பெரியார் ஈ.வெ.ரா. தம் 25ஆம் அகவையில் ஆந்திராவிலும் ஒரிசாவிலும் உத்திரப்பிரதேசத்தில் காசியிலும் சந்நியாசி போல் சுற்றி அலைந்தார். இந்து பணக்காரர்கள் கட்டி வைத்த சத்திரங்கள், மடங்கள் முதலியவை பார்ப்பனரைப் பாதுகாக்கிற நிறுவனங் களாக - ஒழுக்கக் கேட்டின் இருப்பிடங்களாக இருப்பதை அங்கெல்லாம் நேரில் கண்டார். இந்தப் பட்டறிவு பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற உந்து தலை அதிகமாக உண்டாக்கியது. இது 19.04.1905இல்.

ஈ.வெ.ரா.வின் தந்தையார் 1911இல் மறைவுற்றார். அதன் பின்னர் ஈ.வெ.ரா. பல கௌரவப் பதவிகளில் அரசினால் அமர்த்தப்பட்டார். எல்லாப் பொறுப்புகளை யும் திறம்படவும் நாணயமாகவும் நடத்திக் காட்டினார்.

1917 ஏப்பிரல் முதல் 1919 சூலை முடிய ஈரோடு நகராட்சித் தலைவராக விளங்கினார். ஈரோட்டின் நலன்களைப் பெருக்குவதில் ஈடு இணையற்ற பணி களைச் செய்தார்.

1907இல் காங்கிரசில் நாட்டங்கொண்ட அவர், 1914 முதல் அனைத்திந்தியக் காங்கிரசு மாநாடு களுக்குச் சென்று வந்தார். 1919இல் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். 1919 திசம்பரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை முதலானோரை அழைத்துக் கொண்டு பஞ்சாபில் அமிர்தசரசில் நடைபெற்ற அனைத்திந்தியக் காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று வந்தார். இந்தியாவைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தார்.

1919 முதல் அவரும் எஸ். இராமநாதனும், “காங்கிரசுக் கட்சி வகுப்புவாரிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தீர்மானங்களை முன் மொழிந்தனர். பார்ப்பனர்கள் - அய்யர், அய்யங் கார் என்கிற வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு அம் முயற்சியை எதிர்த்தனர். தமிழ்நாடு காங்கிரசு ஆண்டு மாநாடுகளில் 1924இல் பெல்காமிலும், 1925இல் காஞ்சிபுரத்திலும் காங்கிரசுக் கட்சி மாநாட்டுப் பந்தலின் ஒரு பகுதியிலேயே, “பார்ப்பனர் அல்லாத காங்கிர சாரின் மாநாடுகளைக் கூட்டி, அவர்களின் ஆதரவுடன் வகுப்புவாரித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இறுதி யாக 22.11.1925இல் காஞ்சிபுரத்தில் அவரும் எஸ். இராமநாதனும் முன்மொழிந்த வகுப்பு வாரித் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அன்று காங்கிரசிலிருந்து வெளியேறிய ஈ.வெ.ரா., “காங்கிரசை ஒழிப்பேன்!” “பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பேன்!” எனச் சூளுரைத்தார்.

இன்று தமிழகத்தில் அரசு வேலைத் துறையில் பார்ப்பனர் ஆதிக்கம் இல்லை; சமூகத்தில் பார்ப்பனருக்குத் தனி மரியாதை இல்லை.

ஆனாலும் இந்திய அளவில் பார்ப்பனர் ஆதிக்கம் அப்படியே இருக்கிறது; இந்திய அளவில் காங்கிரசுக் கட்சி இருக்கிறது; இந்தியாவிலுள்ள 6 இலக்கம் ஊர்களிலும் காங்கிரசுக்கு மட்டுமே வாக்கு வங்கி இருக்கிறது; எல்லா உள் சாதிகளிலும் காங்கிரசுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. அத்துடன் இந்தியாவிலுள்ள 140 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் செய்தி ஏடுகள் - 45க்கு மேற்பட்ட நாளேடுகள் பார்ப்பனர் களால் வெளியிடப்படுகின்றன.

சென்னையில் 1878இல் தொடங்கப்பட்ட “The Hindu” நாள் ஏடு, இன்று, 14 இடங்களிலிருந்து வெளி யிடப்படுகிறது; நாளொன்றுக்கு 14 இலக்கம் படிகளை வெளியிடுகிறது. நன்றாகப் படிக்கத் தெரிந்த பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதாரிடம் பார்ப்பனிய ஆதிக்கக் கருத்துகளை உருவாக்குவதில் இது பெரும் பங்கை ஆற்றுகிறது. இதையும் மீறித் தமிழ்நாட்டில் ஓரளவு செல்வாக்குடன் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை நடத்த முடிகிறது.

ஆனால் இந்திய அளவில் அப்படி நடத்த முடியவில்லை.

சென்னை மாகாணத்தில் 1920 இறுதியில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, 1921இலேயே வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பித்தது; 1927இல் சுயேச்சை அமைச்சரவை அதை நடைமுறைப்படுத் தியது.

இதனால், 1921க்கும் 1927க்கும் இடையில் படித்த தமிழ்ப் பார்ப்பனர்கள் - தெலுங்குப் பார்ப்பனர்கள் - மலையாளப் பார்ப்பனர்கள் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறித், தில்லி, பம்பாய், கல்கத்தா முதலான பெருநகரங்களை அடைந்தனர். அப்போது சோழவந் தானிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் வடக்கே சென்ற பார்ப்பனர்கள் தாம் சுப்பிரமணியசாமி, மணிசரங்கர அய்யர் ஆகியோர்களின் முன்னோர்கள்.

தென்னாட்டில் தழிழகம் தவிர்த்த பகுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் கெட்டியாக வேர் பிடிக்கவில்லை.

இந்திய அரசு துறைகளில் பார்ப்பனர்கள் கெட்டி யாக உட்கார்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் 1937இல் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. அன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காங்கிரசு, 1946க்குப் பிறகு 1967 வரை தொடர்ந்து சென்னை மாகாணத்திலும், தமிழகத்திலும் நீடித்து ஆட்சியிலிருந்தது.

இடையில் காங்கிரசுக்கு எதிர்ப்பாக - வங்காளத்து எம்.என். ராய் 1941 பிப்பிரவரியில் சென்னைக்கு வந்து, ஈ.வெ.ரா.வுடன் இணைந்து இந்திய அளவில் காங்கி ரசுக்கு எதிரான ஓர் அணியை அமைக்க முயற்சி எடுத்தார்.

1944 திசம்பர் 27 அன்று தம் கட்சியான “ரேடிகல் டெமாக்ரடிக் கட்சி” மாநாட்டைத் தொடங்கி வைத்திட ஈ.வெ.ரா.வைக் கல்கத்தாவுக்கு அழைத்தார். ராவல் பிண்டி வரையில் ஈ.வெ.ரா.வின் அப்பயணம் நீடித்தது.

அதே 1944 திசம்பர் 29, 30, 31இல் உ.பி. மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சிவ் தயாள் சிங் சவுரா சியாவின் முயற்சியில் கான்பூரில் நடைபெற்ற, “அனைத்திந்திய இந்து பிற்படுத்தப்பட்டோர் லீக்” மாநாட்டை ஈ.வெ.ரா. தொடங்கி வைத்தார். அம்மாநாட்டில், “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீக்”கின் தலைவராக, ஈ.வெ.ரா. தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 வரை அவரே அதன் தலைவராக நீடித்தார். அந்த லீகுக்குப் போட்டியாக இன்னொரு அமைப்பை 1951இல் பஞ்சாபராவ் தேஷ்முக் என்பவரைத் தொடங்கச் செய்தார் பண்டித நேரு. அவரை இந்திய அரசு அமைச்சராகவும் ஆக்கினார்.

ஈ.வெ.ரா.வின் வடநாட்டுத் தொடர்பு மீண்டும் 1959இல் புதுப்பிக்கப்பட்டது. கான்பூர், இலக்னோ முதலான இடங்களிலும், புதுதில்லியிலும், பம்பாயிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இடஒதுக்கீடு, இராமாயணக் கண்டனம், மனுநீதிக் கண்டனம் பற்றிப் பல இடங்களில் அங்கெல்லாம் உரை நிகழ்த்தினார்.

இதற்கிடையில் 1940 சனவரி 6 முதல் பம்பாயில், டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து அங்குத் தம் கொள்கைகளைப் பரப்புரை செய்தார். 8.1.1940இல் பம்பாயில் முகமது அலி ஜின்னாவைக் கண்டு பேசினார்; தம் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை, கட்டாய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறினார்.

இவற்றின் தொடர்ச்சியாக 1968 அக்டோபர் வரை ஈ.வெ.ரா. வட மாநிலங்களில் பயணித்தார்.

காங்கிரசை ஒழிப்பது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பது என்பவை அனைத்திந்திய அளவில் நடைபெற இம்முயற்சிகள் போதவில்லை.

அத்துடன் 13.4.1954 முதல் 5.3.1967 முடிய - 13 ஆண்டுக்காலம் காமராசர் ஆதரவு என்கிற பேரால் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஈ.வெ.ரா. அளித்த பேராதரவு - அவருடைய இயக்கம், “தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களைச் சார்ந்திருப்பது” என்கிற தன்மையைப் பெறச் செய்துவிட்டது.

1971 ஏப்பிரலில் இப்போக்கைச் சுட்டிக்காட்டிக் கண்டனம் செய்த பணியைத் தஞ்சை மாவட்டம் இராச மன்னார்குடியில், நானும் இன்னும் 300 தோழர் களும் சேர்ந்து தொடங்கி வைத்தோம். 4.4.1971இல் இம்முயற்சியைப் பெரியார் நேரில் பாராட்டினார்; ஊக்கு வித்தார்; மேற்கொண்டு அத்திசையில் செயல்படச் சொன்னார்.

அங்கே கூடியிருந்தவர்களில் பலரும் இதைப் புரிந்து கொள்ளவில்லை; அத்திசையில் தொடர்ந்து செயல்படவில்லை.

பெரியார் இத்துடன் நிற்கவில்லை.

“பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் அனைத் திந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் துணையாக - The Hindu ஆங்கில நாளிதழ் போன்று நமக்கு ஆங்கிலத்தில் ஒரு நாளிதழ் வேண்டும்” என்று வெளிப்படையாக அறிக்கை விடுத்தார். அன்றும் முதலமைச்சராக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதிக்கு இதுபற்றி வேண்டுகோள் விடுத்தார். அவரோ, மற்றவர் களோ அதைப் பற்றிக் கருதிப் பார்க்கவே இல்லை.

ஆயினும் திருச்சிச் சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் “அனைத்திந்தியப் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு”, “அனைத்திந்திய நாத்திகர் மாநாடு” இவற்றைத் தந்தை பெரியாரை வைத்து அப்போதே நடத்தினோம்.

அனைத்திந்திய அளவில் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு இவற்றை மேற்கொள்ளுவது மிகவும் கடினமானது என்கிற அளவுக்கு இன்றைய உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்கிற பொருளாதார வணிக - தொழில் - வங்கி ஆதிக்கங்கள் பெருகிவிட்டன.

இவற்றின் செல்வாக்கு மேலோங்கிட உற்ற துணையாக எண்ணற்ற செய்தித்தாள்கள், பன்மொழித் தொலைக்காட்சி நிறுவனங்கள் பெருகிவிட்டன.

100 கோடி உருபா முதலீடு செய்து, மாதம் ஒரு கோடி உருபா நடைமுறைச் செலவு செய்து ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கித் தத்தம் சொந்த - மற்றும் கட்சி அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளவும், பணம் குவிக்கவும் ஆயிரக்கணக்கான பேர் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.

இந்த இக்கட்டுகளுக்கு இடையில் தான், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 60 விழுக்காடு பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய நடுவண் அரசிலும் வடமாநில அரசுகளிலும் மக்கள் எண் ணிக்கைக்கு ஏற்ப விகிதாசார இடப்பங்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை 8.5.1978இல் இந்திய அரசிடம், நேர்முகமாக, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முன்வைத்தது.

தமிழ்நாட்டிலோ மற்ற மாநிலத்திலோ எந்த ஓர் இயக்க ஏடும், எந்த ஒரு கட்சியும் 1981 திசம்பர் வரையில் இதுபற்றி ஒரு சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லை. இது வரலாற்று உண்மை.

மா.பெ.பொ.க.வின் 17.9.1978 முதல் 17.10.1978 வரையிலான பீகார் பரப்புரையும்; 19.10.1978 முதல் 31.10.1978 வரையில் பாட்னாவில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டமும் பெற்றெடுத்ததுதான் மண்டல் குழு அமைப்பு என்பது. தில்லியில் 29.4.1981இல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதலாவது கூட்டம்; தில்லியில் 3.3.1982இல் நாடாளுமன்ற உறுப்பினர் களின் இரண்டாவது கூட்டம்; 25.1.1982 இலும், 4.3.1982இலும் தில்லியில் உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் உடன் வே. ஆனைமுத்துவின் சந்திப்புகள் என்பவற்றின் விளைவுதான் மண்டல்குழு அறிக்கையை இந்திராகாந்தி அரசு நாடாளுமன்றத்தில் வெளியிடச் செய்தது.

அனைத்திந்திய அளவில் மா.பெ.பொ.க. இப்படிச் செயல்பட்டது இன்னமும் தேவைப்படுகிறது. ஏன்?

1967 முதல் இன்று வரை மேற்குவங்கத்தில் இடது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் இடது சாரிக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

அங்கு, வரும் 2011-12 கல்வி ஆண்டில் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதலாக 17 விழுக்காடு இடஒதுக்கீடு தரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

மேற்குவங்க அரசு, பார்ப்பனர் - வைத்தியர் (வைசியர்) - காயஸ்தர் வகுப்புகளின் ஆதிக்க அரசு; அதாவது மேல்சாதிகளின் ஆதிக்க அரசு. அதனால் தான் இந்தத் தேவை இன்னமும் இருக்கிறது.

சி.பி.அய், சி.பி.எம். பொதுவுடைமைக் கூட்டணிக் கட்சிகள் மாறி மாறி ஆளும் கேரளாவில் - 1947 முதலும், 1956 முதலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குத் தனி இடஒதுக்கீடு இருக்கிறது. இது மேற்கு வங்காளத் திலும் வரவேண்டும் என்கிற பொறுப்பு இவர்களுக்கு நேற்றுவரையில் வரவில்லை. பொதுவுடைமைக் கட்சியினர் இப்படி இருப்பது எப்படிச் சரியாகும்?

மேற்கு வங்கத்தில், 1986 நவம்பரில் மா.பெ.பொ.க. தான் இக்கோரிக்கைக்கு விதை இட்டது; தொடர்ந்து 1991 அக்டோபர் இறுதியிலும் அங்கே சென்று இதைத் தூண்டிவிட்டது.

இப்போது மேற்குவங்கத்து உல்ஃபா அமைப்பும், வடகிழக்கு மாநிலப் புரட்சிக் குழுக்களும் இந்திய அரசின் படை வலிமையால் நசுக்கப்பட்டு, இன்று இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்கிற பேரால் அலைக் கழிக்கப்படுகின்றன.

இவற்றால் நசுக்குண்டோர் அசாமில் இந்து பிற்படுத் தப்பட்டோரான ‘அகோம்’ வகுப்பினர் மற்றும் இசுலாமியர், பழங்குடியினர் ஆவர். வடகிழக்கு மாநிலங்களில் 100க்கு 90 பேர் பழங்குடியினர் ஆவர்.

இன்றைய இப்படிப்பட்ட இந்தியாவைப் பார்ப்பன - பனியா - மார்வாரி - பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் - இவர்களின் கையாள்களாக உள்ள அரசு உயர் அதிகார வர்க்கத்தின் - பார்ப்பனிய ஆதிக்க இராணு வத்தின் - இவர்களின் செய்தி ஊடகங்களின் வலிமை களைக் கொண்டு காங்கிரசு தொடர்ந்து ஆளுவதும், பாரதிய சனதா தொடர்ந்து ஆள முயல்வதும் இந்தி யாவிலுள்ள உழைப்பாளி வகுப்பு மக்களை மீளா அடிமைத்தனத்தில் விரைவில் தள்ளிவிடும். இது உறுதி.

மாநில அரசியல் கட்சிகள் இவர்களை நம்பித்தான் பிழைத்தாக வேண்டும்.

இதிலிருந்து உழைப்பாளி மக்களை மீட்க விரும்புவோர் இவற்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் சொன்னவண்ணம், நாம் அனைத்திந்திய அளவில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

Pin It