இணையத் தரவில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள்

இணையத்தில் திருக்குறள் தொடர்பாகச் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை இதழ்களிலும் வெளிவந்துள்ளன; சொற்பொழிவாளர்களும் அவற்றைத் தொட்டுக்காட்டிப் பேசியும் வருகின்றனர்.

இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் தொடர்பான குறிப்புகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சில உள்ளன. அவை வருமாறு :

இணையத் தரவு : திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

இந்தக் குறிப்பு, இனி பின்வருமாறு அமைய வேண்டும் :

இதுவரை 510 திருக்குறள் உரையாசிரியர்கள், 731 உரை நூல்கள் வழங்கியுள்ளார்கள். அவற்றுள், நூல் முழுமைக்கும் வந்த உரை நூல்கள் 363.

இது, பெரிதும் என்னிடம் உள்ள நூல்களின் அடிப்படையிலும், கிடைத்த ஒரு சில குறிப்புகளின் அடிப்படையிலும் ஆன புள்ளி விவரம். இவற்றை யான் காலமுறைப்படி அடைவு செய்தும் வழங்கியுள்ளேன்.

என்னிடம் இல்லாத / என் பார்வைக்கு வராத திருக்குறள் உரை நூல்கள் சுமார் பத்து விழுக்காடு எனக் கொண்டால், இதுவரை சுமார் 560 திருக்குறள் உரையாசிரியர்கள், சுமார் 800 உரை நூல்கள் வழங்கி யுள்ளார்கள் எனக் கொள்ளலாம்.

இணையத் தரவு : திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

இந்தக் கருத்து மாற்றத்திற்கு உரியது.

தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாடு - ‘வள்ளுவர் குறள் மாநாடு (தமிழர் நெறி விளக்க மாநாடு)’ என்னும் பெயரில், 15.01.1949, 16.01.1949 ஆகிய இரு நாள்கள் சென்னையில் நடைபெற்றது.

சேலத்தில், 1943-இல் ஒரு திருக்குறள் மாநாடு நடை பெற்றுள்ளது; அதில் புலவர் குழந்தை பங்கேற்றுள்ளார்;

சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் மூன்றாவது திருக்குறள் மாநாடு 14-03-1948 அன்று நடைபெற்றுள்ளது; அதில் தந்தை பெரியார் பங்கேற்றுள்ளார்.

ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாடு, திராவிட இயக்கத்தார் நடத்திய முதல் மாநாடு என்று வேண்டுமானால் கொள்ளலாம். திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் என்பது சரியன்று.

இணையத் தரவு : திருக்குறளை 1812-ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

இதில் கூடுதல் ஒரு செய்தி : அச்சிட்டு வழங்கியவர் ஞானப் பிரகாசன் அவர்கள்; பதிப்பித்தவர் அம்பலவாணக் கவிராயர் அவர்கள்.

இணையத் தரவு : திருக்குறளை முதலில் பயிற்று வித்தவர் வள்ளல் இராமலிங்கனார்.

இச்செய்தி பலராலும் சொல்லப்பட்டு வருகிறது; சரியன்று.

அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் அடிப்படை யில் பார்ப்பின், முதன்முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் ஞானவெட்டியான் என்னும் நூலை எழுதிய சாம்பமூர்த்தி என்பவர்; இவர் 17 அகவை யிலேயே திருக்குறள் வகுப்பு கள் நடத்தியுள்ளார்; சுமார் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் திருவள்ளுவர் என்றே வழங்கப்பட் டார். அதனால் ஞானவெட்டியான் என்ற நூலை எழுதியவர் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்று வழங்கும் தவறான வழக்கும் உள்ளது.

Pin It