உண்மையானக் கூட்டாட்சி என்ற இந்தத் தலைப்பே இந்தியத் துணைக்கண்டத்தில் கூட்டாட்சி இயல் இயங்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கூட்டாட்சி இயலும் மக்களாட்சி முறையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். மக்களாட்சிதான் எல்லாவித அரசமைப்புகளுக்கும் அடிப்படையாகும். ஒற்றையாட்சிமுறை கூட, மக்களாட்சிமுறையைத் தவிர்த்துச் செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால் மன்னராட்சியைவிடக் கொடுமையான அரசாட்சி முறையாக அது அமைந்துவிடும். இங்கிலாந்து நாட்டில் அரசமைப்புச் சட்டம் என்ற ஒரு அமைப்பே கிடையாது. ஆனால் நாடாளுமன்றத்தில் இயற்றுகின்ற சட்டங்களே அரசமைப்புச் சட்டத்திற்கு சமமான நிலையையும் அதிகாரத்தையும் அளித்துவிடுகின்றன. இங்கிலாந்து நாட்டில் மக்களாட்சி முறையை ஒடுக்கிவிட்டு ஓர் ஒற்றையாட்சி முறையை நடைமுறைப்படுத்த முடியாது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் முழுமையான முறையில் நாடாளுமன்றத்திற்கும் அவர் சார்ந்திருக்கின்ற கட்சியின் சனநாயக இயல்புகளுக்கும் ஒருங்கிணைந்தே செயல்படவேண்டும். ஒரு சிறிய அளவில் சனநாயகத்தைக் கட்சியில் கடைப்பிடிக்காவிட்டால்கூட அவர் தூக்கி எறியப்படுவார். மக்கள் எப்போதும் ஜனநாயக அமைப்புகளைக் காப்பதில் விழிப்புணர்வோடு இயங்குவார்கள்.
சான்றாக இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் புகழ்பெற்ற அரசியல் தலைவர் வின்சன்ட் சர்ச்சில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது இரு காரணங்கள் சுட்டப்பட்டன. அதில் முதன்மையானது சர்ச்சில் போர்க்குணம் மிக்கத் தலைவர் அவர் தலைமைப் போர்க்கால நிகழ்வுகளுக்குப் போதுமானதாகும். போருக்குப்பின் இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இயங்கிய காலனி நாடுகளுக்கு விடுதலையை அளிக்க வேண்டிய சூழல்களை அனுசரித்துப் போகும் அட்லியைப் பிரதமராக்கினர். பிரதமர் அட்லியும் அவரது தொழிலாளர் கட்சியும் கடைப்பிடித்த அணுகுமுறையால்தான் இந்தியா உட்பட பல காலனி குடியேற்ற நாடுகளின் விடுதலைப் பயணம் விரைவுப்படுத்தப்பட்டது. ஒற்றையாட்சி முறையைப் பின்பற்றுகிற இங்கிலாந்தில், இன்று கூட எந்தப் பிரதமரும் இந்தியப் பிரதமர் மோடி போல் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.
ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையை அமைச்சரவையின் கருத்தைக் கேட்காமல் முடிவு செய்ய முடியாது. பிரதமர் தனி மனிதரல்ல. அவர் அமைச்சர வையின் கூட்டுப் பொறுப்பின் ஓர் அங்கமே ஆவார். இத்தகைய அணுகு முறையிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது. கூட்டாட்சி இயலைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இந்தியாவில், பிரதமர் ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படும் நிலையை உலகின் எந்த சனநாயக நாட்டிலும் காண முடியாது.
புதுதில்லியின் பேராதிக்க பிரதமர் சனநாயகத்தையும் அதன் முதன் மையான நிர்வாகச் சட்டங்களையும் அமைப்புகளையும் முடக்கிவிட்டார். நெருக்கடி நிலை காலத்தில் அரசமைப்புச் சட்டமே முடக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி எல்லா அமைப்புகளையும் தனது அரசியல் நலத்திற்காக முடக்கி வருகிறார். கூட்டாட்சி இயலின் அடிப்படைக் கூறுகள் இன்று மோடி அரசால் சிதைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய போக்கினை முழுமையாக நீதிமன்றங்களால் கூடத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வரும் வழக்குகளை விசாரிப்பதற்கு ஒன்றிய அரசின் விருப்பமும் குறுக்கீடும் உள்ளதாக நீதிபதிகளின் ஊடகச் சந்திப்பிலிருந்து உணர முடிகிறது.
இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. பிரிவினையைக் கோரும் உரிமையை 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டம் வழங்கியது. அரசமைப்புச் சட்டத்தில் இதற்காக ஒரு பிரிவும் இணைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சிக் கூறுகளைப் பயன்படுத்தி ஒரு கொடுமையான சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் தோன்றிவிட்டால் பல இன சமய மொழி அடையாளங் களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் சார்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் ஓர் அரசியல் கோரிக்கையாகவோ அல்லது ஓர் அரசியல் பேரமாகவோ எடுத்துக்கொள்கிற தன்மையை உருவாக்கு வதற்குப் பிரிவினையைக் கோரும் சட்டப்பிரிவை அரசமைப்பு அவை இணைத்திருக்கலாம். ஆனால் நடந்தது வேறுவகையானது. 1962இல் அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசிய பிறகுதான் பிரிவினைத் தடை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மக்கள் விரும்பும் அரசியல் சனநாயக சக்திகளை ஒடுக்கும் அடக்குமுறை செயலாகத்தான் இதையும் கருத வேண்டும்.
1967இல் ஆட்சிப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா தமிழகச் சட்டமன்றத்தில் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் அக்கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று குறிப்பிட்டார். மக்களாட்சிக் கூறுகளையும் கூட்டாட்சித் தன்மை களையும் சிதைப்பதனால்தான் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகும் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினை கோரும் கட்சிகளின் மக்கள் செல்வாக்கினைக் குறைக்க முடியவில்லை. உண்மையான கூட்டாட்சிக் கூறுகளைத் தொடக்கக் காலத்திலேயே இணைத்திருந்தால், இந்தியத் துணைக் கண்டம் இன்று சந்தித்து வரும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு இருக்கலாம். “கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்” என்பது போல, அண்மையில் மோடி அரசு நாகாலிம் பிரிவினை அமைப்பின் பின்வரும் கோரிக்கைகளை ஒப்புக்கொண்டு ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. பிரிவினையை வலியுறுத்தும் நாகாலிம் வைத்த கோரிக்கைகள்.
- பெரும் நாகாலாந்து மாநிலம்- Greater Nagaland -அமைவதைத் தடுக்கும் செயலாக மணிப்பூர் மாநிலக் காங்கிரசு அரசு, மணிப்பூர் மாநிலத்தில் 7 புதிய மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கைளை மேற் கொண்டது. இது நாகா குழுவினரோடு ஒன்றிய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இதைத் திரும்பப் பெறவேண்டும்.
- நான்கு மாதங்களாக நடைப்பெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நாகா பழங்குடியினர் மாணவத் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
- முத்தரப்புப் பேச்சினை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும். மேற்கூறிய அனைத்துக் கோரிக்கை களும் ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டுள்ளன. 2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பா.ச.க. மாநில அரசும், ஒன்றிய அரசும், முத்தரப்பு ஒப்பந்தம் வழியாக நாகா குழுவினரின் கோரிக்கைகளை ஏற்றுள்ளன. இதன் வழியாக முழுமையான பெருங் கூட்டாட்சிக் கூறுகள் - Confederal Set - upஏற்கப்படுகின்றன.
நெருக்கடி நிலை காலத்தில் பெருந்தலைவர் காமராசர் அவர்களை, எனது மாமனார் மார்க்சிய சிந்தனையாளர் விடுதலைப் போராட்ட வீரர் க.ரா. ஜமதக்னியுடன் சென்று சந்தித்த போது, காமராசர் கூறிய கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது: “கூட்டாட்சி இயலில் சனநாயகத்தோடு இணைந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பிரதமர் பொறுப்பினை ஏற்பவர் ஒரு மாநில உணர்வுக்கு அப்பாற்பட்டு எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொதுவாக நடப்பவர்தான் தகுதி வாய்ந்த பிரதமராக இருக்க முடியும்” என்று பெருந்தலைவர் காமராசர் குறிப்பிட்டார்.
தான் ஏன் காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த மொரார்ஜி தேசாயைத் தேர்ந்தெடுக்காமல், லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்த இந்திரா காந்தியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணத் தை விளக்கினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானால் குசராத்தி என்கிற எண்ண ஓட்டத்தில்தான் எல்லாச் செயல்களையும் நடைமுறைப்படுத்துவார் என்பதை, அவருடன் நீண்ட காலமாகப் பழகியதால் அறிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டார். மற்ற தேசிய இனங்களின் உணர்வுகளை மதிக்க மாட்டார்; அதன் காரணமாகத் தேசிய இனச் சிக்கல்கள் பெரும் அறைகூவலாக மாறிவிடும் என்றார்.
காமராசர் குறிப்பிட்டது போல மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த இரண்டு வருட குறுகிய காலத்தில் குசராத்தியர்களுக்கு ஒன்றிய அரசின் முதன்மையான துறைகளில் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிந்த எச்.எம். பட்டேல் என்பவரை இந்திய மைய வங்கியின் ஆளுநராக நியமித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ள மைய வங்கியின் ஆளுநருக்கு இருக்கும் ஒரே தகுதி குசராத்தியரான அம்பானியின் நெருங்கிய உறவினர் என்பதுதான் எனப் பலர் குறிப்பிடுகின்றனர். நிதிக்குழு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசமைப்புச்சட்ட விதிகளின்படி நியமிக்கப் படும் ஓர் அமைப்பாகும். மாநிலங்களுக்குத் தேவையான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து பிரித்துக் கொடுக்கும் ஒரு பெரும் பணியைச் செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பிற்கும் நீதிபதி சீலாட் என்கிற குஜராத்திய இசுலாமியரைத்தான் தலைவராக பிரதமர் மொரார்ஜி நியமித்தார்.
1977இல் உகாண்டாவில் இடிஅமின் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆயிரம் குஜராத்தியர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கான காரணம் தான் என்ன? தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக உகாண்டாவில் குடிநீர் வழங்கல் ஆலோசகராகப் பணியாற்றிய பொறி யாளர் திரு.குமாரசாமி சென்னையில் நடந்த ஒரு கூட் டத்தில் சில உண்மைகளை வெளியிட்டார். இடிஅமின் குசராத்தியர்களை வெளியேற்றிய நேரத்தில் தன்னை அழைத்ததாகவும், ஏன் அழைத்தார் என்று அறிய முடியாத நிலையில் ஒருவித அச்சத்துடன் தான் சென்ற தாகவும், ஆனால் இடிஅமின் தான் செய்த பணிகளைப் பாராட்டி நன்றித் தெரிவித்துவிட்டு தென்னிந்தியர்கள் வெளிநாட்டில் தொண்டு மனப்பான்மையோடு செயல்படுபவர்கள்.
குசராத்தியர்கள் அட்டைபோல இரத்தம் உறிஞ்சுபவர்கள் என்று கூறினார். இதன் காரணமாகத் தான் வட்டித் தொழில் செய்த உகாண்டாவின் பொரு ளாதாரத்தைச் சுரண்டிய பெரும் பணக்காரக் குசராத்தி யர்களை மட்டுமே நான் வெளியேற்றினேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டார். 1977இல் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு இந்தச் செய்தி கிடைத்தவுடன் உடனடியாக ஏர் இந்திய விமானங்களை அனுப்பி ஆயிரம் குசராத்தி யர்களை தில்லிக்கு அழைத்து வந்துவிட்டார். இது குஜராத்தியரின் இரத்த பாசம்.
ஆனால் நாம் ஈழத்தில் கண்டதென்ன? 2009இல் முள்ளிவாய்க்காலில் குழந்தைகள் பெண்கள் உட்பட இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது எவ்வித அணுகுமுறையை வடநாட்டு ஆதிக்கச் சக்திகள் பின்பற்றின என்பதை எல்லோரும் அறிவர். இன்றைய குசராத்திய இந்தியப் பிரதமர் ராஜபக்சேவிற்கு இரத்தினக் கம்பள வரவேற்பை அளித்ததை நாம் மறக்க முடியாது. இன்றைய பிரதமர் மோடி மெரார்ஜி கடைப்பிடித்த குசராத்திய வெறியைப் பன்மடங்கு உயர்த்தி ஆட்சியி யலில் கடைப்பிடிக்கிறார்.
பாஜக உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டது. மோடி பிரதமரானவுடன் சில மாதங்களுக்குள் உத்திர பிரதேசத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்து துரத்தப்பட்டு மற்றொரு குஜராத்தியரான அமித்ஷா தலைவராக நியமிக்கப்பட்டார். அமித்ஷா இன்று ஒன்றிய அரசின் அமைச்சரவைக்கு மேல் அமர்ந்திருக்கும் அதிகார மையமாக வலம் வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மைய வங்கியின் தலைவராக ரகுராம் ராஜன் மிகத் திறமையாகச் செயல் பட்ட போதும், சுப்பிரமணியசாமியை விட்டு ஓட ஓட விரட்டினார்கள். எதற்காக? பணமதிப்பிழப்பு நடவடிக்கை யைத்தான் நினைத்தவாறு செயல்படுத்துவதற்குக் குசராத்திய அம்பானியின் உறவினரான உர்ஜித் பட்டேலை இந்திய மைய வங்கியின் தலைவராகப் பிரதமர் மோடி ஆக்கினார்.
அரசமைப்புச் சட்டப்படி தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரமுடையது. அதன் தலைமைப் பதவிக்கும் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது தலைமைச்செயலராக இருந்த ஜோதியைக் கொண்டு வந்து நியமித்தார். சீனப் பிரதமராக இருந்தாலும் சரி, இஸ்ரேல் பிரதமராக இருந்தாலும் சரி அகமதாபாத்தில் அவர்களின் பயணம் அமைய வேண்டும் என்பதற்காகத் தெரிந்தே பல திட்டங்களை அங்கிருந்து தொடங்குகிறார். குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவே தேர்தலைச் சில காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வெற்றி கண்டார். ஏறக்குறைய குசராத்தில் சிறு குறு தொழில்களைப் பாதிக்கும் சரக்கு சேவை வரியை 120 பொருள்களுக்குக் குறைப்புச் செய்தார்.
இந்தியப் பொதுத் துறை வங்கிகளுக்கு வாராக் கடனான எட்டு இலட்சம் கோடியில், 80 விழுக்காடு கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குசராத்திய பெருமுதலாளிகளே ஆவர். பெருந்தலைவரின் காமராசரின் கணிப்பு மொரார்ஜி தேசாய்க்கு மட்டுமல்ல, மோடிக்கு அதிக அளவில் பொருந்துவதாக உள்ளது. இது போன்ற பல செய்திகளைக் கூறிய காமராசர் இந்தியாவிற்கு ஒரு பெரும் கூட்டமைப்புதான் (Confederation) சரியாக அமையும் அதுவும் குறிப்பாக தென்னக மாநிலங்களை இணைத்த ஓர் அரசமைப்பு முறை இந்தப் பெரும் கூட்டமைப்பு முறையில் இயங்க உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஆனால் நமது இன்றைய ஒன்றிய ஆட்சி மாநிலத்திற்கு மாநிலம் ஒருவித அணுகுமுறையைப் பின்பற்று கிறது. காஷ்மீரில் அடக்குமுறை; நாகாலாந்தில் அமைதி ஒப்பந்தம் எந்தக் கூட்டாட்சி இயல் நாட்டிலும் இது போன்ற தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கினைக் காண முடியாது; முடியவே முடியாது. அங்கெல்லாம் சனநாயகத் தளத்தில் கூட்டாட்சி இயல் சிறப்பாகச் செயல்படுகிறது.
கடந்த 68 ஆண்டுகளாக இந்தித் திணிப்பு சமசுகிருதத் திணிப்பு இந்து மதத் திணிப்பு மாநில உரிமைகள் ஆண்டுக்கொன்றாகப் பறிப்புப் போன்ற தில்லிப் பேராதிக்க சக்திகளின் செயல்கள் முற்றிலுமாக இந்தியக் கூட்டாட்சி இயலைச் சிதைத்து வருகின்றன. இதற்கு ஒரே தீர்வு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் நாடாளுமன்றம் பரிந்துரை செய்யும் ஓர் அரசமைப்புச் சட்ட அவையை உருவாக்கி, உண்மையான இந்தியக் கூட்டாட்சி இயலை உள்ளடக்கிய ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்குவதுதான் நிரந்தரத் தீர்வாகும். இல்லையென்றால் சோவியத் ஒன்றியம் போல் இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடலாம். இதைத் தவிர்ப்பதற்கு இந்திய அரசியல் கட்சிகளும் மாநில அரசியல் கட்சிகளும் சரியான முறையில் இயங்குவதற்கு மக்கள் இயக்கங்கள் களம் அமைக்க வேண்டும் போராட வேண்டும்.