1984இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே மத அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தேர்தல் அரசியலை வென்றெடுப்பது என முடிவு செய்தது. அயோத்தியில் இராமன் பிறந்தஇடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டினர்; இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த வரலாற்று இழிவைத் துடைத்தெறிய, பாபர் மசூதியை இடித்துவிட்டு, மீண்டும் அங்கே இராமன் கோயிலைக் கட்டி, இந்துக்களின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை பா.ச.க. தன்னுடைய அரசியல் குறிக்கோளாக அறிவித்தது.

இதற்காக, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரங்கள் இந்தியா முழுவதும் இந்து மத வெறியையும் இசுலாமிய வெறுப்பையும் வளர்த்தன. 1992 திசம்பர் 6 அன்று சங் பரிவாரங்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மக்கள் நல அரசியல் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதவெறி அரசியல் மேலோங்கியது. இதனால் சாதி அரசியலும் மோதல்களும் வளர்ந்தன. ஒரு பதற்றமான நிலை எப்போதும் இருக்குமாறு மத-சாதி அரசியல் சக்திகள் செயல்படுகின்றன. இத்தன்மையில்தான் மகாராட்டிர மாநிலத் தில் புனே அருகில் உள்ள பீமா கோரேகானில் தலித்துகள் மீது சங்பரிவாரங்கள் நடத்திய தாக்குதலையும், அதற்குத் தலித்துகள் நிகழ்த்திய எதிர்வினையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியா சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் தீண்டாமையின் அடிப்படையிலான இழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் தலித்துகள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே தங்களுடைய சாதிய அடையாளத்தை முன்னிறுத்தியே தங்களின் உரிமைகளுக்காகவும் சுயமரியா தைக்காகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். வர்க்க அரசியல் சிந்தனை தலித்துகளிடையே வளரவிடாமல் இது தடுக்கிறது. எனவே அம்பேத்கரோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா முதல் இந்தியா முழுவதும் தலித்துகள் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒவ்வொரு சிற்றூரிலும் கொண்டாடுகின்றனர். அதேபோன்று அம்பேத்கர் மறைந்த திசம்பர் 6ஆம் நாளையும் தங்கள் மீட்பர் இல்லையே என்ற ஏக்கத்துடன் நினைவுகூருகின்றனர்.

1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் அம்பேத்கர் பத்து இலட்சம் மகர்களுடன் பவுத்த மதத்தைத் தழுவினார். அந்த இடம் தீட்சா பூமி எனப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான தலித் மக்கள் தீட்சா பூமியில் அம்பேத்கர் புத்த மதத்தில் தீட்சை பெற்ற நாளில் கூடுகின்றனர், தங்கள் உரிமைகளுக்காகவும் விடுதலைக் காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தங்கள் தலைவருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர். “இந்து மதத்தின் சாதிய ஆதிக்கக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவோம்” என்கிற உறுதியை ஏற்கின்றனர். இதேபோன்று மும்பையில் அம்பேத்கர் நல்லடக்கம் செய் யப்பட்ட இடத்தில் - சைத்யா பூமியில் - அம்பேத்கர் மறைந்த திசம்பர் 6 அன்று தலித்துகள் பெரும் எண்ணிக்கையில் கூடி, தங்கள் மரியாதையைச் செலுத்துகின்றனர்.

மகாராட்டிர மாநிலத்தில் அம்பேத்கர் தலைமையில் நடந்த மகத் குளப் போராட்டத்தின் போது 1927 திசம்பர் 25 அன்று நடந்த மாநாட்டில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது. மகாராட்டித்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் ஆண்டுதோறும் திசம்பர் 25ஆம் நாளைப் பெண்களின் விடுதலை நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

சூத்திரர், ஆதிசூத்திரர் (தலித்துகள்) அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தையும் இந்துமத புராண, இதிகாசங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மராட்டியத்தில் மக்கள் இயக்கம் கண்டவர் சோதிபா புலே. அவருடைய துணைவியார் சாவித்திரிபாய் தான் சூத்திர - ஆதிசூத்திரப் பிள்ளைகளுக்காக புலேவால் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பள்ளியில் முதல் ஆசிரியர். சாதி இந்துக்கள் இழைத்த பல துன்புறுத்தல்களை யும் இழிவுகளையும் பொருட்படுத்தாமல் கல்வி கற்பித்தவர் சாவித்திரிபாய். அதனால் மகாராட்டிரத்தில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் சாவித்திரி பாய் பிறந்த சனவரி 3ஆம் நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றனர். பார்ப்பனிய ஆதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிரான மாற்று கலாச்சார நடவடிக்கைகளாகவே நாம் இவற்றைப் பார்க்க வேண்டும்.

ambedhkar thozar 600தமிழகத்தில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகத் திராவிடக் கருத்தியலும், திராவிட இயக்கமும் வளர்த்தெடுக்கப் பட்டன. இந்துமதப் புராண இதிகாசங்களுக்கு எதிராக, பெரியார் திருக்குறளை முன்னிறுத்தினார். பார்ப்பனியப் பக்தியின் அடையாளமான கர்நாடக இசைக்கு எதிராகத் தமிழிசை முன்னிறுத்தப்பட்டது. இந்து மதப் பண்டிகைகளுக்கு எதிராக, தை முதல்நாளைத் தமிழர் திருநாளாக - பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். மத ஆதிக்கக் கருத்தியல் களைத் தாங்கிப் பிடிக்கும் கலாச்சார வடிவங்களை மாற்றுப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட வடிவங்கள் மூலம் வீழ்த்துவது சமூக நடைமுறை உத்தியாகும்.

மனித சமுதாய வரலாறு என்பது வர்க்கப் போராட்டங் களின் வரலாறே ஆகும் என்றார், காரல் மார்க்சு. அதுபோல் தற்போதைய நிகழ்ச்சி என்பதும் கடந்த கால வரலாற்றின் நீட்சியே ஆகும். அத்தன்மையில் மகாராட்டிரத்தில் புனே அருகில் பீமாகோரேகானில் போர் நினைவிடத்தில் போரின் 200ஆவது ஆண்டையொட்டி இலட்சக்கணக்கில் தலித்துகள் திரண்டதற்கும் வரலாற்றுப் பின்னணி உள்ளது.

மராட்டியத்தின் வீர சிவாஜியை வீழ்த்திட முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் முயன்றார். அதில் அவுரங்கசீப் வெற்றி பெறவில்லை. சிவாஜியின் படையில் தாழ்த்தப்பட்டவர்களான மகர்கள் கோட்டையையும் முல்லை நிலப்பகுதிகளையும் காத்து நின்றனர். சிவாஜிக்குப்பின் 1689இல் ஆட்சிக்கு வந்த சிவாஜியின் மகன் சம்பாஜியை முகாலயப் படைகள் போரில் வென்று தளைப்படுத்தி. அவரது கை, கால்களைத் துண்டித்து அவரது உடலை பீமா ஆற்றில் வீசி எறிந்தனர். பீமா ஆற்றங் கரையில் வாது பத்ருக் என்ற சிற்றூரில் வாழ்ந்த கோவிந்த் மகர், சம்பாஜி உடலின் பகுதிகளை ஒன்றாகத் திரட்டி, இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். அத்துடன் சம்பாஜிக்கு ஒரு நினைவிடமும் அமைத்தார். கோவிந்த் இறந்த பின், சம்பாஜி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குப் பக்கத்திலேயே புதைக்கப்பட்டார். அவருக்கு ஒருநினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. முகலாயப் பேரரசுக்கு அஞ்சாமல் சம்பாஜியின் உடல் பகுதிகளை ஒன்றாகத் திரட்டி இறுதிச் சடங்குகள் செய்த கோவிந்த் மகரின் துணிவு மக்களால் நினைவுகூரப்பட்டு வந்தது.

சிவாஜியின் பேரன் இளம் அகவையில் மன்னராக்கப் பட்ட போது, முதலமைச்சராக - பேஷ்வாவாக இருந்த சித்பவன் பார்ப்பான் அரசாட்சியைக் கைப்பற்றினான். 1720 முதல் மராட்டியத்தில் சித்பவன் பார்ப்பனர்களான பேஷ் வாக்கள் அரசர்களாக இருந்தனர். இவர்கள் மனுஸ்மிருதி யின்படி சூத்திரர்களையும் ஆதிசூத்திரர்களையும் (தலித்துகள்) கொடுமையாக ஒடுக்கினர். பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் சேர்ந்தனர்.

1818இல் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் பேஷ்வா அரசன் பாஜிராவ் படைகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. 28,000 வீரர்களைக் கொண்ட பாஜிராவின் படையை 834 வீரர்களைக் கொண்ட கிழக்கிந் தியக் கம்பெனியின் படை தோற்கடித்தது. பாஜிராவின் படைத்தளபதிகள் குறிவைத்துக் கொல்லப்பட்டதால், பாஜி ராவின் படைகள் புறமுதுகிட்டுத் தோற்று ஓடின. கிழக்கிந் தியப் படையின் 834 பேரில் 500 பேர் மகர்களாக இருந் தனர். கொடுமையான பார்ப்பன பேஷ்வா ஆட்சியின் வீழ்ச்சியால் மகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 1851இல் ஆங்கிலேயர் ஆட்சி மகர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் போர் நடைபெற்ற பீமா கோரேகானில் போரில் வீரமரணம் அடைந்த 22 மகர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்ட போர் நினைவுத்துணை நிறுவியது.

ஆங்கிலேயரின் படையில் சேர்ந்ததால், மகர்களில் ஒரு பகுதியினர் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற துடன், கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற்றனர். படை வீரர்களின் குடும்பத்துப் பிள்ளைகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காக இராணுவமே பள்ளிகளை நடத்தியது. 1857இல் சிப்பாய்க் கலகம் நடந்தது. மதம் சார்ந்த நம் பிக்கைகளே இதற்குக் காரணம் என்று ஆங்கிலேய ஆட்சி உணர்ந்தது. சிப்பாய்க் கலகத்திற்குப்பின் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்த இந்தியாவின் ஆட்சி பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ‘விக்டோரியா பேரரசி, மதம் சார்ந்த நம்பிக்கை களில் அரசு தலையிடாது’ என்று உறுதி அளித்தார். அந்த வகையில் 1857க்குப்பின் தீண்டப்படாதவர்கள் படையில் சேருவதற்கு ஆங்கிலேயே ஆட்சி தடைவிதித்தது.

மகர்களுக்கு உரிமைகளையும். நல்ல வாழ்வையும். கல்வியையும் வழங்கும் இராணுவப் பணியை வழங்க வேண்டும் என்று இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கோபால் பாபா வாலன்கர், சிவ்ராவ் காம்னே போன்றவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் 1918இல் சவுத்பரோ குழுவிடம் அளித்த அறிக்கையில், மகர்கள் படையில் சேரு வதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

பின்னாளில் அம்பேத்கர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டும் வரையில் மகர்களைப் படைவீரர்களாகப் பயன்படுத்திக் கொண்டனர்; பிறகு அவர்களைப் புறக்கணித்துவிட்டனர்; நன்றி மறந்த ஆங்கிலேயர் கள் என்று கண்டித்துள்ளார், அம்பேத்கரின் தந்தை ராம்ஜி இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியவர். அதனால் இராணுவத்தில் பணிபுரியும் குடும்பங்கள் சாதிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு, முன்னேறுவதற்கான வாய்ப்பு களைப் பெறுகின்றன என்பதை அம்பேத்கர் நன்கு அறிந் திருந்தார். எனவே இராணுவத்தில் தீண்டப்படாதவர்கள் சேருவதற்கான தடையை நீக்குமாறு பிரித்தானிய ஆட்சியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மகர்கள் ஓரணியாகத் திரள்வதற்கான ஒருதிசை வழியாகவும் இக்கோரிக்கை இருந்து வந்தது.

இந்தப் பின்னணியில் அம்பேத்கர் 1927 சனவரி 1 அன்று தன் தோழர்களுடன் பீமாகோரேகான் சென்று 22 மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள போர் நினைவு வெற்றித் தூண் முன் நின்று வீர வணக்கம் செலுத்தினார். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் நாளன்று மகர்கள் போர் நினைவிடத்துக்கு வந்து வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.

2005இல் “பீமாகோரேகான் வெற்றித்தூண் சேவா சங்கம்” என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சனவரி 1 அன்று பல்லாயிரக்கணக்கில் பீமா கோரேகானுக்கு வரும் தலித்துகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுதான் இச்சங்கத்தின் நோக்கம். கடந்த பத்தாண்டு களில் சனவரி 1 அன்று மூன்று முதல் நான்கு இலட்சம் தலித்துகள் இங்கு வந்தனர். இந்த வெற்றித்தூண் மகர் களின் வீரத்தைப் பறைசாற்றுவதாகவும், அவர்களின் உரிமை வேட்கைக்கும், போராட்டத்திற்கும் ஓர் உந்துவிசை யாகவும் திகழ்கிறது.

2018ஆம் ஆண்டு - பீமாகோரேகானில் பிரித்தானியப் படைக்கும் இரண்டாம் பாஜிராவின் பேஷ்வா படைக்குப் போர் நடந்த 200ஆவது ஆண்டாகும். மகர்களின் வீரத்தைக் குறிக்கும் வெற்றித்தூணின் 200ஆவது ஆண்டை மாபெரும் விழாவாகக் கொண்டாட மகர்கள் திட்டமிட்டனர்.

dalit strike 600பீமாகோரேகானுக்கு அருகில் உள்ள வாதுபத்ருக் சிற்றூரில் மன்னர் சம்பாஜிக்கு இறுதிச் சடங்குகள் செய்த கோவிந்த் மகரின் வீரத்தைப் போற்றும் வகையில் ஒரு பதாகையைத் தலித்துகள் வைத்தனர். பல உள்சாதிகளைக் கொண்ட மராத்தாக்கள் எனப்படும் பெரும் பிரிவினர் மகாராட்டிரத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பெருநிலவுடைமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர். வீரசிவாஜி இந்த மராத்தா பிரிவைச் சேர்ந்தவர். மராத்தாக்கள் அந்தப் பதாகையை அகற்றுமாறு கூறினார்கள். மகர்கள் அகற்ற மறுத்தனர். அதனால் மராத்தாக்கள் கோவிந்த் மகரின் நினைவிடத்தைச் சேதப்படுத்தினர். மராத்தாக்களுக் கும் தலித்துகளுக்கும் மோதல் ஏற்படுவதற்கான முதல் காரணியாக இந்நிகழ்வு அமைந்தது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் நரேந்திர மோடியின் ஆட்சி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தி வரும் இந்துமதவெறியாட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கும் நோக்கத்துடன் தலித்துகள் 2017 திசம்பர் 31 அன்று பேஷ்வாக்களின் அரண்மனை இருந்த இடத்தில் “போர் முழக்க மாநாடு” நடத்தினர். இம்மாநாட்டில் பல்லா யிரக்கணக்கில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், முசுலீம்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அம்பேத் கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கரும், குசராத்தின் தலித் பேராளி ஜிக்னேஷ் மேவானி, சத்தீஷ்கர் மாநிலத்தின் சமூகச் செயற்பாட்டாளர் சோனி சோரி, மராட்டியத்தின் உல்கா மகாஜன், உமர் காலித், ஆந்திரத்தின் இராதிகா வெமுலா முதலானோர் உரையாற்றினர். மோடியின் ஆட்சி புதிய பேஷ்வாக்களின் ஆட்சியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கொடு மைப்படுத்துகிறது; புதிய பேஷ்வாக்களை - புதிய பார்ப்பனியத்தை எதிர்த்திட அணியமாக இருக்கிறோம் என்று அம்மா நாட்டில் சங்பரிவாரங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

இதனால் இந்துத்துவச் சக்திகள் சினம் கொண்டனர். 2018 சனவரி 1 அன்று வெற்றித்தூணின் 200ஆவது ஆண்டையொட்டி பீமாகோரேகானுக்கு வந்த தலித்துகளையும் பிற்பட்ட வகுப்பினரையும் வரும் வழிகளிலும், பீமாகோரே கானிலும் தாக்கினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் படுகாயமடைந்தனர். அதனால் 200ஆவது ஆண்டு நிகழ்ச்சி இடையிலேயே முடிவுற்றது. பீமாகோரேகானில் சங்பரிவாரங்களால் தாக்கப்பட்ட தலித்துகள்  தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பின், இத்தாக்குதலைக் கேட்டறிந்த தலித் மக்கள் சனவரி 2 அன்று மகாராட்டிரம் முழுவதும் நகரங்களில் வீதிகளில் திரண்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டனர். பிரகாஷ் அம்பேத்கர் தலைமையின் கீழ், தலித்து  அமைப்புகள் மகாராட்டிர மாநிலத்தில் சனவரி 3 அன்று முழு அடைப்பு நடைபெறும் என அறிவித்தன. அதேபோன்று சனவரி 3 அன்று மகாராட்டிரத்தின் எல்லா நகரங்களிலும் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. தலித் இளைஞர்கள் - ஆண்களும் பெண்களுமாக - நகரங் களின் வீதிகளில் ஊர்திகள் இயக்கவிடாமல் தடுத்தனர். மகாராட்டிரத்தில் சிவசேனா கட்சி பலமுறை முழு அடைப்பு நடத்தி தன் வலியைக் காட்டியுள்ளது. இப்போதுதான் தலித்துகள் முதன்முறையாக முழு அடைப்பை நடத்தி தங்கள் ஆற்றலை நிறுவியிருக்கிறார்கள்.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் கொண்ட ஒரு துணைக் கண்டம். ஆனால் சங் பரிவாரங்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டிட முயல்கின்றன.

பார்ப்பனிய மேலாண்மை என்பது வரலாறு நெடுகிலும் சூத்திரர்கள், தலித்துகள் மீதான கொடிய ஒடுக்குமுறையாகவும் சுரண்டலாகவுமே இருந்து வந்துள்ளது. எனவே சங்பரிவாரங்களின் இந்துத்துவ மேலாதிக் கத்தை தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் ஓரணியில் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலமே வீழ்த்த முடியும் என்பதை, பீமாகோரேகான் நிகழ்வு உணர்த்துகிறது. கற்பி, போராடு, ஒன்றுசேர் என்று அம்பேத்கர் அளித்த முழக்கமே இந்துத்துவ ஆதிக்கத்தை முறியடிப்ப தற்கான ஆயுதமாகும்.