இது எங்கல்ஸ் எழுதிய ஒரு முக்கியமான நூல் ஆகும். இந்த டூரிங் என்பவர் (1833-1921) ஒரு ஜெர்மானிய தத்துவவாதி; பொருளாதார அறிஞர்; இயந்திரவியல் பேராசிரியர். ஒரு அரசு அலுவலரின் மகன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் (1863-74) தத்துவத்தினைப் பொறுத்தமட்டிலும் இவர் எல்லாவற்றையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது எல்லாவற்றிலும் உள்ள சிறந்தவற்றை எடுத்து இணைத்து ஒரு கலவையை உருவாக்கும் போக்கினை இது குறிக்கும்.

Engels 1856ஆங்கிலத்தில் இதை எக்லெடிக் போக்கு என்று கூறுவர் (Eclectic) இத்தகைய போக்கினை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோர் கண்டித்துள்ளனர். அதாவது நமது மரபில் ஒரு பழமொழி உண்டு. “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்டமாட்டான்” என்பது அது.

இத்தகையவர்கள் எந்தவொரு அமைப்பிலும் உறுதியாக இருக்க மாட்டார்கள். டூரிங் நேர்க்காட்சி வாதம் (Positivism) (இந்தத் தத்துவத்தில் உலகு பற்றி அதிகம் பேசப்பட்டது.

“நேரில் காணும் உலகம் பொருட்கள், அவை பற்றிய தகவல்கள், அவற்றின் இயக்கம், செயல் பாடு ஆகியவற்றிலிருந்தும், அவற்றைத் தருக்க ரீதியாகத் தொகுத்து, பகுத்து வகைப்படுத்து வதிலிருந்தும் இயற்கை விஞ்ஞானங்கள் துவங்கப் படவேண்டும்” இது நேர்க்காட்சிவாதத்தின் ஒரு அம்சம். இங்குப் பொருள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (ந.முத்துமோகன்: ஐரோப்பியத் தத்துவங்கள் - காவ்யா) இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதம். (இது இயந்திரகதியாலான பொருள்முதல் வாதம் எனப்படும்) கருத்து முதல்வாதம் ஆகிய வற்றை இணைத்து அவரது கொள்கையை உருவாக்கினார்.

இவர் மார்க்சியத்தினை மறுத்து எழுதினார் இவர் ஒரு குட்டிபூர்ஷ்வாக் கொள்கையாளர் (சிறு முதலாளிகள், வட்டி வியாபாரிகள், அலுவலக உழைப்பாளிகள் ஆகியோர் இதில் அடங்குவர். இதனை மத்தியதர வர்க்கம் என்றும் அழைப்பர்). இவரது அடிப்படையானது வலுக்கொள்கை (Force Theory) என்பதாகும். ஒரு மனிதன் மற்றொருவனைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் வேலை செய்ய வைக்கிறான். இது பொருளாதார நடவடிக்கையாகும். இதன் மூலம் விநியோகம் இடம் பெறுகிறது. இவர் மார்க்சின் உபரி மதிப்புக் கொள்கையை மறுத்தார். தத்துவத்தில் இவர் ஒரு கருத்துமுதல்வாதியாக இருந்தார்.

டூரிங் கையாண்ட முறை என்பது ஒரு விஷயத்தை அதன் பகுதிகளாகப் பிரித்து, ஏற்கனவே உள்ள விதிகளை அவற்றிற்குப் பயன்படுத்தி, பின்னர் அவற்றை விளக்குவதாகும். இது பற்றி எங்கல்ஸ் கூறுகிறார்.

“இது பழைய கருத்துமுதல்வாத முறைக்கு
ஒரு புதிய வடிவம் கொடுப்பதாகும். பொருள்களிலிருந்து முடிவுகளைப் பெறாமல், பொருள் பற்றிய தருக்க விவரங்களிலிருந்து ஒரு பொருளின் பண்பு களைக் காணும் முறை இது. யதார்த்தம் பற்றிய தத்துவமானது சுத்தமான எண்ணமாக இங்கு வெளிப்படுகிறது. யதார்த்தம் என்பது கருத்திலிருந்து பெறப்படுகிறது” (AntiDuring:116) நமது எண்ணங்களில் உள்ள திட்டத்தின்படி தான் உலகம் இயங்குகிறது என்று அவர் கருதினார். சோசலிசம் பற்றிக் குழப்பமான கருத்துக்களை முன்வைத்தார்.

இவற்றை மறுத்து எங்கல்ஸ் பல கட்டுரை களை எழுதினார். இவற்றின் தொகுப்புதான் இந்த நூல். இதனை மார்க்சியப் பாட நூல் என்று அழைப்பர். இதில் இயங்கியல் பொருள்முதல் வாதம், வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதம், மார்க்சியப் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மார்க் சீயத்தின் அடிப்படைகளை இங்கு எங்கல்ஸ் வரிசைப் படுத்திக் கூறுகிறார். மார்க்ஸ் இதன் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு, இதில் உள்ள இரண் டாவது பகுதியின் பத்தாவது அதிகாரத்தினை எழுதினார். இது பொருளாதாரத்தின் வரலாறு பற்றியது.

இந்த நூல் நான்கு பகுதிகளாக உள்ளது தத்துவம், அரசியல், பொருளாதாரம், சோஷலிசம் ஆகியன அந்தப் பகுதிகள். இதன் முன்னுரையில் தத்துவத்தின் வளர்ச்சி பற்றிய விளக்கம் உள்ளது. இதனைப் பயன்படுத்தி தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா போன்றவர்கள் இந்தியத் தத்துவம் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

முதலாவது பகுதி முழுவதும் இயங்கியல் பற்றியது. டூரிங்கின் கூற்றை மேற்கோளாகக் காட்டி, அவற்றை மறுக்கும் பொழுது இயங்கியல் பற்றிய மார்க்சீயப் பார்வையை எங்கல்ஸ் விளக்குகிறார். இரண்டாவது பகுதி அரசியல் பொருளாதாரம் பற்றியது. மூன்றாவது பகுதி சோஷலிசம் பற்றிய விளக்கமாக அமைந்துள்ளது. லெனின் இது பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார். “தத்துவம், இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானங்கள் பற்றிய மிக முக்கியமான பிரச்சினைகள் இந்த நூலில் ஆராயப்படுகின்றன. இது அற்புதமான, வளமான, பலன் தரும் நூலாகும்” மார்க்சியத்தை முறையாகக் கற்க விரும்புபவர்கள் இதனைப் படிக்க வேண்டும்.

II

1. சமுதாயத்திற்கும், சிந்தனைக்குமான உறவு

“எல்லாப் பழங்கால வரலாறும் (புராதன காலம் தவிர) வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகக் காணப்பட்டது. சமுதாயத்தில் உள்ள இந்தப் போராடும் வர்க்கங்கள் உற்பத்தி, பரிவர்த்தனை ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். சுருக்கமாக அவர்களது பொருளாதார நிலைமைகளின் விளைவு ஆகும். சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு உண்மையான அடித்தளத்தினை உருவாக்குகிறது. இதிலிருந்து தான் சட்டம், அரசியல் அமைப்புகள், மதம், தத்துவம், பல்வேறு கருத்துக்கள் ஆகிய வற்றிற்கான விளக்கத்தினை உருவாக்க முடியும்...”

இந்தப் பகுதியில் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தில் உள்ள அடிப்படை, மேற்கட்டுமானம் ஆகியவற்றிற்கு உள்ள உறவு விளக்கப்படுகிறது தீர்மானிக்கும் சக்தி அடிப்படைக்கு உண்டு என்பதை எங்கல்ஸ் விளக்குகிறார்.

2. இயங்கியல்

“இயக்கம் என்பது பொருள் இருக்கும் முறை யாகும். எந்த இடத்திலும் இயக்கம் இல்லாத பொருள் இல்லை. இருக்கவும் முடியாது. விண் வெளியில் இயக்கம், பல்வேறு விண்பொருள் களில் சிறு பகுதிகளில் இயக்கம், வெப்பம், மின் சாரம், காந்தம், முறையில் மூலக் கூறுகள் அதிர்தல், வேதிச்சிதைவும், கூடுகையும், உயிர்ப் பொருள்கள் - ஆகியன எல்லாவற்றிலும் ஒவ்வொரு கணத்திலும் பொருள்களின் தனித்தனி அணுக்கள் ஆகியன இந்த இயக்கங்களில் ஒன்றாக, ஏக காலத்தில் அல்லது பல்வேறு வடிவங்களாக உள்ளன. ஓய்வும், சமநிலையும் தாரதம்யமானவை. ஏதேனும் ஒரு வகை இயக்கத்துடன் தொடர்பில்லாமல் இவற்றிற்கு அர்த்தமில்லை...

இயக்கமற்ற பொருள் என்பது வெறுமையான முட்டாள்தனமான எண்ணங்களில் ஒன்றாகும்...

3. இயங்கியல் விதிகள்

இயங்கியலில் மூன்று விதிகள் உள்ளன. இவை அனைத்தும் செவ்வியல் தத்துவத்தில் உள்ளவை. இவற்றை ஹெகல் விரிவுபடுத்திச் செழுமைப் படுத்தினார். இயங்கியல் விதிகள் வருமாறு:

1. முரண்பாட்டுவிதி: இதில் எதிர்சக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன: இணைந்தும் இருக் கின்றன என்பது கூறப்படுகிறது. 2. பண்பு - அளவு விதி: பண்பானது ஒரு எல்லையில் அளவாக மாறும்: அளவானது ஒரு எல்லையில் பண்பாக மாறும் 3. மறுப்பின் மறுப்பு விதி: ஒன்றை மற்றொன்று மறுக்கிறது. அதன் பின் மூன்றாவது என்று உருவாகிறது உடன்பாடானவை தொடர் கின்றன. தேவையற்றவை மறைகின்றன. இவற்றைப் பற்றி எங்கல்ஸ் இங்கு விளக்குகிறார்.

“முதலாவது முரண்பாட்டு விதி: பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாகக் காணும் பொழுது அவற்றில் உள்ள முரண்பாடுகளை நாம் காண்பதில்லை. பொதுவாக உள்ள சில பண்புகளையும் முரண்படும் பண்புகளையும் மட்டுமே நாம் காண்கிறோம். இந்தக் குறுகிய உற்றுநோக்கல் எல்லைக்குள் வழக்கமான இயக்க மறுப்பியல் சிந்தனையுடன் நாம் இருக்க முடியும்.

ஆனால் இயக்கம், மாறுதல், அவற்றின் பரஸ்பரத் தாக்கம் என்ற நிலையில் காணும் பொழுது நிலை வேறாக உள்ளது. இப்பொழுது நாம் முரண்பாடுகளைக் காண்கிறோம். இயக்கமே ஒரு முரண்பாடு தான்... முரண்பாடு, தொடர்ந்து தோன்றுதல், அதற்குத் தீர்வு ஏற்படுதல், என்பதில் தான் இயக்கம் உள்ளது.”

அடுத்து எங்கல்ஸ் எடுத்துக் கொள்வது பண்பு அளவுவிதி. இதனை விளக்க எங்கல்ஸ் மார்க்சின் உபரிமதிப்புக் கொள்கையை எடுத்துக் கொள்கிறார். எவ்வாறு சிறுசிறு மதிப்புகள் உபரிமதிப்பாக மாறுகிறது என்பதுதான் எங்கல்சின் விளக்கத் திற்கான நோக்கம். இது தொடர்பாக எங்கல்ஸ் கூறுகிறார் “ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் உள்ள உழைப்பாளியை அவர் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.

அவள் தனக்காகத் தினந்தோறும் எட்டு மணி நேரம் வேலை செய்கிறாள் (அதாவது அவனது கூலிக்கான மதிப்பினை உருவாக்குகிறாள்) அதன் பின்னர் நான்கு மணி நேரம் முதலாளிக்காக உபரி மதிப்பினை உருவாக்குகிறாள். இந்த உபரி மதிப்பு முதலாளியின் பைக்குள் உடனே சென்றுவிடுகிறது. போதுமான உபரி மதிப்பினை எடுத்துக் கொள்வதற்கு, ஒரு உழைப்பாளிக்கும், இரண்டு உழைப்பாளிகளுக்குமான கச்சாப் பொருள்கள், உற்பத்திக் கருவிகள், கூலி ஆகியவற்றை அவன் கொடுக்க வேண்டும்.

முதலாளியின் நோக்கம் வாழ்வதற்கான பொருளைப் பெறுவது அல்ல. சொத்தினை அதிகரிக்கச் செய்வதாகும். இந்த இரண்டு உழைப்பாளிகள் உள்ளவன் முதலாளியாக முடியாது. சராசரி உழைப்பாளியைவிட இரு மடங்கு வசதியுடன் வாழ்வதற்கு, அரைப் பங்கு உபரி மதிப்பினை மூலதனமாக மாற்றுவதற்கு அவன் எட்டுப் பேரை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்... இங்கு மார்க்ஸ் கூறுகிறார் வெறும் அளவு மாறுதல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் பண்பு மாறுதலாக இடம் பெறுகிறது”.

இதன் பின்னர் எங்கல்ஸ் மறுப்பின் மறுப்பு விதியைப் பற்றிக் கூறுகிறார். முதலாளித்துவததிற்கு முன்பு இருந்த சொத்து வடிவத்தினை முதலாளித்துவச் சொத்து மறுக்கிறது. முதலாளித்துவச் சொத்தினை சோஷலிசச் சொத்து மறுக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் அதற்குரிய சிறப்புப் பண்புகளை உடையது. இதனை எங்கல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.

“முதலாளித்துவ காலகட்டத்திற்கு முன்னர் சிறுதொழில் இருந்தது. இது ஒருவனுக்குச் சொந்த மான உற்பத்தி சாதனங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மூலதனத்தின் ஆதிநிலைக் குவிப்பு (Primitive Accumulation) என்பது இந்த உற்பத்தி யாளர்களை அழிப்பதில் இருந்தது. அதாவது உடைமையாளனின் உழைப்பினை அடிப்படையாகக் கொண்ட சொத்தினை அழிப்பதில் இருந்தது. இது சாத்தியமானதாகும்.

ஏனெனில் சிறுதொழில்கள் புராதனமான, குறுகிய உற்பத்தி எல்லைக்கு மட்டுமே பொருத்தமானது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அதன் அழிவிற்கான பொருளியல் காரணிகளை இது உருவாக்குகிறது. தனியான, சிதறிக் கிடக்கும் உற்பத்தி சாதனங்களை அழித்து சமூக ரீதியாகக் குவியம் பெற்ற சொத்தாக மாற்றுவது மூலதனத்திற்கு முந்திய வரலாறு ஆகும். இந்த உழைப்பாளிகள் பாட்டாளிகளாக மாறிய உடன், உழைப்பு மேலும் சமூகமயமாகும் பொழுது, நிலமும், மற்ற உற்பத்தி சாதனங்களும் மேலும் மாறும் பொழுது தனிச்சொத்துடைமையாளர்கள் அழிவது புதிய வடிவத்தினைப் பெறுகிறது.”

இங்குச் சொத்து வடிவங்கள் மாறுவது மற்ற மூலதனத்தில் மார்க்ஸ் கூறியதாக எடுத்துக்காட்டி, மறுப்பின் மறுப்புவிதியை எங்கல்ஸ் விளக்குகிறார்.

4. வர்க்கங்களின் தோற்றம்

‘அரசியல் பொருளாதாரம்’ என்ன அதி காரத்தில் வர்க்கங்களின் தோற்றம் பற்றிய பல அருமையான பகுதிகள் உள்ளன. ஒரு உதாரணமாக பூர்ஷ்வாக்களின் தோற்றம் பற்றிய பகுதியைக் காண்போம்.

“நிலப்பிரபுக்களுக்குக் கப்பம் செலுத்தும், அடிமைப்பட்ட எல்லா வகையான பண்ணையடிமைகள், வில்லன்கள் (அடிமைகளில் ஒரு வகை) பர்கர்கள் ஆகியோர் ஒவ்வொரு கட்டத்தின் தொடர்ந்த போராட்டத்தில் வெற்றி கொண்டு, இறுதியாக மிகவும் முன்னேறிய நாடுகளில் அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இங்கிலாந்தில் பிரபுக்களை நேரடியாகவே அகற்றினர். அங்கு பிரபுத்துவத்தைப் பூர்ஷ்வாமயமாக்கினர். அதனை அலங்காரத் தலைவர்களாக்கினர்”.

“விலங்கு உலகிலிருந்து (குறுகிய பொருளில்) மனிதர்கள் வெளியே வந்த பொழுது வரலாற்றில் அடியெடுத்து வைத்தனர்... அப்பொழுது வாழ்க்கை முறையில் ஒரு வகையான சமத்துவம் இருந்தது... (வர்க்கங்கள் இல்லாத நிலையில்) குடும்பத் தலை வருக்குச் சமுதாய நிலையில் ஒரு வகையான சமத் துவம் இருந்தது. பிந்திய கால நாகரிக சமூகங்களின் புராதன விவசாயக் குழுக்கள் வரை இது தொடர்ந்தது. இந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், சில பொது வான நலன்களாக இருந்தன.

இவற்றைப் பாதுகாக்க சமுதாயத்தின் கட்டுப்பாட்டிற்கு உள்ளாக, சில தனிநபர்களிடம் இவற்றை ஒப்படைக்க வேண்டி யிருந்தது. வழக்குகளை விசாரித்தல், அதிகாரத்தினை எதிர்க்கும் தனிநபர்களை அடக்குதல், வெப்ப மண்டல நாடுகளில் நீர்ப்பாசனத்தை ஒழுங்கு செய்தல், மதச் சடங்குகள் ஆகியன அந்த நலன்கள். இவை ஒவ்வொரு காலகட்டத்திலும் காடு வாழ் மக்களிடையே காணப்படுகின்றன. இவற்றில் ஒரு வகையான அதிகாரம் இருந்தது. அரசு அதிகாரத்தின் ஆரம்பம் இருந்தது.

உற்பத்தி சக்திகள் வளர்ந்தன. மக்கள் தொகை பெருகும் பொழுது ஒரு கட்டத்தில் பொதுவான நலன்களை இது உருவாக்குகிறது. மற்றொரு கட்டத்தில் முரண்படும் நலன்களையும் உருவாக்குகிறது. இவை தனித்தனி சமூகக் குழுக்களில் இடம் பெறுகின்றன. இவை பெரிய குழுக் களாக இணையும்பொழுது புதிய வேலைப் பிரி வினை ஏற்படுகிறது. பொது நலன்களைப் பாது காக்கவும், முரண்படும் நலன்களை எதிர்க்கவும் அமைப்புகள் உருவாகின்றன. அதன் ஒவ்வொரு நபரும் ஒரு பிரத்தியேக நிலையில் உள்ளன...

இவை விரைவில் சுயாதீனம் பெறுகின்றன. இதற்குக் காரணம் வேலைகளின் பரம்பரைத் தன்மை; மற்றொரு பக்கத்தில் மற்றக் குழுக்களுடனான முரண்பாடுகள். சமூகக் கடமைகளை நிறை வேற்றுவது தான் எல்லா இடங்களிலும் அரசியல் மேலாண்மைக்கு அடிப்படையாக உள்ளது என்பதை நாம் நிலைநாட்ட விரும்புகிறோம்.வர்க்கங்கள் உருவாகும் இந்தச் செயல்முறை யுடன் கூடவே மற்றொன்றும் இடம்பெற்றது.

விவசாயத்தில் ஈடுபட்ட குடும்பங்களில் இருந்த இயல்பான வேலைப் பிரிவினையானது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு வேலை யாட்களை வைத்துக்கொள்ள இடமளித்தது. வாழ்க்கைக்குத் தேவையானவற்றைவிட அதிகமாக உற்பத்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி முறை முன்னேறியிருந்தது. கூடுதலான உழைப்பு சக்தியைப் பராமரிக்கும் அளவிற்கு வசதிகள் இருந்தன... உழைப்பு சக்திக்கு மதிப்பு ஏற்பட்டது.

ஆனால் சமுதாயமும், அது இணைந்திருந்த அமைப்பும், உழைப்பு சக்தியை அதிகமாக அளிக்க முடிய வில்லை. இது போர் மூலம் கிடைத்தது... இப்பொழுது தோன்றிய “பொருளாதாரச் சூழ்நிலையில்” போர்க் கைதிகளுக்கு மதிப்பு ஏற்பட்டது... அடிமை முறை கண்டுபிடிக்ப்பட்டது...”

இங்கு நாம் ஒன்றைச் சுட்டிக்காட்டலாம். சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் ஆகியோருக் கிடையிலான, வரலாற்று ரீதியான பகைமை இன்று வரை மனித உழைப்பின் வளர்ச்சியுறாத உற்பத்தித்திறன் வேறுபாடுகளின் விளைவேயாகும். உழைக்கும் மக்கள் அவர்களது அவசியமான உழைப்பிலேயே மூழ்கியிருப்பதனால், சமுதாயத்தின் பொது விஷயங்களைக் கண்காணிக்க அவர்களுக்கு நேரம் இல்லை.

(தொழிலை மேற்பார்வையிடுதல், அரசு விவகாரங்கள், சட்ட விஷயங்கள், ----- விஞ்ஞானம் போன்றவை) எனவே தூலமான உழைப்பிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் தான் இவற்றை நிர்வகிக்கத் தேவைப்பட்டது. இந்த வர்க்கமானது அதன் நலன்களுக்கு ஏற்ப, உழைக்கும் மக்களின் மீது மிக அதிகமான உழைப்புச் சுமையைத் திணிக்கத் தயங்கவில்லை.

“தற்காலத் தொழிலில் உள்ள உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி மட்டுமே வேறுபாடில்லாமல் உழைப்பினை சமுதாயத்தில் எல்லோருக்கும் பரவலாக்கியது. இதன் மூலம் ஒவ்வொருவரின் உழைப்பு நேரத்தினைக் கட்டப்படுத்தியது. எனவே எல்லோருக்கம் பொது விஷயங்களில் பங்கெடுக்க ஓய்வு நேரம் கிடைத்தது.”

5. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

“உற்பத்தி (வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள்) அடுத்தபடியாக உற்பத்தி செய்த பொருள்களைப் பரிவர்த்தனை செய்தல் ஆகியன தாம் சமுதாய மேல் கட்டுமானம் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ளது. இந்தக் கருதுகோளிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தோன்றுகிறது. வரலாற்றில் உருவான ஒவ்வொரு சமுதாயத்திலும், சொத்து விநியோகம் செய்யப்பட்டுள்ள முறை அல்லது சமுதாயமானது வர்க்கங்களாக அல்லது அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, உற்பத்தி செய்யப்பட்டுள்ளவை எவ்வாறு உற்பத்தியாகிறது, எவ்வாறு பரிவர்த்தனை இடம் பெறுகிறது என்பன வற்றைப் பொருத்து அக்காலகட்ட சமுதாயம் உள்ளது.

இத்தகைய கண்ணோட்டத்தின்படி சமுதாய மாறுதல்கள், அரசியல் மாறுதல்கள் ஆகிய எல்லாவற்றிக்குமான இறுதிக் காரணங் களை மனிதர்களது எண்ணங்களில் அல்லது நீதி, உண்மை ஆகியன பற்றிக் கொண்டுள்ள அவர் களது ஆழ்ந்த ஞானத்தில் காண முயற்சிக்கக் கூடாது. இவற்றை உற்பத்தி முறை, பரிவர்த்தனை ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களில் காண வேண்டும். இவற்றைத் தத்துவத்தில் தேடக் கூடாது. ஒவ்வொரு கால கட்டத்தின் பொருளா தாரத்தின் தேட வேண்டும்...”

6. உபரி மதிப்பு

பொருளாதாரம் என்ற பகுதியில் மார்க்சின் உபரி மதிப்புக் கொள்கை எளிய முறையில் விளக்கப்படுகிறது.

“பண்டங்களின் சாதாரண உரிமையாளன் வாங்குவதற்காக விற்பனை செய்கிறார். அவனுக்குத் தேவையில்லாததை அவன் விற்கிறான். இதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவனுக்குத் தேவையானதை வாங்குகிறான். முதலாளி அவனுக்குத் தேவையில்லாததை விற்பதற்காகவே அவன் வாங்குகிறான். இதன் நோக்கம் முதலீடு செய்த ஆரம்பப் பணத்தினைத் திரும்பப் பெறுவதும், கூடுதல் பணத்தைப் பெறுவதும் ஆகும். இந்தக் கூடுதலை மார்க்ஸ் உபரி மதிப்பு என்கிறார்.”

இது எங்கிருந்து வருகிறது... மூலதனமாக மாற்றப்படவிருக்கும் பணத்தின் மதிப்பு கூடுவது பணத்தில் இருக்க முடியாது; வாங்குவதில் இருக்க முடியாது. ஏனென்றால் இங்குப் பண்டத்தின் மதிப்பை மட்டுமே பணம் காட்டுகிறது... இதே போன்று பண்டத்தினை விற்பதிலிருந்து இது உருவாக முடியாது. இந்த மாறுதல் பண்டத்தி லேயே இடம்பெற்றிருக்க வேண்டும்...

இது அதன் உபயோக மதிப்பில் உள்ளது. ஒரு பண்டத்தின் நுகர்வின் மூலம் மதிப்பினைப் பெற நமது நண்பர்களாகிய பணமூட்டைகள் சந்தையில் ஒரு பண்டத்தைப் பெறுவதில் அதிர்ஷ்டக்காரர்களாக இருக்க வேண்டும். இதன் உழைப்பின் வடிவமாக இருக்க வேண்டும். இது மதிப்பினை உருவாக்க வேண்டும். பணக்காரன் சந்தையில் இத்தகைய பண்டம் ஒன்றைக் காண்கிறார்.

இது உழைப்பு சக்தி, இது பண்டமாகும் பொழுது இதற்கு மதிப்பு ஏற்படுகிறது... இந்த மதிப்பு மற்றப் பண்டங்களைப் போன்று உற்பத்திக்குத் தேவையான உழைப்பு நேரத்தின் மூலமும், இதன் மறுஉற்பத்தி மூலமும் தீமானிக்கப்படுகிறது... இது ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் என்று நாம் வைத்துக் கொள்வோம். அவனது தொழிலை நடத்துவதற்காக முதலாளி உழைப்பு சக்தியை விலைக்கு வாங்குகிறான். இந்த ஆறு மணி நேரத்திற்குச் சமமான பணத்தை அவன் அளித்தால் அவன் ஒரு நாளைய உழைப்பு சக்திக்கான முழுமதிப்பினைக் கொடுக்கிறான்...

இதுவரைக்கும் பணமானது மூலதனமாக மாறியிருக்க முடியாது. அதாவது உபரி மதிப்பைத் தோற்றுவித்திருக்க முடியாது. இதற்காக உழைப்பு சக்தியை வாங்கியவனுக்கு இந்தப் பேரத்தில் மற்றொரு எண்ணம் உள்ளது. உழைப்பாளியை உயிருடன் வைக்க ஆறுமணி நேர உழைப்பு போதும் என்ற உண்மையானது மொத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வைப்பதைத் தடுக்கவில்லை...

பணத்தின் சொந்தக்காரனுக்கு ஆறு மணி நேரம் இந்த உழைப்பிற்குச் செலவாகிறது. ஆனால் உழைப்பாளி ஒவ்வொரு நாளும் அவனுக்கு பன்னிரண்டு மணிநேர உழைப்பின் பொருளை அளிக்கிறான். பண்டத்தின் சொந்தக்காரனுக்குச் சாதகமாக இருப்பது இந்த வேறுபாடாகும். அதாவது ஊதியம் அளிக்கப்படாத ஆறு மணி நேர உபரி உழைப்பு உபரிமதிப்பாகும்... உபரி மதிப்பு உற்பத்தியாகிறது, பணம் மூலதனமாக மாறுகிறது.”

7. மதம் பற்றி...

“மதங்கள் எல்லாமே, மனிதர்களது தினசரி வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் சக்தி பற்றி மனதில் எழும் வினோதமான பிரதிபலிப்பு ஆகும். இதில் பூதியில் உள்ளவை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாகத் தோன்றுகின்றன. வரலாற்றின் ஆரம்பத்தில் இயற்கை சக்திகள் தான் பிரதி பலிக்கப்பட்டன. இவை வளர்ச்சிப் போக்கில் பல தரப்பட்ட உருவகங்களுக்கு உள்ளாயின.

ஆனால் விரைவில் இயற்கை சக்திகளுடன் கூட, சமூக சக்திகளும் இடம்பெறத் தொடங்கின. இவை மனிதனுக்கு அந்நியமயமாகவும், விளக்க முடியாத வையாகவும், மாறுகின்றன. இவை இயற்கை சக்திகளைப் போன்று இயல்பான தேவையாக மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தின. முதலில் இயற்கையின் மர்மமான சக்திகளைப் பிரதிபலித்த இந்த வினோத உருவங்கள் இப்பொழுது சமூகப் பண்புகளைப் பெற்றன; வரலாற்றுச் சக்திகளின் பிரதிநிதிகளாக மாறின. பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் பல்வேறு கடவுளர்களின் இயற்கைப் பண்புகள், சமூகப் பண்புகள் ஆகியன ஒரு கடவுளுக்கு ஏற்றிக் கூறப்பட்டன. இது தான் ஒரு கடவுள் வணக்கத்தின் தோற்றம் ஆகும்...

இந்த வசதியான, அனுசரிக்கும் தன்மையுள்ள, வடிவத்தில் மதம் என்பது அந்நியமயமான, இயற்கையான சக்திகளின் வடிவமாகத்தான் இருக்க முடியும்... இருப்பினும் இன்றைய பூர்ஷ்வா சமுதாயத்தில் அவர்கள் உருவாக்கிய பொருளாதார சூழ்நிலைகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாக மனிதர்கள் உள்ளனர். எனவே மதப் பிரதிபலிப்பிற்குரிய நடைமுறை சார்ந்த அடிப்படை தொடருகிறது.

இதனை யொட்டி மதப்பிரதிபலிப்பும் இடம் பெறுகிறது. இதற்குரிய காரணகாரியத் தொடர்புகள் பற்றி பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரம் சில புரிதல்களை அளித்தலும், இது ஒன்றும் பெரிய மாறுதலை ஏற்படுத்தவில்லை.

பூர்ஷ்வாப் பொருளாதாரமானது பொதுவாக நெருக்கடி களைத் தவிர்க்க முடியாது. தனித்தனி முதலாளிகளை நஷ்டம், கடன், வங்கி உடைதல் ஆகிய வற்றில் இருந்து பாதுகாக்க முடியாது. தொழிலாளர்களது வேலையின்மை, ஆதரவற்ற நிலை ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற முடியாது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் (அதாவது முதலாளித் துவ உற்பத்தியின் அந்நியமான ஆதிக்கம்) ஒன்று நினைக்கிறது என்பது உண்மை.

சமூக சக்திகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவை பற்றிய வெறும் அறிவு மட்டும் இருந்தால் போதாது சமுதாய ரீதியான செயல்பாடு தேவையாகிறது...

சமுதாயமானது உற்பத்தி சாதனங்கள் முழுவதையும் தன்வயப்படுத்தி அவற்றைத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி, இச்சாதனங்களின் தளைகளிலிருந்து அதனையும், அதன் உறுப்பினர்களையும் வருவித்து முடித்த பின்னர்... மனிதன் நினைப்பதே நடக்கும்... இதன் பின்னர் மதப் பிரதிபலிப்பு என்பது மறையும்”.

Pin It