'தமிழ்நாடு தமிழருக்கே!’ - என்கிற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
1937 சூலையில் திருச்சி மாநாட்டில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மானமும், 1938-இல் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியின் நிறைவில் 'தமிழ்நாடு தமிழருக்கே!’ என்பதுதான் தீர்வு என்பதான அறிவிப்புமே தமிழ்நாட்டு விடுதலைக்கான தொடக்க தீர்மானங்களாக, முழக்கங்களாக இருந்தன.
ஆனால் அத் தீர்மானத்திற்கோ, முழக்கத்திற்கோ - இன்றைய காலத்திற்கான தமிழ்த்தேசத்திற்குரிய பொருளைப் பொருத்திப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு பார்க்கவும் கூடாது.
அன்றைக்கு எழுந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் தமிழ்மொழி உரிமைக்கானதாக, பார்ப்பனிய எதிர்ப்புக்கானதாக மட்டுமே இருந்தன.
அதன்பிறகும் அம் முழக்கத்தின் உள்ளடக்கப் பொருள் விரைவாக மாறிவிடவில்லை.
4.8.1940-இல் திருவாரூரில் நடந்த தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தின் (நீதிக்கட்சியின்) மாநாட்டுத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் அத்தன்மை விளங்கும்.
அத் தீர்மானம் கீழுள்ளது:
''திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிரிய வேண்டும்".
- இந்தத் தீர்மானத்தை இன்றைய தமிழ்த்தேச விடுதலை அரசியலோடு நேர்ப்படுத்த இயலாது. ஆனால் இன்றைய தமிழ்த்தேச விடுதலைக்கான அரசியல் வளர்ச்சிக்குரிய பின்புலத்தில் இத்தகைய தீர்மானங்களும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 1944-இல் தென்னிந்திய நல உரிமைக் கழகம் - திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட மாநாட்டின் தீர்மானமும், 1945-இல் திருச்சி - புத்தூரில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானமும் தமிழ்நாட்டு விடுதலைக்குரிய தீர்மானங்களாகப் படிப்படியாகக் கருத்தளவில் வளர்ச்சி பெற்றன.
1949-இல் தி.மு.க. தோற்றங் கொண்டு 1952-இல் 'திராவிட நாடு’ விடுதலைக் கோரிக்கையை எவர் முன்வைக்கிறார்களோ அவர்களுக்கே எங்களின் வாக்கு - என்று அறிவித்தது. 1957 தேர்தலில் திராவிட நாடு விடுதலையை நேரடியாகப் பேசி போட்டியிட்டு 15 இடங்களைப் பெற்று வெற்றியும் பெற்றது அக்கட்சி.
இதற்கிடையில் தமிழ்நாடு தமிழருக்கே என்றும், திராவிட நாடு திராவிடருக்கே என்றுமான முழக்கங்களை வலியுறுத்திப் பலரும் பல்வேறு முனைப்பான வேலைகளை செய்யத் தொடங்கினர்.
தமிழக வெகு மக்களிடையே பிரித்தானிய வெள்ளை அரசெதிர்ப்பு எந்த அளவு வளர்ந்திருந்ததோ அதைவிட அதிகமாகவே …19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள், திரு.வி.க., சிங்காரவேலர், பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களாலும், தலைவர்களாலும் பார்ப்பன எதிர்ப்பரசியல் பரவியது. அப் பார்ப்பன எதிர்ப்பரசியலின் உள்ளீடு கொண்ட கருத்து வளர்ச்சியே தமிழ்நாடு - திராவிட நாடு - என்கிற கருத்துகளோடு ஒன்றியது.
ஆக - அன்றைய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்திற்கும், திராவிட நாடு திராவிடருக்கே முழக்கத்திற்கும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலே உள்ளீடாக இருந்தது.
1890-களின் காலங்களில், அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் பின்னர் ஐம்பதாண்டு இடைவெளியில் 1944-இல் பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கும் சாதி ஒழிப்பு, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவே நடுவ அரசியலாக இருந்தன.
அதிலிருந்தே இந்தி எதிர்ப்பை, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை, இந்திய எதிர்ப்பை (அவர்கள் மொழியில் வடநாட்டான் எதிர்ப்பை) அடையாளப்படுத்திக் காட்டினர்.
அன்றைய சென்னைத் தலை மாநிலம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்பது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் பகுதிகளை யெல்லாம் இணைத்து பிரிட்டீசாரின் ஆட்சியினால் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தெளிவான நில அடையாளத்தைக் காட்டுகிற அரசியலாக எழவில்லை.
இன்னொருபுறம் ஆரியமல்லாதவையே 'திராவிடம்’ - எனக் கால்டுவெல் மொழியியல்வழி விளக்கப்படுத்தியதும், பழங்காலந் தொட்டே தமிழைத் திரமிளம் - திராவிடம் என்று பிராகிருத, ஆரிய வழிமுறையினர் அடையாளப்படுத்தி வந்ததுமான நிலையில் 'திராவிடர்’ - என்போர் ஆரியம் அல்லாதவர் என்கிற அரசியல் விளக்கமே அக்கால் பரவியிருந்தது.
எனவேதான் அயோத்திதாசப் பண்டிதரும், பின்னர் பெரியாரும் ஆரியம் அல்லாத மறுப்பு நிலையிலிருந்து திராவிடர் கழகம் எனும் பெயர்களில் இயக்கங்களைத் தொடங்கினர்.
1952-இலிருந்தே அதாவது மொழிவழி மாநிலப் பகுப்புக்கு முன்பிருந்தே தேர்தலில் ஈடுபடத் தொடங்கிய தி.மு.க. அன்றைய சென்னைத் தலைமாநிலத்தோடு தெலுங்கு, கன்னட, மலையாள மக்களும் இணைந்திருந்த விரிந்த நிலப்பரப்பையே 'திராவிட நாடு’ என்பதாக அடையாளப் படுத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு திராவிட நாடு விடுதலையைக் கேட்டது.
1956 மொழிவழி மாநில பகுப்புக்கு முன்னர் வரை பெரியாரும் அவ்வாறே திராவிட நாடு என முழங்கினார். மொழிவழி மாநிலப் பகுப்புக்கு பின்னர், அரசியல் சூழல் மாறியது.
தமிழுக்கு, தமிழருக்கு உரிய மாநிலம் தமிழ் நாடாயிற்று.
எல்லைப் பகுப்பில் நடந்த தில்லுமுல்லுகள் பலவாயினும் இறுதியாகத் தமிழ்நாடு என்பது இதுதான் என்பதான ஓர் அடையாளத்திற்கு வந்தது.
எல்லைப் பகுப்பு நடந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்தே தமிழர்களுக்கான இந்நிலப் பகுதிக்குத் 'தமிழ்நாடு’ எனச் சட்டப்படி போராடி பெயர் பெற முடிந்தது.
இனி, தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் நம்பிக்கொண்டு பயனில்லை. அவர்கள் திராவிட நாட்டு விடுதலைக்கு உடன்படப் போவதில்லை. தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் சரி என்று பெரியார் 1956-இல் முடிவுக்கு வந்தார்.
ஆனால் 1963-இல் பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பிறகும்கூட திராவிட நாடு - என்கிற அடையாளத்தையே தி.மு.க. வலியுறுத்தி வந்தது. நெருக்கடிக்காகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோதுகூட, திராவிட நாடு பிரிவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன, நாங்கள்தாம் கைவிட்டுவிட்டோம் என்றனர்.
முழுக்க முழுக்கத் தேர்தல் நலன் நோக்கியே அவர்களின் கொள்கைகளும், நடைமுறைகளும் நீர்த்துப் போகவும், ஆட்டங் காணவும் செய்தன.
ஆரிய மாயை எழுதிய அவர்களே அன்றைக்கு ஆரியத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்த இராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் பங்கேற்றனர். அதற்குத் தகவாக அரசியல் பேசவும் செய்தனர்.
"புரட்சிக்கான, விடுதலைக்கான, உழைக்கும் மக்களுக்கான, சாதி ஒழிப்புக்கான அரசியல் கருத்துகளையெல்லாம் தேர்தல் வாக்குக்காகப் பேசிக் கொண்டே அவற்றுக்கு நேரெதிராக முதலாளியத்தோடும், இந்தியத்தோடும், பார்ப்பனியத்தோடும் உறவாடியபடி கொள்கை அனைத்தையும் அடிசாய்த்தனர். ஆவர்களின் படிப்படியான அன்றைய சீரழிவு நடைமுறைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள் 2009-இல் முள்ளிவாய்க்காலின் பேரழிவுக்குத் தி.மு.க., ஆட்சியிலிருந்தும் ஏதும் செய்யாததற்குக் காரணம் கருணாநிதி பிறப்பால் தமிழர் இல்லை என்றும், அவர் திராவிடக் கருத்துள்ளவர் என்றும் அரைகுறை அரசியல் பாடம் படித்து தி.மு.க.வையும், திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாகக் கருதவும் பரப்பவும் செய்கின்றனர்.
தமிழ்த்தேச அரசியல் என்றால் என்ன? அது யாருக்கானது? யாரை எதிர்த்தது? அது என்ன செய்யப் போகிறது? எப்படிச் செய்ய போகிறது? - என்கிறபடியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்குத் தெளிவாகச் சிந்திப்பதும் இல்லாமல், செயல்படுவதுமில்லாமல் இருக்கின்றனர்.
தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்று தன்னை முதலமைச்சராகத் தேர்வு செய்ய வேண்டுமான உத்தியோடு பேசுகின்றனர்.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே"
- என்ற புரட்சிப் பாவலரின் பாடல் வரிகளைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
- தமிழ்நாட்டை ஆளுவதற்கு ஒருவன் தமிழனா? இல்லையா என்பதை மட்டுமே தகுதியாகச் சொல்கின்றனர்!
தமிழ்நாடு இந்திய அரசாலும், பன்னாட்டு நிறுவன வல்லரசிய முதலைகளாலும் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதும் எதிர்த்துப் போராடுவதும் இல்லை.
நெய்வேலி பறிபோனது குறித்தோ, காவிரி கடைமடை மாவட்டங்கள் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பற்றியோ, தமிழகக் கனிம வளங்கள், நீர் வளங்கள், நில விளைச்சல் வளங்கள், கடல் வளங்கள் - என எல்லாம் சூறையாடப்பட்டு வருவதைப் பற்றியோ அவற்றை தமிழகத்திற்கானவையாக மீட்டுப் போராட வேண்டும் என்பது குறித்தோ மக்களை அணிதிரட்டியதில்லை. பறிபோய்விட்ட கல்வி உரிமையை காக்க வழிகாட்டியதில்லை.
தமிழன் இந்தியன் இல்லை, தமிழர்களின் தேசிய இனம் 'தமிழ்த் தேசிய இனமே’ என்று பதிந்து கொள்ளுகிற உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியதில்லை.
சாதி வெறிக்கெதிராக, சமயத் திமிர்களுக்கு எதிராக அணிதிரளுவதில்லை.
இந்துப் பார்ப்பனிய வெறிகொண்டு இந்தியாவை ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே அரசு, ஒரே பண்பாடு என்றெல்லாம் பேசுகிற ஆர்.எஸ்.எஸ்.-ஐ அதன் அடிவருடிப் பரிவாரங்களை எதிர்த்து இவர்கள் முணங்குவதுகூட கிடையாது.
சாதியால்தான் தமிழனை அடையாளம் காணமுடியும் என்றும் சாதி தேவையுடையதாக இருப்பதாகவும் நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர்.
தமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகுதான் சாதி ஒழிப்பு, வகுப்பு(வர்க்க) ஒழிப்பு என்று கூறி, சாதி ஒழிப்பு பற்றியெல்லாம் பேசித் தமிழன் என்கிற ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்கின்றனர்.
அப்படியென்றால் தமிழ்த்தேச விடுதலைக்குப் போராடக் கூடியவர்கள் யார்? என்றால், தமிழர்கள் என்கின்றனர்.
எந்தத் தமிழர்கள் என்றால் - தமிழரை நாம் கூறுபடுத்துவதாகப் பழி சுமத்துகின்றனர்.
ப. சிதம்பரம், சிவநாடார் போன்றோரெல்லாம் தமிழர்களா என்றால் - தமிழராகப் பிறந்தவர்கள் தானே… அவர்களும் ஒருவகையில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்கின்றனர்.
ஆக. தமிழ்த்தேச விடுதலை என்றால் என்ன என்கிற முதல்பாடத்திலிருந்தே விளக்கங்களைத் தொடங்க வேண்டியுள்ளது.
எண்பதாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்த் தேச விடுதலை அரசியல் நுழைந்திருக்கிற நெருக்கடியான இக் குழப்பச் சூழலுக்கு எவையெல்லாம் காரணங்கள் என்பதை ஆய்வு செய்தாக வேண்டியுள்ளது.
ஆனால் இவ்வளவு காலம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு ஏன் நுழையவில்லை என்றால், அதற்குக் காரணம் திராவிட அரசியலே என்று ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிடுகின்றன சில தமிழ் இயக்கங்கள்.
இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டு அதன் பரிவார இயக்கங்களும் இன்றைக்குள்ள சமூகக் கேடுகளுக்கு அவலங்களுக்குத் திராவிட அரசியலும், அதன் ஆட்சியுமே காரணம் என்கின்றன.
ஆக, எதிரெதிர் இயக்கங்களாக இருக்கவேண்டிய தமிழ் இயக்கங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஆரியச் சார்பு இயக்கங்களுக்கும் எப்படித் திராவிட அரசியலும், நடைமுறையுமே எதிரி என்று அடையாளப்பட முடியும்? - அடையாளப்படுத்திட முடியும்?
இந்த இடத்தில் திராவிட அரசியல் குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
திராவிடம் என்பது பெரிய அளவிலான ஒரு கொள்கையோ, கோட்பாடோ, தேசமோ கொண்டதன்று.
அது ஆரியத்திற்கெதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டதாக உணரவும், உணர்த்தவும் பட்டிருக்கிறது.
இன்னொருபுறம் அப்படியான ஆரியத்திற்கு எதிரான தமிழின மரபு சார்ந்த இனங்களை யெல்லாம் அவை ஆரிய எதிர்ப்புடையவையாகக் கருதி இணைத்துத் திராவிடம் என அடையாளப் படுத்தியது.
ஆக, திராவிடத்திற்கான இந்த இரண்டு செயல் இலக்குகளும் - திட்டங்களுமே ஆரியத்திற்கு எதிரானவை என்றாலும், அவை இரண்டுமே திராவிடத்தை முன்மொழிந்த இயக்கங்களால் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.
திராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும், பண்பாட்டடிப் படையிலும் சிலவகையில் எதிர்த்துப் பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவதற்கான செயல்திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின.
எனவே, திராவிடம் என்பது ஆரியத்திற்கு, அதன் இன்றைய அரசியல் அதிகார அடையாளமான இந்தியத்திற்கு எதிரானதாக நிற்காமல் அவற்றினோடேயே இணங்கிப் போனதால், தமிழ்த் தேசக் கருத்தாளர்கள் பலருக்கும் திராவிடத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது, ஏற்பட்டுள்ளது. அவ் வெறுப்பிற்கான காரணத்தில் சரி இருந்தாலும், அவ் வெறுப்பிற்கான காரணம் இன்னதுதான் என்பதை அடி ஆழமாய் ஆய்வு செய்யாமல், திராவிடமே பகை என்பது போல் சுட்டத் தொடங்குவது, அத் தமிழ்த்தேசமும் ஆரியத்திற்குச் சார்பாய் போகிற பெரும் பிழையையே செய்வதான போக்காக மாறுவதையே அவர்கள் உணரவேண்டும்.
அந்த இடத்தை இந்திய ஆரியம் சரியாக உணர்ந்துகொண்டது. எனவேதான் அது திராவிடத்தை எதிர்த்து தமிழை அரவணைப்பது போன்ற ஏமாற்றைச் செய்வதான நடைமுறைகளை மேற் கொண்டது. இடைக்காலத்தில் தருண்விஜய்யைத் தூண்டிவிட்டுத் திருவள்ளுவரை, திருக்குறளைப் பாராட்டிய நாடகங்களை நடத்தியது. தமிழில் பேசுவது போன்ற புனைவை உருவாக்கியது.
ஆக, ஆரியத்தை - அதன் அரசியல் நடுவமான இந்தியத்தை, பொருளியல் அடித்தளமான பன்னாட்டு நிறுவன வல்லரசியங்களை எதிர்த்துக் களம் காண வேண்டிய தமிழ்த் தேச அரசியல், அவற்றை எதிர்ப்பதில் - போராடுவதில் திட்டமிடாமல் செயல்படாமல், அவ்வகை செயல் திட்டங்களே இல்லாத வெற்றுத் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் கம்பு சுற்றுகிறது.
இன்றைக்கு ஓட்டாண்டிகளாய் மாறி இந்திய மடியில் சாய்ந்து கிடக்கும் திராவிடக் கட்சிகளின் முகத்திரைகளைக் கிழித்து, அவை தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனிய - இந்திய அரசெதிர்ப்புத் திட்டங்களை மேற்கொள்ளாமல் எப்படிப் பொய்யாய் போலியாய் மாறிப் போய்விட்டன என அம்பலப்படுத்தி - அவற்றை ஆரியத்திற்கு எதிராகக் கொம்பு சீவிவிட வேண்டிய கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேச இயக்கங்களுக்கே இருப்பதை அவை உணர்ந்தாக வேண்டும்.
ஆரிய - இந்திய எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டுமானால், இத்தகைய விரிவான திட்டத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் செய்தாக வேண்டும்.
மாறாக எதிரிகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்காமல், அவர்களின் வலுவை அதிகப்படுத்திக் கொண்டிருப்பது தமிழ்த் தேசப் போராட்டத்திற்கே பேரிழப்பாக முடியும்.
நிலைஇவ்வாறிருக்க, தமிழகத்தில் உள்ள புரட்சிவய கட்சிகளின் அரசியல் தெளிவின்மையும், செயல்திட்டமின்மையும்கூட இன்னொரு பெருங்காரணமாய் உணரவேண்டியுள்ளது.
1925 அளவில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கடந்து வந்து தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தி வைத்திருக்கிற அளவில்கூட,
அதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி தன்னை வலுப்படுத்தி நிலை நிறுத்தவும் புரட்சிக்கான நகர்வை முன்னெடுத்துச் சொல்லவுமில்லை என்பதை மீளாய்வு செய்தாக வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே குமுகம் - என ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொண்டு செயலாற்றிய அரசியல் பாடத்தைத்தான் மார்க்சிய இலெனினியத்தை வழிமொழியும் புரட்சிவயக் கட்சியினரும் பேசினர்.
இந்திய நாடு என்றும், இந்தியச் சமூகம் என்றும் அளவிடத் தொடங்கினர்.
இந்தியா எப்படி ஒரு நாடாகும்? தேசமாகும்? ஒற்றைச் சமூகமாகும்? - என்று பலமுறை நாம் உள்ளிட்டுப் பலரும் இடித்துக் கேள்வி எழுப்பியும் அவர்கள் மாறுவதாயில்லை, மாற்றிக் கொள்வதாயுமில்லை.
இந்தியப் புரட்சி நடக்கும் என இலவுகாத்துக் கிடந்தனர்; கிடக்கின்றனர்.
இந்திய அளவில் கட்சியை 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சி’ - என்று வைத்துக்கொண்டனர்.
1925-இல் இ.பொ.க. தொடங்கப்பட்ட போதான இந்தியா வேறு, 1947-க்குப் பிறகான இந்தியா வேறு, 1980-களுக்குப் பிறகான இந்தியா வேறு. ஆக முதலாளிய அதிகார அரசு எதை நாடு என்று காட்டுகிறதோ, எதைச் சமூகம் என்று கூறுகிறதோ அதைத்தான் புரட்சிவயக் கட்சிகளும் நாடு என்றும், சமூகம் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளும் என்றால் அது என்ன வகை இயங்கியல்.
அந்த அந்த மொழித் தேசங்கள் அளவில் கட்சிகளைக் கட்ட வேண்டும் எனத் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் எல்லாம் விரிவாகத் தருக்கமிட்டுத் தமிழ்நாட்டளவில் கட்சி கட்டிய போதெல்லாம் மா.இலெ.வினர் உள்ளிட்ட இ.பொ.க.வினர் அது 'முதலாளிய தேசிய வாதம்’ - இழித்துரைத்தனர்.
இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றவர்கள் அச் சிறைக்கூடத்தை உடைத்திடுவது குறித்து எந்தத் திட்டத்தையும் முன்வைத்ததில்லை.
ஆக இப்படியான சூழலில் தமிழ்த்தேச அரசியல் ஏன் செழுமைப்படவில்லை, மக்கள் விடுதலைக்குரிய வகையில் ஏன் வழி அமைத்திடவில்லை, உழைக்கும் மக்களுக்கானதாக ஏன் திட்டமிடப்படவில்லை, சாதி ஒழிப்போடு ஏன் செயல்திட்டம் கொள்ளவில்லை என்றெல்லாம் பேசுவதில் அவ்வாறு செயல்படாததற்கு எவை காரணம் என ஆய்ந்திட வேண்டுமா வேண்டாமா?
"புரட்சிவய கட்சிகளின் அரசியல் திட்டங்களும், செயல் திட்டங்களும் தமிழ்த் தேசப் புரட்சியை நோக்கி இல்லாததே காரணம்.
தேசிய விடுதலைப் புரட்சி என்பது ஒரு மக்கள்(சன)நாயகக் கோரிக்கை அதை ஆதரிப்போம் - என்கிறவர்கள், அதை முன்னெடுத்து வழிநடத்துவோம் என முன்னுக்கு வருவதில்லை.
இந்தியா எங்கள் நாடு என்கிற குழப்பமும், இந்தியா ஒரே சமூகம் என்கிற மயக்கமுமே அவர்களை தமிழ்த் தேசப் புரட்சியை மறுத்து இந்தியப் புரட்சிக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறது.
இந்தியா என்பது நாடல்ல, இந்தியா என்பது ஒற்றை சமூகமும் அல்ல என ஓங்கி ஒலித்து, தேசிய இன அளவில் கட்சிகளைக் கட்டிப் புரட்சிவய அரசியல் - செயல்திட்டங்களை முன்னெடுத்திடும் போதே புரட்சிகர செயற்பாடுகள் முன்னுக்கு நகரமுடியும். தமிழ்த் தேச அரசியலும் அதன் விடுதலைக்குரிய போர்க்களத்தைக் காணமுடியும்.
அத்தகைய வழித்தடத்தை முன்னெடுப்பதற்கான நிலையில் ஆய்வு செய்வதும், முன்னெடுத்து நடத்த வேண்டிய கடமையை மேற்கொள்ளுவதுமே இன்றைக்குத் தமிழக மக்கள் புரட்சியின் மீது நம்பிக்கையுடைய தமிழ்த் தேச இயக்கங்களின், புரட்சிவய மார்க்சிய இலெனினிய இயக்கங்களின், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்புகொண்ட திராவிட இயக்கங்களின் கடமை என்பதை உணரவேண்டும்.
அத்தகைய கடமையோடு அவை கட்டமைத்து செயல்படுகிற முன்னணிப் படையே இந்தியத்தை இடித்து உடைக்கும். பன்னாட்டு நிறுவன முதலாளியத்தை அடிசாய்க்கும், சாதியை, ஆரியப் பார்ப்பனியத்தைக் கருவறுக்கும்…என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்! உயிர்ப்போடு போராடுவோம்!
- பொழிலன்