இந்தியாவின் நிதிக்கான தலைநகரமாகத் திகழும் மும்பை மாநகர மக்கள் 2018 மார்ச்சு 11 ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கள் கண்களால் நம்பமுடியாத ஒரு காட்சியைக் கண்டு வியந்தனர். 40,000 உழவர்கள் தலையில் சிவப்புத் தொப்பியை அணிந்துகொண்டு, தங்கள் கைகளில் சுத்தி-அரிவாள் பொறித்த செங் கொடிகளை ஏந்தியவாறு, போக்குவரத்துக்கோ,

மக்களுக்கோ, உடைமைகளுக்கோ எந்த இடையூறும் உண்டாக்காமல், ஒப்பற்ற ஒழுங்கமைவுடன் பேரணியாக வந்தனர்.

6.3.2018 அன்று மகாராட்டிரத்தின் நாசிக் நகரில் 20,000 பேருடன் புறப்பட்ட உழவர்களின் பேரணியில் வழி நெடுகிலும் உழவர்கள் இதில் சேர்ந்ததால் மும்பை நகருக்குள் நுழைந்தபோது 40,000 பேர் என்று பெருகியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உழவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக் கண்ணு நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்களுடன் தில்லி யில் பல மாதங்கள் பலவகையிலான போராட்டங் களை நடத்தினார். 2017 நவம்பர் மாதம் மகாராட்டிரம், ஆந்திரா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், கருநாடகம் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களின் உழவர்கள் தில்லி நாடாளுமன்ற வீதியில் பேரணி நடத்தினர். வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும்; ஊரக வங்கிகள் உள்ளிட்ட எந்த வங்கியில் வேளாண்மைக்காகக் கடன் பெற்றிருந்தாலும் அதைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற இரண்டு கோரிக் கைகளை முதன்மைப்படுத்தி தில்லியில் உழவர்கள் பேரணி நடத்தினர்.

உழவர்கள் நடத்தும் போராட்டங்களில் பொதுவாக நீர்ப்பாசன வசதி உள்ள உழவர்களே கலந்து கொள் வார்கள். ஆனால் 2018 மார்ச்சு 6 முதல் 12 மகாராட் டிரத்தில் உழவர்கள் நடத்திய பேரணியில் நாசிக், தானே, பால்கர், நந்துர்பர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி உழவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இவர்கள் காலங்காலமாகக் காட்டுப் பகுதிகளில் உழுது பயிரிட்டு வரும் நிலங்களைத் தமக்கு உரிமையாக்கும் வகையில் அரசு பட்டா வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர். நிலப் பட்டா இருந்தால்தான் வங்கிகளில் வேளாண் கடன் பெற முடியும். அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளைப் பெற முடியும். நிலப்பட்டா இல்லாததால் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வேளாண்மை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நடுவண் அரசு, 2006 ஆம் ஆண்டு “பழங் குடியினர் மற்றும் வாழையடி வாழையாகக் காடுகளில் வாழ்வோருக்குக் காடுகள் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை [Tribes and other Traditional Forest Dwellers (Recognition of Forest Right) Act 2006] இயற்றியது. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை நடுவண் அரசும், மாநில அரசுகளும் செயல்படுத்தத் தொடங்கியபின், பெரு முதலாளிய நிறுவனங்கள் காடுகளையும் அதன் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க அரசுகளும், அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் துணைபோனதால், காடுகள் மீது பழங்குடியினர் காலங்காலமாகக் கொண்டிருந்த உரி மைகளை இழந்ததுடன், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து காவல் துறையின் துணையுடன் விரட்டியடிக்கப்படும் கொடிய நிலையும் ஏற்பட்டது. இதைத் தடுப்பதே 2006 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கமாகும்.

மற்ற மாநிலங்களைவிட மகாராட்டிர அரசு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னிலையில் இருந்தபோதிலும், பழங்குடியினர் உழுது பயிரிட்டு வந்த நிலத்தின் சிறு பகுதிக்கு மட்டுமே பட்டா தரப்பட்டது. மானாவாரி நிலங்களான இவை பயிரிடுவோருக்கு முழுமையாக உரிமையாக்கப்பட வேண்டும் என்பதே பழங்குடியினரின் முதன்மையான கோரிக்கை. எனவேதான் ஏழை உழவர்களான இப் பழங்குடியினர் கந்தல் உடையுடன், வெறுங் காலுடன் நடந்ததால் பாதங்களில் குருதி கொட்ட, நாசிக்கிலிருந்து 180 கிலோ மீட்டர் நடந்து மும்பைக்குப் பேரணியாக வந்தனர்.

இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM)   உழவர் பிரிவான அனைத் திந்திய உழவர் சங்கம் நடத்தியது. சவகர் லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் மன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்த வரும், தற்போது அனைத்திந்திய உழவர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருப்ப வருமான விஜூ கிருஷ்ணன் என்பவர்தான் இந்தப் பேரணியைத் திட்டமிட்டு நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர் சங்கம் இப்பேரணியை நடத்தியபோதிலும், சிவப்புத் தொப்பி அணிந்து, செங்கொடியை ஏந்திவந்த போதிலும், வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மையில், உழவர்களின் கோரிக் கைகளை மட்டுமே முதன்மைப்படுத்தும் வகையில் நடத்தப் பட்டதால் கட்சிவேறு, சாதி வேறுபாடு கருதாமல் வர்க்க ஓர்மையுடன் உழவர்கள் கலந்து கொண்டது இப்பேரணியின் பெருஞ்சிறப்பாகும். செங்கொடி என்பது உழைக்கும் மக்களின் உரிமைக்கான-விடுதலைக்கான குறியீடாகக் கருதப்பட்டது.

பழங்குடி உழவர்களுக்கு நிலப்பட்டா வழங்குதல், கடன் தள்ளுபடி செய்தல், வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து உழவர்கள் இப் பேரணியை நடத்தினர். இக்கோரிக்கைகளுக்காக 12.3.18 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். 11.3.18 ஞாயிறு மாலை மும்பை மாநகரத்திற்குள் நுழைந்த உழவர்களை வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆறு நாள்களாக 180 கி.மீ. நடந்து களைத்து வந்த உழவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் அளித்தனர். செருப்பும் அணியாமல் பலர் நடந்து வந்ததைக் கண்டு அவர்களுக்குக் காலணியை வழங்கினர். நீண்ட தொலைவு நடந்து வந்ததால் கடுமை யாகப் புண்ணாகியிருந்த பாதங்களுக்கு மருத்துவர்கள் மருந்து இட்டனர். தமக்கு உணவளிக்கும் உழவர்கள் எனக் கருதி மும்பை மாநகர மக்கள் நன்றியுணர்வுடன் உதவிகள் செய்தனர். அது கண்டு உழவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.

12.3.18 திங்கட்கிழமை காலை உழவர்கள் பேரணி சட்டமன்றத்தை நோக்கிப் புறப்படுவதாகத் திட்டமிடப்பட்டி ருந்தது. மும்பை நகரத்தை அடைந்தபிறகு பேரணியின் ஏற்பாட்டாளர்கள் இத்திட்டத்தில் மாற்றம் செய்தனர். காலை யில் பேரணி சென்றால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் வேலைக்குச் செல்லும் பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கும் எனக்கருதி, தங்கள் மெய்வருத்தம் பாராமல், தூக்கத்தையும் தொலைத்து, நள்ளிரவில் புறப்பட்டு பொழுது விடியும் நேரத்தில் சட்டமன்றத் துக்கு அருகில் உள்ள ஆசாத் திடலை அடைந்தனர். உழவர் களின் இந்தச் சமூகப் பொறுப்புணர்வையும், செயலையும் மும்பை நகர மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்களும் ஊடகங் களும் வியந்து பாராட்டினர்.

மகாராட்டிர முதல்வர் பட்னாவிசு, இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியதாலும், பழங்குடியினரே பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட தாலும் இதை மாவோயிஸ்டுகள் நடத்தும் பேரணி என்று கூறினார். மேலும் 2017 சூன் மாதம் ரூ.34,000 கோடிக்கு உழவர் கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்துச் செயல் படுத்தி வருவதால், இந்தப் பேரணி மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறிவந்தார். 6.3.18 அன்று உழவர்கள் பேரணி தொடங்கிய நாள் முதல் அதற்கு மற்ற அரசியல் கட்சிகள், பொதுமக்களிடையே ஆதரவு பெருகியதாலும், ஆறு நாள்கள் 40,000 உழவர்கள் எத்தகைய இடையூறும் ஏற்படுத்தாமல், ஒழுங்கமைவான முறையில் பேரணி நடத்தியது கண்டு ஆட்சியாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொலைக்காட்சிகள் இப் பேரணிக்கு முதன்மை தந்து மக்களிடம் இதைக் கொண்டு சேர்த்ததில் முதன்மையான பங்காற்றின. எனவே முதல மைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் உழவர் பேரணி யின் பிரதிநிதிகளைச் சந்திக்க முன்வந்தனர். இச்சந்திப்பு 12.3.18 காலை 11 மணிக்குச் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் உழவர்களின் ஒன்பது கோரிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக எழுத்துவடிவில் உறுதி அளித்தார். 2017 சூன் மாதம் ரூ,34,000 கோடிக்கு அறிவிக்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடி 2009 முதல் 2016 வரையிலான காலத்திற்கு மட்டும் என்று இருந்ததை 2001 ஆம் ஆண்டு முதல் வாங்கிய வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி, ரூ.1.5 இலட்சம் வரை மட்டுமே தள்ளுபடி என்கிற வரம்புகளை மறு ஆய்வு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது. பழங்குடியினர் உழுது பயிரிடும் நிலத்தில் குறைந்தது 4 எக்டர் வரையில் நிலப்பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் பட்னாவிசு தெரிவித்தார். எனவே உழவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். உழவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிட அரசு சிறப்புத் தொடர்வண்டி மற்றும் பேருந்துகளை ஏற்பாடு செய்தது.

திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைத்து, மக்களிடம் பரப்புரை செய்து, பெருமளவில் மக்களைத் திரட்டி சீரிய வகையில் போராட்டங்கள் நடத்தினால் மட்டுமே அரசு செவிசாய்க்கும்; கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வரும் என்பதை மகாராட்டிர உழவர் பேரணி உணர்த்து கிறது. மகாராட்டிரத்தில் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உழவர்கள் தொடர்ந்து போராடியதால்தான் சூன் மாதம் ரூ.34,000 கோடி வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்கப் பட்டது. 2017 நவம்பரில் நாடாளுமன்ற வீதியில் பல மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் திரண்டு பேரணி நடத்தியதால்தான் 2018 நிதிநிலை அறிக்கையில் சுவாமி நாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பயிரின் உற்பத்திச் செலவில் 50 விழுக் காடு இலாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உழவர்களும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் மும்பைப் பேரணியிலிருந்து பாடம் கற்க வேண்டியுள்ளது. போராட்டம் என்பது அரசு அலுவலகம் முன்னரோ, அரசு ஒதுக்கும் இடத்திலோ இரண்டு மணி நேரம் முழக்கங்களை எழுப்பி, உரையாற்றிவிட்டுக் கலைந்து செல்வது என்பதாகவே சுருங்கிப் போய்விட்டது. இத்தன் மையில் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் ஆளும் வர்க்கம் மதிக்காது. இந்நிலையைக் கடந்து, தங்கள் கட்சி, அமைப்பு, சாதி, மதம், ஆகியவற்றை ஒதுக்கிவைத்து விட்டு, மக்களைப் பாதிக்கின்ற, மாநில உரிமைகளைப் பறிக்கின்ற பிரச்சனைகளில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டிப் போராடினால்தான் ஆட்சியாளர்களை அசைக்க முடியும். காவிரி ஆற்றுநீர் உரிமைகளைக் கூட இத்தன்மையில் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவில்லை. சல்லிக்கட்டு உரிமைக்காக மட்டுமே இத்தன்மையிலான மக்கள் போராட்டம் நடந்தது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள் கையை 1991 முதல் நடைமுறைப்படுத்த தொடங்கியபின், அரசுகள் வேளாண்மையைப் புறக்கணித்தன. உயர்தொழில் நுட்பம் கொண்ட-அதிக அளவில் தனியார் முதலீடு தேவைப் படும் சேவைப் பிரிவுக்கும், தொழில்களுக்கும் அரசுகள் முன்னுரிமை தந்து பல சலுகைகளை அளித்தன. வேளாண்மை நலிவடைந்ததால், கடன் சுமையால் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1997 முதல் 2017 வரையிலான 21 ஆண்டுகளில் 3,20,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அரசின் புள்ளிவிவரமே சொல்கிறது. மகாராட்டித்தில் மட்டும் 2017 இல் 2,414 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உழவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதற்குக் காரணம் என்ன?

நரேந்திர மோடி தலைமை அமைச்சராகப் பதவி ஏற்ற பின், வேளாண்மைத் தொழில் மேலும் நலிவடைந்தது. 2004-05 முதல் 2013-14 வரை இருந்த மன்மோகன் ஆட்சிக் காலத்தில் வேளாண்மையின் வளர்ச்சி 3.7 விழுக்காடாக இருந்தது. மோடியின் நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் இது 1.85 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது. 2016 நவம்பர் மாதம் நரேந்திரமோடி திடீரென பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தார். இதனால் ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் ஒரே இரவில் செல்லாதவையாகிவிட்டன. நவம்பர் மாதம் என்பது தென்மேற்குப் பருவமழையைக் கொண்டு பயிரிடப்பட்ட காரிப் பருவ பயிர்கள் அறுவடை செய் யப்பட்டு, ராபி பருவத்துக்கான (நவம்பர்-மார்ச்சு) பயிர்கள் விதைப்பு செய்யப்படும் காலமாகும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காரிப் பயிர்களின் விளை பொருள்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றின் விலை கடுமை யாக வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று ராபி பருவ பயிர் களுக்கான இடுபொருள்களை வாங்க முடியாமல் உழவர்கள் திண்டாடினர். இவற்றால் உழவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாயினர்.

2016இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இழப்பு களையும் இன்னல்களையும் தாண்டி 2017 காரிப் பருவத்தில் உழவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர். அப்போது நடுவண் அரசு ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தியதால் அறுவடை சமயத்தில் வேளாண் விலை பொருள்கள் கடும் வீழ்ச்சியடைந்தன. 2017 ஆம் ஆண்டிற்கு மக்காச் சோளத்துக்கு ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.1,425 என்று குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் சந்தையில் ரூ,1,050-ரூ.1,100 விலைக்கு மேல் உழவர்களால் விற்க முடியவில்லை. இதேபோல் உளுந்துக்கு ரூ.5,200 என்று அரசு விலையை நிர்ணயித்தது. ஆனால் சந்தையில் ரூ.3,500க்கு மேல் உழவர்களால் விற்கமுடியவில்லை. (The Hindu 21-1-18). மேலும் துவரை, உளுந்து, முதலான பயறு வகைகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டிலேயே உற்பத்தியைப் பெருக்கமாறு 2017இல் அரசு உழவர்களை ஊக்குவித்தது. இயல்பான மழைப் பொழிவு இருந்ததால் பயறு வகைகளில் 220 இலட்சம் டன் விளைச்சல் கிடைத்தது. ஆனால் அரசு 20 இலட்சம் டன் பயறு வகைகளை மட்டுமே கொள்முதல் செய்தது. இந்தச் சூழலிலும் பொறுப்பற்ற முறையில் 60 இலட்சம் டன் பயறு வகைகளை அரசு இறக்குமதி செய்தது. எனவே அரசு, சுவாமிநாதன் குழுவின் பரிந்து ரையின் “(C2+50%” என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தாலும் அந்த விலையில் விளை பொருள்களைக் கொள்முதல் செய்வதற்குரிய திட்டவட்டமான கட்டமைப்பு இல்லாவிட்டால் உழவர்களுக்கு அதனால் ஒரு பயனும் ஏற்படாது. மோடி ஆட்சிக்கு வந்தபின், அறுவடைக் காலங்களில் விளை பொருள்கள் கடும் வீழ்ச்சியடைவதற்கு முதன்மையான காரணம் கொள்முதலில் தனியார் வணிகர் களின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டதே ஆகும்.

1965 முதல் நடுவண் அரசின் வேளாண்மை அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் வேளாண் செலவு மற்றும் விலைக் குழுவின் பரிந்துரையின் பேரில் வேளாண் விளை பொருள் களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price-MSP) நடுவண் அரசு ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. தற்போது 7 வகையான தானியங்கள், 5 வகையான பருப்புகள், 7 வகையான எண்ணெய் வித்துகள், 4 வகையான வணிகப் பயிர்கள் (பருத்தி, கரும்பு, சணல், தேங்காய்) ஆகியவற்றின் விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிவிக்கிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம் 2006ஆம் ஆண்டு நடுவண் அரசுக்கு அளித்த அறிக்கையில், உழவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கான வருவாயை உறுதி செய்ய, உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்குமாறு விளை பொருள்களின் விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இது “(C2+50%” என்ற அளவீடாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக உழவர்கள் போராடி வருகின்றனர். இதற்கான வாக்குறுதியை பா.ச.க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்தது. அதன்பின் இவ்வாறு விலை நிர்ணயம் செய்வது வேளாண் மைச் சந்தையைச் சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு கூறியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 2018ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக் கையில் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. “(சிவ+50ரூ” என்ற தொகையைவிடக் குறைவான விலையே நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என்பது 2018 மார்ச்சு சிந்தனையாளன் இதழில் விளக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாலேயே அதன் பயன்கள் உழவர்களுக்குக் கிடைத்துவிடாது. அந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான போதிய கட்டமைப்பு இல்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO) 2013இல் நடத்திய ஆய்வில், நெல் விளைச்சலில் 17 விழுக்காடு, கோதுமை விளைச்சலில் 19 விழுக்காடு மட்டுமே அரசுத்துறை நிறுவனங்களால் உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் நிலம் உடைய, பணக்கார உழவர்கள் பெரிதும் பயனடைகின்றனர். மொத்த உழவர்களில் 84 விழுக்காட்டினர் சிறு, குறு உழவர்களாவர். இவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலோ, தனியார் வணிகர்களிடமோ அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கின்றனர். நெல், கோதுமை அல்லாத பயிர்களைப் பயிரிடும் எல்லா உழவர்களும் தங்கள் விளை பொருளைத் தனியாரிடமே விற்கும் நிலைதான் இருக்கிறது.

எனவே எல்லா விளை பொருள்களையும் அரசு அறிவிக்கும் விலையில் அரசின் பொறுப்பில் கொள்முதல் செய்யும் நிலை ஏற்படாத வரையில், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் உழவர்களுக்கு 50 விழுக்காடு இலாபம் கிடைக்காது. இந்த நிலையில் 2022க்குள் உழவர்களின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்தப்போவதாக மோடி அரசு வாய்வீரம் பேசிக் கொண்டிருக்கிறது. இதற்காக 585 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் இணைத்திருப்பதாகவும், 22,000 கிராமப்புறச் சந்தைகளின் கட்டமைப்பை உயர்த்தப் போவ தாகவும் கூறுகிறது. இதுவெறும் ஏட்டுச் சுரைக்காய்த் திட்டமே!

84 விழுக்காடாக உள்ள சிறுகுறு உழவர்கள் தங்கள் விளைபொருள்களில் ஒரு பகுதியை மட்டுமே விற்பனை செய்கின்றனர். எனவே இவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பது முதன்மையாகும். இடுபொருள்களின் விலையைக் குறைப்பதும், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் கிடைக்கச் செய்வதும் இன்றியமையாததாகும்.

2005 முதல் 2012 வரையிலான ஏழு ஆண்டுகளில் உழவர்களின் எண்ணிக்கை 16 கோடியிலிருந்து 14.1 கோடி யாகக் குறைந்துள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 8.5 கோடியிலிருந்து 6.9 கோடியாகக் குறைந்துள்ளது. ஆண்டிற்கு 50 இலட்சம் பேர் வேளாண் தொழிலை விட்டு நகரங்களுக்கு வேலைதேடிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலோர் கட்டுமானத் தொழில் கூலியாட் களாயினர். 2004-05இல் 260 இலட்சம் பேராக இருந்த கட்டுமானத் தொழிலாளர் எண்ணிக்கை 2011-12இல் 510 இலட்சம் பேராக உயர்ந்தது. ஆனால் 2012க்குப் பிறகு கட்டுமானத் தொழிலிலும் பெரும்தேக்கம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மையிலும் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை. ஆனால் ஆண்டுதோறும் 20 இலட்சம் புதிய இளைஞர்கள் வேலை செய்யும் அகவையில் (றுடிசமகடிசஉந) நுழைகின்றர். இதனால் நாட்டில் பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

மோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று வாய்ப்பந்தல் போட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் சில இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகி யுள்ளன. அதைவிட அதிகமாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’(Make in India) என்ற முழக்கத்தை மோடி ஆட்சிக்கு வந்ததும் முழக்கினார். ஆனால் ஒரு உருபாய் மதிப்புள்ள பொருளிலிருந்து தொடுதிரைக் கைப்பேசி வரை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களே சந்தையில் குவிந்து கிடக்கின்றன.

எனவே வேளாண் விளை பொருள்களுக்குச் சுவாமி நாதன் குழுவின் பரிந்துரையின்படி, விலை நிர்ணயம் செய்வதும், அந்த விலையில் அரசே கொள்முதல் செய்வதும் உறுதி செய்யப்படும் போது மட்டுமே உண்மையில் உழவர் களின் வருவாய் உயரும். அந்நிலையில் கடன் தள்ளுபடி என்கிற கோரிக்கைக்கே இடமில்லாத நிலை ஏற்படக்கூடும். அதே சமயம் மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் பொருள் களை இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை ஏற்படுத்தி னால்தான் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க முடியும். வேளாண்மையில் உழைக்கும் உழவர்களும், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களும், நகர்ப்புற தொழி லாளர்களும் சாதி உணர்வைக் கடந்து வர்க்க ஓர்மையுடன் செயல்பட்டால்தான் இதை நோக்கிப் பயணிக்க முடியும். மும்பை உழவர் பேரணி உணர்த்துப் பாடமும் இதுவே ஆகும்.

Pin It