நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்! நாம் அறிய வேண்டிய காஷ்மீர்! - 4

மன்னர் அரிசிங் வேண்டியபடி, உதவிக்குப் படையை அனுப்புவதற்கு முன்னர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப் பதற்கு அவர் கொடுத்த சம்மதத்தை ஒரு முறையான ஆவணமாக ஆக்கி, அதில் கையெழுத்திட வேண்டும் என்பதில் மவுண்ட்பேட்டன் பிடிவாதமாக இருந்தார். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக் கப்பட்ட பிறகு, காஷ்மீர் நிருவாகத்தில் ஷேக் அப்துல்லாவுக்கு முக்கியப் பங்குதர வேண்டும் என்பதில் பண்டித நேரு தீவிரமான முனைப்புக் காட்டினார்.

அரிசிங்கிடம் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிட, 25-10-1947 அன்று வி.பி. மேனன் அனுப்பி வைக்கப்பட்டார். வி.பி. மேனன் முதலில் காஷ்மீர் பிரதமர் மகாஜனைச் சந்தித்தார்; பிறகு அரிசிங்கைச் சந்தித்தார். அதுசமயம் சிறீ நகரைக் காப் பாற்றுவதற்குப் போதிய அளவு படை கூட, அரிசிங் அரசிடம் இல்லை. அரிசிங்கை உயிரோடு கடத்திக் கொண்டு போகவும் எதிரிகள் திட்டமிடுவதாகத் தெரிந்தது. அரிசிங் பாக்கித்தானிய முரட்டுப் படையிடம் சிக்கினால், வலுக்கட்டாயமாக, வேறு ஒப்பந்தத்தில் அரிசிங்கிடம் அவர்கள் கையெழுத்து வாங்கி விடும் ஆபத்தும் இருந்தது. எனவே, மகன் கரண்சிங் மற்றும் நெருக்கமானவர்களை அழைத்துக் கொண்டு, 25-10-1947 இரவே ஜம்முவுக்கு இரகசியமாக ஓடிவிடும்படி, வி.பி. மேனன் ஆலோசனை கூறினார். அப்படியே அரிசிங் சென்றார்.

அதன்பிறகு, 26-10-1947 காலை காஷ்மீர் பிரதமர் மகாஜனும், வி.பி. மேனனும் தில்லியை அடைந்தனர். வி.பி. மேனன் நேரே பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்துக்குச் சென்றார்; மகாஜன், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சர்தார் பல்தேவ்சிங் வீட்டுக்குச் சென்றார்.

அன்று நடந்த பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்தில், காஷ்மீருக்கு இரண்டு கம்பெனி இராணுவத்தை அனுப்பு வதற்கு முடிவு செய்யப்பட்டது.

எனவே உடனடியாக வி.பி. மேனன், மகாஜன் இருவரும் ஜம்முவில் இருந்த அரிசிங் இடம் கையொப்பம் வாங்கப் புறப்பட்டனர். தூங்கிக் கொண்டிருந்த அரிசிங்கை எழுப்பி, இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத் தில் கையொப்பம் பெற்றனர். அதனுடன், மவுண்ட்பேட்ட னுக்குத் தனி மடல் ஒன்றை எழுதி அதிலும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும்படி கோரினார், அரிசிங். அக்கடிதத்தில், “காஷ்மீரில் ஷேக் அப்துல்லா தலை மையில் அவசரச் சூழலுக்கு ஆன இடைக்கால அரசை ஏற்படுத்தி, பிரதமர் மகாஜன் ஆலோசனையுடன் நிர்வாகம் நடக்க வேண்டும்” என்ற தன் விருப்பத்தையும் அரிசிங் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு மடல்களுடன் வி.பி. மேனன் தில்லி அடைந்தார். அவருடைய வருகையை எதிர்பார்த்து உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் தில்லி வானூர்தி நிலையத்தில் காத்திருந்தார். இவர்கள் இருவரும் நேரே பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்துக்குச் சென்றனர்.

மவுண்ட் பேட்டன் அரிசிங்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக 27 அன்றே விடைமடல் விடுத்தார்.

அரிசிங்கின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும் கூட, காஷ்மீரில் அமைதி ஏற்பட்ட பிறகு, காஷ்மீரி மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்தி அதன் பிறகுதான் இணைப்புப் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். ஏன்?

இன்னொரு பகுதியில் ஜுனாகரை ஆண்ட முஸ்லிம் அரசரான சுல்தான், அவருடைய நாட்டில் பெரும்பான்மை யினராக இருந்த இந்துக்களின் விருப்பத்துக்கு நேர்மாறாக ஜுனாகரை பாக்கித்தானுடன் இணைத்துவிட்டார். இதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினர். அப்போராட்டம் சரியானது என்று, இந்திய அரசு கூறிவந்தது. எனவே காஷ்மீர் இணைப்புப் பற்றியும் அதேபோன்ற நிலையை எடுப்பதுதான் சரி என்று மவுண்ட் பேட்டன் கூற நேர்ந்தது.

இந்த நிபந்தனையுடன் 28-10-1947 விடியற்காலை 300 பேர் கொண்ட முதல் சீக்கியப் படைப் பிரிவு வானூர்தி மூலம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது. அதாவது காஷ்மீருக் குள் அதிகாரப்பூர்வமாக இந்தியப்படை முதன்முதலாக 28-10-1947 அன்று நுழைந்துவிட்டது.

ஒருபக்கம் அரிசிங் மவுண்ட் பேட்டனுக்கு இதற்காக நன்றி தெரிவித்தார்.

எதிர்முனையில் பாக்கித்தான் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா கொதித்தெழுந்தார். அவர் காஷ்மீ ருக்குள் பாக்கித்தானியப் படையை அனுப்பிட விரும்பினார். ஆனால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏன்?

இந்தியாவும் பாக்கித்தானும் விடுதலை பெற்றவுடன், நடந்த பாகப் பிரிவினையின்படி, பிரிட்டிஷ் இராணுவமும் அங்கே இருந்தது. பங்குபோடும் அந்தப் பணியை மூத்த பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான பீல்டு மார்ஷல் அச்சின்லக் ஏற்றிருந்தார். அவருடைய பங்குபோடும் பணி அப்போது முடிந்திருக்கவில்லை. எனவே பாக்கித்தான் படையை எல்லை தாண்டி அனுப்ப முடியவில்லை. மேலும், பாக்கித் தானுக்கு என்று பங்கு போடப்பட்டிருந்த தனித் தரைப்படைக் குத் தலைமையேற்றிருந்த சர். ஃபிராங்க் மெஸர்வி என்பவர் அந்த நேரத்தில் இலண்டனுக்குப் போயிருந்தார். அவர் திரும்புவதற்கு முன்னர், இந்தியப் படை காஷ்மீரில் நுழைந்து விட்டது. ஆதலால் அவரால் பாக்கித்தான் படையை காஷ்மீ ருக்குள் அனுப்ப முடியவில்லை.

பாக்கித்தானின் இராணுவ வரலாறு பற்றி எழுதியுள்ள, ஃபசல் முக்யூம் கான் கூற்றுப்படி பிரிவினை ஏற்பட்ட தொடக்கக் காலத்தில், சில மாதங்கள் வரையில் பாக்கித்தான் நாட்டுக்கு முறையான இராணுவமே கிடையாது. இவை நிற்க.

பாக்கித்தான் ஆதரவு முரட்டுப் படையினர், படிப்படியாக முன்னேறி, 27-10-1947இல் பாரமுல்லாவை அடைந்திருந்த னர். அதுவரையில் இந்துக்கள், சீக்கியர்கள், மற்றும் டோக்ராக்களை மட்டும் தாக்கியும் துன்புறுத்தியும் வந்த பாக். முரட்டுப் படையினர் - அன்றுவரை நடுநிலை வகித்த கிறித்துவ மக்களையும் தாக்கித் துன்புறுத்தினர். கிறித்துவர் சிலர் கொல்லப்பட்டனர். செயிண்ட் ஜோசப் பிரான்சிஸியன் கான்வெண்டில் தங்கியிருந்த அய்ரோப்பியப் பெண்கள், கன்னியாஸ்திரிகள் சிலர் கற்பழிக்கப்பட்டனர்.

பாராமுல்லா நகரின் மக்கள் தொகை 14,000. இவர் களில் மிகக் குறைந்தது 3,000 பேர்கள் கொல்லப்பட்டனர்; பிணங்கள் தெருவில் நாறிக் கொண்டு கிடந்தன. இந்தக் கொலை - கற்பழிப்பில் செலவிட்ட நேரத்தில், போரிடுவதில் பாக். முரட்டுப் படை தொடர்ந்திருந்தால், இந்தியப் படை சிறீ நகரில் இறங்குவதற்கு முன்னர், சிறீ நகரையே பாக். முரட்டுப் படை கைப்பற்றியிருக்கக் கூடும் என அரசியல் அறிந்தவர்கள் கருதினர்.

பாக். முரடர் படை 31-10-1947 அன்று பதான் நகரைக் கைப்பற்றியது. அத்துடன் கில்கிட் பகுதியில், அரிசிங்கின் சார்பில் பொறுப்பிலிருந்த பிரிகேடியர் கன்சாரா சிங் என்ப வரையும் சிறைப்படுத்தியது. அதன்பிறகு பாக். படையினரால் விரைந்து முன்னேற முடியவில்லை.

இதற்கிடையில், இந்திய வானூர்திப் படையின் தாக்குதல் கடுமையாக நடந்தது; இதனால், பாக். முரட்டுப் படையின ருக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையிலும் முகமது அலி ஜின்னாவின் தனிச் செயலாளராக இருந்த கெ.எச். குர்ஷீத் என்பவர் எல்லை தாண்டி வந்து, காஷ்மீரில் நடந்த கலவரங்களைக் கண் காணித்து வழிநடத்தி வந்தார். அவர், காஷ்மீர் எல்லை தொடர்பான கமுக்கமான பல ஆவணங்களுடன், 2-11-1947 இல், இந்திய இராணுவத்திடம் சிக்கினார். பாக். முரட்டுப் படையிடம் பிடிபட்ட பதான் நகரம் மூன்று நாள்களில் விடுபட்டது.

காஷ்மீரில் சண்டை நடந்து கொண்டிருந்த போதே, 1-11-1947 இல் மவுண்ட் பேட்டன் லாகூருக்குச் சென்று முகமது அலி ஜின்னாவையும், பிரதமர் லியாகத் அலிகானையும் சந்தித்து விட்டுத் திரும்பினார். அவரிடம் இந்தியாவின் மீது சரமாரி யான குற்றச்சாட்டுகளை ஜின்னாவும், லியாகத் அலிகானும் கூறினர்.

“காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த எந்த நடவடிக்கை குறித்தும், பாக். தரப்புக்கு, குறித்த நேரத்தில் எந்தச் செய்தி யும் தரவில்லை” என்றும் மவுண்ட் பேட்டனிடம் இரு தலை வர்களும் கூறினர்.

இந்தியாவின் சார்பாக மவுண்ட் பேட்டன் எடுத்துக் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ள, ஜின்னா விரும்பவில்லை.

“இந்திய இராணுவத்தின் பிடியில் இருந்து கொண்டு - ஷேக் அப்துல்லா போன்ற இந்தியா சார்பான அரசியல் வாதிகள் எழுப்பும் மக்கள் நாயக - சோசலிச முழக்கங்களுக்கு இடையில், எந்த சராசரி முஸ்லீமும் பாக்கித்தான் வேண்டும் என்று வாக்களிப்பான்” என்பதை ஜின்னாவே நம்பவில்லை. அதை வெளிப்படையாகவே மவுண்ட் பேட்டனிடம் ஜின்னா கூறிவிட்டார்.

அப்படியானால், “இந்தியப் படைகளுக்குப் பதிலாக அய்.நா. அவையின் பன்னாட்டுப் படைகளை வரவழைத்து. அவர்களின் மேற்பார்வையில் காஷ்மீரில் வாக்கெடுப்பை நடத்திப் பார்த்துவிடுவோம்” என்று, முகமது அலி ஜின்னா விடம் மவுண்ட் பேட்டன் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தின் மூலவர் மவுண்ட் பேட்டன் தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடக்கத்திலேயே இந்தக் கருத்தை வல்லபாய் பட்டேல் எதிர்த்தார். ஆனால் இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொண் டார், பிரதமர் நேரு.

(தொடரும்)