இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொல்லப் பட்டுள்ளனர். அத்துமீறி நுழைந்தார்கள் எனப் பழி சுமத்தித் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிங்களப் படையால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவர் கைது பற்றித் தமிழகம் உரத்துக் குரலெழுப்பும் போதெல்லாம் ஒப்புக்குச் சிலபேர் விடுதலை செய்யப் படுகிறார்கள். அப்போதும் அந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட விலைமதிப்புமிக்க மீன்பிடி விசைப் படகுகள் திருப்பிப் தரப்படுவதில்லை.

tamil kingபோதைப் பொருள்கள் கடத்தினார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2011 நவம்பர் 28ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அய்ந்து தமிழக மீனவர்களுக் குச் சென்ற போன அக்டோபர் 30ஆம் தேதியன்று கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியது. இந்த அடாவடித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழகமே கொந்தளித்தது.

ஆட்சி மாறிய போதும் காட்சிகள் மாறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் தமிழக மீனவர்கள் நிலைக்காகக் கசிந்து கண்ணீர் விட்டுப் பேசிய மோடி தாம் ஆட்சிக்கு வந்தால் எல்லாச் சிக்கல்களுக்கும் உடனே தீர்வு எட்டப்படும் என எக்காளமிட்டார். ஆனால் அய்வர் தூக்குத் தொடர்பான செய்தியில் தில்லி அரசின் செயற்பாடுகள் ஆமை வேகத்தில்தான் நடைபெற்றன.

இப்போது அந்த அய்ந்து மீனவர்களும் இனவெறிக் கொலைகாரன் இராசபக்சேவின் கனிந்த கருணைப் பொழிவால்தான் விடுதலையாகி வெளியே வந்துள்ள னர். அவர்கள் மீதான போதைப் பொருள்கள் கடத்தல் குற்றச்சாட்டு பொய்யானதெனக் கூறி விலக்கிக் கொள்ளப் படவில்லை. இந்திய அரசும் இதுபற்றிப் பேசவில்லை.

இந்தப் பின்புலத்தில் இந்தியக் கடற்படை, தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை சிறப்போடு கொண்டாட முடிவெடுத் துச் செயற்படுத்தி வருகிறது. ஆளும் பா.ச.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கூட கங்கைகொண்ட சோழபுரத்தான் களவெற்றிகளையும், ஆட்சிச் சிறப்பை யும் ஆரவாரத்தோடு எடுத்துப் பேசுகிறது.

சும்மா ஆடுமா சோழியன் குடுமி? மாமன்னன் இராசேந்திரனின் மாண்புகள் உயர்த்திப் பிடிக்கப்படு வதில் காரணம் இல்லாமல் இல்லை. மோடியின் ஆட்சி அமைந்தவுடன் எல்லா மட்டங்களிலும் இந்தி மொழிக் கான முதன்மை கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது. வடமொழி வாரக் கொண்டாட்டங்கள் வலுப்பெற் றுள்ளன. ‘ஆசிரியர் நாள்’, ‘குரு உற்சவ்’ ஆகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ‘தமிழின் பெருமை பேசுகி றார் தருண் விசய்’ என்று சொல்லி இங்குள்ள வெட்கங் கெட்ட வைரமுத்துக்கள் அவருக்காக விழா எடுக்கிறார் கள். ஆனால் அதே தருண் விசய் நாடாளுமன்ற உறுப்பி னராகப் பதவி ஏற்ற போது ‘வடமொழியில்தான்’ உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இப்போதும் இந்தியாவின் ஆன்மா என்பதே வடமொழிதான் என்று அடித்துச் சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஊறி வளர்ந்த இப்போதைய உள்துறை அமைச்சர் இராசநாத் சிங் இந்தியாவில் உள்ள எல்லாமொழிகளுக்கும் தாய் ‘சமற் கிருதம்’ தான் என்று கூசாமல் பிதற்றுகிறார். இஃது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவர் காக்கிச் சட்டை போட்டுக் கழிசுற்றிய ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்துமாகும்.

இவர்களால் இன்று தூக்கி நிறுத்தப்படும் இராசேந்திர சோழனின் அரசியல் கருத்து யாது? அவன் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப் பெற்ற அருஞ்சாதனைகள் யாவை? தமிழ் மன்னன் இராசேந்திரன், அவன் தந்தை இராசராசன் காலங்களில் ஓங்கி வளர்ந்தது தமிழா? அல்லது ஓட்டை வடமொழியா? என்பதைத் தமிழறி ஞர்களான கே.ஏ. நீலகண்ட சாத்திரியர், சதாசிவப் பண்டாரத்தார், கே.கே. பிள்ளை போன்றோரின் நூல்களைக் கொண்டே ஆய்வு செய்யலாம்.

“மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமண ருக்கு மட்டும் வடமொழிப் பயிற்சியை அளித்துவந்தன. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றிடவில்லை. அப் பள்ளிகளில் புராணங்கள், இதிகாசங்கள், சிவதருமம், சோமசிந்தாந்தம், இராமாநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங் களையே பிராமணர்கள் பயின்று வந்தனர். தென் னார்க்காட்டில் இராசராச சதுர்வேதி மங்கலம் (எண்ணா யிரம்) என்னும் ஊரில் முதலாம் இராசேந்திரன் காலத் தில் வேத மீமாமிசைப் பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. அதில் 340 பிராமண மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். 14 ஆசிரியர்கள் வேதாந்தம் பயிற்றிட வந்தனர். அவர்கள் நாளொன்றுக்கு ஒருகலம் நான்கு மரக்கால் நெல் ஊதியமாகப் பெற்றார்கள். வேறு சில ஆசிரியர்கள் நெல்லுடன் பொன்னும் சேர்த்து ஊதிய மாய்ப் பெற்றார்கள்...”

மன்னர்கள் தமிழ் வளர்க்கத் தவறினார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் வரலாற்று ஆசிரியர் சிலர் மன்னர் அப்பணியைச் செய்யாவிடினும் சைவ மடங்கள் அதில் ஈடுபட்டிருந்தன என்று கூறுவர். இக்கூற்றுக்குச் சான்றுகள் இல்லை. சைவ மடங்கள் திருப்பதிகம் ஓதுவதற்குச் சிலருக்கு வாய்ப்பளித்திருக் கக் கூடும். ஆனால் இம்மடங்களும் வடமொழி வளர்ச்சியில் தம் கருத்தைச் செலுத்தவில்லை என்று கூறமுடியாது.

சோழர் காலத்தில் எழுந்த சைவ, வைணவ நூல் கள் யாவும் வடமொழிக் கலப்புள்ளவை. இம்மடங்கள் சமயத்தை வளர்த்தன என்பது மறுக்க முடியாத உண் மையே. ஆனால் அவை தமிழை வளர்க்கவில்லை. பிராமணத் தவசிகளுக்கும், அநாதி கிரீசர்களுக்கும், மருத்துவமும் இலக்கணமும் கற்றுவந்த வேதிய ருக்கும் மடம் ஒன்று நிறுவப்பட்டதாக விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இன்றும் சைவ மடங்கள் பிராமணருக்கும் வடமொழி மரபுகளுக்கும் அளித்துவரும் அத்துணைச் சலுகைகளைத் தமிழ்ப் புலவர்களுக்கும் திருமுறை ஓதுவார்களுக்கும் அளிப்ப தில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை யாகும்.

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் - கே.கே. பிள்ளை நூல் பக்கம் 320

பிற்காலச் சோழர்கள் காலத்தில் மட்டுமன்று; பல்லவர், பாண்டியர், நாய்க்கர், இசுலாமியர் அதற்குப் பின்னர் வந்த அய்ரோப்பியர் காலத்திலிருந்து இறுதி யாக நடந்த ஆங்கிலேயர் காலம் வரை கல்வியில், அரசியலில், நடப்பு வாழ்வியலில் வடமொழி மட்டுமே முதன்மை இடத்தில் கோலோச்சியது என்பதே வரலாறு.

மருத்துவக் கல்லூரியில் சமற்கிருதம் கட்டாயம் என்ற நிலை நீதிக்கட்சி ஆட்சியில்தான் ஒழிக்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாயர் மாத ஊதியம் ரூ.81/-. அதே கல்லூரியில் பணியாற்றிய வடமொழிப் பேராசிரியர் குப்புசாமி சாத்திரியார் மாத ஊதியம் ரூ.380/-. மலைக் கும் மடுவுக்குமான இந்த ஊதிய வேறுபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற இயக்கம் பெரியார் இயக்கம்.

‘எண்ணாயிரம்’ என்ற ஊரில் தமிழை வளர்க் காமல் வடமொழியை வளர்த்ததால்தான் இன்று இராசேந்திரன் சங்க் பரிவார அமைப்புகளால் போற்றப் படுகிறான். வடமொழி வேதங்களைச் சொல்லிக் கொடுத்த அந்த இடத்தில் திருக்குறள் சொல்லிக் கொடுக் கப்பட்டதா? சிலப்பதிகாரம் பற்றி வகுப்புகள் நடந்துள்ள னவா? இல்லை. எண்ணாயிரம் என்ற ஊரின் தமிழ்ப்பெயரே இராசராச சதுர்வேதி மங்கலம் என்ற வடமொழிப் பெயராக மாற்றப்பட்டது. இராசேந்திரனின் தந்தையே தன்னுடைய தமிழ்மொழிப் பெயரான அருள்மொழித்தேவன் என்பதை இராசராசசோழன் என மாற்றிக் கொண்டான். அவன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கே ‘பிரகதீஸ்வரர் கோயில்’ என அழைக்கப்பட்டால்தான் பெருமை என்று கருதினார்கள்.

பார் போற்றும் மன்னர்களாக வாழ்ந்த அவர்கள் தம்மைப் பார்ப்பன அடிமைகளாகக் கருதிக் கொள்வ தில்தான் பெருமிதமுற்றார்கள் என்பதற்குக் கே.கே. பிள்ளை அவர்களின் மேற்குறித்த வரலாற்று நூலே சான்று :

“மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும் மடங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும் பொரு ளையும் குடியுரிமைகளையும் வாரி வழங்கினர். பிராமணருக்குத் தனிநிலங்களும், முழுமுழுக் கிராமங் களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகாம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங் கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழுவிலக்கு அளிக்கப்பட்டன (மேற்படி நூல், பக்.317).”

இன்றைக்கும் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி உட்புக முடியா நிலையில் உள்ளதாகப் பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயற்படுகின்றன. அவை போன்றவைதாம் அன் றைய பார்ப்பனக் கிராமங்கள் என்பவையும்.

கற்பாறைகளே இல்லாத தஞ்சையின் மருதநிலத் தில் மாபெரும் கற்றளி அமைத்தான் மாமன்னன் இராசராசன். கங்கைகண்ட சோழபுரத்தில் அவன் மகன் இராசேந்திரனும் இதே செயலைச் செய்தான். இக்கோயில்களைக் கட்டுவதற்கான மனித உழைப்பை, மாபெரும் செல்வத்தை அவர்கள் எங்கிருந்து பெற்ற னர்? மந்தை மந்தையாய் அழைத்துவந்த பார்ப்பனப் பரதேசிகளுக்கு மணியும் பொன்னும் எவ்வாறு வாரி வாரி வழங்கினர்? எல்லாமும் உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி வரியாகப் பெற்ற வளப்பத்தால்தான்!

தறிநெசவு செய்வோர், செக்காடுவோர், துணி வெளுப்போர், கள் இறக்குவோர், மீன் பிடிப்போர், குயவு வேலை செய்வோர் என அனைத்துப் பிரிவு மக்களிடமிருந்தும் பெறப்பட்ட வரிவகைகளைப் பற்றி வரலாற்று அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் நீண்டதோர் பட்டியல் தருகிறார் :

“நிலவரியேயன்றித் தறியறை, செக்கிறை, மனை இறை, அங்காடிப்பட்டம், தட்டாரப் பாட்டம், இடைப் பாட்டம், ஈழம்பூட்சி, வண்ணாரப்பாறை, கண்ணாலக் காணம், குசக்காணம், ஒடக்கூலி, நீர்க்கூலி, நாடு காவல், உல்கு, தரகு, மரவிறை, இலைக்கூலம் முதலான பல்வகை வரிகளும் இருந்துள்ளன என்பது சுந்தர சோழனுடைய அன்பிற் செப்பேடுகளாலும், முதலாம் இராசராச சோழனுடைய ஆனைமங்கலச் செப்பேடு களாலும், கங்கைகொண்ட சோழனுடைய திருவாலங் காட்டுச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது.

இறை, பாட்டம், பூட்சி, கூலி என்பன வரியை யுணர்த்தும் மொழிகளாம். இவ்வரிகள் எல்லாம் பொதுவாகச் சில்லிறை, சில்வரி, சிற்றாயம் எனவும் குடமை எனவும் கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டிருக் கின்றன. இவைகள் எல்லாம் நிலவரியை நோக்கச் சிறுவரிகளாகவும் உழவுத் தொழிலில்லாத பல்வகைப் பட்ட பிறதொழில்களைச் செய்து கொண்டிருந்த குடி மக்களிடம் வாங்கப்பெற்று வந்தவையாகவும் இருத்த லால் இங்ஙனம் குறிக்கப்பெற்றன போலும். இவற்றுள் தறியறை, செக்கிறை, தட்டாரப்பாட்டம், வண்ணாப் பாட்டம், குசக்காணம், தரகு என்பன போன்றவை அவ்வத் தொழில் புரிந்தோரிடம் அரசாங்கம் வாங்கிவந்த ஓர் வரியாகும்.” (பிற்காலச் சோழர் வரலாறு : தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், பக்.502, 503).

இவ்வரியினங்களைக் கூர்ந்து நோக்கும்போது உழைக்கும் மக்களை உயர்நிலை அடையச் செய்ய எண்ணும் ஒரு மன்னனின் உள்ளம் இப்படியெல்லாம் சிந்தித்திருக்க முடியுமா என எண்ணிடச் செய்கிறது.

கண்ணாலக் காணம் என்பது திருமணம் செய்து கொள்வதற்காக அந்நாட்டு மக்கள் செலுத்த வேண்டிய வரியாகும். ஓடக்கூலி என்பது ஓடம் செலுத்தி வயிறு கழுவும் எளிய மக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியாகும். ஆட்டிறை, நல்லெருது என்பன ஆடு, மாடு கள் மீது விதிக்கப்பட்ட வரியாகும். இப்படியெல்லாம் வரிவாங்கிய மன்னன் தன் நாட்டு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவினானா? தமிழ்ப் பள்ளிகள் அமைத்தானா? சிற்பம், ஓவியம், கட்டடக் கலை போன்ற வற்றில் செழித்தோங்கிய தமிழர்கள் முறையாகத் தமிழ்க்கல்வி பெற்றதாகத் தெரியவில்லை. ‘குல விச்சை கல்லா பாகம் படும்’ என்பது போல வழி வழியாக வந்த தம் முன்னோரின் கலையறிவே இக் கலைஞர்க்கு முதலாக வாய்ந்துள்ளதே தவிர முறை யான கல்வி அறிவு அல்ல. அதற்கான எம்முயற்சியும் அக்கால மன்னர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை. இதுபற்றிக் கே.கே. பிள்ளை பின்வருமாறு குறிப்பிடு கிறார்.

“ஊர்ப் பொதுமக்களுக்குக் கல்விப் பயிற்சி அளிக் கப்பட்டதா, கல்வி அளிக்கப்பட்டிருந்தால் அதன் தரமும் அது பயிற்றப்பட்ட முறையும் எத்தகையன என்ற கேள்விகளுக்கு விடைகாண முடியவில்லை. ஊர் பொது மக்கள் பிழையற எழுதும் அளவுக்குக் கல்வியறிவு பெறவில்லை என்று ஊகிக்க வேண்டியுள்ளது. அரசா ணைகளையும் உடைமை மாற்று ஆவணங்\களை யும் அழிவின்றிக் கல்லில் பொறிக்கும் தொழிலையும் மேற்கொண்டிருந்த கல்தச்சர்கள் பொறித்த கல்வெட்டு களில் நூற்றுக்கணக்கான எழுத்துப் பிழைகளைக் காண்கிறோம். ஒருசில வரிகளையேனும் பிழையின்றி எழுதும் அடிப்படையான இலக்கண அறிவு அவர்கள் பெற்றிருக்கவில்லை எனத் தெரிகிறது. கல்லில் பொறிக் கும்படி வாசகம் எழுதிக் கொடுத்த அரசாங்க அலுவலர் களே இலக்கணப் பிழைகளை அறியாதவர்களாய் இருந்தனரா அன்றிப், பிழையுடன் பொறிக்கப்பட்டு வரும் போது அதைக் கண்காணித்து அவ்வப்போது திருத்தும் வழக்கம் அந்நாளில் இல்லையா என்றெல்லாம் அய் யப்பாடுகள் எழுகின்றன” (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், பக்.319).

‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்

கடசர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்’

என்று பாடினார் பாரதிதாசன். உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மன்னர்கள் வானுயர்ந்த கோயில் கள் எழுப்பினர். வேண்டுமட்டும் பொன்னும் பொருளும் கொடுத்து வேதக்கல்வியைப் பெருக்கினர். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வு அவலப் பாழ்இருளில் சிக்கி அலைப்புண்டது. ‘எதைக் கொடுத்தாலும் பஞ்ச மனுக்கும் சூத்திரனுக்கும் கல்வி கொடுக்காதே’ என்ற மனுவின் வாக்கை எழுத்துக்கு எழுத்து அக்கால அரசர்கள் நடைமுறைப்படுத்தினர். அவர்கள் இறை வனுக்கு ஈடாகப் போற்றப்பட்டனர்.

“கோயில்களிலும் மடங்களிலும் வேதம் முழங்கிற்று. குழல் ஒலி, யாழ் ஒலி, கூத்தொலி, ஏத்தொலி, விழவொலி விண்ணளவு சென்று விம்மின. சிதம்பரம் போன்ற நகரங்களில் ‘தெங்கு திருவீதிகள்’ அமைக் கப்பட்டன. தேவரடியார்க்குத் தனித்தனி இல்லங்களும் தெருக்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் குடிமக்களின் நெஞ்சில் குமுறல்களும், ஏமாற்றமும் ஏக்கமும் வளர்ந்து சாதிப் பூசல்களும் கலகங்களும் கவடுவிட்டுப் படர்ந்தன” என்று மனங்கசிந்து எழுதுவார் கே.கே. பிள்ளை (மேற்படி நூல் பக்.334).

ஆய்வறிஞர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ள தைப் போலத் தமிழ்நாட்டில் ‘தேவரடியார்கள்’ பெருக் கத்துக்கு ஆக்கம் சேர்த்தவர்கள் பிற்காலச் சோழர்கள் தாம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருத்தொண்டுக் காக இராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தி னான். அனைவர்க்கும் தனித்தனி வீதிகள் வகுத்து, அவற்றில் வரிசை வரிசையாக அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தான்.

அந்தக் கேட்டின் தொடர்ச்சி தமிழ்நாட்டில் ‘தீரர் சத்தியமூர்த்தி அய்யர்’ காலம் வரை தொடர்ந்தது. ‘தேவரடியார்கள் செய்யும் தொண்டு, தெய்வத்திற்கு ஆற்றும் திருத்தொண்டு’ எனத் திருவாய் மலர்ந்தருளிய சத்தியமூர்த்தியைப் பார்த்து ‘அந்தத் திருத்தொண்டை உங்கள் வீட்டுப் பெண்களைக் கொண்டு தொடரப் பாருங்கள்’ எனச் செவுளில் அறைவது போலச் செப்பி னார் இந்தியாவின் முதல் பெண் மருத்துவமேதை யாகிய வீராங்கனை முத்துலட்சுமி.

பெண்களை இழிவு செய்தது மட்டுமல்ல, பிராமணர் தவிர்த்த பிற உழைப்புச் சாதி மக்களைக் குல வேறு பாடு சொல்லிப் பிரித்துத் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிபிறப்பாளராய்க் கருதிக் கோயில் களிலும், மடங்களிலும், ஏனைய பொது இடங்களிலும் ஒதுக்கி வைத்த இழிசெயலுக்குக் காப்புக் கோட்டை அமைத்தவர்கள் பிற்காலச் சோழர்களேயாவர்.

“இராமாயணத்தை இந்தோனேசியா வரை எடுத்துச் சென்று பரப்பியவன் எங்கள் மாமன்னன் இராசேந் திரன்” என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள் மத வெறியில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகள். இராசேந் திரன் காலத்தில் உயர்கல்வி அனைத்தும் வடமொழி யில்தான் இருந்தன என்று மார்தட்டுகிறது அந்த மார்வாரிக் கூட்டம். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அன்றாடம் சொல்லிப் பழகும் ‘ஏகாத்மா ஸ்தோத்திரத்தில்’ மாமன் னன் இராசேந்திரன் பெருமித வாழ்வு மறவாமல் நினைவுகூறப்படுகிறதாம்!

சங்க இலக்கியத்தின் சால்பைச் சங்பரிவார் அறியுமா? திருக்குறளின் பெருமை தேவபாடை முப்புரியோர்க்குப் புரியுமா? இராசேந்திரனின் ஆயிரமாவது ஆட்சிச் சிறப்பை நினைவு கூரும் பெருமை ஆரிய அடிவருடிகளுக்கு அது இனிக்கலாம். தமிழ்த் தேசியர்க்கு இது சரிப்பட்டு வருமா?

Pin It