(வெண்பா)
எட்டாம்நாள் அட்டமி ஒன்பான் நவமிநாள் 
வட்டப் பிறைஇரண்டின் பின்வரவு! - முட்டாள்கள்
அட்டமியும் பின்நாளும் ஆகா எனவிடுத்த
கட்டுக் கதை,கட்டும் கண்.

(முழுநிலவு, மறைநிலவு எனப் பிறைகள் இரண்டு. இவற்றின் பின்வரும் எட்டாம் நாளை வடமொழி யில் அட்டமி என்பர்; ஒன்பதாம் நாளை வட மொழியில் நவமி என்பர். இவை இரண்டும் ஆகாத நாள்கள் என மூடர் கட்டுக்கதை கட்டி விட்டனர். இந்தக் கட்டுக்கதை மக்களின் அறிவுக் கண்ணைக் கட்டிவிட்டது.

நல்லநாள் என்பார்; நலம்செய்யா நாளென்பார்; 
பொல்லாத நேரம் எனப்புகல்வார்! - தொல்லுலகில்
நல்லன செய்வார்க்கு நற்பொழுதே எப்பொழுதும்!
இல்லை பொழுதில் இடர்.

(நல்லநாள் என்பார்கள்; நலம் செய்யாத தீய நாள் என்பார்கள்; நேரம் பொல்லாதது என்பார்கள்; உலகில், மக்களுக்கு நல்லவை செய்வார்க்கு எப்பொழுதும் நற்பொழுதே! நேரத்தில் நல்லதோ கெட்டதோ இல்லை. நேரத்தால் இடர் ஏதும் ஏற்படுவதில்லை).

பாவம் அகலப் பரிகாரம், முன்னோரின் 
சாபம் அகலத் திருத்தலங்கள் - போக எனும்
பொய்யர் மொழியால் பொருளிழந்து, மெய்நலிந்து
நைவார் இழப்பர் நலம்.

(உங்களுக்குப் பாவம் இருக்கிறது. அது நீங்கப் பரிகாரம் செய்யுங்கள்; முன்னோரின் சாபம் இருக்கிறது. அது நீங்கத் திருத்தலங்களுக்குச் செல் லுங்கள் என்று வாயில் வந்ததைக் கூறும் பொய்யர்களின் சொல் கேட்டு அலைந்து, பொருள் இழந்து உடல் நலிந்து துயரடைபவர்கள் உடல்நலம், மனநலம் இழப்பர்).

கதவை எடுத்துக் கழிப்பறையின் பின்வை! 
அதை இங்கும் அங்கிதையும் மாற்று - வதைக்கின்ற
வாத்துநூல் சொல்பவன் வாயுரையை மெய்யுரையாய்
ஏற்பார்க்குத் தீரா(து) இடர்.

(வா(ஸ்)த்து நூல் சொல்வதாக வருபவன், “கதவு இருக்குமிடம் சரியில்லை. அதை எடுத்துக் கழிப் பறை உள்ள இடத்திற்குப் பின்னே வை. அதை இங்கும், அங்கே இதையும் மாற்றிவை.” இப்படி எதையாவது கூறி வதைபுரிவான். அவன் வாயு ரையை மெய்யுரை என்று ஏற்பவர்க்குத் துன்பம் என்றும் தீருவதில்லை).

எண்க ளியல்என்(று) எடுத்துரைத்தார் பொய்க்கதையை 
உண்மையென நம்பும் ஒருகூட்டம்! - கண்டபடி
உள்ள பெயரை எழுத்தை உருத்திரிக்க
இல்லை ஒருவிளைவும் இங்கு,

(எண்களியல் (நியூமராலஜி) என்று ஒரு பொய்க் கதையைச் சிலர் எடுத்துரைக்கிறார்கள். இதையும் உண்மை என ஒரு கூட்டம் நம்புகிறது. இதன்படி, பெயரையும், பெயருக்குரிய எழுத்துகளையும் கண்ட படி திரித்து எழுதுகிறார்கள். ஆனால் ஒரு விளைவும் இங்கு இதனால் ஏற்படுவதில்லை.)

கடவுளைக் காக்கக் கலகத்தைத் தூண்டும் 
கொடியவர் தம்மிடம் கேட்பீர் - ‘கடவுள்
இருந்தால் மதம்சாதி ஏற்றத்தாழ் வெல்லாம்
இருப்பதற்(கு) உண்டோ இடம்?’

(கொடியவர்கள் தம் கடவுளைக் காப்பதற்குக் கலகத்தைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். “கடவுள் என்பது இருந்தால், மதமும், சாதியும், ஏற்றத்தாழ்வும் நிலவுவதற்கு இடம் உண்டாகுமோ?”)

அருளாளன் ஆண்டவன் என்பீர்! எவர்க்கும் 
பரிபவன் என்றே பகர்வீர்! - அருளோன்
மதங்கள் பலசெய்து மாளாப் பகையால்
சிதைப்பானோ மன்பதையின் சீர்?

(ஆண்டவன் அருளாளன் என்பீர்கள். எவர்க்கும் பரிவோடு உதவுபவன் என்று பகர்வீர்கள். அருளாளன் மதங்கள் பலவற்றை உருவாக்கி மக்களிடையே தீராத பகையை மூட்டிவிடுவானோ? தீராத பகையால் சமுதாயத்தின் சீர்மையைச் சிதைக்கவும் செய்வா னோ?)

வெற்றிதோல் விக்கு விதிகா ரணம்என்பார் 
உற்றதுணை சூழல் உணராதார்! - பெற்றிருக்கும்
வாய்ப்பும் முயல்வும் வழங்கும் தகுபயனை!
ஏய்க்கும் விதிக்கோட்பா(டு) இங்கு

(ஒரு செயல் நிறைவேறுவதற்கான உறுதுணை களையும் சூழல்களையும் உணராதவர்கள், வெற்றிக் கும் தோல்விக்கும் விதியே காரணம் என்பார்கள். பெற்றிருக்கக் கூடிய வாய்ப்பும் முயற்சியுமே அவற் றுக்குத் தக்க பயனை வழங்கும். விதிக்கோட்பாடு என்பது இங்கே ஏய்ப்பதற்கே உள்ளது).

மூடத் தனங்களுக்குள் மூழ்கித் திளைப்பவர்க்கு 
நாடும் மனத்தெளிவு நண்ணாதாம் - வாடிமனம்
நிம்மதியில் லாமல் நிதம்அலைவார் கோயிலெலாம்
நம்பிக்கை ஒன்றை நயந்து.

(மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திளைக்கும் எவர்க்கும் வேண்டத்தக்க மனத்தெளிவு வாய்ப்பதில்லை. இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளில் நாட்டம் கொண்டு இவர்கள் மனம்வாடி நிம்மதியில்லாமல் நிதம் கோயில் கோயிலாய் அலைவார்கள்).

பகுத்தறிவும் ஆய்வும் பழுதற்ற நோக்கும் 
அகத்துடையார் வாழ்வில் அறமே - மிகமிளிரும்!
உண்மை இரக்கம் உயர்பண்பு தொண்டுணர்வு
நின்றோங்கும் வாழ்வில் நிமிர்ந்து.

(பகுத்தறிவுச் சிந்தனையும், ஆராய்ந்து பார்க்கும் மனஉணர்வும், பழுதில்லாத பார்வைத் தெளிவும் நெஞ்சத்தில் உடையவர் வாழ்வில் அறமே ஒளிவீசும். உண்மையும் இரக்கமும் உயர் பண்பும் தொண்டு ணர்வும் இவர்கள் வாழ்வில் நின்று நிமிர்ந்து செழித்தோங்கும்).

- இரணியன், கோவை

Pin It