‘சிந்தனையாளன்’ அக்டோபர் 2014 இதழில், தந்தை பெரியார் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில். வருணசாதி ஒழிப்புக்கு, அரசமைப்புச் சட்ட விதி 17 என்பதில் உள்ள “தீண்டாமை” என்ற சொல்லை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் “சாதி” என்கிற சொல்லைப் போட்டுவிட்டால் போதும் என்று இருக்கிறது - அது தவறானது எனச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

ஏன்? ஏன்?

“தீண்டாமை”, கேரளாவில் மட்டும் மூன்று வடிவங்களில் இருந்தது.

அதாவது, தீண்டப்படாதவர்கள் மற்ற சாதிக்காரர் களுக்கு “அருகில் வந்தாலே தீட்டு”; மற்ற சாதிக்காரர் களைப் “பார்த்தாலே தீட்டு”; மற்ற சாதிக்காரர்களைத் “தொட்டாலே தீட்டு” என்பவை அவ்வடிவங்கள்.

ஆனால், மற்ற மாநிலங்களில் தீண்டப்படாத வர்கள் மற்ற சாதிக்காரர்களைத் “தொட்டால் தீட்டு” என்பது மட்டுமே நடப்பில் இருந்தது; இன்றும் பல இடங்களில் இது அப்படியே இருக்கிறது.

இந்த மூன்று வகையான தீண்டாமை வடி வங்கள் ஒழிந்துவிடும் என்பதும்; மற்ற இடங் களில் நடப்பில் உள்ள தீண்டாமை ஒருபோதும் ஒழியாது என்பதும்தான், அரசமைப்பு விதி 17-இல் உள்ள “தீண்டாமை” ஒழிக்கப்பட்டுவிட்டது - என்கிற சொற்கோவையின் பொருள் ஆகும்.

அது, யார் யார், எதைத் தொடுவதால் தீட்டுப்பட்டு விடும் என்பது ஒன்று.

அது எது?

இந்துக் கோவில்களில் கருவறையில் உள்ள சாமி சிலையைப் பார்ப்பானாகப் பிறந்தவனைத் தவிர மற்ற எந்த வருண சாதிக்காரன் தொட்டாலும் அது தீட்டுப் பட்டுவிடும் - அதாவது பார்ப்பானைத் தவிர்த்த சத்திரி யன், வைசியன், சூத்திரன், தீண்டப்படாதவன் என்கிற எவன் தொட்டாலும் “சாமி சிலை தீட்டுப்பட்டுவிடும்” என்ற பொருள் “தீண்டாமை” ஒழிக்கப்பட்டுவிட்டது என்று, சட்டத்தில் எழுதப்பட்டுள்ள அந்த வடிவத்தி லேயே அடங்கி இருக்கிறது.

அது என்ன வடிவம்? “தீண்டாமை” என்று - மேற்கோள் குறிக்குள் அந்தச் சொல் அமைக் கப்பட்டுவிட்ட அந்த வடிவத்திலேயே, அந்தப் பொருள் அடங்கி இருக்கிறது.

“தீண்டாமை” என்ற இந்தச் சொல் வடிவத்திற் குள், இன்னொரு பொருளும் இருக்கிறது. அது என்ன?

கி.பி.788 முதல் 820 வரையில் வாழ்ந்த ஆதி சங்கரர் வடஇந்தியாவில் நிறுவிய நான்கு “சங்கர மடங்கள்” - அவரால் நிறுவப்படாத “காஞ்சி சங்கர மடம்” இவற்றுக்கு மடாதிபதியாக, பார்ப்பானைத் தவிர்த்த வேறு எந்த வருணத்தானும் 2014இலும் மடாதிபதியாக வரமுடியாது; இது உறுதி.

தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், மதுரை ஆதீனம் இவற்றுக்கு “கார்காத்த வேளாளர்” என்கிற மேல்சாதி - சற்சூத்திரனைத் தவிர வேறு எவரும் 2014-ஆம் ஆண்டிலும் மடாதிபதியாக வரமுடியாது.

காஞ்சிபுரத்திலுள்ள தொண்டை மண்டல துளுவ வேளாள மடத்துக்கு, “தொண்டை மண்டல துளுவ வேளாள முதலியார்” என்கிற உள்சாதி, சற்சூத்திர னைத் தவிர வேறு எவரும் மடாதிபதியாக 2014இலும் வரமுடியாது.

இவ்வளவு கெட்டியான பாதுகாப்பு, தீண்டாமை என்கிற சொல்லை - விதி 17-இல் மேற்கோள் குறி யான “ ” இவற்றுடன் இரண்டு இடங்களிலும் திட்ட மிட்டுப் போட்டுவிட்டதால், இந்த வடிவங்களில் உள்ள தீண்டாமையை ஒழித்திடக்கூட இந்த விதி பயன் படாது.

அதாவது விதி 17 என்கிற இது, இவ்வகையால், ஓர் ஓட்டைக்குடம். ஓட்டைக் குடத்தில் ஒருபோதும் நீரை நிரப்பமுடியாது. நிற்க.

பிறவி சாதி வருணங்களான பிராமணன், சத்திரி யன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு சொற் களும் அரசமைப்புச் சட்டத்தில் எந்த விதியிலும் எழுதப் படவில்லை. அப்படி எழுதப்படாமலேயே - அந்த “நால்வருணப் பாதுகாப்பு” மற்றும் “நெடுங்கால நம்பிக்கை என்பதற்குப் பாதுகாப்பு” ஆகிய எல்லாம் அரசமைப்புச் சட்ட விதிகள் 13(3) (அ), (ஆ); 19 (1), (2), (3), (4), (5), (6); 25 (2) (அ), (ஆ); 372 (3) விளக்கம் I, விளக்கம் II; விதி 395 ஆகிய 5 தனித்தனி விதிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கிற வரை யில், பிறவியால் சுமத்தப்பட்ட நால்வருண ஏற்பாடு ஒழியாது.

இதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டி, விதி 372 (3)இன்கீழ், Explanation I (விளக்கம்-I) என்பதை மட்டும் ஆங்கிலத்தில் உள்ள படி அறிவோம்.

72  (3)

      (a)

      (b)

Explanation I

‘The expression “law in force” in this article shall include a law passed or made by a Legislature or competent authority in the territory of India before the commencement of this Constitution and not previously repealed, notwithstanding that it or parts of it may not be then in operation either at all or in particular areas.’

இதன் பொருளாவது :

விளக்கம் I - ‘இந்த விதியில் உள்ள நடப்பில் உள்ள சட்டம்” என்பது, ஒரு சட்ட அவையினாலோ அல்லது அதிகாரம் பெற்ற இந்தியப் பரப்பிலுள்ள வேறு ஒரு அமைப்பினாலோ, இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் செய்யப்பட்டிருந்தாலும் அதை உள்ளடக்கியதாகும்; அது ஏற்கெனவே ஒரு சட்ட அவையால் நீக்கப்படாமல் இருந்தாலும் - அதுவோ அல்லது அதன் பகுதிகளோ ஒரு போதும் அமலில் இல்லாமலும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் நடப்பில் இல்லாமலும் இருந்தாலும் அப்படிப்பட்ட சட்டங்களை யும் உள்ளடக்கியது ஆகும்.’

இந்த இடத்தில் பெரியார் அன்பர்கள் ஒன்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

மனுவும், பராசரரும், யக்ஞவல்கியரும் உள்ளிட்ட வர்களைக் கொண்ட ஒரு சட்ட அவையினரா, ‘இந்துக் கள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாகப் பிறவியிலேயே பிறந்தார் கள்’ என்று எழுதினார்கள். இல்லை.

அப்படி ஒரு சட்ட அவையால் எழுதப்படாமல் இருந்தாலும், 1946இல் தொடங்கி 26.11.1949-இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அந்தப் பாதுகாப்பு வருண ஏற்பாடு இன்றும் செல்லும் என்பதே இந்த எல்லா விதிகளின் கருத்தும் ஆகும்.

இது அரசமைப்பு அவையில் நிறைவேற்றப்படா மல் இருப்பதற்கு மிக முன்னாடியே - 1947லேயே மேதை அம்பேத்கர் நேர்மையாக முயன்றார்.

எப்படி?

பிறவி நால்வருண வேறுபாடு இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.

எனவே, இந்து மதத்தில் உள்ள மானிட உரி மைக்கு எதிரான - பெண்ணுரிமைக்கு எதிரான எல்லா வற்றையும் சட்டப்படி நீக்கிட அவர் விரும்பினார். அதற்காக இந்துச் சட்டத் திருத்த மசோதா - 1947 என்பதை அவையில் முன் மொழிந்தார்.

அதன் கடைசித் திருத்தம் என்ன கூறியது?

“இந்த அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இதுவரையில் (1949 வரையில்) அமலில் இருந்த பழக்கவழக்கச் சட்டம் என்கிற எதுவும் செல்லுபடியாகாது” என்றே அது கூறியது.

இந்த ஒரு திருத்தத்தை மட்டும் அன்றைய அவை யின் தலைவர் இராசேந்திரபிரசாத் வன்மையாக 1947 முதலே எதிர்த்தார்; பார்ப்பன உறுப்பினர்கள், பழமைவாதத்தில் நம்பிக்கை உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் எதிர்த்தனர்.

அம்பேத்கரால் 1947-51 கட்டத்தில் நிறைவேற்றப்பட முடியாமற் போனதை நிறைவேற்றத்தான், பெரியார் 1957-இல் முயன்றார்.

அம்முயற்சியின் சரியான தீர்வாகத்தான், தொடக் கத்தில், நாம் மேலே குறிப்பிட்டுள்ள அரசமைப்பு விதிகளை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து, அச்சிட்டு, எரித்து, அச்சிட்ட தாளில் கண்ட விதிகளை அரசமைப் புச் சட்டத்திலிருந்து அடியோடு நீக்கக் கோரினார்.

அது 1973 வரையில் அவரால் முடியாமற் போயிற்று.

அதை முதலில் பெரியார் அன்பர்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இக்குறிக்கோளை இந்திய அளவிலான எந்தக் கட்சியும் இன்றுவரை வரித்துக் கொள்ளவில்லை.

திராவிட வாக்கு வேட்டைக் கட்சிகள், 1957 முதல் 57 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந் தாலும் - அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் தவிர்த்து, வேறு எதையும் அக்கட்சிகள் செய்யவில்லை.

இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்துச் சட்டம் என்பது ஒன்றுதான்.

ஆனால் அதன் மிதாட்சரப் பிரிவுப்படி (Mithashara School of Law or Dravidian School of Law) கலி யுகத்தில், தென்னாட்டில் பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்கள் மட்டுமே உள்ளன. அதன் தாய பாகப் பிரிவுப்படி - வடஇந்தியாவில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு வருணங்கள் இன்றும் உண்டு. அதேபோல் இந்துக் கோவில்களின் நடைமுறைக் கான ஆகமங்கள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதனால்தான் கேரளாவில் ஆதித்திராவிடர் அர்ச்சக ராக முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பானைத் தவிர்த்த வேறு எவனும் 2014 வரை அர்ச்சகனாக ஆக முடியவில்லை.

இப்படிப்பட்ட எல்லாச் செய்திகளையும் - எந்தப் பொறுப்பும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற 790 மரமண்டைகளுக்கும், 4200 சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற மூடர்களுக்கும் நாம் தெரிவித்தோமா? இல்லையே! நிற்க.

உயர்நிலைக் கல்வித் திட்டத்திலேயே, “JURISPRUDENCE” என்கிற பேரில், மேலை நாடுகளில், அடிப்படைச் சட்டங்கள் கற்பிக்கப்படு கின்றன. இந்தியாவில் இன்று உள்ள ஆங்கிலேய அடிமைக் கல்வி முறையில் அது இல்லை. எனவே அடியோடு அதை ஒழிக்க வேண்டும். அதை அரசே செய்ய முடியும்.

இன்றையத் தமிழக அரசும், இந்திய அரசும் நம்முடையவை அல்ல - மக்களுடையவை அல்ல.

நமக்கான அரசை நாம் அமைப்போம்!

நம் குறிக்கோளை வென்றெடுப்போம்!

- வே.ஆனைமுத்து

Pin It