நரியார்கள், ‘புரி’யார்கள், நல்லனவே
தெரியார்கள் நம்பும் வண்ணம்
திரிபான ஒருகருத்தை - திராவிடத்தில்
குறைகாணும் கருத்தை, உண்மை
புரியாத சிலபேர்கள் பொழுதெல்லாம்
உரைக்கின்றார்; பொதுவாய் யாவும்
பெரியார்தான் கெடுத்தாராம்; பெருமையெலாம்
சிதைத்தாராம் பிதற்று கின்றார்.
‘மொழிப்போரில் பெரியார்க்கு முற்றாகப்
பங்கில்லை’ என்றுஅ வர்பேர்
கழிக்கின்றார்; தமிழினத்தைக் கருவறுத்த
கன்னடரே அவர்தான் என்று
பழிக்கின்றார்; பகுத்தறிவுக் கனிதந்த
பயன்மரத்தின் வேரைத் தோண்டி
அழிக்கின்றார்; ஒவ்வொன்றாய்க் குற்றங்கள்
அவர்மீதில் அடுக்கு கின்றார்.
‘தமிழகமா? திராவிடமா?’ சொல்லாய்வுச்
சண்டைஅவர் அறியார்; இங்கே
நமதுழைப்பை உறிஞ்சுகிற நால்வருணச்
சாதிமுறை ஒழித்தல் ஒன்றே
தமதுபணி என்றெடுத்தார்; சலியாமல்
போர்தொடுத்தார்; தன்மானத்தைச்
சுமந்தபடி முதுகொடியச் சூத்திரர்க்கும்
பஞ்சமர்க்கும் தொண்டு செய்தார்.
அடுக்குமொழித் தமிழறியார்; அகம்புறமா
ஒன்றறியார்; ஆனால் சாதி
அடுக்குமுறைக் கருத்தியலின் இலக்கியங்கள்
ஆதரியார்! என்ற போதும்
கெடுக்கவந்த வடமொழியை இந்தியினை
எதிர்த்திட்ட கிளர்ச்சிப் போரில்
நடுப்பரணாய் நின்றவர்யார்? தனிச்சிறையில்
நொந்தவர் யார்? மறத்தல் நன்றோ?
பிறவியினால் தாழ்வுயர்வு பேசுகின்ற
மடமையினைத் தொலைத்தல் வேண்டி
வரைமுறை இலாச்செல்வம் வாய்த்திருந்தும்
மக்களுக்காய் வாழ வந்த
துறவிமனம் கொண்டவரைத் தொண்டிலின்பம்
கண்டவரைத் தூற்றித் தூற்றி
நிறைவடைவர்சில நல்லார்; அன்னவர்கள்
நெடுங்காலம் வாழி! வாழி!
மே 5, 2019 இல் முடிவெய்திய பாவலர் தமிழேந்தியின் கவிதை
அவரது நினைவாக...