உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஈழத் தமிழர் நட்புறவு மையம் சார்பில் முன்னெடுத்த ’இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம்’ என்ற தலைப்பிலான இணையவழி மாநாடு சென்ற ஆகஸ்டு முதல் நாள் நடைபெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு என்ற பெயரில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. “ஈழத்தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித் தலையீடு காலத்தின் கட்டாயம்” என்பதே அம்மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பேசுபொருளாகும்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் படி கவிஞர் காசி ஆனந்தன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். நானும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். மாநாட்டுத் தீர்மான வரைவும் அழைப்பிதழும் ஒருநாள் முன்னதாக வந்தன. அவற்றைப் பார்த்த போது மாநாட்டுத் தலைப்புக்கும் தீர்மானத்துக்கும் தொடர்பில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. இருப்பினும் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தமிழுலகிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் ஈழ ஆதரவு ஆற்றல்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஈழ நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கருதினேன்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஈழ ஆதரவுத் தலைவர்கள் இதில் பங்கேற்றுப் பேசினார்கள். கவிஞரின் மேல் கொண்ட நன்மதிப்பு காரணமாய் வேறு எதையும் கருதிப் பார்க்காமல் அவர்கள் இம்மாநாட்டில் பங்கு பற்றியதாகவே தெரிகிறது. அவர்கள் ஆற்றிய உரைகளே இதற்குச் சான்று. நமக்கும் கவிஞரிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. ஈழத்துக்காக அவரது பாரிய உழைப்பும் ஈகமும் மதிக்கத்தக்கவை. ஆனால் இந்திய ஆளும் கும்பலின் நட்பைப் பெரிதும் எதிர்பார்த்து அவர் இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவுவது பெருங்குற்றம். இதிலிருந்து அவர்தான் பட்டறிந்து மாற வேண்டும். இந்த மாநாட்டுக்கும் கூட பாசக வானதியை அழைத்திருந்தார். அவர் வரவில்லை.
தமிழீழத் தாயகத்திலுள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாடு கொண்ட மூன்று பெரும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் எந்த அமைப்பும் இந்த மாநாட்டில் அதிகாரமுறைப்படிப் பங்கேற்கவில்லை. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேசுவரன் அனுப்பிய கடிதம் மட்டும் வாசிக்கப்பட்டது. சிவாஜிலிங்கமும் அனந்தியும் மட்டும் பங்குபற்றிப் பேசினார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் இத்தீர்மானத்தில் உடன்பாடில்லை என்று தெரிவித்து விட்டார் என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா பார்வையாளராக மட்டும் பங்குபற்றினார். ஆறாம் திருத்தச் சட்டம் பற்றிய அச்சமே காரணம் என்றால் அந்தச் சட்டத்தை எதிர்த்தாவது பேசலாம் அல்லவா?
புலம்பெயர் தமிழமைப்புகள் சார்பிலும் கூட யாரும் இந்த மாநாட்டில் அதிகாரமுறைப்படிப் பங்குபற்றவோ மாநாட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. பலரும் சொந்தப் பொறுப்பில் பார்வையாளர்களாக மட்டும் கலந்து கொண்டதாகக் கருதலாம்.
தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர்களைப் பொறுத்த வரை பெரும்பாலானவர்கள் ஈழப் போராட்டத்தில் கவிஞர் காசி ஆனந்தனின் கடந்தகாலப் பங்களிப்பு கருதிக் கலந்து கொண்டதாகவே சொல்ல முடியும். தீர்மானத்தின் உள்ளடக்கத்தையும் இன்றைய சூழலில் அதன் பொருத்தப்பாட்டையும் ஒட்டியோ வெட்டியோ பேசும் முயற்சி பெரிதாக ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் திரு ராமு மணிவண்ணன் தமிழீழப் போராட்டத்தின் இன்றையக் கட்டம் குறித்துத் தெளிவாக அறிந்தவர். HIDING THE ELEPHANT நூலை ஆக்கம் செய்தவர். ஆனால் ‘இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்று முன்வைக்கப்பட்ட ஆவணத்தின் வரைவில் அவர் எவ்விதப் பங்கும் வகித்ததாகத் தெரியவில்லை.
கவிஞரைத் தவிர வேறு யாரெல்லாம் மாநாட்டு அமைப்புக் குழுவிலும் தீர்மான வரைவுக் குழுவிலும் இடம்பெற்றார்கள் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நான் பேசும் போது 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுச் சிறப்பையும் அத்தீர்மானத்துக்கு 1977 பொதுத் தேர்தல் வழியாகப் பெறப்பட்ட குடியாட்சியக் கட்டளையையும் எடுத்துக் காட்டினேன். அதே போது இப்போதைய தீர்மானத்தில் காணப்படும் குறைகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன்.
1) இந்தியா தலையிட வேண்டும் என்று சொல்வதன் பொருள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. 1987இல் இந்தியா தலையிட்டு என்ன கொடுமைகள் செய்தது என்பதை நாம் அறிவோம். இப்போதும் ஈழத் தமிழர்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், சிங்களப் படைகளும் இந்தியப் படைகளும் இழைத்த வன்கொடுமைகளுக்குப் பலியான தமிழ்மக்களுக்கு அமைதி வணக்கம் செலுத்துகிறோம் அல்லவா? (இந்த மாநாட்டில் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை) அது போன்ற இந்தியத் தலையீட்டை நாம் கோர மாட்டோம் என்பதுறுதி. இனவழிப்புப் போரிலும் இந்தியா தலையிட்டது – தமிழர்களுக்கு எதிராக!
இப்போதும் கூட இந்தியா தலையிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் நடந்த ஐநா மனிதவுரிமைப் பேரவைக் கூட்டத்தில் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைக்கு ஆதரவு தர மறுத்து, மேலை நாடுகள் முன்மொழிந்த உப்புச்சப்பற்ற தீர்மானத்தையும் கூட ஆதரிக்க மறுத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றது. இது தமிழ்மக்களின் நீதிக் கோரிக்கைக்கு எதிராகப் பன்னாட்டு அரங்கில் இந்தியா செய்த தலையீடு. இந்தியா தன் வழியை மாற்றிக் கொண்டு அயலுறவுக் கொள்கையில் திருத்தம் செய்து தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் தலையீடு செய்ய வேண்டும் என்று நாம் கோரக் கூடாது என்பதில்லை. தாராளமாகக் கோரலாம்.
அப்படியானால் நம் கோரிக்கைகள் என்ன? (1) இனவழிப்பு, போர்க் குற்றங்கள், மாந்தப் பகைக் குற்றங்கள் ஆகியவற்றுக்காக சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும். (2) சிறிலங்காவின் பன்னாட்டுச் சட்ட மீறல் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் புலனாய்வு நடத்த வேண்டும். (3) தமிழீழத் தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்யப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழ் மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய அரசு தலையிட வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என்றால் அதைத் தீர்மானம் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
2) 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் தேசியத் தன்முடிபுரிமை (தன்தீர்வுரிமை அல்லது சுயநிர்ணய உரிமை) என்ற அடிப்படையிலானது, இதோ இந்தத் தீர்மானமும் அதே உரிமையின் அடிப்படையிலானது என்று எழுதி வைத்துக் கொள்வதால் இது இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகி விடாது. 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை நிறுவிய காலத்திலேயே தந்தை செல்வா ஈழத் தமிழ் மக்களின் தன்தீர்வுரிமையை வலியுறுத்தினார். அது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பிறப்புரிமை. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அவ்வுரிமை உண்டு. இந்த உரிமையை எப்படிச் செயல்வடிவாக்குவது என்பதே கேள்வி. வட்டுக்கோட்டைத் தீர்மானம் அவ்வுரிமைக்கு இறைமையுள்ள தமிழீழத் தனியரசு என்ற செயல்வடிவம் கொடுத்தது. அதற்கான விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ்மக்களை அறைகூவி அழைத்தது. இந்தத் தீர்மானம் இப்போதைய சூழலில் தேசியத் தன்தீர்வுரிமைக்குத் தரும் செயல்வடிவம் என்ன? அதற்கான போராட்ட அழைப்பு ஏதும் உண்டா? எதுவுமே இல்லாமல் இந்தியத் தலையீட்டைக் கோருகின்ற தீர்மானம் எப்படி வட்டுக்கோட்டையின் தொடர்ச்சியாக முடியும்?
3) 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையின் வரலாற்று உருவரையைத் தீட்டிக் காட்டிற்று. 1948 மலையகத் தமிழர் குடியுரிமை மறுப்பு, அடுத்து வாக்குரிமைப் பறிப்பு, 1956 தனிச் சிங்களச் சட்டம், 1958 தொடங்கி வரிசையான பல இனவதைகள், இடையிடையே அவ்வப்போது கையொப்பமிட்ட உடன்பாடுகள், அவை கிழித்தெறியப்பட்ட செய்திகள், யாவற்றுக்கும் உச்சமாக 1972 பேரினவாதக் குடியரசின் அரசமைப்பு, யாவும் அந்தத் தீர்மானத்தில் எடுத்துக் காட்டப்பட்டன. இந்தத் தீர்மான வரைவிலும் அந்தப் பட்டியல் இடம்பெறுகிறது. ஆனால் 1976க்குப் பின் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டாமா? 1976ஆம் ஆண்டு உறங்கப் போய் இப்போதுதான் விழித்து எழுந்தோமா? என்று கேட்க வேண்டியுள்ளது. 1983 யூலைப் படுகொலை, வெலிக்கடைச் சிறைக் கொடுமைகள், ஆய்தப் போராட்டத்தின் எழுச்சி, விடுதலைப் புலிகளின் பங்கு, மாவீர்களின் ஈகம், 1987 இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கை, இந்திய வன்படையெடுப்பு, புலிகளுக்கும் சிறிலங்காவுக்குமான 2002 போர்நிறுத்தம், 2004 பொதுத் தேர்தல் வழியாக விடுதலைப் புலிகளின் இடைக்காலத் தீர்வுத் திட்டத்துக்கு மக்கள் வழங்கிய குடியாட்சியக் கட்டளை எதையும் நீங்கள் சுட்டவில்லை.
4) 2021ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று பெயரிடப்பட்ட ஓர் ஆவணத்தில் 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பற்றியே குறிப்பே இல்லை என்பதற்கு என்ன விளக்கம் தர முடியும்? முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனப் படுகொலையையும் அதில் உயிர்பறிக்கப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்டோரையும் குறிப்பிடத்தான் வேண்டும் என்பது அவர்களை நினைவேந்தி வணக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அல்ல. நாம் முன்னெடுக்கும் நீதிப் போராட்டத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான்! நாம் இனவழிப்புக்கு ஆளான இனம், அதற்கு ஈடுசெய் நீதி கோரிப் போராடி வருகிறோம்.
யூதர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டார்கள், அதற்கு ஈடுசெய் நீதியாகவே இசுரேல் என்ற நாட்டை அடைந்தார்கள். நாம் ஒரு தேசம், தன்தீர்வுரிமை கொண்ட தேசம், எனவே நம் தேசம் இறைமைக்கு உரித்துடையது. இழந்த இறைமையை மீட்க நாம் போராடுகிறோம். இது ஈடுசெய் இறைமை (Remedial Sovereignty). நமக்கு இன்னொரு வகையிலும் இறைமை உண்டு, அதாவது இனவழிப்புக்குள்ளான தேசம் மீண்டும் அதே கொடுமைக்குள்ளாகக் கூடாது என்றால் அதற்காகவும் இறைமை வேண்டும். குற்றங்கள் மீள்நிகழாமை (non-recurrence of crimes) என்பது ஐநா தீர்மானங்கள் வலியுறுத்தும் நிலைமாற்ற நீதியின் (Transitional Justice) தேவைகளில் ஒன்று. இந்தத் தேவையை நிறைவு செய்யவும் இறைமை வேண்டும்.
இனவழிப்பு பற்றியோ ஈடுசெய்நீதி பற்றியோ இறைமை பற்றியோ எதுவும் குறிப்பிடாமல் தன்தீர்வுரிமையை மட்டும் ஒப்புக்குச் சொல்லி வைக்கும் ’இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ தமிழர்களின் நீதிப் போராட்டத்தை இந்தியப் பேரரசு கிழித்த கோட்டுக்குள் நிறுத்தவே உதவும். நடந்து விட்டதும் நடந்து கொண்டிருப்பதுமான இனவழிப்பையும் அதில் இந்திய வல்லரசின் குற்றப் பங்கையும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு இந்தியா தலையிட வேண்டும் என்று மட்டும் கோருவது பிழையான பார்வை.
இந்தக் குறைகளைக் களையுமாறு நான் வேண்டிக் கொண்டேன். பேராசிரியர் மணிவண்ணனும் என் முன்மொழிவுகளை வழிமொழிந்தார். எனக்குப் பிறகு பேசிய சிலரும் நான் குறிப்பிட்ட குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். ஆனால் ’இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில்’ எந்தத் திருத்தமும் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வில்லை.
இலங்கையில் சீனத்தின் செல்வாக்கு பெருகி வருகிறது என்பது தவிர இந்தியா தலையிட வேண்டும் என்பதற்குக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களால் வேறு எந்தக் காரணமும் காட்டப்படவில்லை. சீனப் பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தலையிடச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அப்பாவித்தனமானது. சீனமும் இந்தியாவும் சேர்ந்தே சிங்களத்தின் தமிழினவழிப்புப் போருக்குத் துணை செய்ததை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். உண்மையில் இந்திய வல்லரசுதான் இலங்கையைத் தன் பிடிக்குள்: கொண்டு வரத் தமிழர் இனச் சிக்கலைப் பயன்படுத்தப் பார்க்கிறது. புவிசார் அரசியல் சூதாட்டத்தில் தமிழினத்தைப் பகடையாக்கும் இந்திய வல்லரசிய மூலவுத்திக்குத்தான் இந்த ’இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ பயன்படுமே தவிர, ஈழத்தமிழர் நீதிப் போராட்டத்துக்கு எள்முனையளவும் உதவாது.
அரச தந்திரம் என்பது காக்காய்ப் பிடிப்பதன்று, கொள்கை பாராமல் கூடிக் கொள்வதன்று. கொள்கைகளின் அடிப்படையில் அறம் சார்ந்து நடத்தப்படுவதே நீதிக்கான போராட்டம். புவிசார் அரசியல் என்ற பெயரில் கவிஞர் காசி ஆனந்தன் குழுவினர் யாத்திருப்பது வல்லரசுகளைக் கண்டு நடுங்கும் கிலிசார் அரசியலே. புவிசார் அரசியல் என்பது அரசுகளுக்கு மட்டும் உரியதன்று. அரசுகளற்ற தேசங்களுக்கும் புவிசார் அரசியல் உண்டு. நீதிப் போராட்ட அரசியலையும் புவிசார் அரசியலையும் இயங்கியல் நோக்கில் இணைக்கவும் வல்லரசுகளுக்கு நாம் வால்பிடிப்பதற்கு மாறாக வல்லரசுகளை நம் வழிக்குக் கொண்டுவரவும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கான வரலாற்றுத் தோழமை தமிழ்நாட்டுத் தமிழர்கள்தாமே தவிர இந்திய வல்லரசியமன்று.
- தியாகு