“நீதிபதிகளும் சமூகத்தில் மேலோங்கியுள்ள கருத் தோட்டங்களுக்கு ஆட்பட்டும் வர்க்கச் சார்புடனும் தீர்ப்பை வழங்குகிறார்கள்.இத்தன்மையில் பார்ப்பனர் அல்லாதார்க்கு எதிரான பெரும்பாலான தீர்ப்புகளில் அவர்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது.எனவே நீதிபதிகள் பதவியிலும் வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீடு வேண்டும்”என்று மேதை அம்பேத்கர் 1938 இல் பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் கருத்துரைத்துள்ளார்.

அதுபோல,‘அரிதினும் அரிதான வகைப்பட்டது’என்ற பெயரில் நீதிமன்றங்களில் தற்போது மரண தண்டனை விதிப்பது அதிகமாகி வருகிறது.கொலையுண்டவர் உயர் பதவியில் இருந்தவராக இருந்தாலோ, பெரிய அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலோ, ‘கொலை’ என்று மட்டும் பார்க்காமல்,கூடுதலான ஒரு பக்கச் சாய்வாகத் தீர்ப்புகள் அமைகின்றன.

இத்தன் மையில்தான் இராசிவ் காந்தி கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் 26  பேர்களுக்குத் தூக்குத் தண்ட னை விதித்துத் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேபோல,மரணதண்டனை விதிக்கப்பட்டவரின் கருணை விண்ணப்பத்தை ஆய்வு செய்வதிலும் இயற்கையான நீதிக்கும்,சட்டநெறிமுறைகளுக்கும் முரணாக உயர்நீதித் துறையில் பாகுபாடு காட்டும் போக்கு மேலோங்கி உள்ளது.தேவேந்திரபால் சிங் புல்லார் வழக்கில், 12.4.2013 அன்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜெ. முகோபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் இப்போக்கு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

தேவேந்திர பால் சிங் புல்லார், பஞ்சாப் காலி°தான் இயக்கத்தைச் சேர்ந்தவர். 1993 செப்டம்பர் மாதம் தில்லியில் இளைஞர் காங்கிரசு அலுவலகத்தின் மீது குண்டு வீசித் தாக்கினார் என்பது இவர்மீதான குற்றச் சாட்டு. இத்தாக்குதலில் அவர் குறிவைத்த இளைஞர் காங்கிரசுத் தலைவர் எம்.எஸ். பிட்டா உயிர் தப்பி விட்டார். ஆனால் மற்ற 9 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயம் அடைந்தனர்.இந்திராகாந்தி தலைமை அமைச் சராக இருந்த போது,‘நீல நட்சத்திர நடவடிக்கை’என்ற பெயரில் பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பித் தாக்கியதில் நூற்றுக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்;அதன்பின் இந்திராகாந்தியே தன் சீக்கிய மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார் என்கிற வரலாற்று நிகழ்வும் இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.

தடா விசாரணை நீதிமன்றம் புல்லாருக்கு மரண தண்டனை விதித்தது.தில்லி உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. அதன்பின் புல்லார் 2002மார்ச்சு 22அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.பி.ஷா, ஆரிஜித் பசாயத், பி.என். அகர் வால் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 17.12.2002அன்று 2:1என்ற விகிதத்தில் புல்லாரின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாகத் தீர்ப்பு வழங்கியது.

மூன்று நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வின் தலைவராக இருந்த எம்.பி.ஷா,தன் தீர்ப்பில், “புல்லார் கூறியதாக உள்ள வாக்குமூலம் உண்மைதான் என் பதற்கான ஆதாரங்கள் எதுவும் காட்டப்படவில்லை. மேலும் இந்த வழக்கு, அரிதினும் அரிதான வகைப் பாட்டில் அடங்காது. எனவே மரண தண்டனை விதிக்கக் கூடாது”என்று கூறியிருந்தார். மற்ற இரண்டு நீதிபதி களான பசாயத்தும் அகர்வாலும் புல்லாரின் கருணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்டறிந்து,குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தனர்.

ஆனால் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் புல்லாரின் கருணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின்  கருத்தைக் கோரவில்லை. மாறாக உள்துறை அமைச்சகம் அனுப் பிய அறிக்கையின் அடிப்படையில் 2011மே 25 அன்று புல்லாரின் கருணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.இது புல்லார் நீதி பெறுவதற்கான வாய்ப்பை மறுத்ததாகும்.

புல்லாரின் வழக்கில் 17.12.2002அன்று மாறு பட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஷா,‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த செவ்வியில்,“மரண தண்ட னையை உறுதி செய்வது தொடர்பான வழக்கில் ஒரு நீதிபதி மரணதண்டனை கூடாது என்று தீர்ப்பு கூறினால், அதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்பதே நீதித்துறையில் உள்ள நடைமுறையாகும்.ஆனால் இந்த வழக்கில் இது ஏன் பின்பற்றப்பட வில்லை என்பது எனக்குப் புரியவில்லை.மேலும் மற்ற இரண்டு நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்டுதான்,குடியரசுத் தலைவர் புல்லாரின் கருணை விண்ணப்பத்தின் மீது முடி வெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த நடைமுறையும் இதில் பின்பற்றப்படவில்லை” என்று கூறியிருக்கிறார் (தி இந்து 22.4.2013).

புல்லார்,தன்னுடைய கருணை விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்காமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் காலந்தாழ்த்தியதைக் காரணமாகக் காட்டி, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை நீதிபதிகள் சிங்வி,முகோபாத்யாயா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு 12.4.2013அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.அத்தீர்ப்பில், “கருணை விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க ஆன காலதாமதம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம். ஆனால் தடா சட்டம் மற்றும் அதுபோன்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர் களுக்கு அந்த நடைமுறையைச் செயல்படுத்த முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்புவெளிவந்ததும்,குடியரசுத் தலைவரால் கருணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள -இராசிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன்,முருகன் மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான நான்கு தமிழர்கள் உள்ளிட்ட 16பேர்களின் தூக்குத் தண்டனை உடனே நிறைவேற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் கவலையும் எழுந்துள்ளது.

இராசிவ் காந்தி கொலை வழக்கைத் தடா விதிகளின் கீழ் விசாரித்ததே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறி, சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித் தது. எனவே 12.4.2013 அன்று கூறப்பட்ட தீர்ப்பின் விளக்கத்தின் கீழ் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கோரிக்கை வராது.

மேலும் இம்மூவருக்கும் மரணதண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ் ஓய்வுபெற்ற பிறகு, இம்மூவர் வழக்கிலும் ‘சட்ட அறியாமை‘  (Perincurium) நிகழ்ந்துள்ளது என்று பல தடவை கருத்துரைத்துள்ளார். மேலும், “இந்த மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப்பட்ட போது, அவர்களின் முற்பண்புகள், இயல்புகள்,ஒழுக்கம் போன்றவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டோம்”என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஆனால் காங்கிரசுக் கட்சியின் பிணந்தின்னிக் கழுகுத் தலைவர்களோ இம்மூவரையும் தூக்கிலிட்டுத் தங்கள் இராஜ விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர்.பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் சிலரைப் பலியிட்டு அரசியல் ஆதாயம் தேட தேசியக் கட்சிகள் முயல்கின்றன.

ஒருவர் மீது கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டு,தண்டனையை வரையறுத்துத் தீர்ப்பு வழங்கும் போது,நீதிமன்றமானது குற்றவாளியின் முன் நடத்தை,கொலைக் குற்றம் நடைபெற்ற சூழல்,அக்குற்றம் நடைபெற்ற போது இருந்த கொலையாளியின் மனநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிற நெறிமுறையை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள போதிலும் இது தொடர்ந்து மீறப்படுவது பெருங்கொடுமையாகும்.

எனவே, தமிழக அமைச்சரவை முடிவு செய்து, அரசமைப்பு விதி 161-இன்படி மாநில ஆளுநர் வழியாக, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்.

உலகிற்கே அகிம்சையை முதலில் போதித்த புத்தர் பிறந்த - அந்த அகிம்சைக் கோட்பாட்டை செயலில் காட்டிய காந்தி வாழ்ந்த இந்தியா என்று பெருமிதம் கொள்ளும் நாட்டில் மரண தண்டனை, சட்டத்தில் இடம்பெற்றிருக்கலாமா?

இங்கிலாந்து உள்ளிட்ட 130நாடுகளுக்கு மேல் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவிலும் அது உடனடியாக ஒழிக்கப்பட்டு மனித மாண்பைப் போற்றும் நாகரிகமான சமுதாயமாக மாற்றிய மைத்திடப் போராடுவோம்.

Pin It