எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட‌ பெரியார் இராமாயணம், பாரதம், பெரிய புராணம் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார். மதமும், மௌடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் படைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

periyarஆரியத்தின் பிடியிலிருந்து நம் மக்களை மீட்க புராண, இதிகாச குப்பைகளை புதைகுழிக்கு அனுப்ப முயற்சித்த அதே பெரியார் 1949 ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் பெருமக்களையெல்லாம் அழைத்து பெரியதொரு திருக்குறள் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிற்கு விடுதலை மூலம் பெரியார் வேண்டுகோள் விடுத்தார்!

"திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள். ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல. எனவே, குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்" என்று எழுதினார்.

பெரியார் உரை

தந்தை பெரியார் தனது மாநாட்டு உரையில் "திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.

மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது. திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார்" என்று குறிப்பிட்டு விட்டு இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டுமென்றும் பேசினார்.

பகவத் கீதை

இன்றைய தினம் மத்தியில் ஆண்டுகொண்டிருக்கிற பாஜக தலைவர்கள் பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தியா முழுதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களையும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் கொச்சைப்படுத்தும் ஒரு நூலை புனித நூலாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் முயற்சியை திராவிடர் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன‌. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த நூலை மற்றவர்களின் மேல் திணிக்க முயற்சிப்பது அரசியல் சட்டப்படி இந்த நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கே வேட்டுவைப்பதாகும் என்று ஒருசாரார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்படி சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பகவத்கீதையைப் பற்றி அன்றைக்கே திருக்குறள் மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள் உப நிஷ‌த்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள். திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர்களுக்கு எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார்.

இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள்" என்றார் அண்ணா.

பகவத்கீதையை எதிர்க்கும் அதே வேளையில் தேசிய நூலாக்கப்பட வேண்டியது திருக்குறளே தவிர கீதை அல்ல என்கிற வாதமும் இப்போது வலுத்து வருகிறது. வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்ப்போமானால் இதே கருத்து நம் அறிஞர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எடுத்து வைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும்.

1949ல் கூட்டப்பட்ட திருக்குறள் மாநாட்டில் தமிழறிஞர் சி.இலக்குவனார் அவர்கள் "குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும்" என்றும் எடுத்துக் கூறி, "அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டும்" எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் "பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது." எனக் குறிப்பிட்டார்.

திராவிடர்க்கு ஒழுக்கநூல் குறள்தான் என ஓங்கி ஒலித்த பெரியார், பகவத்கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்கள் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவைகளெல்லாம் ஆரியர்கள் தங்களின் உயர்வுக்காக, தங்களின் மேல்சாதி தன்மையை நிலைநிறுத்தி அதனால் இலாபம் அடைவதற்காக ஏற்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி எழுதி வைத்துகொண்டவை யல்லாமல் பொதுவாக மனிதர்கள், உலக மக்களின் நலனுக்கு ஏற்ற முறையில் எதையும் கூறவில்லை என்று 1950களிலேயே பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

தற்போது மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ், பாஜக வகையறாக்கள் ஏதோ உலகமே தங்கள் கைக்குள் வந்துவிட்டதாக கருதி இந்துத்துவ ஆதிக்க சதி வேலைகளை கட்டவிழ்த்து திரிகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

Pin It