முதலாளித்துவ மேலாதிக்கத்தில், கல்வி தருவதை அரசு கைவிட்டது! தருமம் என்கிற பேரால், தனியார், கல்வி வணிகர்கள் ஆனார்கள்!

இந்திய அரசமைப்பு எல்லோருக்கும் பத்தாண்டு களில் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக - கட்டாய மாகக் கல்வி தர முயற்சிக்கும் என்றுதான் 1950இல் கூறியது. அப்படி முயற்சிப்பதை கடந்த 64 ஆண்டு களில் எந்தக்கட்சி ஆட்சியும் நிறைவேற்றவில்லை. அதனால்தான், 2014இல் 126 கோடி இந்தியரில் 29 கோடிப் பேருக்கு எழுத்தறிவு இல்லை.

தமிழ்நாட்டில், 2011 கணக்குப்படி, 18 விழுக்காடு பேருக்கு எழுத்தறிவு இல்லை. அப்படி எழுத்தறிவு மறுக்கப்பட்டவர்களில் கீழ்ச்சாதிப் பெண்களும் இஸ்லாமியர்களுமே அதிகம் பேர். காமராசர் ஆட்சிக்காலத்திய விசையில், கடந்த 47 ஆண்டுக்காலத்தில், திராவிடக் கட்சி ஆட்சிகள் தொடக்கக் கல்வி தருவதில் அக்கறை செலுத்தவில்லை.

1963இல், பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கு மேல் ஒரு பிரிவு மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்க வழி அமைக்கப்பட்டது. அதை 1971க்குப் பிறகு தி.மு.க. ஆட்சி வேகமாக வளர்த்தெடுத்தது.

1977க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., எட்டாம் வகுப்பு வரையில் எந்த அரசுப் பொதுத் தேர்வும் இல்லாமலே தேர்ச்சி போட ஆணையிட்டது. அது ஆசிரியர்களையும் மாணவர்களையும் அக்கறை அற்றவர்களாக ஆக்கியது.

அதற்கு முன்னரே பொதுக் கல்வி, பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி, வேளாண் கல்வி தருவ தற்கான முழு அதிகாரம் - நடுவண் அரசுக்கு ஆதிக் கம் இருக்கும் வகையில், பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. பறிக்கப்பட்ட அந்த அதிகாரத்தை மாநிலத்துக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று எந்தக் கட்சியும் - எந்த இயக்கமும் இன்றுவரை போராட வில்லை.

1927 முதல் சென்னை மாகாணத்தில் ஆதிசூத்திர ருக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு தரப்பட்டது. வட மாநிலங்களில், 1950இல் தான் அவ்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரப்பட்டது.

சென்னை மாகாணத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 1947இலேயே இடஒதுக்கீடு தரப்படப் பெரியார் வழி கண்டார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, 1978 நவம்பர் முதல் மா.பெ.பொ.க.யினரின் முயற்சியினால் - பீகார், உ.பி., ம.பி., அரியானா, பஞ்சாப், இராசஸ்தான் மாநி லங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.

தமிழ்நாட்டில் 67 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் இருந்ததை வைத்து, 31 விழுக்காடு இடஒதுக்கீட்டை 60 விழுக்காடாக உயர்த்தும்படி அ.தி.மு.க. அரசிடம் 19.8.1979இல் மா.பெ.பொ.க. கோரியது. தொடர்ந்து போதிய அழுத்தம் தந்ததால் 1.2.1980 முதல் பிற் படுத்தப்பட்டோருக்கு மட்டும் 50 விழுக்காடு தனி ஒதுக்கீடு கிடைத்தது.

தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக் காடு என 1989இல், வன்னியர் சங்கத்தின் முயற்சி யால், பிரித்துத் தரப்பட்டது.

8.5.1978இல் இந்தியக் குடிஅரசுத் தலைவரிடம், “மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும்” என, மா.பெ.பொ.க. முதன்முத லாகக் கோரியது. பீகார், உ.பி., தமிழ்நாடு, இராசஸ்த hன் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரை விழிப்புறச் செய்து, போராடியது. 1.1.1979இல் மண்டல் குழு அமர்த்தப்படவும், 1982 ஏப்பிரலில் மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவும் மா.பெ.பொ.க.யும், அதன் தலைமையில் இயங்கும் பேரவையுமே காரணம் ஆயின.

1986 முதல் 1992 வரையில், பேரவையின் தலைவர் ராம் அவதேஷ் சிங் மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருந்தபோது, 1990இல் விஸ்வநாத் பிரதாப் சிங் பிரதமராகவும், ஆர். வெங்கட்டராமன் குடிஅரசுத் தலைவராகவும் இருந்தனர். மாநிலங்கள் அவை கூடிய ஒவ்வொரு நாளிலும் - இடஒதுக்கீடு பற்றி அவர் தொடுத்த வினா, வி.பி. சிங் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

அவர் முன்வந்து, 6.8.1990இல், முதன்முதலாக, மத்திய அரசு மற்றும் மத்திய அரசுப் பொதுத் துறை நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு தந்து அறிவித்தார். அதற்கான ஆணையை 13.8.1990இல் பிறப்பித்தார். உச்சநீதிமன்றத்தில், அதனை எதிர்த்து, இந்திரா சஹானி தொடுத்த வழக்கில், 16.11.1992இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, 1963இல் உச்சநீதிமன்றம் - “மொத்த இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டுக்குக் குறை வாகவே இருக்க வேண்டும்” என்று கூறியதை உறுதி செய்து, அதையே தீர்ப்பாக வழங்கியது.

1989-90இல் தி.மு.க. ஆட்சியில் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. அந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட திராவிடர் கழகம் முன்மொழிந்த ஒரு புதிய சட்ட முன் வடிவை, அ.தி.மு.க. அரசு சட்டமாக நிறைவேற்றியது. அச்சட்டம் அரசமைப்பின் 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. அச்சட்டப்படியான 69 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என, 1993இல் கே.எம். விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

“69 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா” என்பது பற்றி, கடந்த 21 ஆண்டாக உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொல்லவில்லை. ஆனால், 69 விழுக்காடு வீதம் ஆண்டுதோறும் இடங்களைப் பிரித்துத் தந்து விட்டு, உடனே தகுதி அடிப்படையிலானவர்களுக்கு ஆக, 19 இடங்களை ஆண்டுதோறும் உண்டாக்கி, தகுதி உள்ளவர்களுக்கு அவை கிடைக்க 1994 முதல் வழி செய்யப்பட்டுவிட்டது. இந்த 2014இலும் அப்படி ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. அதாவது 69 விழுக்காடு இடஒதுக்கீடு முடப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவும் இருந்தாலும், 1990 முதல் உயர் கல்வி முழுவதும் தனியாரிடம் விடப்பட்டு, தனிப்பட்ட வர்கள் அறக்கட்டளைகளின் பெயராலும், சிறுபான்மை யினர் என்கிற பெயராலும் பல்லாயிரக்கணக்கான பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பக் கல்லூரி களைத் தொடங்க இடந்தந்து விட்டனர்.

2010 வரையில் நிறுவனத்துக்கான இடப்பங்குக்கு (Management Quota) எத்தனை விழுக்காடு இடங்கள் உண்டோ அத்தனை விழுக்காடு இடங்களுக்கும், பொறியியல் படிப்புக்கு என்றால் ஓர் இடத்துக்கு ஒரு இலக்கம் முதல் 3, 5 இலக்கம் வரையிலும் பெற்றனர். மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்புகளுக்கு 10, 15, 25 இலட்ச ரூபாக்கள் என்று தொடங்கி, 2014இல் 80 இலக்கம், ஒரு கோடி வரையில் கொள்ளை அடிக்கிறார்கள்.

உலக அளவில் 2014-15ஆம் ஆண்டிற்கான, பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், முதலாவதாக உள்ள 200 பல்கலைக்கழகங் களின் பட்டியலில், இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. (The Hindu, 2.10.2014).

ஆனால், 276-300 தரவரிசைப் பட்டியலில், உலகப் பல்கலைக்கழகங்களில், இரண்டு இந்தியப் பல்கலைக்கழகங்களே இடம்பெற்றுள்ளன.

1.            பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம்.

2. பஞ்சாப் பல்கலைக்கழகம்.

தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பல்கலைக் கழகமும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வில்லை.

தரவரிசைப் பட்டியலில் உள்ள 300 பல் கலைக்கழகங்களில், அமெரிக்காவின் தனியார் பல்கலைக்கழகங்கள் சிலவற்றைத் தவிர, மற்றவை எல்லாம் அரசுப் பல்கலைக்கழகங் களே.

ஏன்? ஏன்? ஏன்?

I. இங்கிலாந்து, செருமனி, அமெரிக்கா உள்ளிட்ட எல்லா மேலை நாடுகளிலும் - பொதுக்கல்வி, பொறியி யல், மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்பக் கல்வி எல்லாம் அவரவர் தாய் மொழியிலேயே கற்றுத் தரப்படுகின்றன.

ஆனால் மானமும் அறிவும் கெட்டவர்கள் நிரம்பிய இந்தியாவில் - தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்டனத்தான், பீகார் - உ.பி. - ம.பி. இந்திக்காரன் என்கிற எல்லோரும் அவனவன் தாய் மொழிவழியில் இப்படிப்புகளைப் படித்திட வக்கில்லை.

எந்த இந்திய மொழிக்கார மாணவனும் மேல் படிப்புக்காக - செருமனி, இரஷ்யா, சப்பான் நாடுகளுக் குப் போனால் - முதல் ஓராண்டுக்கு அந்தந்த நாட்டு மொழியைத்தான் அவன் கற்க வேண்டும்; அந்தந்த நாட்டு மொழியில் தான் இந்திய மாணவன் படிக்க வேண்டும்; படிக்க முடியும். இதைத் தனியார் கல்வி வணிகக் கொள்ளையர் கள் மூடி மறைத்து விடுகிறார்கள். இதில், தமிழ் நாட்டான் கொஞ்சமும் பொறுப்பும் மான உணர்வும் அற்றவர்களாகவே இருக்கிறான். இதில் பெரியார் கொள்கையாளரும் அடக்கம்.

II. இந்தியாவில் தானியங்கிப் பட்டயப் படிப்பு (Automobile Diploma) படிக்கிற ஒரு மாணவன், ஒரு உந்து வண்டியைப் பிரித்துப் போடவும், மீண்டும் பூட்டவும் கற்றிருப்பது போல, தானியங்கிப் பொறி யாளர் பட்டம் (Automobile Engineer) பெற்றவன் செய்ய இயலாது .

பொறியாளர், வெள்ளைச்சட்டை அலுவல்காரன்.

ஆனால் மேலை நாடுகளில் எந்தத் தொழிற்படிப்பைக் கற்பவனும் படிக்கும் போதே முழுமையான செய்முறைக் கல்வியையும் கற்கிறான். ஒவ்வொரு துறையிலும் அப்படியே கற்கிறான்.

III.           அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா முதலிய பணக்கார - மேலை நாடுகளில் எல்லாத் துறைக் கல்வியையும் அரசே தருகிறது.

அதாவது தாய்மொழி வழிக்கல்வி, செய்முறையு டன் கல்வி, அரசே தரும் ஒரே தரமான கல்வி என்கிற மூன்றுமே இந்தியாவில் எந்த மொழிக்காரனுக்கும் அப்போதும் இப்போதும் கிடைக்க மாட்டாதவை.

கல்வியாளர்களும், கல்வி கற்கும் இளைஞர் களும், பொறுப்புள்ள பெற்றோர்களும் மனங்கொண்டு இவைபற்றிச் சிந்தியுங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It