நூலின் முன்னுரையிலிருந்து...

“...பெண்களின் கண்ணிரைத் துடைத்தெறிந்த அந்தக் கிழவனின் (பெரியார்) கனிவை ஒரு கடைசித் தமிழ்ப் பெண் இருக்கும் வரை நினைவில் வைத்துப் போற்ற வேண்டும். ஆனால் பெண் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் யார்? என்ற வினாவிற்கு காந்தியடிகள், திரு,வி., பாரதியார் என்று விடை எழுதச் சொல்கிறது பள்ளிக்கூடப் புத்தகங்கள். ‘தந்தை பெரியார்பெயர் இதில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்கின்றனர் கல்வியாளர்கள். இன்றும் கூடப் பெரியாரைப் பற்றி ஒரிரு வகுப்புகளில் வைத்திருக்கிறோம் என்று நெஞ்சுயர்த்துகிறோமே தவிர பெரியாரின் எழுத்தில் பெண் விடுதலை வைத்தோமா? என்ற வினாவிற்கு தலைகுனிவுதான் பதில். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தாண்டி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், இயக்க ஏடுகளும், ஓய்வறியாமல் தம்மை இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்களும் பெண்களும் நிரம்பிய பெரும்படையும் தமிழ்ச் சமுதாய மேம்பாட்டிற்கு, விழிப்புணர்வுக்குக் களப்பணியாற்றியுள்ளது என்பதுதான் உண்மை வரலாறு.

தமிழரின் வரலாற்றில் சுயமரியாதை இயக்கம் ஒரு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. ‘உலகில் உள்ள பல்வேறு அதிதீவிர இயக்கங்களின் உயரிய இலட்சியங்களையெல்லாம் திரட்டி ஓர் உருவாய் தோன்ற செய்ததே நமது சுயமரியாதை இயக்கமாகும்என்று பாராட்டப்பட்டது. அதனால் கிராமங்கள், நகரங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தத்தம் இருப்பிடங்களிலிருந்தும், சுற்றுப்பயணங்கள் செய்தும் அவரவர்கள் தங்களால் இயன்றவரை இதன் உயரிய லட்சியங்களை மக்களிடம் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

சுயமரியாதை இயக்கத்தின் பணிகளில் பெரும் பகுதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக என்பதால் முற்போக்கு சிந்தனைகளால் விழிப்புற்ற பெண்கள், இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். அக்காலத்தில் காங்கிரஸின் முக்கிய நோக்கம் ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பதே ஒழிய ஆணாதிக்கத்தையோ, கடவுள், மதம், சாதி, சடங்குகள் சார்ந்த பெண்ணடிமைக் கூறுகளை ஒழிப்பதோ அல்ல. இதற்காக எவ்வித நடவடிக்கைகளிலும் காங்கிரஸ் ஈடுபடவில்லை. இது பற்றி சிந்திக்காமல் சுதந்திரப்போராட்டத்தில் ஆண்களுடன் பெண்களும் பங்கு பெறுவது மட்டுமே பெண்விடுதலை என்று கருதி வந்தனர். இந்த நிலையில் குழந்தை மணம் ஒழிப்பு, சுயமரியாதைத் திருமணம், கலப்புத் திருமணம், விதவை திருமணம், கர்ப்பத்தடை செய்தல், பெண்களுக்கும் சொத்துரிமை, பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு, வரதட்சணை ஒழிப்பு என அனைத்து வகையான செயல்பாடுகளையும் சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தபோது, பெரும்பாலான பெண்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பெரியாரின் சொற்பொழிவைக் கேட்ட பெண்கள் சிந்திக்கவும் தொடங்கினர். இப்பணிகளில் ஈடுபட்ட இப்பெண்கள் பெரும்பாலும் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள், முறையான கல்வி அறிவு பெறாதவர்கள், குறைந்த அளவு படித்தவர்கள், நடுத்தரமல்லாத பிரமாணரல்லாதப் பெண்கள், படித்துப் பட்டம் பெற்றப் பெண்கள் எனப் பல்வேறு பிரிவினரும் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த இயக்கத்தின் முற்போக்குக் கொள்கைகளை ஏற்று, பெண் இனத்தின் விடுதலைக்காக ஆரியத்தின் ஆணவத்தைத் தகர்க்க, இயக்கம் நடத்திய மறியலில், கிளர்ச்சிகளில், போராட்டங்களில் ஈடுபட்டனர்; சிறை சென்றனர்; இன்னல்களை அனுபவித்தனர். சுயமரியாதை இயக்க மாவட்ட, மாநில மாநாடுகளில் பெண்கள் வரவேற்புக் குழுத் தலைவர்களாக, மாநாட்டுத் திறப்பாளர்களாக, தலைவர்களாக, எழுத்தாளர்களாக, ஆற்றல்மிகு பேச்சாளர்களாக, எழுச்சிமிக்க செயல் வீரர்களாக, புரட்சியாளர்களாக, களத்தில் முன்னணி வீரர்களாக நின்று செயல்பட்டதால்தான் தமிழகத்தில் இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு உள்ளவர்களாக பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது...”

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்

முனைவர் வளர்மதி

வெளியீடு : கருப்புப் பிரதிகள்

B-74, பப்பு மஸ்தான் தர்கா,

இலாயிட்ஸ் சாலை, சென்னை – 5

பேசி : 9444272500

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விலை : ரூ.55

Pin It