இலக்சம்பர்க்கில் இயங்கிவரும் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியில் வைத்திருந்தது. கடந்த 16.10.2014 அன்று ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற நீதிபதிகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி ஆணையிட்டுள்ளனர். இத்தடை நீக்கத்தை மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வரவேற் றுள்ளன.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தைப் பயங்கர வாத இயக்கமாக அறிவித்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. 2009 மே மாதத்தில், ஈழத்தில் நடை பெற்ற மிகக் கொடிய இனஅழிப்புப் போரில் பல்லா யிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

2006 முதல் 2009 வரையான ஆண்டுகளில் ஒரு கோடியே 44 இலட்சம் கிலோ கிராம் வெடி மருந்துகள் வானூர்தியிலிருந்து வன்னிப்பகுதி மீது வீசப்பட்டன என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரே அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித் துள்ளார். இம்மூன்றாண்டுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 116 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அமைப்பே அறிக்கை தயாரித்துள்ளது. பொது இடங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் மீது திட்டமிட்டே கொத்துக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலின் இறுதிக்கட்டப் போரில் போரில்லாப் பகுதியில் (No War Zone) திரண்ட மூன்று இலட்சம் பொது மக்கள் ஈவிரக்க மின்றிக் கொல்லப்பட்டுள்ளனர். சமாதானத்துக்காக வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் போன்ற போராளித் தலைவர்களும் அவர்களோடு வந்தவர்களும் போர் அறங்களை மீறி அழித்தொழிக் கப்பட்டனர்.

இராசிவ் கொலை ஒன்றை மட்டுமே முன்நிறுத்தி முன்பிருந்த காங்கிரசு அரசு சொல்லொணா அடக்கு முறைகளைச் சிங்கள இனவெறி அரசின் வழி ஏவி, ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது. அடிப்படை யில் இராசிவ் கொலை என்பதே இந்திய அமைதி காப்புப் படை நடத்திய அட்டூழியங்களின் எதிர் விளைவுதான்.

அமைதி காப்பின் பேரால் இலங்கை சென்ற இந்திய இராணுவம் அங்கு நடத்திய அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள், பாலியல் வன்மங்களைச் ‘சாத்தானின் படைகள்’ (Satanic Forces) என்ற பெயரில் அப்போதே விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆவணப் படமாக்கினர்.

வல்லாதிக்க இந்திய அரசு அன்று அந்த ஆவணப் படத்தை அழித்ததுடன், அதையே சான்றாகக் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தடைவிதித்து, இலங்கை இனவெறி அரசுக்கு எல்லா வகையிலும் உதவியது. வரலாறு கண்டிராத வகையில் ஈழத்தமிழ் மக்களை அழித்தது.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இராசபக்சேவுக்கு இணையான அட்டூழியங்கள் புரிந்த கோத்தபய இராசபக்சே எப்போது வேண்டுமானாலும் இந்தியா வருகிறார். பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியைப் பார்த்துப் பேசுகிறார். இரு நாட்டு அதி காரிகளும் மாறிமாறிக் கூடிக் குலவுகிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், கடலில் சிறைபிடிக் கப்படுவதும், அவர்தம் மீன்பிடி படகுகள் சிதைக்கப் படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

பல்வேறு கருத்து மாறுபாடுகளால் சிதறிக்கிடக்கும் தமிழினம் அரசியல் இலாவணி பாடுவதை நிறுத்தி, ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசும் நாளே ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கான விடுதலை நாள். அந்நாள் எந்நாளோ?

-          தமிழேந்தி

Pin It