கீதையின் வஞ்சகப் பின்னணி (2)

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை - தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் - ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு - கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

பெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணம் என்று கூறுமளவுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:

*   “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் - தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்றுகிறவர்களுக்கு, தந்துள்ள பட்டங்கள் - படுமோசமானவை. துஷ்கருமன் (தீம்பு செய்பவன்), நர ஆத்மா (கீழ்மகன்), ஹத ஞானம் (செத்த அறிவு), அல்ப மேதாவி (அறிவு கெட்டவன்), அபுத்துவன் (அறிவில்லாதவன்), நஷ்டன் (அழிந்து போனவன்), அசேதனன் (மூளையற்றவன்), சம்ஸய ஆத்மா (சந்தேகப் பிராணி), கடவுள் மறுப்பாளர்களுக்கு - கிருஷ்ணன் வழங்கியுள்ள பட்டங்கள் என்ன தெரியுமா? நஷ்டாத்துமா (அழிந்துபட்ட ஆத்மா), இடம்பமான் (இடம்பம் பேசுபவன்), மதன வித்தன் (அகந்தையானவன்), அசுரன், ராட்சசன், கடவுள் மறுப்பாளர்களை விளிக்கும் போதெல்லாம், இதே சொற்களையே கிருஷ்ணன் பயன்படுத்துகிறான்.

*   அரசதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள் - ஒரு இயக்கமாக செயல்பட்டதால் தான் பார்ப்பனர்கள், ஆதிக்க நிலை ஆட்டம் கண்டது என்பதை ‘கிருஷ்ணன்’ நன்றாகவே உணர்ந்திருந்தான். எனவே பார்ப்பனியம் பாதுகாப்புடன் நீடிக்க வேண்டுமானால் சத்திரியர்கள் ஒற்றுமைக்கு முடிவு கட்ட வேண்டும், என்றும், அவர்களின் போரிடும் ஆற்றலை மழுங்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டான். இதற்கு நல்வாய்ப்பாக கிருஷ்ணன் மகாபாரதப் போரைப் பயன்படுத்திக் கொண்டான் என்கிறார் நூலாசிரியர்.

*   போரில் வெற்றி பெற்று, பாண்டவர்கள் தலைநகருக்குத் திரும்பும்போது அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது பார்ப்பனர்கள் தான். பாண்டவர்களின் குலத்தினரோ, போரில் உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களோ அல்ல; பார்ப்பனக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சார்வாகன் (கடவுள் மறுப்பாளன்) யுதிஷ்டிரனைப் பார்த்து, “உற்றார் உறவினரைக் கொன்று அழித்து என்ன பயன் கண்டாய்?” என்று கோபத்துடன் கேட்கிறான் யுதிஷ்டிரன், தலைகுனிந்து நின்றான்; உடனே உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்தான். உடனே கூடியிருந்த பார்ப்பனர்கள், “அவன் ஒரு அசுரன், கவலைப்படாதீர்கள்” என்று யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினர்; உடனே சார்வாகனைப் பார்ப்பனர்கள் பிடித்து, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.

*   பாரதப் போரினால் கிருஷ்ணனின் வஞ்சகத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறின. பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மன், வெற்றி வேந்தனாகிய யுதிஷ்டிரனுக்கு, கூறும் அறிவுரையே இதற்கு சரியான சான்று:

      “பார்ப்பனர்களுக்கு பிரம்மதானம் கொடுப்பதே வேந்தனுக்கு அழகு. பார்ப்பனர்களுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்தைவிட சிறந்தது. பார்ப்பனர்களுக்கு இவ்வாறு தானம் செய்வதன் மூலம் - சத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான். பார்ப்பனர்களுக்கும், கடவுள்களுக்கும் மட்டுமே நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். பார்ப்பனர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தவறிக்கூடப் பார்ப்பனரைத் தண்டிக்காதே. பார்ப்பனர்கள்தான் மனிதரில் உயர்ந்தவர்கள். நீரிலிருந்து நெருப்பு பிறக்கிறது. பார்ப்பனரிலிருந்து சத்திரியன் பிறக்கிறான். பாறையிலிருந்து இரும்பு உண்டாகிறது. இரும்பு பாறையை வெட்டும் போதும், நீர் நெருப்பை அணைக்கும் போதும் பார்ப்பனனுக்கு சத்திரியன் பகைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் முகமிழந்து அழிந்து போகிறார்கள். பார்ப்பனர்களுக்குச் சமமாகத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனனது கடமை.” (மேற்கோள் ஆதாரம்: எம்.என்.ராய் எழுதிய மெட்டிரியலிசம்)

*   “ஆத்மா அழிவற்றது; எனவே கொலை செய்வது பாவமல்ல” என்று படுகொலையை நியாயப்படுத்துகிறான் கிருஷ்ணன். (காந்தியைக் கொன்ற பார்ப்பான் கோட்சே, நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலத்தில், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க, கீதையின் இந்தக் கருத்தைத்தான் எடுத்துக் காட்டினான்). கிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு, திலகர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சித்பவானந்தர் போன்ற பார்ப்பன விளக்க உரையாளர்கள் முட்டுக் கொடுக்கும் விளக்கங்களை முன் வைத்து நியாயப்படுத்துகிறார்கள். இப்போது கண்மூடித்தனமான ஆன்மிக போதையில் சிக்கியுள்ள ரஜினிகாந்தும் கிருஷ்ணன்-அர்ஜூனன் பெருமை பேசுகிறார்.

போர்க்களத்தில் தத்துவம் பேச முடியுமா?

*   கீதையின் காலம் குறித்தும் - அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் - குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன.

*   “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப்படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில்.

*   பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க்களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க்களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப்பட்டது என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் பகவத் கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

*   கீதை - ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார் காந்தியார். கீதையில் இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறார் டாக்டர் இராதாகிருஷ்ணன். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கீதையை எழுதினார்கள் என்பதை மட்டும் அவர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.

*   கீதை எழுதப்பட்ட காலம் கி.மு.500 முதல் கி.பி. 300 வரை என்கிறார்கள். அதாவது 800 ஆண்டுகால இடைவெளியில் கீதை எழுதப்பட்டதாம். காலத்தைத் தவறாக நிர்ணயிக்க முயலுகிறார்கள் என்று சந்தேகத்தையே இது உருவாக்குகிறது. உண்மையில் கி.பி.400க்குப் பிறகே கீதை எழுதப்பட்டுள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.

(தொடரும்)

தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

Pin It