புத்தர் பிறந்து 2600 ஆண்டுகள் நிறைவுறும் விழாவை வருகின்ற மே திங்களில் சிறப்புடன் கொண்டாடப் பல ஆசிய நாடுகள் முன்வந்துள்ளன. இது புதிய செய்தியன்று. ஆண்டுதோறும் பல ஆசிய நாடுகளில் வழக்கமாக நடைபெறுகின்ற நிகழ்வுதான். ஆனால், இந்திய அரசு இந்த ஆண்டு புத்தர் பிறந்த நாளை இலங்கையோடு இணைந்து கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளது. என்ன பொருத்தம்? இது என்ன பொருத்தம்? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? என்ன பொருத்தம் என்று பார்ப்போம்.

இமயமலைச்சாரலில் சாக்கியக் குலத் தோன்றலாகக் கபிலவஸ்து என்ற சிற்றரசின் இளவரசனாக, உலகின் முதல் பகுத்தறிவு ஒளியாக, லும்பினி என்னும் இடத்தில் பிறந்து அறிவு, அன்பு, சமத்துவம் ஆகிய உயர்நெறிகளை இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகளில் கற்பித்த புத்தர் இன்று உலகளவில் போற்றப்படுகிறார். புத்தரைச் சிறப்பிக்கும் வகையில்தான் அயர்லாந்து நாட்டின் புகழ்மிக்க வரலாற்று அறிஞரான வின்சென்ட் ஆர்தர் சிமித், மாமன்னர் அசோகரைப் பற்றித்தாம் எழுதிய நூலுக்கு “இந்திய பௌத்த பேரரசர் அசோகர்” (Asoka - The Buddhist Emperor of India) என்று தலைப்பு அளித்துள்ளார். இந்நூலில், இந்தியத் துணைக்கண்டப் பகுதிக்குள் இருந்த பௌத்தக் கருத்துகளைத் தனது அரசாட்சியின் செல்வாக்கால் உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை மாமன்னர் அசோகரையே சாரும் என்று வின்சென்ட் சிமித் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்குப் பௌத்தம் பரவியதும் அசோகர் காலத்தில்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு வேளை, இதன் காரணமாகத்தான் இந்தியாவும், இலங்கையும் புத்தர் பிறந்த நாளை இணைந்து கொண்டாடுகின்ற னவோ என்ற ஐயம் சிலருக்கு எழலாம். வரலாற்றின் பக்கங்கள் பல உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.

மாமன்னர் அசோகர், பௌத்தத்தைத் தழுவுவதற்கு முன்பு பல மாமன்னர்களைப் போல போர் புரிவது, புதிய நாடுகளை, பகுதிகளைக் கைப்பற்றுவது, இணைப்பது தான் மன்னர் தொழில் என்று நம்பி நடந்து கொண்டார். அசோகர் முடிசூட்டிக் கொண்ட எட்டாம் ஆண்டில், கலிங்க நாட்டை வென்றார். இது மானுட அழிவில் மானுடத் துயரை அறிந்த ஒரு வரலாற்றுத் திருப்பம். கலிங்கப் போரில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் சிறைபிடிக்கப்பட்டனர். ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட் டனர். முதல் இரண்டு உலகப் போர்களை ஒப்பிட்டு உலகின் மக்கள் தொகையைக் கணக்கிட்டால் இது மானுடத்தின் பேரவலம் என்றே குறிப்பிடலாம். எனவே தான், ஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேசுவரத் தின் அருகில் இந்தப் போர் நடந்த இடத்தை வரலாற்றுச் சின்னமாக மாற்றியுள்ளனர். போர் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு மலைக்குன்றில் புத்தரின் மாபெரும் சிலை சப்பான் நாட்டால் வடிவமைக்கப்பட்டு அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. அமைதி நெறியும், அன்பு நெறியும் தழைத்து, உலகை அமைதி தழுவ வேண்டும் என்று அடையாளப்படுத்துவதற்காக இந்த நினைவுச் சின்னம் போற்றப்படுகிறது.

போரில் வென்ற பிறகு மாமன்னர் அசோகர் பல நாள் துயில் கொள்ளவில்லை. துயரத்தில் ஆழ்ந்தார். பௌத்த நெறியைத் தழுவினார். ஓரளவு அமைதி பெற்றார். பின்பு மாமன்னர் அசோகர் துறவுக்கோலம் பூண்டார். மானுட நெறிகள் போற்றும் பல அரசாணை களை இக்காலக் கட்டத்தில் வெளியிட்டார். இன்றும் அமைதிக்கான உயரிய நெறிகள் கல் தூண்களிலும், பாறைகளிலும் ஒளிர்கின்றன.

அக்கல்வெட்டுகளில் ஒன்றில், அசோகர் குறித்த கருத்துப் பதிக்கப்பட்டுள்ளது. “தந்தை, தாயின் சொற்கள் கேட்கப்பட வேண்டும்; உயிரினங்கள் அனைத்தும் மதிக் கப்பட வேண்டும்; இதுவே அற நெறியாகும் அல்லது அறப்பண்புகளாகும். இந்நெறிகளையே பின்பற்ற வேண்டும். மாணவன் தனது ஆசிரியர்க்கு மரியாதை செலுத்த வேண்டும். உறவினர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். இதனால் வாழ்நாள் நீடிப்பு மனிதர்களுக்கு ஏற்படும்”. கல்தூண்களில் பதிக்கப்பட்டுள்ள அசோகரின் இந்த நெறிகள் போர் வெறி தணிந்து அவர் பெற்ற தூய்மையான அமைதி மனநிலையை எடுத்தியம்புகின்றன. இந்நிகழ்விற்குப் பிறகுதான் வர லாற்றுப் பக்கங்களில், அறநெறி போற்றி அமைதி விரும் பிய அசோகர் என்று போற்றப்படுகிறார். எவ்விதப் புத்த நெறிகள் அசோகரை மாற்றியிருக்கலாம் என்பது ஒரு புதிராகும். ஒரு வேளை அசோகர், புத்தரின் இளவயது நிகழ்வுகளைக் கேட்டறிந்து உணர்ந்திருக்கலாம். இள வயதில் புத்தர் கல்வி பயிலும் காலத்தில் நடைபெற்ற நிகழ்வு புத்த தம்மக் கருத்துகளில் இடம்பெற்றுள்ளது. இளவரசராக இருந்த போது, புத்தர் தன் தாயிடமும், நண்பர்களிடமும் உரையாடியுள்ளார்.

எட்டு அகவையில் கல்வியைத் தொடங்கிய சித்தார்த்தர் தன் நண்பர்களோடு தந்தையின் பண்ணைக்குச் சென்றபோது, கந்தல் ஆடைகளுடன் வேலையாட்கள் ஏர் உழுதல், மரம் வெட்டுதல் போன்ற பணிகளைச் செய்வதைக் கண்ணுற்றார். தன் நண்பர்களிடம் அவர் எழுப்பிய முதல் வினா, ஒரு மனிதன் மற்ற மனிதர் களைச் சுரண்டுவது சரியாகுமா? என்பதுதான். நண்பர் கள் அதிர்ந்தனர். ஏனெனில் உழைப்பாளி கடுமையாக உழைக்கப் பிறந்தவன் என்றும், அவனுடைய ஆண்டை யிடம் உழைப்பதுதான் அவன் விதி என்றும் உரைக்கும் வாழ்க்கைத் தத்துவத்தைத்தான் அன்றைய சமூகம் அவர்களுக்குப் போதித்தது. வில் வித்தையைக் கற்ற வீரர் சித்தார்த்தரை நண்பர்கள் வேட்டையாடக் காட் டுக்கு வா என்றனர். சித்தார்த்தர் மறுத்த போது, நீ புலிக்கு அஞ்சுகிறாயா? என்று வினவினர். அப்போது சிறுவயதினரான சித்தார்த்தர் “நீங்கள் புலியைக் கொல்லப் போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத மான் கள், முயல்கள் போன்ற விலங்குகளைத்தான் கொல் வீர்கள்” என்று குறிப்பிட்டார்.

பெற்ற தாயிடமும், இதுபோன்று கருத்துகளை முன்வைத்துச் சித்தார்த்தர் வாதிடத் தவறவில்லை. “நீ காட்டுக்கு வேட்டையாடப் போக மறுக்கிறாய். குறிபார்த்து எதிரியை வீழ்த்தும் போர் முறைகளை வேட்டையாடுவதன் வழியாகத்தானே கற்க முடியும்” என்று தாய் ஒருமுறை கூறினார். “ஒரு சத்திரியனின் கடமை போர் செய்வதுதானே” என்றும் உரைத்தார். அதற்குச் சித்தார்த்தர், “ஒரு மனிதன் மற்றொரு மனி தனைக் கொல்வது எப்படி அவனது கடமையாகும்?” என்று வினவினார். மீண்டும் தாய், “சத்திரியன் போராடினால்தான் அரசாட்சியைக் காப்பாற்ற முடியும்” என்றார். உடனே, சித்தார்த்தர் “அனைத்துச் சத்திரியர் களும் ஒருவரையொருவர் நேசிப்பார்களேயானால், கொலைத் தொழிலில் ஈடுபடாமலேயே தங்கள் அர சாட்சியை அவர்களால் பாதுகாக்க முடியும் அல்லவா?” என்றார். தாயினால் இதற்குமேல் பேசமுடியவில்லை. இவ்வகைக் கருத்து இன்றைய சூழலிலும் பொருந்து வதாக உள்ளது. இப்படிப்பட்ட உரையாடல்கள்தான் அசோகரைக் கலிங்கப் போருக்குப் பிறகு பாதித்திருக் கலாம். அதனால்தான் பௌத்த நெறியைத் தழுவினார். நாடெங்கும் பரப்பினார். போரில்லா உலகம் உருவாவ தற்குத் தனது கருத்துகளையும் அசோகர் கல்வெட்டு களில் பதித்தார்.

இந்த உயர் நெறிகளை எல்லாம் பின்பற்றாத இந்திய, இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து புத்தர் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறார்களா? அல்லது ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர்களைக் குண்டு போட்டுக் குழியில் தள்ளினார்களே, அதற்கு வெற்றி விழா எடுப்பதற்காக இந்தப் புத்தர் பிறந்த நாள் நாடகம் நிறைவேற்றப்படுகிறதா? என்ற வினாக்கள் எழுகின் றன. ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகின்றது. இரண்டு நாடுகளும் நடுவண் அரசில் அதிகாரத்தைக் குவித்து பல்வகை தேசிய இன மக்களை நசுக்கும் முயற்சியில் கைகோத்துள்ளன. இராணுவத் தளவாடங்கள் வாங்கு வதில் ஊழல்களைப் புரிந்து அயல்நாட்டு வங்கிகளில் கணக்கில் வராத கள்ளப் பணத்தைச் சேர்த்து வரு கின்றன. விக்கிலீக்சு அசாங்கே இதற்கான ஆதாரங் களை அள்ளி வீசுகிறார். ஊரை, உலகை ஏமாற்றுவதற்குப் புத்தர் பிறந்த நாள் இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது போலும்! என்னதான் இந்தியாவும் இலங்கையும் புத்தர் நாடகத்தை அரங்கேற்றினாலும், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக்கறை யைக் கழுவ முடியாது. தமிழக மீனவர்களைக் கடலில் கொன்று குவிப்பதை மறைத்துவிட முடியாது.

இந்திய அரசின் முதல் புத்தர் நாடகம் எப்போது நிறைவேறியது என்பதைப் பார்ப்போம். இந்தியா 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் இராஜஸ் தான் மாநிலத்தின் பொக்ரான் பகுதியில் அணு ஆய்தச் சோதனையை மேற்கொண்டது. மீண்டும் 1998ஆம் ஆண்டு மே 11, 13 ஆகிய நாட்களில் பொக்ரானில் அணுக்குண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தப்பட்டது. பொக்ரானில் அணுக்குண்டு சோதனைகள் 5 முறை நடத்தப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களில் பாகிஸ்தான் சகாய் குன்றுகளில் 6 அணுக்குண்டு வெடிப்புச் சோதனை களைச் செய்தது. 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அணுக்குண்டு சோதனை பற்றிய பல்வேறு கருத்துகள் இப்போது வெளியிடப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர், எதிர்பார்த்த வெற்றி கிட்ட வில்லை; பணம்தான் வாரி இறைக்கப்பட்டது என்று அண்மையில் பல ஆதாரங்களுடன் ஊடகங்களுக்குச் செய்திகளாக வெளியிட்டார். அரைகுறையாக இந்தியா நிறைவேற்றிய அணுச் சோதனையையும், பாகிஸ்தான் நிறைவேற்றிய அணுச்சோதனையையும் பற்றி அறிஞர் அமர்த்தியா சென் தனது “வாதிடும் இந்தியன்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். “இதன் விளைவு, (அணுக்குண்டு சோதனை வெடிப்பு) சோதனைகளை நடத்தியவர்களின் பகுதியான இந்தியத் துணைக்கண்ட வீட்டிலேயே 1000 சூரியன்கள் குடிபுகுந்துவிட்டன” (The thousand suns have now come home to the subcontinent to roost - The Argumentative Indian by Amartya Sen, P.256). பாகிஸ்தான் அரசோ ‘மலை முழுவதும் வெண்மை யாக மாறிவிட்டது’ என்றது. 

எனவேதான், அமர்த்தியா சென் போன்ற பல அறிவியல் அறிஞர்களும், அணுச்சோதனைக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகின்றனர். மிகக் கொடுமையான செயலை அணுச்சோதனை என்ற பெயரில் அடை யாளப்படுத்துவதற்கு, ‘இராசபக்சே சிரிக்கிறார்’ என்றால் பொருத்தமாக இருக்கும். ஆனால் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் நடந்த அணுக்குண்டுச் சோதனைக்குப் “புத்தர் சிரிக்கிறார்” என்று காங்கிரசு தலைமையில் ஆட்சிபுரிந்த நடுவண் அரசு பெயரிட்டது. இதில் இருக் கின்ற வன்மம் எவ்வளவு கொடுமையானது. இதை விடக் கொடிய வன்மம் இராசபக்சேவால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மேல் நடத்திக் காட்டப்பட்டது. இலங்கை அரசு புத்த மதத்தை அரசு மதமாக அறிவித்து, இந்தக் கொலை பாதகச் செயல்களை நிறைவேற்றி வருகிறது. இந்திய அரசோ அசோகச் சக்கரத்தைத் தேசியக் கொடியில் ஏந்தி இவ்வித கொலை பாதகச் செயல்களுக்குத் துணை போகிறது. எனவே, புத்தர் நாடகத்தை அரங்கேற்றுவதில் இருநாடுகளுக்கும் சரி யான பொருத்தம் உள்ளது அல்லவா? என்ன பொருத்தம்! இது என்ன பொருத்தம்!

Pin It