இந்த மாதம் 12ஆம் நாள் மும்பை ஐ.ஐ.டிஇல் தர்ஷன் சோலங்கி என்ற 18 வயதே நிரம்பிய முதலாமாண்டு கெமிக்கல் பொறியியல் மாணவர் தன்னுடைய கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி யில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ததில், ஒரு மாணவர், ஸ்டீபன், 14ஆம் தேதி இறந்து விட்டார். ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்திய ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான 23 ஐ.ஐ.டி மற்றும் 20 ஐ.ஐ.எம்களில் 2014 முதல் 2022 வரை 60 மாணவர் மரணங்களுக்கு மேல் நடந்துள்ளன. இந்த நாட்டின் உயர்ந்த கல்வி பீடங்கள் மாணவர்களுக்கு உகந்ததாக இல்லையா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.

மாணவர் தர்ஷனின் மரணத்தைத் தொடர்ந்து 400 பட்டியலின, பழங்குடி மாணவர்கள் படிக்கும் மும்பை ஐ.ஐ.டி.யில், அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டத்தின் ஆய்வுகளையும், அறிக்கைகளையும், பதிவுகளையும் பார்க்கக் கிடைத்ததில், பட்டியலின மாணவர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதாகவே உணர முடிகிறது.

மாணவர்களின் சுதந்திர நடமாட்டத்தையும், செயல்பாடுகளையும் குறைக்கும் வகையில் அவர்களின் விடுதிகளிலும், உணவு அறைகளிலும் சி.சி.டி.விக்கள் பொருத்தி கண்காணிப்பு நடப்பதாக அறிய முடிகிறது. முதல் தலைமுறையாக படித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களைக் குற்றவாளிகள் போல தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த மன உளைச்சலே அவர்களுக்குக் கல்வியைப் பற்றி பேரச்சம் உருவாகக் காரணமாகி விடும் அல்லவா?

கோவிட் பெருந்தொற்றின் போது கொண்டு வரப்பட்ட சமூக இடைவெளி, அடையாள நடைமுறைகளைப் பட்டியலின பழங்குடி மாணவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் காட்டி தொடர்ச்சியாகக் கடைபிடிப்பதும் அவர்களுக்குத் தீராத மன உளைச்சலைக் கொடுப்பதாகப் படிப்பு வட்டங்கள் தெரிவிக்கின்றன.

2016இல் கல்வி உதவித்தொகையை நிறுத்தி ரோஹித் வெமூலா என்ற பட்டியலின மாணவரைக் கொன்றது ஒரு உயர்கல்வி நிறுவனம். இது போன்ற கொடுமைகளை ஆளும் ஒன்றிய அரசு செய்யத் தயங்குவதே இல்லை. இந்த ஆண்டு (2023) முதல் பவுத்த, கிறித்துவ, இசுலாமிய, ஜைன, பார்சிய, சீக்கிய உள்ளிட்ட 6 சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கி வரப்பட்ட 5 ஆண்டுகளுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை நிறுத்தி இருக்கிறார்கள். இன்னும் பா.ஜ.க. அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு கல்வி உதவித் தொகைகளைச் சிறுபான்மை மற்றும் தலித் மாணவர்களுக்குக் குறைத்து வருகிறார்கள். பெரும்பாலும் எந்தப் பின்புலமும் இல்லாத பொருளாதார சிரமத்தில் இருக்கும் அந்த மக்கள், அரசின் கல்வி உதவித் தொகையை நம்பியே உயர்கல்விக் கனவைச் சுமக்கிறார்கள். வேருக்கு வெந்நீர் ஊற்றுவதைப் போல அவர்களின் கனவை முளையிலேயே கிள்ளி எறியத் துணிகிறது இந்த ஒன்றிய அரசு. பெரும்பாலும் இந்த மன உளைச்சல்கள், விளிம்பு நிலை மாணவர்களைப் படிப்பிலிருந்தும், அத்தோடு சாதிய உளவியலும் சேரும்போது வாழ்விலிருந்தும் அப்புறப்படுத்துகின்றன.

பார்ப்பனர்கள் இந்த நாட்டின் உயரிய அமைப்புகளில் இருந்து கொண்டு நடத்திய “தகுதி” நாடகங்கள் “EWS” என்னும் பெரு நாடகத்தால் அம்பலப்பட்டுப் போயுள்ளன. முதல் தலைமுறையாகப் புத்தகத்தை கையில் ஏந்திய ஒரு பழங்குடியின மாணவர் வாங்கும் 54 மதிப்பெண்ணைக் கூட வாங்க முடியாமல், “சரஸ்வதியின் பூரண கடாட்சம்” கிடைக்கப்பெற்றும், “மூளை பலம் கொண்ட” பார்ப்பன வித்துகள் 28 மதிப்பெண் வாங்கி, வங்கி வேலைகளில் நுழைவதையும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

 நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் அதன் வழி உயர் வேலை வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள பார்ப்பனீயம் செய்யும் சதி வேலைகள்தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்றால் மிகையாகாது. Indian Institute of Technology அல்ல, அது Indian Institute of Upper Castes என்று சொல்லக் கூடிய வகையில் உயர்சாதியினரின் பட்டறையாக ஐ.ஐ.டி.க்கள் நடைபெறுகின்றன.

2015-2022 வரையிலான ஆண்டுகளில், மும்பை ஐ.ஐ.டியில் மட்டும் 649 இடங்களுக்குப் பட்டியலின, பழங்குடி மாணவர்கள் மனு செய்துள்ளனர். ஆனால் கிடைத்தது என்னவோ 6 இடங்கள்தான். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல். பல துறைகள் ஒரே ஒரு பட்டியலின பழங்குடி மாணவரைக் கூட அனுமதிக்காமல் கதவைச் சாத்தி உள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாக ஒரு தொடர்ச்சியான தீவிர முன்னெடுப்பு தேவைப்படுகிறது.

நம் மாணவர்கள் ரோஹித் வெமூலா, ஃபாத்திமா லத்தீஃப் முதல், தர்ஷன் சோலங்கி, ஸ்டீபன் வரை அவர்களுடைய மரணத்திலும் ஒரு கனவை விட்டுச் சென்றுள்ளார்கள். இனி வரும் தலைமுறைக்காவது சாவை அருளாமல், வாழ்வை அருள நாம் உயர்கல்வி போராட்டத்தை முன்னெடுப்போம்!

- சாரதா தேவி

Pin It