தமிழ்த் தேசியம்.
நான் பீகாரைச் சேர்ந்த திராவிடன் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு பாபு ஜகஜீவன்ராம் ஒலித்த குரல் போல தற்போது வங்காளத்தில் இருந்து திராவிடன் என்று ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இங்கே இன்னமும் தமிழர்களைத் தவிர வேறு யாரும் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை என்று பேசித் திரிகின்றனர். ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மக்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைப்பதில்லையே என்றும் வரலாறு தெரியாமல் புலம்பித் திரிகிறார்கள்
புரட்சியாளர் அம்பேத்கர் ஆய்வுப்படி ஆரியர்களால் தென்னிந்தியாவிற்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் தான் திராவிடர்கள் என்ற வரலாற்று உண்மை ஒருபுறமிருக்க, அயோத்திதாசப் பண்டிதர் முன்னெடுத்த திராவிடர் என்ற சொல்லை, தந்தை பெரியார் 97 சதம் வாழும் பார்ப்பனல்லாதோர் ஏன் தங்களைக் குறிக்க அல்லாதோர் என்று இருக்க வேண்டுமென்று கருதி திராவிடர் என்று குறிச்சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்.
திராவிடர் என்ற சொல் பிடிக்கவில்லையெனில் பார்ப்பானை நீங்கிய மக்கள் திரளுக்கு வேறு ஏதேனும் பொருத்தமான சொல்லைக் கூறினால் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தவர் பெரியார்.
மபொசி, சீமான் வரிசையில் திராவிடத்தை கொச்சைப்படுத்த அடுத்து யார் வந்தாலும் அவர்களுக்காக அறிவாயுதத்தைத் தயார் செய்து கொடுத்து விட்டே போயிருக்கிறார் ஈரோட்டுக் கிழவன்.
- விஜய்குமார்