இந்த இதழில் - பெரியாரியலின் பன்முகப் பார்வைகளை அலசும் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2019 ஆகஸ்ட் 22 முதல் 25 வரை தஞ்சையில் 'வேளாங்கன்னி கலை அறிவியல் கல்லூரி' காட்சி ஊடகத் துறை மற்றும் ‘ரிவோல்ட்’ அமைப்பு இணைந்து ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் ஆய்வரங்கம் ஒன்றை நடத்தின. அதில் பங்கேற்று ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், பெரியாரியம் குறித்து விரிவான ஆய்வுக் கருத்துகளை முன் வைத்தனர். பெரியாரியம் பற்றிய பல தொகுப்பு நூல்களை உருவாக்கிய பசு. கவுதமன் முயற்சியில் இந்த ஆய்வரங்கம் நடந்தது. அரங்கில் உரையாற்றிய தோழர்கள், எழுத்து வடிவில் வழங்கிய கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இனி வரும் இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வரும்.
கடவுள் - மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்ற எல்லையோடு பெரியாரியம் சுருக்கப்பட்டு விடுகிறது. மாறாக பெரியார் ஏன் இந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்து மக்களுடன் உரையாடினார்; போராடினார் என்பதற்கான அவரது சமத்துவ மனித நேயப் பார்வை முற்றாக இருட்டடிக்கப்பட்டு விடுகிறது.
இந்தியாவை இந்துக்களின் தேசம் என்று அறிவித்து அதற்கான குறியீட்டு நாயகன் ‘ஸ்ரீராமபிரான்’ என்ற சேதியை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனியம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியா பெரும்பான்மை இந்துக்களின் தேசம் என்ற புனைவு, மக்கள் பொதுப் புத்தியில் திணிக்கப்படுகிறது. அதற்காக வரலாறுகளைத் திரிக்கிறார்கள். புனைவுகளை வரலாறு என்று நிலைநாட்டத் துடிக்கிறார்கள். வேதகாலம் தொடங்கி ‘மோடி’ காலம் வரை பார்ப்பனியம் தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த புதிய புதிய உருமாற்றங்களை எடுத்து வருவதை நாம் புரிவதற்கும் உணர்வதற்கும் ‘பெரியாரியம்’ தந்த வெளிச்சம் தான் நமக்கு இன்று வழிகாட்டுகிறது. சமூக அரசியல் விடுதலைக்காக முன்மொழியப்பட்ட வேறு பல தத்துவங்களும்கூட பெரியாரியலை ஏற்க வேண்டிய கட்டாயத்தை சமூக எதார்த்தம் உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் வகையில் ஏராளமான புதிய இளைஞர்கள் இன்று பெரியாரியலை நோக்கி வருகிறார்கள். குறிப்பாக பெண்ணுரிமையையும் பெண் விடுதலையையும் ஏற்றுக் கொண்ட பெண்கள், பெரியாரியத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தங்கள் விடுதலைக்கும் சுயமரியாதைக்குமான சிந்தனைகளை பெரியாரிடமே தேடுகிறார்கள். வரலாற்றில் நிகழ்ந்துள்ள முக்கியமான இத்திருப்பம் பெரியாரியலுக்கு வலிமையான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
பெரியாரியம் - மதம் அல்ல; அது 'கெட்டித் தட்டிப்போன' மாற்றத்துக்கே உள்ளாக்க முடியாத பழமைவாதமல்ல. காலத்தின் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ‘நெகிழ்ச்சி’ப் போக்குகளை உள்ளடக்கியது. மனித ‘சமத்துவம் - சுயமரியாதை’ மட்டுமே அதன் இலக்கு; அந்த இலட்சியப் பாதையை மடைமாற்றிட புதிய முகமூடிகளை அணிந்து வரும் சக்திகளை எதிர்கொள்ளவும், அதன் புனைவுகளை தோலுரித்து முன்னேறிச் செல்லவும் பெரியாரியல் குறித்த ஆய்வுகளும் மக்கள் உரையாடல்களுமே நமக்கான கருத்தாயுதங்கள்.
அந்தப் புரிதலில், இந்த இதழிலும் அடுத்து வெளிவரப் போகும் இதழ்களிலும் இடம் பெறும் ஆய்வுகள் பெரியாரியல் நோக்கிய பயணத்துக்கு புதிய வெளிச்சங்களை பாய்ச்சும் என்று நம்புகிறோம்.
- நிமிர்வோம் ஆசிரியர் குழு