anaimuthu 400தந்தை பெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, “பெரியார் பிறந்த நாளில், பெரியார் அன் பர்களின் பார்வைக்கும், சிந்தனைக்கும்” என்னும் தலைப்பில், 2014 செப்டம்பர் இதழில் வரப்போகும் என் கட்டுரையைக் குறித்து, 2014 ஆகத்து ‘சிந்தனையாளன்’ இதழில் பக்கம் 15இன் அடியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தேன்.

பெரியாரின் தன்மானக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறவர்கள் எல்லாக் கட்சிகளி லும், எல்லா இயக்கங்களிலும், எந்த அமைப்பையும் சாராத பெருங்கூட்ட மக்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சில செய்திகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதனாலேயே ‘பெரியார் அன்பர்கள்’ எனக் குறிப் பிட்டிருந்தேன்.

இனி, அச்செய்திகள் பற்றி எல்லோருடைய பார்வைக்கும் சிந்தனைக்கும் பின்கண்ட விவரங்களை முன்வைக்கிறேன். அருள்கூர்ந்து சிந்தியுங்கள்!

பெரியார் ஈ.வெ.ரா.விடம் படிந்துபோன முதன்மை யான இயல்பு என்ன?

எந்த ஒரு கோட்பாட்டை அவர் ஏற்றுக்கொண்டாரோ அக்கோட்பாட்டை நிறைவேற்றுவதற்குத் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொள்வார்; எல்லா வடிவங்களிலும் ஏற்ற பங்களிப்பைச் செய்வார்.

1904க்கும் 1926க்கும் இடையில் ஈரோடு வட்டாரத்தில் உள்ள பல கோவில் களின் நிருவாகியாக அவர் இருந்தார். கோவில்களில் நடைபெறவேண்டிய எல்லா நிகழ்ச்சிகளும் செப்பமாக நடைபெறும்படிப் பார்த்துக் கொண்டார்; கோவில்களின் வரும்படிகளைப் பெருக்கினார். உண்மையில் 1925 வரையில் அவர் கடவுள் நம்பிக்கையாளராகவே இருந்தார் என்பதைக் ‘குடிஅரசு’ இதழ்கள் வாயிலாகவும், அவர் எழுதிய பார்வையாளர் குறிப்புகள் வாயிலாகவும் எவரும் அறியலாம்.

இதில், அவர் நெஞ்சில் ஒரு புள்ளி விழுந்தது, 1922 அக்டோபரில், அருப்புக் கோட் டைக்கு அருகிலுள்ள பாலையம்பட்டியில்தான். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரசின் ஒரு செயலாளராக இருந்தார்.

அந்தப் புள்ளி என்ன? திராவிட மக்களில் சில பிரிவினர் தீண்டப்படாதவர் களாக - இந்துக் கோவில்களில் நுழையக் கூடாதவர்களாக இருக்கிறார்கள் - அந்த மானிட இழிவை ஒழிக்க வேண்டும் என்பது தான். “அத்தகைய தீண்டா மையை ஒழித்திடக் காங்கிரசு முயலவேண்டும்” என்பதை ஒரு தீர்மானமாக நிறை வேற்றிட, திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் முன்மொழிவு செய்தார். அத்தீர் மானத்தைக் காங்கிரசுப் பார்ப்பனர்கள் எல்லோரும் எதிர்த்தனர்.

பார்ப்பனரின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவர், திருப்பூரில் அன்றிரவு நடந்த காங்கிரசு பொதுக் கூட்டத்திலேயே, “இராமாயணமும் மனுநீதியும் தான் தீண்டாமையைக் காப்பாற்றுகின்றன. எனவே அவற்றை எரிக்க வேண்டும்” என்றே பேசினார். இந்த நிலைப் பாட்டில் அவர் இறுதிக் காலம் வரையில் மாறவே இல்லை. அது மிகவும் உண்மையே.

ஈரோடு நகர மன்றத் தலைவராக 1917 ஏப்பிரல் முதல் 1919 சூலை வரையில் பணியாற்றினார். அக் கட்டத்தில் சேலம் நகராட்சித் தலைவராக சி. இராச கோபாலாச்சாரியார் இருந்தார்.

அவரும், பி. வரதராசலுநாயுடுவும் 1917-1919இல் செல்வாக்கு மிக்க காங்கிரசுத் தலைவர்கள். அவர்கள் இருவரும், ஒரு வழக்குத் தொடர்பாக, அடிக்கடி மது ரைக்குச் செல்வார்கள். அப்படிப் போகுந்தோறும், ஈரோட்டில் ஈ.வெ.ரா.வைச் சந்திப்பார்கள். காங்கிரசில் ஈ.வெ.ரா. சேரவேண்டும் என்று இருவரும் தூண்டி னார்கள். அதற்கு ஈ.வெ.ரா. இசைந்தார்.

அதேநேரத்தில், 1916 இறுதியில் தோன்றிய தென் னிந்தியர் நல உரிமைச் சங்கம் ஒர் அரசியல் கட்சியாக முகிழ்த்தது. அவர்கள் அரசு வேலைகளிலும், இந்திய - மற்றும் மாகாணச் சட்டமன்றங்களிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பனர் அல்லாதார் தங்களுக்கு உரிய பங்கைப் பெறவேண்டும் என்பதைக் கொள்கை யாக அறிவித்தார்கள். அதன் ஒரு பகுதியை 1919 இந்திய அரசுச் சட்டம் ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான், ஈ.வெ.ரா. காங்கிரசில் சேர நேர்ந்தது. அப்போது, காங்கிரசு பதவிக்குப் போகுங் காலத்தில், அரசுப் பதவிகளிலும், சட்டசபைப் பதவிகளி லும் காங்கிரசுக் கட்சி 50 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்கிற நிபந்தனையை ஆச்சாரியார், நாயுடு இருவரிடமும் சொல்லிவிட்டே, காங்கிரசில் சேர்ந்தார்.

காங்கிரசில் சேர்ந்த ஈ.வெ.ரா., “காங்கிரசு பதவிக் குப் போகும் காலத்தில், எல்லாப் பதவிகளிலும் 50 விழுக்காடு இடங்களைப் பார்ப்பனரல்லாதாருக்குத் தர வேண்டும்” என்ற தீர்மானத்தை, 1919 திருச்சி கமிட்டிக் கூட்டம் முதல் 1925 காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு வரை எல்லாச் சமயங்களிலும் முன்மொழிந்தும், வழிமொழிந் தும் வாதாடினார்.

1919இல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வெ.ரா., காந்தியார் 1920இல் அறிவித்த நிர்மாணத் திட்டங்களை நிறை வேற்றுவதற்குத் தம்மை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டார். அவை யாவை?

1. தீண்டாமை ஒழிப்பு.

2. கள்குடி ஒழிப்பு.

3. அந்நியத்துணி ஒழிப்புக்காக, கதர் உற்பத்தி, கதர் உடுத்தல் என்பவையே அவை.

இந்தியாவிலேயே 1921இல், ஈரோட்டில் கள்ளுக் கடை மறியலில் முதன்முதல் ஈடுபட்டவர் அவரே; கொங்கு மண்டலம் முழுவதிலும் கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் சென்று கதர் கட்டுவதையும், கதர்க்கடைகள் திறப்பதையும் பெருக்கியவர் அவரே; தீண்டாமை ஒழிப்புக்காக, வைக்கத்தில் 1924-25இல் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் குடும்பத்து டனும் உறவி னர்களுடனும் பங்கேற்றவர் அவரே.

தம் உழைப்பால் வளர்ந்த காங்கிரசின் எல்லா நிலைக் கமிட்டிகளிலும், கதர் இயக்கக் (Board) கமிட்டி களிலும், மாத ஊதியம் தரும் கதர்க்கடை வேலைகளிலும் பார்ப்பனரல்லாதாருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரவேண்டும் எனப் போர்க்குரல் எழுப்பினார்.

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் அரசுப் பதவி களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு கேட்ட அதே நேரத்தில் - ஈ.வெ.ரா. காங்கிரசுக் கட்சியின் எல்லா நிலைக் கமிட்டிகளிலும் 50 விழுக்காடு ஒதுக்கீடு கோரினார்; காங்கிரசு, பதவிக்குப் போகக்கூடாது என்று உறுதிபடக் கூறினார்; அப்படிப் போக நேரிட்டால் அரசுப் பதவிகளில் 50 விழுக்காடு பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரினார். இதில் பிசிறே இல்லை.

இந்தச் சூழலில், காங்கிரசின் ஒரு பிரிவைச் சார்ந்த சுயராஜ்யக் கட்சியினர் மாகாணச் சட்டமன்ற - மத்திய சட்டமன்றப் பதவிகளுக்குப் போட்டியிட்டார்கள்.

1923 தேர்தலில், சென்னை மாகாணத்தில், சட்ட மன்றத் தேர்தலில் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில்-நீதிக்கட்சி 61 இடங்களிலும், சுயராஜ்யக் கட்சி 11 பொது இடங்களி லும், சுயேச்சையினர் 7 இடங்களிலும், சட்டசபை எதிர்ப் புக் கட்சியினர் (Anti-Ministerial Party)  17 இடங்களி லும் வெற்றி பெற்றனர். பனகல் அரசர் தலைமையில் இரண்டாவது அமைச் சரவை அமைந்தது.

ஆனால் 1926 நவம்பர் தேர்தலில் நீதிக்கட்சி 22 இடங்களிலும், காங்கிரசு சுயராஜ்யக் கட்சி 41 இடங் களிலும், சுயேச்சையினர் 58 இடங்களிலும் வெற்றி பெற்றனர். நீதிக்கட்சி தோற்றது.

டாக்டர் ப. சுப்பராயன் தலைமையில் 1926இல் “சுயேச்சைகள் அமைச்சரவை” அமைந்தது. அந்த அமைச்சரவையில் பத்திரப் பதிவு அமைச்சராக இருந்த எஸ். முத்தய்யா முதலியார் தான், 1927இல் தொடங்கி, 1929க்குள், துறைவாரியாக நிருவாக ஆணைகள் மூலம் - நீதிக்கட்சி ஆட்சியில் 1921, 1922, 1924ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள் கை ஆணைகளை அமல்படுத்தினார்.

ஆனாலும் என்ன? பணம் படைத்த நீதிக்கட்சியின் குறுநில மன்னர்களும், பட்டம் பெற்ற அமைச்சர்களும் தலைவர்களும் - பதவி நாற்காலிகளுக்கு போட்டிக்கு மட்டும் பார்ப்பனர் எதிர்ப்பு - பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று கூவிக் கொண்டு, பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனப் புரோகிதத்துக்கும், பழமைக்கும் பாதுகாப்பாக இருப்பது பற்றி இவர்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்ற உணர்வை முதன் முதலாகத் தெளித்தவர் ஈ.வெ.ரா. தான். “பார்ப்பனரல்லாதாரின் சுயத்தை - சுயமரியா தையைக் காப்பாற்றிட ‘பார்ப்பனரல்லாதார் சுயமரியா தைச் சங்கம்’ ஒன்றை உடனே தொடங்குங்கள்” என்று, ஒரு புதிய தன்மானச் சிந்தனையை முதன்முதலாக விதைத்தவர், 1926 நவம்பரில் ஈ.வெ.ரா. தான்.

நீதிக்கட்சித் தலைவர்களின் “சுயமரியாதை அற்ற தன்மையை”ப் பின்வரும் செய்திகளால் நாம் உணரலாம்.

சர். பி.தியாகராயர் துணி வணிக மன்னர்; சென்னை மாநகராட்சியின் முதலாவது தலைவர்; பி.ஏ. பட்டம் பெற்றவர். அவர் மயிலை கபாலீசுவரர் கோவில் திரு விழாவுக்குக் கை நிறையப் பணம் கொடுத்தார். அவர் திருவிழாவுக்குப் போனார். என்ன நடந்தது? அவரிடம் நகராட்சியில் ஏவலராக இருந்த பார்ப்பான் விழா மேடையில் அமர வைக்கப்பட்டான். தியாகராயர், மேடைக்கு எதிரே, தரையில் விரிப்பில் உட்கார வைக் கப்பட்டார் - “பார்ப்பனிய பக்தி”க்கு, அவர் அடிமை என்பதால்; அவர் சூத்திரர் என்பதால்.

அமைச்சராக இருந்த எ°. முத்தய்யா முதலியார், உத்தியோகத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கக் கருவியாக இருந்தார். ஆனால், அமைச்சரான அவர், ஒரு தடவை தில்லிக்குப் போன போது, ஒரு பார்ப்பன சமையல்காரரை உடனழைத்துச் சென்றார்; காலை யில் செபம் செய்யப் பஞ்சலோகச்  செ(h)ம்பை எடுத்துச் சென்றார். தஞ்சாவூர் முழு இலைக்கட்டைக் கையோடு எடுத்துச் சென்றார்; என்பதை - மக்கள் உரிமை அமைப் பின் தலைவர் நீதிபதி தார்க்குண்டே, என்னிடம் 1986ஆம் ஆண்டு இறுதியில் தில்லியில் அவருடைய வீட்டில் கூறினார்.

அப்போது எம்.என். ராயின் நூற்றாண்டு விழாமலர் வெளியிடப்பட்டது. எம்.என்.ராய், 1941இல் சென்னை சென்ட்ரலில் வந்தி றங்கியபோது, ஈ.வெ.ரா.வும், முத்தய்யா முதலியாரும் வரவேற்றனர். அந்த வரவேற்புப் படத்தை ராய் அவர்களின் நூற்றாண்டு மலரில் வெளியிடக்கோரி, தார்க்குண்டேவிடம் கேட்டேன். அப்போதுதான் மேலே கண்ட விவரங்களைச் சொன்னார்.

1926 நவம்பரில் பார்ப்பனர் அல்லாதார் சுயமரியா தைச் சங்கத்தை அமைத்திட ஆதரவு திரட்டிட வேண்டித் தன்னுடன்வந்த மேதை ஏ.இராமசாமி முதலியார், முன்னாள் முதலாவது அமைச்சர்; பனகல் அரசர் இருவர் முன்னி லையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை யில் ஈ.வெ.ரா. பின்வருமாறு பேசினார்: “நம்ம பனகல் அரசர் முன்னாள் முதலாவது அமைச்சர் பெரிய குறுநில மன்னர். ஆனால் அவர் சத்திரியன் என்று நம்பிக் கொண்டு பூணூல் போட்டிருக்கிறார்; உச்சிக் குடுமி வைத்திருக்கிறார் - (அது சரிகைத் தொப்பிக்கு உள்ளே இருந்தது); பஞ்சக்கச்சம் கீழ்ப்பாய்ச்சிக் கட்டியிருக் கிறார். ஆனா லும், அவர் சூத்திரரே.

நம்ம இராமசாமி முதலியார் சிவப்பு ஒற்றை நாமத் தோடு இருக்கிறார். அவரும் சூத்திரரே.

இவர்கள் பார்ப்பனியத்தைக் கைவிட வேண்டும்” என்றே பேசினார்.

இவ்வளவு முயற்சிகளின் விளைவாக, 26.12.1926 அன்று, மதுரையில், பார்ப்பனரல்லாதார் பத்தாவது மாகாண மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டதுதான், “சுயமரி யாதை இயக்கம்”.

அம்மாநாட்டின் நோக்கங்கள், இன்றியமையாத தன்மைகள் பற்றி 1926 நவம்பர் மாத ‘குடிஅரசு’ இதழ் களில் விரிவாகவே ஈ.வெ.ரா. எழுதியுள்ளார்.

அவற்றை அடிப்படையாகக் கொண்டு, 26.12.1926 மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3ஆவது தீர்மானம் வருண சாதி ஒழிப்புப் பற்றியது. 3(ஆ) தீர்மானம் தீண்டாமை ஒழிப்புப் பற்றியது.

4ஆவது தீர்மானம் பின்வருவது.

“பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்கள் தங்களது சுப, அசுப சடங்குகளுக்குத் தங்களை விடப் பிறவியில் உயர்ந்த வகுப்பார் என்கிற எண் ணத்தின் பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு செய்துகொள்ளுவதில், நாமே நம்மைத் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புக்கொள்வதாயிருப்பதாலும், இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதை யை அழிப்பதற்கு ஆதாரமாயிருப்பதாலும், இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.”

இதன் கருத்து என்ன? பார்ப்பனப் புரோகிதர் நம்மை விட உயர்ந்தவர் என்கிற எண்ணத்தின் பேரில், அவர வர் வீட்டு இன்ப நிகழ்ச்சிகளுக்கும், துன்ப நிகழ்ச்சி களுக்கும் அவர்களை அழைப்பது நம் சுயமாரியா தையை - தன்மானத்தை - இனமானத்தை - தன் மதிப்பை அழிக்கிறது என்பதே ஆகும்.

எனவே, பார்ப்பனப் புரோகிதரை அழைப்பது, அவர் கள் சம°கிருதத்தில் மந்திரங்களை ஓதச் செய்வது, தீ வளர்த்து மணமக்கள் தீக்குழியைச் சுற்றி ஏழு தப்படி கள் வரவேண்டும் என்பது ஆகிய புரோகித - புராணி கத் திருமணத்தை - சுபநிகழ்ச்சியை நாம் நடத்திக் கொள்ளக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.

அதேபோல் சாவு முதலான துன்ப நிகழ்ச்சிகளான - அசுப நிகழ்ச்சிகளுக்கும் பார்ப்பனப் புரோகிதரை அழைக் கக் கூடாது என்பதும் இதன் நோக்கம் ஆகும்.

மேலே கண்டதில் அடங்கியுள்ள இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் யாவை?

நம் பெண் கருவுற்றவுடன் வளைகாப்பு நடத்துதல், குழந்தை பெற்றவுடன் தீட்டுக்கழிக்கப் புண்ணிய வசனம் செய்தல், குழந்தைக்கு முடி இறக்குதல் - காது

குத்துதல் - குழந்தைக்குப் பெயர் வைத்தல் - பள்ளியில் சேர்த்தல் - பெண் பருவம் அடைந்தால் வீட்டுக்கு அழைத்தல், திருமணம் நடத்துதல், புதுமனை புகுதல், வீடுகட்ட கடைக்கால் தோண்டுதல்; கிணறு வெட்ட கடைக்கால் போடுதல், நல்லேர் கட்டுதல், வணிகம் தொடங்கச் சடங்கு செய்தல் முதலிய எண்ணற்ற இன்ப நிகழ்ச்சிகளுக்கு நாம் பார்ப்பனப் புரோகிதனை அழைக் கிறோம்.

அதேபோல் நம் வீட்டில் ஒருவர் இறந்துபோனால், சாதி வழக்கப்படி, 5ஆம் நாள், 10ஆம் நாள், 16ஆம் நாள் கருமாதி செய்வதற்குப் பார்ப்பனப் புரோகிதரை அழைக்கிறோம்; இறந்தவருடைய மகன் ஆண்டு தோறும்தான் சாகும் வரையில் திதி கொடுக்கப் பார்ப் பனப் புரோகிதரை அழைக்கிறோம்.

இவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே பார்ப்பனப் புரோகித விலக்கம் ஆகும். இவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல பார்ப்பனரல் லாத குடும்பத்தினர் 1926க்கு முன்னரே மேற்கொண்ட னர்.

ஆனால் 1928இல் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள சுக்கில நத்தத்தில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த திருமணமே முதலாவது சுயமரியாதைத் திருமணம் என்பது வரலாறு.

பார்ப்பனப் புரோகிதத்தை விலக்கிவிட்டுச் செய்யப் படுகிற ஒரு இந்துக் குடும்பத் திருமணம் இந்துச் சட் டத்தின்படி செல்லாது என்பது நம் பேரில் சுமத்தப்பட்ட அவமானம் ஆகும்.

அதாவது அப்படித் திருமணம் பெற்ற ஒரு பெண் மனைவி என்று கருதப்படாமல், ‘வைப்பாட்டி’ என்றே சட்டப்படி கருதப்படுவார்; அந்தப் பெண் ணுக்குப் பிறக்கிற பிள்ளைக்குத் தகப்பன் சொத் தில் வாரிசு உரிமை கிடையாது என்பதும் சட்டம். இவ்வளவு இயலாமைகள் இருந்தபோதிலும் மிகத் துணிச்சலோடு எண்ணற்ற குடும்பத்தினர் பார்ப் பனப் புரோகித விலக்கத் திருமணத்தை நடத்தினர்.

அப்படி 14.4.1934-இல், திருச்சியில், ஈ.வெ.ரா. நடத்தி வைத்த - மனைவியை இழந்த சிதம்பரம் (செட்டியார்), கணவனை இழந்த இளம் பெண் ரங்கம் மாள் (ரெட்டியார்) ஆகியோரின் சுயமரியாதைத் திரு மணம், இந்துச் சட்டப்படி செல்லாது என, 1953-இல், 19 ஆண்டுகள் கழித்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. (“விடுதலை”, 28.7.2014, பக்கம் 4).

இது தமிழினத்துக்கு நேர்ந்த அவமானம்.

ஆனால் அதற்குப் பிறகும் - இந்துச் சட்டம் பற்றிக் கவலைப்படாமல், ஆண்டுதோறும், ஈ.வெ.ரா.வை அழைத்தும், அவருடைய தொண்டர்களை அழைத்தும் நூற்றுக்கணக்கான திருமணங்களும், நீத்தார் இறுதிக் கடன் நிகழ்ச்சிகளும், புதுமனை புகுவிழாக்களும் தொடர்ந்து நடைபெற்றன.

ஆனால் சொத்துப் பிரிவினை வழக்கு என்று வந்தால், சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்குப் பிறந்த பிள்ளைக்குத் தகப்பன் சொத்தில் பங்கு கிடையாது - அந்தப் பெண்ணுக்கு (மனைவிக்கு) வாழ்க்கைப் பணம் பெறுகிற உரிமை மட்டுமே (ஜீவனாம்சம்) உண்டு என்கிற உரிமை மறுப்பு - ஆபத்து தொடர்ந்து நீடித்தது. சுயமரியாதைக் காரர்கள் அதைத் துச்சமாக மதித்தனர்.

இது எப்போது நீங்கிற்று? 6.3.1967-இல் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற-பெரியாரை நன்கு அறிந்த அறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்கள், 28.11.1967-இல் இந்து திருமண (தமிழ் நாடு திருத்த) மசோதாவை நிறைவேற்றி, அது 1968-இல் நடப்புக்கு வருகிற வரையில் நீடித்தது. அன்றைய நாள் வரையில் ஏற்கெனவே நடந்த எல்லாச் சுயமரியாதைத் திருமணங்களும், 1968- க்குப் பிறகு நடைபெறக்கூடிய எல்லாச் சுயமரியா தைத் திருமணங்களும் செல்லுபடியாகும் என்கிற பெரும் பாதுகாப்பை அச்சட்டம் அளித்தது. இது தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததால் ஏற் பட்ட மிகப் பெரிய நன்மை.

அந்தச் சட்டப்படி, இந்தியாவில் மற்ற இடங்களி லுள்ள இந்துக்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்துச் சட்டப்படி, செல்லுபடியாகக் கூடிய திரு மணங்கள், பல வடிவங்களில் நடத்தப்படுகின்றன, அவ்வடிவங்களுள் ஒன்றான சுயமரியாதைத் திருமண மும் செல்லுபடியாகும் என்கிற சட்ட ஏற்பு மட்டுமே கிடைத்துள்ளது. இது தமிழ் நாட்டாருக்குக் கிடைத்த உரிமை; இந்த உரிமையை இந்தியாவின் எந்தப் பகுதியிலுள்ள - எந்த உள்சாதிக்காரரும் பயன்படுத்த லாம்.

ஆனால் அப்படி நடக்க முடியாது. ஏனெனில் தமிழ கத்தில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரி யாதைத் திருமண முறை பற்றி, அவரே 45 ஆண்டுகள் இங்கே பரப்புரை செய்தார்; அவரும் அவருடைய தொண்டர்களும் 1973 வரையிலும், அதற்குப் பின்னரும் பரப்புரை செய்தனர்; செய்கின்றனர்; சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் பேசும் ஏழு கோடிப் பேருள் - இந்து உள்சாதிகளைச் சார்ந்தோரின் குடும்பங்கள் ஒரு கோடி இருக்கக்கூடும்.

1968-இல் சுயமரியாதைத் திருமணச் செல்லு படிச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்த ஒரு கோடி குடும்பத்தில், எத்தனை இலட்சம் குடும் பங்களுக்குத் தெரியும்? இப்போது ஓர் ஆண்டில் நடைபெறும் திருமணங்களுள், எத்தனை விழுக் காடு திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங் கள்? ஒரு விழுக்காடு கூட இராது. ஏன்?

பார்ப்பனரின் புரோகிதத் தொழிலும், கோவில் அர்ச்சகர் தொழிலும் தான் பார்ப்பனரின் சாதி உயர்வைக் காப்பாற்றுபவை. இதைப் பற்றிப் பார்ப்பனர் அல்லாதார் எல்லோருக்கும், எப் போதும் அரசு கற்பிக்கவில்லை.

திருமணம் ஒரு ஒப்பந்தம். வயதுவந்த ஆணும் பெண்ணும், அந்தந்த ஊராட்சித் தலைவரிடமோ, ஊராள் வோர் (V.A.O.)  இடமோ - இரண்டு சான்றினரை வைத்துப் பதிவு செய்து கொண்டால் போதும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுதான் திருமணம் பற்றிய பெரியாரின் முடிவான கொள்கை. இப்படிப்பட்ட சட்டம் செய்தால் அது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

1968-க்குப் பிறகு இன்று வரையில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே இங்கு நடைபெறுகின்றன. தி.மு.க. ஆட்சியில், சுயமரியாதை இயக்கம் - சுயமரி யாதை முறைத் திருமண வரலாறு - சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் பற்றி 8ஆம் வகுப்பில் தொடங்கி, 12ஆம் வகுப்பு வரையில் துணைப் பாடங் களாக வைத்துக் கற்பித்திட ஏன் தி.மு.க.ஆட்சியினரோ, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியினரோ எந்த முயற்சியையும் மேற்கொள்ள வில்லை?

1968இல் எட்டாம் வகுப்புப் படித்த ஆணுக்கும் பெண்ணுக்கும் - 14 + 46 = இப்போது 2014இல், 60 அகவை இருக்கும். இவர்களுக்குக் கல்வி வழியே இதுபற்றிக் கற்பிக்கப்பட்டிருந்தால், பார்ப்பனப் புரோகித விலக்கம் எல்லா இன்ப, துன்ப நிகழ்ச்சிகளிலும் மேற்கொள்ளப்படலாம் என்கிற அறிவும் புரிதலும் மானஉணர்வும் இவர்களில் 100க்கு 25 பேருக்காவது  வந்திருக்குமா? அல்லவா?

பள்ளிக் கல்வியில் இடம்பெறாத ஒரு கொள்கை - கல்லூரிக் கல்வித் திட்டத்தில் இடம்பெறாத ஒரு பழமை ஒழிப்புக் கொள்கை எப்படி ஒவ்வொரு தலைமுறைக் கும் தெரியும்? திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை இயக்கம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெரியார் அன்பர்கள் தத்தம் அளவில் செய்கிற முயற்சிகள் எத்தனை விழுக்காடு பேர்களை - எந்த நூற்றாண்டில் சென்று அடையும்?

எந்த ஒரு கருத்துப் பரவலுக்கும்  கல்வியே ஒரு பொருத்தமான கருவி; வலிமையான ஊடகம்.

நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள். இவற்றுள், 100க்கு 95 பங்கு பார்ப்பன மதத்தைக் காப்பவை. தொiலைக்காட்சிகள், வானொலிகள், நாட்டியங்கள் எல்லாமே பார்ப்பன - இந்துத்துவ - இதிகாசக் கொள் கைகளைப் பரப்புகிறவை.

திராவிடர் கழகம் நடத்தும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் - அரசுப் பாடத் திட்டத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களை மட்டுமே உற்பத்தி செய்பவை. பெரியார் காலம் முதல் 2010 வரை - தலைக்கு ரூ.1000 முதல் 2.5 இலட்சம் வரையில், பெற்றுக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கவும், பொதுக் கூட்டங்கள், மாநாடு களில் அக் கும்பலைக் கூட்டிக் காட்டவும் மட்டுமே இவை பயன்பட்டன - இன்றும் நாளையும் அதற்கு மட்டுமே அவை பயன்படும். இவை நிற்க.

1929-இல், செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதலாவது சென்னை மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட 14ஆவது தீர்மானம்-“உயர்தரக் கல்விக்குப் பொது நிதிகளைச் செலவழிக்கக் கூடாதென்றும், அப்படிச் செலவழிக்க வேண்டிய அவசியமிருந்தால், வகுப்புவாரி விகிதாசாரப்படி மாணவர்களைத் தெரிந் தெடுத்துப் போதிக்கப்பட வேண்டுமென்றும்” கூறியது.

ஏன் அப்படிக் கூறியது?

அன்று, 1929இல் உயர்கல்வி என்பது கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி இவை மட்டுமே. இவை எண்ணிக்கையில் மிகவும் கொஞ்சம்; அன்று படித்த மாணவர்களில் - எல்லாக் கல்லூரிகளி லும் பார்ப்பனரே 25 விழுக்காடு முதல் 40 விழுக்காட் டுப் பேர்; மேல்சாதி சூத்திரர்கள் 50 பேர் விழுக்காட்டு பேர். பிற்படுத்தப்பட்டோரும், ஆதித்திராவிடரும், இ° லாமியரும், கிறித்துவரும் 10 விழுக்காட்டுப் பேர். சென்னை பச்சையப்பன் கல்லூரியும், அண்ணாமலை மீனாட்சிக் கல்லூரியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி யும் மட்டுமே கீழ்ச்சாதியினருக்கு அப்போது புகலிடம்.

மேலும் அரசுக் கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் எல்லாவற்றிலும் 100க்கு 90 பேர் விரிவுரையாளர்கள் - பேராசிரியர்கள் - முதல்வர்கள் என்ற நிலையில், பச்சைப் பார்ப்பனர்கள்.

‘ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம்’ என்று பட்டிக்காட்டு மக்கள் கூறுவதுபோல், 1929இல் பெரியார் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்டி, பலப்பல உயர்கல்வி நிறுவனங்களை இயக்கத்தின் பேரால் நிறுவி, உலகத்தரம் வாய்ந்த பொறியியல், தொழில்நுட்பவியல் கல்வி தருவதாகக் கூறி, மாணவர் சேர்க்கைக்கு முந்தாநாள் வரையில், தலை தோறும் பல்லாயிரக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் பணம் திரட்டி - பெரியார் காலத் தைக் காட்டிலும் அதிகப் பணம் திரட்டுகிற கலையைக் கெட்டிக்காரத்தனமாகச் செய்வது-பெரியாரின் சுய மரியாதைக் கொள்கை வெற்றிக்கு வழிகாண உண்மையில் ஏற்றதுதானா? பெரியார் தொண்டர் களுக்கும், பெரியார் அன்பர்களுக்கும் இப்படிக் கேட் கும் உணர்வு ஏன் வரவில்லை? அப்படிக் கல்வியை விலைக்குப் பெற்ற மாணவர்களுள் எத்தனை விழுக் காட்டுப் பேருக்குப் பெரியாரின் சுயமரியாதைக் கொள் கை தெரியும்? பட்ட மேற்படிப்புக்குப் பிறகும், பட்ட மேற் படிப்பிலும் அண்மையில் திராவிட இயக்கம் பற்றிய பாடங்களை அங்கு பயிற்றுவிப்பது மட்டும் போதுமா?

உலகத்தரம் வாய்ந்த கல்விதர முயன்று, முயன்று, ஊராருக்குப் பண்ணையடிக்கப் போகிற ஆயிரக்கணக் கானவர்களை - அரசு உருவாக்குகிறது. இந்நிலை யில், அரசுக்கு வெளியே இருக்கிற பெரியார் இயக்கம் - தன் நிதிக் கல்வி  நிறுவனங்களை நாள்தோறும் பெருக்கு வது பணம் பண்ணுவதற்கா அல்லது பகுத்தறிவுச் சுடர் ஏந்தும் ஏந்தல்களை உருக்கவா? என்பது குறித்துப் பெரியார் அன்பர்கள் எல்லோரும் சிந்தியுங்கள்.

“மழலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையில் எல்லோருக்கும் எல்லாக் கல்வியும் கட்டாயமாக - இலவசமாகக் கொடு” என அரசுக் குக் கோரிக்கை வைத்து, அதை வென்றெடுக்க வேண்டியவர்களே, உண்மையான பெரியார் தொண்டர்கள்.

அப்படிப்பட்ட, “எல்லா நிலைக் கல்வியையும் தமிழ் வழியில் கொடு” என்று கோருவதையும், பெரியார் தொண்டர்கள் செய்யக் கடமைப்பட்ட வர்கள்.

ஆனால், எங்கெங்கே மேல்நிலைப் பள்ளிகளையும், கல்லூரிகளையும், தொழிற்படிப்புக் கல்லுரிகளையும் பெரியார் - மணியம்மை பேரால் தொடங்கினாலும் - ஆங்கில வழியில் பயிற்றுவிக்கிற அத்தகைய பெரியார் இயக்கக் கல்வி நிறுவனங்கள் எதற்காக?

பெரியார் அவர்கள் வீட்டு மொழியாக-கல்வி மொழி யாக-ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் சொன்னது உண்மை. அவரு டைய அந்த முடிவுக்கு என்ன காரணம்? தமிழில் அறிவியல் கருத்துக்களும் முற்போக்கான கருத்துக் களும் இல்லை என்கிற ஆதங்கத்தில், ‘தமிழக அரசி னரும் அறிஞர்களும் எல்லாக் கலைகளையும் தமிழில் கொண்டு வாருங்கள்!’ என்று கோரிப் போராடுவதற்கு மாறாக, “ஆங்கிலமே வேண்டும்” என்று ஒரு கட்டத் தில் ஓங்கிக் கூறினார். பெரியார் அப்படிக் கூறியது தவறு என்பதை எடுத்துக் கூறக் கடமைப்பட்டவர்கள் பெரியார் தொண்டர்கள்.

அதேநேரத்தில், இன்றும் இராமாயணமும், மகா பாரதமும் தமிழர்களால் கற்கப்படுகின்றன; போற்றப் படுகின்றன. தமிழில் அவை பாடமாக இருப்ப தும், அவற்றையே எல்லோரும் கற்பதும் தவறு என்று -நேற்றும் இன்றும் தமிழறிஞர்கள் கூறத் தவறி யதைப், பெரியார் மட்டுமே கூறினார். அந்த நல்ல கோட் பாட்டை எந்தத் தமிழறிஞரும் தூக்கிப் பிடிக்க முன்வர வில்லை.

“1973இலும் என் மக்கள் சூத்திரர்களாக-நாலாஞ் சாதிக்காரர்களாக இருக்கிறார்களே” என்ற தன் கவலை யை - மானிட விடுதலைக் குரலை 19.12.1973-இல் - கடைசியாகிவிட்ட தன் சொற்பொழிவிலும் குறிப்பிட்டார், பெரியார்.

இவை பெரியாரின் நல்ல - உயர்ந்த - மானிட விடுதலைக் கொள்கைகள்.

இவற்றைப் பற்றி எந்தத் தேசியத் தலைவரும், எந்தப் பொதுவுடைமைக்காரரும், எந்தக் கல்வியாள ரும், எந்தத் தமிழறிஞரும், எந்த நாளிதழ்காரரும் கவலையோ, அக்கறையோ கொள்ளவில்லை. பெரி யாரின் ஆங்கில ஆதரவு முடிவை மட்டும் சுட்டிச்சுட்டி - அவர் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழர் நலனுக்கும் நேர் எதிரானவர் என்று அல்லும் பகலும் எழுதியும் பேசியும் வரும் தமிழின அன்பர்கள், இவை எல்லாவற்றையும் பற்றியும் ஆர அமர ஒருமிக்கச் சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! எனப் பெரியாரின் 136ஆம் பிறந்த நாளில் அன்புடன் அனைவரையும் வேண்டு கிறேன்.

Pin It