“இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை பெருமையெனக் கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும், உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்கிறேன்.
ஆதித் திராவிடர்களுக்கென்று தனிக்கிணறு வெட்டுவது அக்கிரமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதித்திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்ல எனறு ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக் குறிப்பும் ஏற்படுத் துவதாகத்தான் அருத்தமாகும்.
எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்ட வேண்டும்? சிலர் ஆதித்திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேடம் போட்டுத் தாங்கள் உயர்ந்த வர்கள் என்பதை நிலைநிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும்.
நமது கிணறு குளங்களில் ஆதித் திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிற தென்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்ன என்ன வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதம் வரும் தண்ணீரை ஆதி திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டு விடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்.”
(குடிஅரசு 25.04.1926)
- பெரியார்