beef 295கடந்த 30 ஆம் தேதி காலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், நானும், பாஜகவைச் சேர்ந்த திரு நாராயணனும் கலந்துகொண்டோம். அப்போது அவர் ஓர் அறைகூவலை முன்வைத்தார். மாட்டுக்கறித் திருவிழா நடத்தும் யாராவது துணிவிருந்தால் பசுக்கறித் திருவிழா நடத்துங்கள் பார்ப்போம் என்றார். அதற்கு நான் சரியான விடையை அங்கு சொல்லாமல் விட்டுவிட்டேன். அது என் பிழையே!

மறுநாள் தோழர் நலங்கிள்ளி தொலைபேசியில் அழைத்து, இறைச்சிக்காக மாடு வெட்டுதல் குறித்து, அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இருப்பதாகச் சொன்னது சரிதான். ஆனால் அதனை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லியிருக்கலாமே என்றார். பிறகு அவரே அதனை விளக்கவும் செய்தார்.

வழிகாட்டு நெறிமுறைகள் 48 ஆவது பிரிவில் அது உள்ளது. அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

"The state shall endeavor to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds and prohibiting the slaughter of cows and calves and other milch and draught cattle"

இதில் எங்கும் பசு புனிதம் என்பது போன்ற மதச் சார்புடைய சொற்கள் ஏதும் இல்லை. அது மட்டுமின்றி, இந்நெறிமுறை பசுக்களுக்கு மட்டுமே சொல்லப்படவில்லை. “விமிலிசிபி’ என்ற சொல்லை நாம் கவனிக்க வேண்டும். அதற்குக் “கறவைப் பசு” என்றே பொருள். “பால் தருவன” என்னும் பொருளும் சொல்லப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் ஆடு, ஒட்டகம் எல்லாம் அடங்கும்.

பசு என்று மட்டுமே பொருள் கொண்டாலும், அது கறவைப் பசுவை மட்டுமே குறிக்கும். மடி வற்றிப்போன பசுக்களைக் குறிக்காது. அவற்றை என்ன செய்வது? எனவே உழவுக்கு உதவாத காளைகளையும், கறவை வற்றிப் போன பசுக்களையும் இறைச்சிக்காக வெட்டுவதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. மேலும் வழிகாட்டு நெறிமுறை என்பது பரிந்துரைதானே தவிர, சட்டம் இல்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டின் வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், எல்லோர்க்கும் கல்வி என்பன போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதமும், மதம் சார்ந்த அரசியலும் மட்டுமே பாஜாகவால் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் போக்கு, நாட்டை அழிவுப்பாதையை நோக்கியே செலுத்தும்.

பா.ஜ.க. ஆட்சி இப்படியே நீடித்தால், இறுதியில் மாடுகள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும், மனிதர்கள் எல்லோரும் செத்துப் போயிருப்பார்கள்!

Pin It