ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் திசம்பர் மாதத்தின் முதல் கிழமையில் மூன்று நிகழ்வுகள் நினைவு கூரப்படுகின்றன. அவற்றுள் முதலாவது நிகழ்வு 1984 திசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து கசிந்த நச்சு வளியால் சில ஆயிரம் பேர் மாண்ட கொடிய நிகழ்ச்சியாகும். அடுத்தது திசம்பர் 6 அன்று மேதை பி.ஆர். அம்பேத்கர் மறைந்த நினைவு நாள். மற் றொன்று அதே நாளில் இந்துத்துவப் பாசிச சங் பரி வாரங்கள் அயோத்தியில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாபர் மசூதியைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி விட்டு அங்கே இராமன் சிலையை நிறுவியதாகும்.

bhopal victims

உலகில் நடைபெற்ற தொழிற்சாலை நேர்ச்சி (விபத்து) களிலேயே கொடுமையான பேரழிவை உண்டாக்கி யது என்கிற களங்கத்தைச் சுமந்து நிற்கும் போபால் நேர்ச்சி நிகழ்ந்து முப்பது ஆண்டுகளாகின்றன. ஒவ் வொரு ஆண்டும் திசம்பர் 3ஆம் நாள், நச்சுவளியால் மாண்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நகர மக்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரண மான யூனியன் கார்பைடு நிறுவனத்தையும், அதன் தலைமை இயக்குநராக இருந்த வாரன் ஆன்டர்ச னையும், உரிய இழப்பீடு பெற்றுத் தரவும், தேவை யான மருத்துவ ஏந்துகளையும் பிற உதவிகளையும் வழங்கத் தவறிய மாநில-நடுவண் அரசுகளையும் கண்டித்துப் பேரணி நடத்துகின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்கா 1945 ஆகத்து மாதம் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் சப்பான் நாட்டில் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது வானூர்தியிலிருந்து அணுகுண்டுகளைப் போட்டது. அதனால் பல இலட்சம் மக்கள் மாண்டனர். அணு குண்டு வெடிப்பின் கதிர்வீச்சின் கொடிய விளைவுகள் மரபியல் கூறுகள் வாயிலாகப் பலதலை முறையின ரைத் தொடர்ந்து தாக்கின. சப்பான் நாட்டின் அரசும், மக்களும் ஆண்டுதோறும் ஆகத்து மாதம் இக்கொடிய நிகழ்வை ஆழ்ந்த துயரத்துடன் நினைவு கூருகின்ற னர். பள்ளிக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அணு ஆயுதத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ள னர். ஆனால் இந்தியாவிலோ போபால் நச்சுவளி நேர்ச்சிக்குப் பிறகும் இதுகுறித்த விழிப்புணர்வும், காப்புணர்வும் ஏற்படவில்லை.

இந்தியாவில் 1967இல் வேளாண்மையில்பசுமைப் புரட்சித் தொடங்கியது. குறிப்பாக கோதுமை, நெல் பயிர்களில் அதிக விளைச்சல் தரும் வகைகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் இவற்றுக்கு அதிக அளவில் இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் இடவேண்டும். அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பூச்சிமருந்து தொழிற்சாலைகளை நிறுவின. அவ்வாறு அமைக்கப்பட்டதுதான் போபால் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்புத் தொழிற் சாலை. யூனியன் கார்பைடு அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமாகும்.

போபால் யூனியன் கார்பைடு ஆலையில் தரையில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தொட்டிகளில், பூச்சி மருந்து தயாரிப்பதற்காகமிதைல் அய்சோ சைனேட்’ (Methyl Isocynate) என்கிற இரசாயனம் நீர்ம (திரவ) நிலை யில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இந்த இரசாயனம் உரிய பாதுகாப்பான முறைகளில் சேமித்து வைக்கப்பட வில்லை என்று அமெரிக்காவிலிருந்து வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆய்வுக் குழு அறிக்கை அளித் தது. அதன்பிறகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குநராகவும் இருந்த வாரன் ஆன்டர்சன் பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைந்திட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் 1984 திசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் பாதுகாப்பற்ற சேமிப்புத் தொட்டிகளிலிருந்து மிதைல் அய்சோசைனேட் நச்சு வளியாக வெளியில் கசிந்து, காற்றில் கலந்து, போபால் நகரம் முழுவதும் பரவியது. இந்த நச்சுக்காற்றைச் சுவாசித்ததால் அந்நள்ளிரவில் நான்காயிரம் பேர் மாண்டனர். பல ஆயிரம் மக்கள் நுரையீரல் நோய்களுக்கும், நரம்பு மண்டல பாதிப்பு களுக்கும் ஆளாகித் தம் வாழ்நாள் முழுவதும் துன்புற் றனர்.

இப்படுகொலைக்குக் காரணமான யூனியன் கார்பைடு ஆலையின் மேலாண்மை இயக்குநர் வாரன் ஆன்டர்சன் திசம்பர் 7ஆம் நாள் போபாலில் கைது செய்யப்பட்டார். அப்போது தலைமை அமைச்சராக இராசிவ் காந்தியும், உள்துறை அமைச்சராக பி.வி. நரசிம்மராவும் இருந்த னர். மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக அர்ஜுன் சிங் இருந்தார். நடுவண் அரசுக்குத் தெரிவிக்காமல் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டதை அறிந்து இராசிவ் காந்தி அதிர்ச்சி அடைந்தார். ஆன்டர்சன் கைது செய் யப்பட்டதால் அமெரிக்காவின் சினத்துக்கு ஆளாக நேரிடும் என அஞ்சிய இராசிவ் காந்தி, நரசிம்மராவ் மூலம் ஆன்டர்சனை உடனே அமெரிக்காவுக்கு அனுப்பு மாறு ஆணையிட்டார். இந்த ஆணையை நரசிம்மராவ் தொலைப்பேசியில் கூறிட, முதல்வர் அர்ஜுன் சிங் அதை நிறைவேற்றினார். இந்த உண்மையை அர்ஜுன் சிங்கே பின்னாளில் வெளிப்படுத்தினார்.

இந்திய அரசே ஆன்டர்சனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டபின், அமெரிக்காவில் உள்ள ஆன்டர்சனை இந்தியாவில் விசாரிக்க அனுப்ப வேண்டும் என்ற நாடகம் அரங்கேறியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகக் குறைந்த அளவிலான இழப்பீட்டுத் தொகையை அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் பெற்றுத் தரப்பட்டது. உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக் காகத் தொடங்கப்பட்ட மருத்துவமனையும் விரைவில் மூடப்பட்டுவிட்டது. ஆனால் சைனைடு நச்சுவளியின் தாக்கத்தின் துயரங்கள் தலைமுறைகளைக் கடந்தும் தொடர்கின்றன.

லக்னோவில் உள்ள இந்திய நச்சுவியல் ஆராய்ச்சி நிறுவனம் 2013 சனவரியில் வெளியிட்ட அறிக்கை யில், “போபாலில் 3.5 கி.மீ. சுற்றளவில் உள்ள நிலத்தின் மண்ணிலும், நிலத்தடி நீரிலும் புற்றுநோய் உண்டாவதற்கும் மற்றும் பிறவியிலேயே குறைபாடு களுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் காரணிகளான வேதிப்பொருட்கள் உள்ளன. இதற்குக் காரணம் போபாலில் 68 ஏக்கர் பரப்பில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் 1969 முதல் 1977 வரை 21 இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி - அவற்றின் சுவர் கள் சிமெண்டால் பூசப்படாமலேயே - ஆலையின் நச்சுக் கழிவுகள் அவற்றில் கொட்டப்பட்டு வந்ததே யாகும். எனவே நச்சுக் கழிவுகள் கசிந்து மண்ணிலும் நிலத்தடி நீரிலும் பரவிவிட்டன. எனவே போபால் நச்சுவளியின் பாதிப்பால் இதுவரையில் 25,000 பேர் இறந்துள்ளனர். ஆனால் 5,295 பேரின் சாவுக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டள்ளதுஎன்று கூறியுள்ளது.

முப்பது ஆண்டுகளாகியும் போபால் ஆலையின் நச்சுக் கழிவுகள் அகற்றப்படவில்லை. மாநில அரசும், நடுவண் அரசும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் எந்த அளவுக்கு அக்கறையற்று இருக்கின்றன என்ப தற்குப் போபால் நேர்ச்சி ஒரு சான்று.

2014 செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மருத்துவமனையில் வாரன் ஆன்டர்சன் இறந்தார். அவருடைய இறப்புச் செய்தி யை அவருடைய குடும்பத்தினர் ஒரு மாதம் கழித்தே வெளியில் அறிவித்தனர். 31.10.2014 அன்று தான் ஆன்டர்சன் இறந்த செய்தி போபால் நகர மக்களை எட்டியது. இறந்தவர்களைத் தூற்றுவதில்லை என்பது இந்திய மரபு. ஆனால் ஆன்டர்சன் இறப்புச் செய்தியை அறிந்ததும் யூனியன் கார்பைடு ஆலையின் நுழை வாயிலின் முன் ஆன்டர்சன் உருவப் படத்தை வைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வரிசையாக வந்து, அப் படத்தின் மீது காறி உமிழ்ந்தனர்; செருப்பால் அடித்த னர். அந்த அளவுக்கு - முப்பது ஆண்டுகளுக்குப் பின் னும் - போபால் நச்சுவளி நேர்ச்சியின் கொடுந்துன்பம் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

வளர்ச்சிஎன்ற முழக்கத்தை முன்னிறுத்தித் தலைமை அமைச்சரான மோடி சப்பானுக்கும், அமெரிக் காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பறந்து சென்று, ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ (Make in India) என்று பன்னாட்டு முதலாளிகளுக்கு அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக மோடி அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல விதிகளைத் தளர்த்திட முடிவு செய்துள்ளது. இந்தியப் பெரு முதலாளிகளின் - பன் னாட்டுப் பெருமுதலாளிகளின் பகற்கொள்ளைக்காக மீண்டும் ஒரு போபால் நச்சுவளி நேர்ச்சி நிகழாமல் விழிப்புடன் செயல்பட வேண்டியது மக்களின் கடமையாக இருக்கிறது.

Pin It